BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Wednesday, December 29, 2010

அதிகாலை ஒளி அதை 
ஜன்னல் வழி நோக்கிவிட்டு..
மீண்டும் குறுகிக்கொள்ள,
கண்கள் உறங்கிவிடும்..


நீ அங்கு இருந்திருந்தால்..?

பாடலிடை தோன்றும்
வரிகள் சில கேட்கையில்,
இதழோரம் தோன்றும்..
வெட்கங்கள்.

நீ அங்கு இருந்திருந்தால்..?

நட்பு குழாமுடன்
கோப்பை காபிக்கள்..
அதில்,
தேநீர்கரண்டியால்..
உருவற்ற ஓவியங்கள்..
சிந்தை,
அது எங்கோ சென்றிருக்க..

நீ அங்கு இருந்திருந்தால்..?

உறவுகள் ஒன்றாய்
கலந்திருக்க..
நினைவுகளாய் புகைப்படங்கள்,
அவர்தம் உறவுடன்
அவரவர் அமர்ந்தபடி ..

நீ அங்கு இருந்திருந்தால்..?

நண்டும் நரியும்,
கரங்களிடை ஊற என  
நினைவில் நிழலாடும், 
சிறுவயது விளையாட்டும்,
சேர்ந்தொலிக்கும் சிரிப்பொலியுமாய்.. 
நட்புடன் நிழலனைத்தும்,
தற்போது நிஜமாய்..

நீ அங்கு இருந்திருந்தால்..?

வலப்பாதம் அதை அழகாய்
அம்மி மீது அவள் வைக்க..
மெட்டியிட்ட பின் நிமிர்ந்து
அழகாய் அவன் பார்வை..
விடையாய் இவளது ,
நானப்புன்னகை.. 

நீ அங்கு இருந்திருந்தால்..?

கருப்பைமேல் செவிவைத்து,
கேட்டிரா  இசைகேட்கும்..
தந்தையெனும் பூரிப்பில்
அவளது சற்றே வளர்,
முதல் குழந்தை..
அவன்,

நீ அங்கு இருந்திருந்தால்...?

அவளும் அவனுமாய்,
கேள்விக்கணை பலதொடுக்க..
நகைத்தபடி பலபற்றி
அவன் விடையளிக்க ..
பெருமிதம் சிறிதுகொள்ளும்
பிஞ்சுகள் அவ்விரண்டும்..

நீ அங்கு இருந்திருந்தால்..?

நண்பர்கூட்டமென்று
பிறர் சொல்ல,
அழகு குடும்பமென்று
நட்பு வியக்க,

நமது அங்கு இருந்திருந்தால்..?

Sunday, December 26, 2010

என்னவன் சிறுகிறுக்கன்...

அழகிய ஒரு வரியை
என் மனம் முனுமுனுக்க,
ஒருகரத்தால் இடைபற்றி
நிறுத்தற்குறியிடுவான்...
மெய்யருகில் வரியதற்கு..
மௌனங்கள் நிரம்பிவிடும்,
உரையாடல் நேரங்கள்..
அவன் காற்றும் என் செவியும்..

இதழ்வரியில்,
விரல் எழுதும்..
நேரம் அதுவென்றால் ?!
என்னவன் சிறு கிறுக்கன்,
அழகாய் செவியருகே
செஞ்சுருட்டி சந்தம் சொல்வான்..
நானும்  சிணுங்கிவிட..

அருகில் கிடந்திருந்தால் கூடல்,
இது பிறர் பொருள்..
என்னவன் சிறுகிறுக்கன்
காதல் பேசிடுவான் கரஹரப்ரியாவில்..
கரைந்திடுமோ காலம் அது,
எங்கள் இசைக்கூடல் வயப்பட்டு ...

தந்திக்கம்பிதனில்,
தந்தவிரல் மீட்டி..
என்னவன் சிறுகிறுக்கன்,
கல்யாணியில் தொடங்க..
இந்த வீணைக்கும் தெரியாத
ராகங்கள் பிறந்திடுமோ..

உயிரது கலந்திடுமோ!
உடலல்லால் ஸ்வரமதனால்..
இரவுகள்  விடிந்திடுமோ!
இணைந்தபடி இசையதனால்..
சிறுகிறுக்கன் என்னவனுடன்...

Thursday, December 23, 2010

உன்னால்,
சுவர்சாய்ந்து  புன்னகைகள்..
பல் துலக்கும் நொடிகளில்.

உன்னால்,
மௌனம் கூடிய வெட்கங்கள்..
படிகளில் பாதங்கள் செல்லுகையில். 

உன்னால்,
மழையிடை தனிஉரையாடல்கள்..
உனை பிடிக்குமென்று,
உரத்தகூறல்கள்..
உனை மிகப்பிடிக்குமென்று...

பொழிவது பொதிமேகமன்று..
என் விழியும்தான் என
பிறர் அறியாத்தருனங்கள்.. 
உன்னால்..

உன்னால்,
மேசைமேல் கிறுக்கல்கள்..
கிறுக்குத்தனம் பிடிக்காதவளுக்கு.

உன்னால்,
எனை சோதிக்கும் கனவுகள்..
பெண்மைக்கே உரித்தாய்,
அவை..
வேண்டாம் என்று வெறுத்ததுண்டு..
சிறு வெட்கத்தில் முடிந்ததுண்டு..
அதில் கண்ணீர்கள் இருந்ததுண்டு..

உன்னால்,
உனைபற்றிய நினைவுகள்..
இச்சிறுவாழ்வில்,
எய்தாலும்..
எழுத்துகளாய்..
உன்னிடமும் உன்பிறகுமாய்
வாழ்ந்திடும் எழுத்துகளாய்..

உன்னால்...

Tuesday, December 21, 2010

சுவர் நோக்கும் தனிமைகள்,
அதில் பிம்பங்கள் உனதேனோ?! 
நீயற்ற வெறுமைகளை,

மனம்..
உருவற்ற உயிராக்க,

சுவர்..
நிஜமற்ற  நிழலாக்க,

விழிமடல்..
திரைமறை துளியாக்க,  

விரல்..
உயிரும் நிஜமுமாய்,
வரி  உருவம்தர..
என் மனநிழலுக்கு,

பிம்பங்கள் உனது..
அதனால்தானோ?!

Friday, December 17, 2010

விளைவுகள் பற்றியன்று..
வினைகள் பேசுவதாம் விஞ்ஞானம்
நாங்களும் பேசுவதில்லை,
காதல் பற்றி..
ஏன்..!
பேசாத மௌனங்களே பல நேரம்..

தென்றலாய் இருந்திட
எண்ணம்...
எங்கும் சுழலா,
நிலைத்தென்றலாய்....
நீயும் அறியாது
உன் அருகாமை தென்றலாய்..

வெண்ணிலவாய் இருந்திட
எண்ணம்...
உன்னவளை எண்ணியேனும்
எனை நோக்கி புன்னகைப்பாயே!

மழைத்துளியாய் இருந்திட
எண்ணம்..
அதையேனும் நீ ரசிப்பாயன்றோ? 

இசையாய் இருந்திட
எண்ணம்..
உன்னுள் நானும்,
என்னுள் நீயுமாய்,
உருவற்று ஒன்றிட..

புத்தகமாய் இருந்திட
எண்ணம்..
அடங்கியும் அடங்காதுமாய்,
உன் கரங்களுக்குள்..
சுதந்திரம் பேசுபவள் நானாயிற்றே
அதனால்...

உன் வெறுப்புகளாயேனும்
இருந்திட எண்ணம்,
அவையும் நினைவுகள்தானே..

எண்ணம் பல அதை உன்னுடன்
பகிர எண்ணம்...
பகிர்வுகளில் உனைப்பற்றிய
எண்ணமும் பலதென்று...

Tuesday, December 14, 2010

வாழ்வின் எல்லை,
இதன் பொருள்விளக்கம் தெரியாது..
இறப்பு என்றால்,
சிரிக்கத்தொன்றும்...

பயணம் முடிந்தபின்னும்,
பிறருள் வாழ்வதென்ன,
பொருள் பொய்த்திடுமோ?
அவ்வாறெனில்..

பொருள் அதுவாயின்..
சிறு அவா எனக்குள்ளே,
என் வாழ்வின் எல்லையறிய, 
பயணம் முடிந்தபின்னும் 
பயணிக்குமோ?
எம் எண்ணங்கள் உனை நோக்கி
என் வாழ்வின் எல்லை
எதுவென்று அறிய..

வாழ்வின் எல்லை எது?
எனக்கு பொருள் விளக்கம் தெரியாது...

Monday, December 13, 2010

கண்ணீர்கவிதை,
ஆம்..
ரசித்து உயிர் ஊன்றி எழுதல் நீங்கி..
கண்ணீரில் விளைந்தவை இவையாவும்,
தோல்விகளால் துவண்டாள் இல்லை,
மாறாய்..
துவண்டவளை தூக்கியதுண்டு,
பலரது மனக்குறிகள்,
கழித்தலானபொழுது..
குறுக்காற்கோடிட்டு,
புன்னகை கூட்டியதுண்டு..
இறுகப்பூட்டிவைத்து,
வெளிக்கொணரா ரகசியங்கள்.
கண்ணீர்க்கு திரையிட்டு, 
புன்னகைகள் பலநேரம்.. 
யதார்த்தம் என்பது,
மறுபெயர் ஆனதுண்டு..
ஆனால் இன்று ஏனோ,
சொன்னவைகள் பொய்த்திட்டது..
மேற்ச்சொன்னவைகள் பொய்த்திட்டது..
தந்தையின் தோள்தட்டலும்,
தோல்வியடைகிறது என் கண்ணீரிடம்..
அன்னையின் ஊக்கங்கள் அந்நேரத்திற்கே,
உடன்பிறப்புடன் உரையாடலில்,
தானாய் பெருக்கெடுக்கும் நீர்த்துளிகள்..
உன்னிடம் எதிர்பார்த்தால்,
பொய்த்துவிடும் தவிர்த்துவிட்டேன்..
பொய்ப்பதை எதிர்கொள்ளும்,
துணிவில்லை என் மனதுக்கு..
துணிவற்றதன்மை அது எனக்கு, 
உன்னிடம் மட்டும் ஏனோ..
ஆறுதல் என்பதென்
அகராதிக்கு தேவையில்லை,
இருப்பினும் ஏனோ தேடுகிறாள்
என்னுளவள்,
தோல்வியால் துவண்டிடல்
எந்தன் இயல்பில்லை,
இதை ஏற்கவில்லை ஏனோ..
என்னுள் அந்த மானிடம்..
வெளிப்பாடு இதோ,
நிழல் தேடும் மரம்போல்,
தொடுகரம் தேடி மனம்..
ஏனோ பிடிக்கவில்லை,
இவ்வரிகள் எதுவும் எமக்கு..

Saturday, December 11, 2010

தேவை.. 
உனது ஆழ்முத்தங்கள்
விழைவது என் ..
வெட்கப்புன்னகைகள்..

தேவை..
உனது அருகாமை
விழைவது என் ,
இருள் வானத்து,
வெண்ணிலா நிமிடங்கள்..

தேவை..
உனது குரல்மொழிகள்
விழைவது என்,
ரசிக்கும் தனிமைகள்

தேவை..
உனது தொடுகரங்கள் 
விழைவது என்,
துவளும் தருணங்கள்

தேவை..
உன்னுடன் ஊடல்கள்
விழைவது,
தொடரும் கூடல்கள்

தேவை..
உனது முகத்தோற்றம்
விழைவது என்,
விடியல்கள்

தேவை..
உனது பிள்ளைத்தனம்    
விழைவது என், 
பெண்மையும் தாய்மையும்

தேவை..
உன்னுடன் மெய் வாழ்வு 
விழைவது என்,
கனாக்காலங்கள் ..

Friday, December 10, 2010

நல்லதோர் வீணை செய்தோம்,
அதன் நரம்புகள் நவின்றவை,
நல்லிசை என்றோம்.. 
நற்றமிழும் நல்லிசையும் வயம்கொள்ள,
பெற்ற மகவுகள் நாம்,
அதை புழுதியில் எறிந்தோம்..
ஆம்,
நல்லதோர் வீணை செய்தோம்-அதை 
நலங்கெட புழுதியில் எறிந்துவிட்டோம்..
உன் வரிகள் உமக்காய் உரித்தானதோ,
நல்லிசையே?

Thursday, December 9, 2010

நம்மிடை நெருக்கங்கள்,
குறைந்ததாய் சிறு எண்ணம்..
அருகாமை உமதேனக்கு,
வேண்டும் என நினைக்க..
நெருக்கங்கள்..
கண்பெருகும் அத்துளியை,
சிறைபிடிக்க இமைகளிடை
நெருக்கங்கள்..

Wednesday, December 8, 2010

மழைக்காலத்து மையுதிறல்கள்...



பச்சை நிற படறல்களில்,
உதிர்ந்து சிதறும் நீரினமே..
பிம்பமாய் பசுமையது,
குறுகிப்படறும் உன்னுள்ளே,
மறைத்தொளித்த காதலோ?
---------------------------
இருவரிடை தோன்றும்,
முத்தத்து முன் நிமிடம்
சுவாசமெனும் தூரிகையால்..
நிறமற்ற ஓவியங்கள்,
பிறபுலன்கள் சுயமிழந்து
உணரல்கள் புன்னகையாய்..
 ----------------------------
அந்திக்கும் நிலவுக்கும்
இடைதோன்றும் வான் நீலம்
ஏனோ குறுநகைகள்
காணும் கண்களினுள்..
இயற்கைக்கும் சொப்பனமோ
எவர் மீதோ என எண்ணி....

Saturday, December 4, 2010

ஆம் பிறர் பற்றிய கவலை எனக்கெதற்கு...


       
           இதை எழுதும்பொழுது எனக்கு எந்த கோபமோ ஆத்திரமோ இல்லை,ஆம் கண்டிப்பாக இல்லை மாறாக அது பரிதாப உணர்ச்சியாக மாறிவிட்டது.இரவு பத்து மணி சுமார்,எப்பொழுதும் போல் பெற்றோரின் தொலைபேசி அழைப்பு படிப்பு ,உறக்கம்,உணவு பற்றியெல்லாம் பேசிவிட்டு நானும் தந்தையும் அன்று நிகழ்ந்ததை பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.பேச்சுக்கிடையே என் பள்ளி தோழி ஒருத்தியை பற்றிய பேச்சு எட்டி பார்த்தது.செய்தி இதுதான்,அவளுக்கு இந்த மாத இறுதியில் திருமணமாம்,கேட்டதும் ஏனோ ஒரு எரிச்சல் கலந்த ஆத்திரம்,கோபம் என, என்னிலிருந்து எப்பொழுதும் போல் எட்டி பார்த்தது.என்னை போல் பொறியியல் படிப்பவள்தான் இன்னும் படிப்பு கூட முடிந்தபாடில்லை அதற்குள் திருமணம்.எரிச்சல் ஏனெனில் இவ்வாறான செய்திகள் பலதை கேட்டுக்கொண்டிருப்பதுதான்,கோபமும் ஆத்திரமும் அவர்களது பெற்றோரின் அறிவிலித்தனத்தை எண்ணி,மரியாதைக்குறைவாக தோன்றினால் மன்னிக்கவும் வேறு எவ்வாறு இதை வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை.இந்த செய்தியை என்னிடம் கூறிவிட்டு அப்பா தொலைபேசியை அம்மாவிடம் தர.அம்மாவிடம் நான் பேசிய முதல் வார்த்தை இதுதான் "என்னமா அவங்க லூசாகிட்டாங்களா?".என் அம்மாவுடன் பணிபுரியும் ஆசிரியர்தான் அவளது அம்மாவும்.இன்று என் அம்மாவை பார்த்ததும் கேட்டாராம் அவர்,"உங்க பொண்ணுகிட்ட விஷயத்த சொன்னீங்களா? என்ன சொல்லிச்சு" என்று.அம்மா அதனால் என்னிடம் செய்தியை கூறினார்.என் கோபம் உச்சகட்டத்தை அடைந்தது மற்றொரு செய்தியை கேட்டுவிட்டுதான், மணமகன் ஒரு பேரும் புகழும் உள்ள தனியார் பல்கலைகழகத்தில் உதவிப்பேராசிரியராக பணிபுரிபவராம்.இதை கேட்டுவிட்டு என் அன்னையிடம் நான் கேட்ட கேள்வி ... "புரோபசரா?!..ஏன்மா அவனுக்காவது அப்போ அறிவு வேண்டாம்? இன்னும் கிராஜுவேஷன் கூட முடிக்கல அந்த பொண்ணு அதுக்குள்ள கல்யாணம் பண்ணிக்கரோமேன்னு?!,நாளைக்கு ஆன்ட்டி கேட்டாங்கனா நான் இப்படி சொன்னேனே சொல்லு,என்ன நெனச்சாலும் பரவாஇல்ல"..அவர்களிடம் நான் கூறியதை அன்னை கூறினாலும் அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று நன்கு அறிவேன் இருப்பினும் எதிர்ப்பினை காண்பிக்க வேறு வழி தோன்றவில்லை.எனக்கு இருந்த கோபமெல்லாம் நான்கு வருடம் (நான்கு வருடம் கூட முழுதாய் முடிந்தபாடில்லை) லட்சம் லட்சமாய் கொடுத்து படிக்க வைத்த பெற்றோரே இவ்வாறு தடாலடியாய் அடுத்தகட்டத்திற்கு போவதுதான்.இதற்கு குடும்ப சூழல்,திருமணத்திற்கு பின் படிப்பு வேலைக்கு செல்லலாம் என்று காரணம் காட்டும் பலர் இருக்கின்றனர், கல்லூரியில் என் சீனியர் ஒருத்தியின்  நிலையும் அவ்வாறே,அவளது பாட்டி கூறினாள் என்ற ஒரே காரணத்திற்காக பன்னாட்டு நிறுவனத்தில் கிடைத்த பணியிலும் சேராமல் திருமணம் செய்துகொண்டாள்,கல்லூரி படிப்பு முடிந்த அடுத்த மாதமே..திருமணத்திற்கு பிறகு நான் படிப்பேன் அல்லது வேலைக்கு செல்லுவேன் என்று கூறிய அவள் அதை பற்றிய பேச்சை கூட இப்பொழுது எடுப்பதில்லை.அந்த காரணங்கள் எல்லாம் பலர் வாழ்க்கையில் வெறும் பேச்சுக்கு மட்டுமே பொருந்துகிறது.எக்காரணமாயினும் குடும்பத்தினரை  சமாதானம் செய்ய முடியாத இவ்விருவரை நான் கோழை என்றுதான் சொல்லுவேன்,அல்லது திருமணம் செய்வதுதான் வாழ்வின் குறிக்கோள் என்றிருந்திருந்தால் அது தவறில்லை யோசித்திருந்தால் அதற்கு பட்டபடிப்பு படித்திருக்க வேண்டிய அவசியமும் இருந்திராது ,வீணாக ஒரு நல்ல லட்சியம் உள்ள வேறொருவரின் படிப்பு ஆசையை அவர்கள் அறியாது நிராகரித்துவிட்டீர்கள் அவ்வளவே.தங்களுக்கென்று சுயமாக ஒரு அடையாளம் சமூகத்தில் கிடைக்கும் முன்னர் இவர்களுக்கு வேறு அடையாளம் கிடைத்துவிட சுய அடையாளம் பற்றி சிந்திக்க மறந்துவிடுகின்றனர்.அக்காலத்தில் நாங்கள் பத்தொன்பது வயதில் புகுந்த வீட்டில் அம்மி அரைத்துக்கொண்டிருந்தோம்  என்று பழங்கதை கூறுபவர்கள் இதிலிருந்து சற்று விலகிக்கொள்ளலாம்.இக்காலத்து பெண்கள் என்கிறோம்,நாகரிகம் என்கிறோம் ஆனால்  ஏன் இவ்வாறு? எது இவர்களை பேச விடாமல் தடுப்பது,மனோரீதியாக பார்த்தால் தங்கள் குடும்பம் பற்றிய கவலை என்பது மட்டுமல்லாது திருமணம் என்றதும் பொதுப்படையாக தோன்றும் பல எண்ணங்களின் மீது எழும் ஈர்ப்பா?அவ்வாறெனில் அதனுடன் அவர்களுக்கு கிடைக்க போகும் குடும்பம் என்ற ஒன்றிலிருந்து அவர்களது எண்ணங்களானது மிகவும் விலகியல்லவா இருக்கிறது!.இவர்களால் அந்த குடும்பம் என்ற ஒன்றை பற்றி புரிந்து அறிந்து அதனுடன்  ஒன்ற இயலுமா?இதனை அந்த படித்த அறிவுமிக்க பெற்றோர் சிந்தித்திருப்பரா? ,அல்லது அவளைவிட சற்று வயதால் மனதால் வளர்ந்த அவன்தான் சிந்தித்து இருப்பானா?.அவ்வாறு உள்ள ஒருவனாயின் அந்த மெத்த படித்த துணை பேராசிரியரின் விடை வேறாக அல்லவா இருந்திருக்க வேண்டும்.காத்திருப்பது அவ்வளவு இயலாத காரியமா?.எதை பின்பற்றுகிறோமோ இல்லையோ பெண்ணின் திருமண வயது இருபத்தி ஒன்று என்பதை மட்டும் நன்றாக மனதில் பதித்துகொண்டுவிட்டனர் பலர்  .இதையெல்லாம் கூறினாள் அவர்களை பற்றிய கவலை உனக்கு எதற்கு என்கிறாள் தோழி ஒருத்தி.அமாம் அவர்களை பற்றிய கவலை எனக்கெதற்கு.கல்லூரியில் நீ எனக்கு முன் இருக்கை போல் ,பள்ளியில் எனக்கு முன் இருக்கையில் அமர்ந்து படித்தவள் அவ்வளவே.கல்லூரி அடையாள அட்டை தாண்டி யோசிக்காத அவள் பற்றிய கவலை எனக்கு தேவை இல்லைதான்.ஆனால் நமக்குதான் எந்த நிகழ்விற்கும் பழமொழி கூறும் பழக்கம் உண்டாயிற்றே."அவரவர்களுக்கு வந்தால்தானே தெரியும் தலைவலியும் திருகுவலியும்".ஆம் அவர்களை பற்றிய கவலை எனக்கெதற்கு.

Thursday, December 2, 2010

சில்லிடும் மழைக்காற்று  
ஜன்னல் வழி உள்புக, 
ஏனோ ஏங்கிடும்..

குளிரில் குறுகிவிடும்
உடல் அது,
அணைத்திடும்
உன் கரங்களுக்காய்..

தன்னால் சிவந்திடும்
செவி மடல்,
இதம் தரும்
உன் சுவாசத்திற்காய்..

போர்வைக்குள் ஒளிந்துகொள்ளும்
பாதங்கள்,
கள்ளமாய் தீண்டிவிடும்
உன் விரல்களுக்காய்..

சிலிர்ப்பில் சிலையான
கன்னங்கள்,
வெம்மை படர்ந்தோடும்
உள்ளங்கைகளுக்காய்..

அகம் மட்டும் ஏனோ,
உறையாமல் குதூகலித்து..
உனைபற்றிய நினைவுகள்,
அதை அரவணைத்திருப்பதால்..

Tuesday, November 23, 2010

யாதுமாகி நின்றாயோ..?!
தந்தை தாய்,
உடன்பிறப்பு.. 
நட்பென..
ஒளி எவர் பெயரானாலும்,
ஒலிப்பது உன் பெயரே..
ஆம்,
ஒலிப்பதில் மட்டுமே,
உன் பெயரென்றாகிவிட்டது..
என் அலைபேசியில்..
உன்னில் அன்பு உயிர்பித்ததோ?
நான் அறியேன்,
ஆனால்..
உன்பெயர் கூறும் கணம்தோறும்..
உயிர்பிக்கிறாள் அவள்,
கணம்தோறும் உனை எண்ணி..
உயிர்த்திடும் எனைப்போல,
என் அலைபேசி..
யாதுமாகி நின்றாயோ..?!

Monday, November 22, 2010

நேற்று..இன்று..நாளை..

ஏனோ பிடிக்கவில்லை,
நாட்கள் நகர்வது..
நேற்றைய நீ
காணாமற்போவதால்..

ஆனால்,
வியந்திருக்கிறேன்..
நாளைய உனை,
எதிர்கொள்ளப்போவதென்னி..

இப்படிக்கு,
இன்றைய உன்னில்
லயித்திருக்கும் மனம்..
மாற்றங்கள் மட்டுமே,
நிலைத்திருக்கும் உன்னில்..
லயித்திருக்கும் என் மனம்.
      

Wednesday, November 17, 2010

நினைவுகள்..
ஏராளம்..
இங்கு சேமிக்க,
மனமதில் சேமிக்க..
எதிர்வரும் காலமதில்..
ஜன்னலிடை அமர்ந்து,
சிறிதாய் பின்னந்தலைதட்டி,
இதழோரம் சிரிக்கும்..
நொடிகளுக்காய்..
சேமிக்கும் நினைவுகள்
ஏராளம்..  

Monday, November 15, 2010

பெருங்கவிதையின் சிறுவரிகள் ..

வான்தோன்றும் நிலவதாய்
மாறிவிட எண்ணம்
உன்னவளை எண்ணியேனும்
எனை நோக்கி சிரிப்பாயே..

Sunday, November 14, 2010

இதோ என் கரத்தில்..
வெண்காகிதங்கள்,
காத்திருக்கிறது..
உனக்கான என் எழுத்துக்களுக்காய்..
நீலம் கொண்டு எழுதும் அவ்வரிகளுக்காய்..
எண்ணினேன்.
என் நிலையும் இங்கு அவ்வாறே..
உடல்,
ஊன்,
உயிர்,
உள்ளோடும்  குருதி,  
அவற்றிடை என் எண்ணங்கள்..
யாவும் காத்திருக்கிறது,  
உன்னால் எழுதப்பட...

Thursday, November 11, 2010

கவிவரி என்றாய்..
ஆம் அறிந்ததே,
சொல்வனத்தில் இடசொன்னாய்..
நீ உணர்ந்திடா வரிகளை,
உலகம் வியந்து என்ன பயன்..
எண்ணமதை கைவிட்டேன்..
அறிவிலித்தனமாய் தோன்றினாலும்

மெய் நானென..
உயிர் நீயானாய்..
உன்னால் உயிர்மைத்துவிட்டது,
என்னுள்..
ஏனோ இந்த நாணம்..
புகைப்படங்கள் காண்கையிலும்
புன்னகைக்கிறேன் வலம்திரும்பி..
இடதில்தான் நீயாயிற்றே..
அருகிருக்கும் தோழி
புதிராய் பார்க்கிறாள்..
அதிசய நிகழ்வை
அடங்காத்தனம் மிக்கவென்று
இவளையா வர்ணித்தோமென?
புரியவில்லை அவளுக்கு
அதற்கு விடை நீ என்று..
நிற்க..
உயிர் மட்டுமா நீயானாய்?
நான் என்ன செய்வேன்,
அகத்தியன் தமிழ்..
உயிர்..
மெய்..
உயிர்மெய்யோடு நின்றுவிட..
                                              
குறிப்பு : வர்ணித்த வார்த்தையை திரும்பப்பெற எண்ணமாம் தோழிக்கு..வேண்டாம் என்றுவிட்டது அவள் வர்ணித்த "சற்றே வளர்ந்த  பிசாசு".. :P x( ...

வான் தோன்றும் நிலவதில்
அன்பு முகம் தெரியுமாம்..
பிரிந்து வாடுகையில்..
என் வானில் ஏனோ,
கருநிலவு...

Tuesday, November 9, 2010

மகவு புசிக்கும் பாலில்,
தாயவள் காணா நிறைவை ..
காமத்து கடைநிலையில்,
இருபால் காணா நிறைவை..
பெறுகிறேன் நானிங்கு,
உனக்கான கடிதங்களில்..
                                          -  புன்னகையுடன்

Monday, November 8, 2010

என் கண்மணிக்காய்...

அவன் என்னுள் நிறைந்த நொடி,
நான் அவனுள் கரைந்த நொடி,
என்னுள் உதித்தவளுக்காய்..

பிறப்பிலுண்டு இசையென்பர்..
 இசை என்னுள் பரவிவிட,
வெளிதோன்றிய சிறு ஸ்வரத்தை,
இசையே பிறந்ததென்பேன்..

பிஞ்சுகள் அழகென்பர்..
அழகதற்கு காரணமாயின்,
எவ்வாறு உரைத்திட?
என் பிஞ்சு அவள் அழகை..

புன்னகைகள் இறையென்பர்,
மோகனத்தின் அந்தம்தான்..
இதோ,
என் மடி கிடப்பவள்
அவள் மோகனம்..
மோகனங்கள் இறையோ?
 
குறும்புகள் பிரதிபலிப்பென்பர்,
எவரதென்ற வினா,
எழுந்துவிடும் இருவரிடத்தும்..
சமபகிர்தல் இதிலுண்டு எங்களுள்ளே,
அதனால்..

தீண்டல்கள் வெளிப்பாடென்பர்,
அன்று பெண்மையாய்..
தொடர்ச்சி,
இன்று தாய்மையாய்..
நன்றி..!!
தொட்ட கரத்திற்கு,
முகம் தொட்ட சிறு கரத்திற்கு..

மழலை இறைமொழியாம்..
விடியா இரவுகளில்,
புரியா உரையாடல்கள் அவளுடன்,
மனதோடு மழலையாய்..
அவனும் சிறுபிள்ளை போல்..
அவள் மொழியில் ஒன்றிடுவான்..

என்னவனை நான் கொஞ்ச,
சற்றே சினம் கொள்வாள் என்னை போல்..
பாவம்..
அவள் அறியாள்,
அவனும் சிறுபிள்ளையென..

தளிர் அது கண்ணுறங்க,
லயித்திருக்கும் மனம் அதில்,
அந்த அழகு மௌனத்தில்..
இதோ என் பரிபூரணமென்று..
                                                      -என் கண்மணிக்காய்
                                                           


 

தருணங்கள் திரும்பாதென்று...?!

            மூன்று நாட்களுக்கு முன்தான் நான் ஏழாம் வகுப்பு முடித்தேன்..நம்புவீர்களா?..நம்பித்தான் ஆகவேண்டும் .இழந்த அல்லது இறந்தகாலமாகிவிட்ட தருணங்கள் திரும்பக்கிடைத்தால் அந்த காலத்திற்கே சென்றுவிட்ட உணர்வு ஏற்படும்.அத்தகையதுதான் நான் மேற்ச்சொன்னதும்.இம்முறை தீபாவளி விடுமுறை நாட்கள் சற்றே அழகியதாய் அமைந்தது பல அழகிய தருணங்களுடனும்    ,அழகிய உறவுகளுடனுமாய்.அதிலொன்று, தீபாவளிக்கு முதல் நாள் அன்று இரவு, காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை நன்றாக பெய்துகொண்டிருந்தது .நான் அப்பா மற்றும் என்னுடன் தீபாவளிக்காக என் வீட்டிற்கு வந்திருந்த தோழி என மூவரும் மெகா டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த ஒரு மெல்லிசை நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தோம். அந்நிகழ்ச்சியில் எஸ்.பி.பி ,உன்னி மேனன் ,சுஜாதா என மூவரும் பங்கேற்றிருந்தனர் .விடுதியில் தங்கியிருப்பதால் தொலைக்காட்சிக்கும் எனக்குமான உறவு முற்றிலுமாய் அறுபட்டது போல் இருக்கையில் அன்று அந்நிகழ்ச்சியை வீட்டில் அமர்ந்து பார்த்ததில் ஏதோ ஒரு மகழ்ச்சி,அதுவும் நீண்ட நாட்களுக்கு பிறகு தந்தையுடன் ஒன்றாக அமர்ந்து ஒரு இசை நிகழ்ச்சியை ரசிப்பது. நான் சென்று அமர்கையில் "ஆஹா ஆஹா ஆஹா" என்று எஸ்.பி.பி ,சாருகேசியில் பாடத்துவங்க இருவருக்கும் மிகப்பிடித்த பாடல் என்பதோடு மட்டுமல்லாமல் அப்பாவின்  நண்பர் ஒருவர் நினைவுக்கு வந்துவிட நானும் அப்பாவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டோம்,அப்பாடல் ஒளிபரப்பாகும்பொழுதெல்லாம்  நாங்கள் இருவரும் ஒருசேர சொல்லும் வரிகள் "ரஜினி இதுல அழகு இல்ல?!,என்ன ஸ்டைல் அந்த ஸ்டைல்கெல்லாம் இனிமே ஒருத்தன் பொறந்துதான் வரணும்!?"..அடுத்து அது எஸ்.பி.பி  பற்றிய விவாதம் ,சங்கராபரணம் என்று கொண்டுபோய்விடும்  ஆனால் அடுத்தடுத்து நல்ல பாடல்களை எஸ்.பி.பி மேடையில் பாடிக்கொண்டிருந்ததால் நாங்கள் எந்த விவாதமும் செய்யாது பாடல்களை கேட்டுக்கொண்டிருந்தோம்.அடுத்து "சுமதி என் சுந்தரி" படத்திலிருந்து "பொட்டு வைத்த முகமோ" பாடலை எஸ்.பி.பி பாடிக்கொண்டிருந்தார். பி.வசந்தாவின் அந்த ஹம்மிங் பகுதி வர எங்கள் வீட்டு வசந்தாவும் ஜோதியில் வந்து ஐக்கியமானார். அந்த ஹம்மிங் பகுதியை எஸ்.பி.பி யுடன் பாடிய பெண்ணை வைத்து பரிசோதிக்காமல் பியானோவை அதற்கு உபயோகப்படுத்திக்கொண்டனர்.நான் அதனுடன் சேர்ந்து "லலலா" என்று முனுமுனுத்துக்கொண்டிருந்தேன் அடுத்தது "ரோஜாவை தாலாட்டும் தென்றல்" பந்துவராளியில் அழகாக துவங்கிட ஷைலஜாவிற்கு பதிலாக சுஜாதா அங்கு பாடிக்கொண்டிருந்தார், எஸ்.பி.பி யின் ஜிம்மிக்ஸிற்காகவே அந்த நிகழ்ச்சியை இப்பொழுது மீண்டும் பார்க்கவேண்டும் போல் உள்ளது,அப்பாடலை கேட்டுக்கொண்டே நானும் தந்தையும் ஸ்ரீதர் படங்களை பற்றி விவாதித்துக்கொண்டிருந்தோம்.ஸ்ரீதரின் ஒரு சில படங்கள் நன்றாக ஒடாவிடினும் அப்படங்களில் வரும் பாடல்கள் ஒவ்வொன்றும் செதுக்கப்பட்ட ஒன்றாக கொடுத்திருப்பார் என பேசிக்கொண்டிருந்தோம்.அப்பொழுது இடைவேளையில் அடுத்து என்ன பாடல் பாடப்போகிறார் என்று ஒளிபரப்பப்பட்டது. திடீரென்று தொலைக்காட்சியில் "நந்தா நீ என் நிலா.." என்று எஸ்.பி.பி குரல் ஒலிக்க அதுவரை என்னுடன் பேசிக்கொண்டிருந்த அப்பா,உடனடியாக "ஆஹா" என்று கூறிக்கொண்டே தொலைகாட்சி பக்கம் திரும்பிவிட்டார்.அவரை  தொடர்ந்து நானும் தொலைகாட்சி பக்கம் திரும்பினேன்.வெளியில் பெய்து கொண்டிருந்த மழையானது ஒளிபரப்பிற்கு இடையூறாய் இருந்தாலும் இடைவேளைக்கு பிறகு முழு பாடலையும் நன்றாக கேட்கமுடிந்தது.நீண்ட நாளைக்கு பிறகு எஸ்.பி.பி மேடையில் அப்பாடலை பாடி கேட்க முடிந்தது ஒரு ஆனந்தம்.ஆனால் அதே போன்று முன்பு ஒருமுறை நிகழ்ந்தது என் நினைவிற்கு வந்தது. ஏழாம் வகுப்பு முழு ஆண்டு விடுமுறையில் ஒரு மதியபொழுதில்  அப்பா என்னுடன் என்னை வேறு பள்ளியில் சேர்ப்பது குறித்து பேசிக்கொண்டிருந்தார் நானும் வேறு பள்ளியில் சேரவேண்டுமே,நண்பர்களை பிரியவேண்டுமே என்று சோகத்தில் இருந்த சமயம்,அப்பொழுதெல்லாம் ராஜ் டிஜிட்டல் பிளஸ்-இல் மதிய வேலையில் பழைய படங்களை ஒளிபரப்புவது வழக்கம்,அவ்வாறாக "நந்தா என் நிலா" படம் ஓடிக்கொண்டிருந்தது.நானும் தந்தையுடன் பேசிக்கொண்டே படத்தை பார்த்துக்கொண்டிருந்தேன்.அப்படத்தையும் அப்பொழுதுதான் முதன்முதலில் பார்க்கவும் நேர்ந்தது,என் தந்தை அந்த சேனலை வைக்கவும் அந்த பாடல் ஒளிபரப்பப்படவும் சரியாக இருந்தது,அதற்கு முன் அப்பாடலை நான் கேட்டிருந்ததும் இல்லை,அன்று அப்பாடலை கேட்டதும் இன்று இதோ இப்பொழுது கூறியது போல் "ஆஹா" என்றார். அப்பா அன்று கூறியது இன்றும் நினைவில் இருக்கிறது "இந்த பாட்டுலலாம் எஸ்.பி.பி வாய்ஸ் அப்படியே இழையும் கண்ண மூடிட்டு கேட்டா டிவைன்" என்றார்.பள்ளி மாற்றம் பற்றிய பேச்சிலிருந்து விடுத்து வேறு எதிலாவது மனதை செலுத்த நானும் அப்பாடலை கேட்டுக்கொண்டிருந்தேன், "ஆகமம் தந்த சீதை.." வரியை அவர் அந்த பாடலுடன் சேர்ந்து பாடிய விதம் அவருக்கு நினைவில் இருக்கிறதோ? இல்லையோ?, எனக்கு இன்றும்  நன்றாக நினைவில் உள்ளது, அப்பொழுதெல்லாம் ராகங்கள் பற்றியும் அவ்வளவாக நான் அறிந்திருந்ததில்லை (இப்போழுதும்தான் ;-) ) ஆனால் அந்த பாடல் துவங்கிய விதம் மற்றபாடல்களிலிருந்து சற்று மாறுபட்டதாக இருந்ததாலோ,என்னவோ?.அப்பாடலை முதலில் கேட்டதிலேயே ஒரு விதமாக பிடித்திருந்தது அதனால் மீண்டும் கேட்க வேண்டும் போல் தோன்றியது.ஆனால் எனக்கு தெரிந்து அதற்கு பிறகு அவர்கள் அதனை எந்த சேனலிலும் ஒளிபரப்பவில்லை.நான் அது எம்.எஸ்.வி-யின் இசையாக இருக்கலாம் என்று ஊகித்தேன் ஆனால் தாத்தாவின் எம்.எஸ்.வி ஒலிநாடாக்களிலும் பழைய பாடல்கள் ஒலிநாடக்களிலும் அப்பாடல் இருந்ததில்லை,பிறகு புதிய பள்ளி,புதிய சூழல் என அனைத்திற்கும் நடுவில் அப்பாடல் பற்றி யோசிக்க நேரமற்றுபோனது அதனால் அப்பாடலை தேடிப்பிடிக்கும் எண்ணம் அந்நிலையில்  தற்காலிகமாக கைவிடப்பட்டது ஆனால் என்னிடம் மடிகணினி வந்த பின் முதன்முதலில் தரவிறக்கம் செய்யப்பட்ட பாடல்களின் பட்டியலில் அப்பாடல் இருந்தது என்பது ஆச்சரியப்பட தேவையற்ற ஒன்று.தரவிறக்கம் செய்தபின்தான் அதன் இசையமைப்பாளர் வேறெவர் என்று தெரிந்துகொண்டேன்.அப்பாடலை மீண்டும் அன்று வீட்டில் அதே இடத்தில் நான் அமர்ந்தபடியும்,அருகில் தந்தை அன்று போல் இன்றும் அதே ஆஹா என கூறிக்கொண்டு அமர்ந்தபடி என இருவரும் கேட்டுக்கொண்டிருந்தோம். பாடல் அதிலிருந்து மிஸ்டர்.பாரத்திற்கு மாற,எஸ்.பி.பி யும், உன்னிமேனனும்  பாடத்துவங்கினர்,"யாரவன் சொன்னது? தருணங்கள் மீண்டும் திரும்பாது" என்று எண்ணி புன்னகைத்தபடி வெளியில் பெய்து கொண்டிருந்த மழையை ரசிக்கசென்றுவிட்டேன்.

Saturday, October 30, 2010

கடவுள்..
பந்தங்களை அழகாய் வரைந்தவன்..
அதற்கு தலைப்பிடுவதில் மட்டும் கஞ்சனான்..  
அம்மா..
அப்பா..
நட்பு..
இதுதான் சுருக்கி வரைதலோ?!

Tuesday, October 19, 2010

ஆயா!!

       எனக்கு அவளை ஒரு நான்கு மாதங்களாகத்தான் சார் தெரியும்,கரிசல் நிலத்தின் கடினத்தை ஒத்த தோல்.அவள் கிழம் என்பதற்கு அடையாளமாய் அத்தோல் சுருங்கிவிட்ட நிலை.நெற்றியில் அக்கருப்பிற்கு எதிர்மறையாய் தனித்தொளிரும் திருநீறு.நடப்பதில் முதுமைக்கான சிறு தோய்வு தெரிந்தாலும் அந்த கண்கள் எப்பொழுதும் எதையோ சிந்தித்துகொண்டிருப்பது போல் தோன்றும்.இவள்தான் எங்கள் ஆயா சார்!!.ஆயா என்றால் என் தந்தைவழி, தாய்வழி உறவன்று.அவர்களெல்லாம் பாட்டி என்ற வரிகளுக்கு சொந்தக்காரர்கள்.ஆனால் இவள் எங்கள் கல்லூரி விடுதியில் வேளை செய்யும் பத்தோடு பதினொன்றுகளில் ஒருத்தி,எழுபது வயது சுமார் இருக்கலாம் சார்.கல்லூரியிலிருந்து விடுதிக்கு வருகையிலும் செல்கையிலும் என எப்பொழுதும் அவளை பார்க்கலாம் அந்த மாடிப்படிகளில் அமைதியாக அமர்ந்திருப்பாள்.எப்பொழுதும் என்னை பார்த்தால் அந்த புகையிலை பல் தெரிய  புன்னகைசெய்வாள்.சுற்றி இருப்பவர்கள் அங்கலாய்க்கையில்,"அட சும்மா கட!!மனுசனா பொறந்தா ஆயிரம் இருக்கும்!!" என்பாள். அவள் கூறுவது அவளுக்கு சாதாரண வரிகள்தான் ஆனால் அதில் பொதிந்துள்ள மாபெரும் அர்த்தம் பற்றி அவள் யோசித்திருப்பாளா என்பது சந்தேகமே.அதே ஆயா வீட்டில் தன் பிள்ளை தன்னை வெய்துவிட்டான் என்று அவர்களிடம் சொல்லி கண்ணீர் சிந்தியதையும் கண்டிருக்கிறேன்,அழுதுவிட்டு "சரி ஒலகம் அப்டி, எம்புள்ள பாவம் அதுக்கென்ன கவலையோ" என்று கூறிவிட்டு நகர்வாள்.    ."தன் கடன் பணி செய்து கிடப்பதுதான்" அவள் கொள்கை போலும். மற்றவர்கள் போல் வேளை நேரத்தில் அவள் சிடுசிடுத்து கண்டதில்லை. மேற்பார்வையாளர்  வயதில் சிறியவராக இருந்தாலும் அந்த பதவிக்கும் அவரின் பத்தாம் வகுப்பு படிப்புக்குமான மரியாதையை அவளிடமிருந்து எதிர்பார்க்கலாம் "வணக்கங்கமா!!" என்பாள்.வராந்தாவை நேர்த்தியாக கூட்டி பெருக்கி குப்பை அள்ளுவதுதான் அவள் அனுதின வேளை.அவளிடம் நான் முதலில் பேசியது ஒரு வாரநாளில் கல்லூரிக்கு கிளம்பிக்கொண்டிருந்த சமயம், அறைவாசலில் இருந்த குப்பைகளை பெருக்க வந்த அவள் என் அறை முன்னே தயங்கிதயங்கி நின்றிருந்தாள்.நானும் முதலில் அதை கவனிக்கவில்லை ஆனால்,சிறிது நேரம் கழித்து "யம்மா!! பள்ளிக்கூடம் போறிகளா!! என்றாள்.  ஆம்!! என்று நான் தலையாட்டினேன். மறுபடியும் "ஒன்னு கேட்டா தப்பா நெனச்சுக்க மாட்டீகள?" என்றாள் புதிராய். நான் "சொல்லுங்க!" என்றேன். அவள்,"ஒன்னுமில்லடா தல கொஞ்சம் வலிக்குது தைலம் இருந்த குடுடா!!"என்றாள். ஓ!தாராளமா ஆயா, என்று என்னிடம் இருந்த மென்தோ ப்ளஸ்- ஐ நீட்டினேன்.அதில் நகக்கண் சிறியளவிற்கு எடுத்துக்கொண்டு மீண்டும் என்னிடம் திருப்பிதந்தாள். "இன்னும் கொஞ்சம் வேணும்னா எடுத்துக்கோங்க ஆயா!" என்றேன். "போதும்டா!" என்று கூறிவிட்டாள் அதுதான் முதல்முறை அப்படி ஒரு ஆயா இருப்பது எனக்கு தெரிய வந்தது.அவளிடம் பெயர் கேட்டதில்லை என்னை பொறுத்தவரை அவள் "ஆயா!!", அன்று முதல் எப்போது பார்த்தாலும் "வாங்கடா!" என்று ஒரு புன்னகையுடன் கூறுவாள். பல "ஞாயிறு காலை ஆறு மணிகள்"  காப்பிக்குமுன்,படி இறங்குகையில் அவள் புன்னகையில் தொடங்கியதுண்டு.திடீரென்று ஒரு நாள் "நல்லா இருக்கியாடா!" என்பாள்.அந்த கேட்கும் தோணியில் உள்ள பரிவு "நல்லா இருக்கேன் ஆயா" என்பதோடு நிறுத்திக்கொள்ள தோன்றாமல் "நீங்க நல்லா இருக்கீங்களா?!" என்று கேட்க தோன்றிவிடும்.அந்த முதுமைக்கே உண்டான  பரிவு மிக்க அழகான மனம் அவளது.கல்லூரி வாரத்தில் ஆறு நாட்கள் அரைநாள்தான் அதிலும் பல வகுப்புகள் நடக்காது அதனால், பசி கண்களை மறைக்க உச்சி வெயிலில் சோர்வுடன் திரும்ப நேரிடும். அறைக்கு நுழைகையில் எதிரே தென்படுவாள், ஏதோ நாம் நிலை அறிந்த அன்னை போல் " சாப்டயாடா??"  என்பாள். "இல்ல ஆயா இனிமேதான்!"என்றாள், "அட புள்ள காலிலேயே சாப்டாமதானே என் கண் முன்னாடி ஓடின  காலைலேர்ந்து சாப்டாமையா இருக்க? என்று கூறிவிட்டு அருகில் இருப்பவர்களிடம் " தா! பாறேன் இந்த புள்ள காலைலேர்ந்து சாப்டலா,இப்டியே போனா படிக்கறதுக்கு அப்றம் நாளைக்கு கண்ணாலம் காட்சி நடந்து புருசன் வீட்டுக்கு போனா அவங்க வீட்ல உழைக்க உடம்புல தெம்பு வேணாம்?!உடம்பு என்ன ஆவறது போய் மொதல்ல சாப்டு"  என்பாள்,எப்படியிருந்தாலும் மணி மூன்றிற்கு குறைந்து அவளுக்கு இங்கு உணவு கிடைக்காது என்ற விஷயம் அவள் அறிந்தது ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் " நீ சாப்டயாடா!!" என்னும் அந்த மனம் .பெற்ற தாயும் அவளினும் முதிய ஒருத்தியும் கொள்ளும் அக்கறை,அப்படி சற்றே கடிந்துகொண்டு கூறுவதில் அவள் எடுத்துக்கொள்ளும் உரிமை அழகாக இருக்கும் சார். நான் சொல்லவில்லை?! முதுமைக்கே உண்டான சுயநலமற்ற அழகிய மனம் அது என்று .அன்றும் அப்படித்தான், பிறந்தநாள் அன்று, இரவு வேறொரு விடுதியில் தங்கி இருந்ததால் காலையில் அவளை காண இயலவில்லை, திங்கள் காலை எப்பொழுதும் போல் முதல் இரண்டு வகுப்புகள் மட்டுமே நடுவில் எப்பொழுதும் போல் ஒரு பெரிய இடைவேளை  என்பதால் அறைக்கு திரும்பிவிட்டேன் மீண்டும்  பரிசோதனைக்கூடத்திற்கு செல்வதற்காக கிளம்புகையில்       அதே படிக்கட்டுகளில் அமர்ந்திருந்தாள். நான் என் பிறந்த நாள் உடையின் மீது பரிசோதனைக்கூடத்திற்க்கான அந்த வெள்ளை கோட் சீருடையை அணிந்திருந்தேன். படியில் அவள் அமர்ந்தபடி தென்படவே.அவள் முன் சென்று மண்டியிட்டு அமர்ந்து "ஆயா!! இன்னைக்கு எனக்கு பொறந்தநாள் ஆயா!!"  என்றேன். அவள் உடனே என்ன செய்தால் தெரியுமா அழகாக தன் இருகைகளால் தன் நெற்றியில் சொடுக்கி திருஷ்டி இட்டுவிட்டு "மகராசியா நல்லா இருடா!" என்றுவிட்டு அந்த இருகைகளால் என் கன்னங்களை தொட்டுக்கொடுத்தாள், ஏதோ என்னிடம் உரிமை எடுத்துக்கொள்பவர்களின் அரவணைப்பு போல் இருந்தது அதில் இருந்த பரிவும் அன்பும். அது சரி பொறந்தநாள் அண்ணைக்கு எதுக்கு புது சொக்கா போடாம இந்த உடுப்ப மாட்டிருக்க? என்றாள் படிப்பறிவற்ற என் ஆயா. நானும் அப்பொழுது யுனிபார்ம் என்பதை நடைமுறை தமிழில் மொழி பெயர்க்க தெரியாததால் "இல்ல ஆயா இத காலேஜுக்கு  போடணும்!" என்று கூறினேன். "அப்படியாடா அது என்ன படிப்போ என்னமோ?நமக்கு தெரியாது, அது கெடக்குது பொறந்தநாள் அன்னிக்கு  ஆயாவுக்கு முட்டாய் எங்க என்றாள், நாம் முன்பின் பார்த்திறாத சிறு குழந்தை நம்மிடம் மிட்டாய் கேட்பது போல்.இதோ வாங்கி வருகிறேன் என்று அருகில் இருந்த கடை பக்கம் நகர்ந்தேன். உடனே அவள் "அட நான் சும்மா சொன்னேன்டா கண்ணு ஆயாவுக்கு பல்லு ஹீணம் முட்டாய் எல்லாம் கடிக்க முடியாது நீ நல்லா இருடா!அது போதும்" என்று கூறினாள். "சரிங்க ஆயா!நான் வரேன்" என்று வகுப்புக்கு நேரமானதால் அவசரமாக அங்கிருந்து நகர்ந்தேன்.ஏதோ இறந்த என் கொள்ளு பாட்டி, எனக்கு பிடித்தமானவள்,அழகாய்  எப்பொழுதும் என்னை உரிமையுடன் "ஜில்லுக்கண்ணு!" என்று கூறி நெற்றியில் முத்தமிடுவாள் அவளுடன் சற்று நேரம் அமர்ந்தது போல் இருந்தது.வகுப்புக்கு செல்லும்பொழுது சாலையில் நடக்கையில் தோன்றியது,வாழ்வில் பிறந்ததிலிருந்தே நம்முடன் இருக்கும் உறவுகளினும், திடீரென்று புதிதாய் தோன்றும் இத்தகைய உறவுகள், இந்த உறவுகள் நிரந்தரமா என்று எவருக்கும் தெரியாது, ஆனால் நாம் வாழ்வை சுவாரசியமாக்குவதில் அந்த நிரந்தரங்களை விட இவர்களின் பங்கு ஏராளாமாகிவிடுகிறது என்பது மறுக்க இயலா உண்மை.ஆயா!!இப்பொழுது அந்த மாடிப்படி அருகில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருப்பாள்.   
 

Saturday, October 16, 2010

இசை..
வியக்கின்றோம் 
உருவற்ற, 
அதன் வடிவை..
என்ன ?
உனக்கும் எனக்குமான, 
நமது மறைமுக அன்போ?!       


உணர்கின்றோம் அதனை,  
நாடி நரம்புகளினூடே.. 
என்ன? 
நாம் இணையும் தருணங்களோ?!  


ரசிக்கின்றோம் 
அதன் நடையை.. 
இருவருமாய்,  
என்ன? 
நம் மகவோ? 

இன்னும் பல உண்டு இவளுள்ளே..
ஆழ்கடல் ஆழம்தாண்டி, 

என்ன?
இதுதான், 
வியத்தலும்..
உணர்தலும்.. 
ரசித்தலும் கடந்து,  
பல நிறைந்த.. 
நம் வாழ்க்கையோ?!

Thursday, October 14, 2010

பக்கங்கள் படமாக...திரைப்படமாக

        ஒரு மதிய உணவு இடைவேளையின்போது  என் தோழி ஒருத்தியுடன் நடந்த சிறு விவாதம்.புத்தகங்களை அதாவது நாவல்களை திரைப்படமாக உருமாற்றம் செய்யும் ஒரு நாகரிகம் பற்றி,இந்த விவாதம் தொடங்கியதற்கான காரணத்தை முதலில் கூறிவிடுகிறேன், பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத்தின் மற்றொரு நாவலும் படமாக்கப்படப்போவதாக வந்த செய்தியே அதற்கு காரணம்.நான் சரி பாதி அதற்கு ஆதரவாக  பேசினாலும்,அந்த நடைமுறையை எதிர்க்கவும் தோன்றுகிறது. புத்தகங்களை படிக்க இயலா, எழுத்து ஞானம் இல்லா பாமர மக்களை சேறும் வகையிலேயே நாங்கள் அதனை  புத்தகங்களை படமாக்குகின்றோம் என்று கூறும் ஒரு சாரார் இருக்கின்றனர். அவர்களை தற்காலிகமாக "பணம் மறை(பறி)க்கும் சப்பைகட்டு" இயக்கத்தில் சேர்த்துவிடலாம்.ஏன் சார் 100/-  புத்தகத்தையே வாங்க வழி இல்லாதவன் நீங்க தர 200,300  ரூபாய்   டிக்கெட்டை எப்படி வாங்குவான்?.அதுவாவது இருக்கட்டும்,படம்  எடுக்கிறேன் பேர் வழி என்று புத்தகத்தின் முன் பத்து பக்கத்தையும் பின் பத்து பக்கத்தையும் சேர்த்துவிட்டு  நடுவில் இருப்பவற்றை கழுதைக்கு இறையாக்கிவிட்டு படம் எடுப்பவர்கள்தான் இன்றைய நிலையில் அதிகம் உள்ளனர்,அதுவும் ஆங்கில பட இயக்குனர்கள் பலர் இதில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் என்றுதான் கூறவேண்டும், அவர்களுக்கே புரியாது போயினும் அதை திரைப்படமாக்குகிறேன் என்று களமிறங்குபவர்கள் பட்டியல் பெரியது,  சாதாரண உதாரணம் ஹாரி பாட்டர் தொகுப்பினை திரைப்படமாக உருவாகிய விதம்.. முதல் பாகத்தில் புத்தகத்தின் பத்து பக்கம் மறைக்கப்பட்டு, ஐந்தாம் பாகத்தில் புத்தகத்தின் பாதி பக்கம் மறக்கப்பட்டு மொத்தத்தில் இறுதியில் ஹாரியே காணாமற்போய்விடுவாரோ  என்று என்னும் அளவிற்கு எடுக்கப்பட்ட திரைப்படம்.அது போல்தான் டேன் ப்ரௌனின் படைப்புகளும் வாழை இல்லை போட்டு விழுங்கப்பட்டன..மரியோ புசோவின் காட் பாதரும் அவ்வாறே ஆனால் மார்லன் பிராண்டோ என்ற ஒருவன் இருந்ததால் மறைக்கப்பட்ட/மறக்கப்பட பல பிழைகள் பொறுத்தருளப்பட்டன. எங்களுக்கு  "லார்ட் ஆப் தி ரிங்க்ஸ்" திரைப்படம் இருக்கிறது என்று கூறுபவர்களுக்கு "ஆம்! நீங்கள் கூறுவதை ஆமோதிக்கிறேன் புத்தகத்தை விட திரைப்படத்தில் எளிதாக காண்பித்திருந்தார்கள்". ஆனால் அதில் இயக்குனர் என்னும் ஒருவரின் பங்கு எங்கு இருந்தது?,இயக்குனர் என்பவரின் உழைப்பு இருந்தாலும் தனித்துவம் என்ற ஒன்று எங்கே சென்றது, அவருக்கு இயக்குனர் அன்றே பெயர் அல்லவே எங்கோ உள்ளிருக்கும் புதையலை தோண்டி எடுத்து வெளியுலகுக்கு காண்பிக்கும் மானிடனுக்கு நிகர்,அவ்வளவே.அதற்காக நம் தமிழ் திரையுலகில் (குறிப்பு : நான் கோலிவுட் என்று கூறவில்லை) எவரும் அவ்வாறு முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என்று சொல்லவரவில்லை பகவதிபுரம் ரெயில்வே கேட்(கரையெல்லாம் செண்பகப்பூ), மோகமுள்,சில நேரங்களில் சில மனிதர்கள் , என பல முயற்சிகள் படங்களாக வெளிவந்துள்ளன.ஆனால்,அவ்வளவாக எதையும் அவர்கள் விழுங்கவில்லை,ஆனால் எப்படி பார்த்தாலும் புத்தகங்களாக படித்து அதை ரசித்து அவற்றை தம்மனதில் ஒரு உருவிற்கு கொணர்ந்து கதாப்பாத்திரமாக நிறுத்தியவர்களுக்கு,திரையில் வேறு  ஒருவர் தோன்றி அந்த பாத்திரத்திற்கு நியாயம் தருவது பல நேரங்களில் உகந்ததாக இருந்ததில்லை நானும் அப்படிப்பட்டவர்கள் கூட்டத்தில் ஒருத்தி , அதற்காக அப்படங்களை ரசிக்கவில்லை என்று நான் கூறவில்லை, ஆனால் வேறு எவரோ ஒருவர் படைத்த பாத்திரங்களை திரைப்படமாக்கி ஆஸ்கார் ,தேசிய விருதுகள் என அடுக்குவது , ஒரு உண்மையான இயக்குனரின்/திரைப்பட கதாசிரியரின் தனித்துவம்,கற்பனைத்திறம் உழைப்பு ஆகியவற்றை அவமதிப்பது போல் ஆகாது?அதுவே எம் எண்ணம்,வாதம் அனைத்தும்.கற்பனை திறம் தனித்துவம் என்றதும் நினைவில் வருகிறது இயக்குனர் மணிரத்னம் அவர்களை எடுத்துக்கொள்ளுங்கள், அவர் எந்த புத்தகத்திற்கும் திரை வடிவம் கொடுத்ததில்லை ஆனால் அவரது தளபதி , நாயகன் ,இருவர் போல மனிதத்தின் பல பரிமாணங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த படம் வேறில்லை,  ஒரு அலைபாயுதேவை போல் அழகிய ஊடல் கலந்த காதலை,கணவன் மனைவி உறவை யாமரிந்தவரையில் எந்த புத்தகத்தை படமாக்கியவரும் அழகாக சொல்லியது இல்லை.அவரினும் பெரிய சகாப்தம் தமிழ் சினிமாவிற்கு வடிவம் கொடுத்த பழம் நம் கே.பாலச்சந்தர் அவர் எந்த புத்தகத்தை படித்தும் அதனால் ஈர்க்கப்பட்டு  ஒரு திரைப்படத்தை உருவாக்கியதில்லை ஆனால் அவரைப்போல், சாதாரண புத்தகம் எழுதுபவனும் தன் கதாப்பாத்திரத்தை செதுக்கியதில்லை ,அவரைபோல் யதார்த்தம்,மனித இயல்பு என்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் கொடுத்தவர்கள் வேறில்லை , 'அன்பே சிவம்' என்ற ஒரு படம் மட்டும் போதாது நம் மற்றொரு கலைஞனின் தனித்துவ திறம் பற்றி கூற,வசந்தபாலன் என்பவனை போல் சகோதரத்துவத்தை எந்த புத்தகமும் வர்ணித்ததில்லை,கேமரூன் போல் அழகிய காதலை எவரும் சொல்லியதில்லை.இவர்கள் நான் கூற விழைந்த அந்த தனித்துவம் மிக்க கற்பனையாளர்கள் பட்டியலில் ஒரு பாகம் அவ்வளவே இன்னும் பலர் இருக்கின்றனர் அப்பட்டியலில்  நாம் எப்பொழுதும் தோள் தட்டிக்கொண்டு கூறும்  "உலகத்தரம்" என்ற வார்த்தைக்கு இணையானவர்கள், ஆனால் பக்கங்களை படமாக்கும் இயக்குனர்கள் இருக்கையில் இவர்கள் அனைவருக்கும் அங்கீகாரம் என்பது சரிவரக்கிடைப்பதில்லை அல்லது அத்திரைகளுக்கு பின்னால் மறைக்கப்பட்டுவிடுகிறது .ஒரு பொருளை பற்றி அதன் தகுதிக்கு மீறி புகழ்வதும், விலையற்ற ஒன்றிற்கு தராசு இடுவதும்தான் நம்மிடையே பலரின் பிறப்பு இயல்பாயிற்றே.                     

Saturday, October 9, 2010

நீயற்ற என் நொடிகள் ..

காபிக்கள்...
எனக்கான,
உன் முத்தங்களாய்

என் எழுத்துக்கள்..
உன்னுடன்,
நேரிடை எண்ணப்பகிர்தல்

லயித்திருக்கும் இசைக்கணங்கள் 
என் இறுதிவரை.. 
எனக்குள் ஒன்றிவிட்டாய்..
நீயும் அவ்வாறே..

உன்னால்..
என்னின்று பிறக்கும் கவி வரிகள்,
நமக்காய்..
நமதான பிள்ளைகள்.. 

அனைத்தும் கலந்த இயற்கை வாசம்,
நீயறியா உன்வாசம்..
உன் அருகாமை..

எனை வருடும் தென்றல்,
நீ  ஸ்பரிசிக்கும் நொடிகள்.. 

என்னுள் இறங்கும் மழைத்துளிகள்,
உன் காமக்கணங்கள்..

வாதிடும் தருணம்,
உன்னை வெறுப்பேற்றும் நொடிகள்..

தலையணை ஈரங்கள்,
உன் மடி சாய்ந்து கண்ணீர்..
நீ அரவணைக்காவிடினும்.. 

நட்பிற்கான அக்கறையில் ,
நீ எந்தன் குழந்தையடா..

என்னிலிருந்து உந்தன் வெளிப்பாடு
என் குரலாய்..
என் அலைபேசி சிணுங்கல்களில்,    
உன் பெயர்..


விரல் தீட்டும் ஓவியங்கள்
உன் மன வண்ணங்கள்..

என் சிரிப்புகள்,
நம் மகிழ்ச்சிகள்.. 

என் கண்ணீர்த்துளிகள்,
நம்மிடை சிறு சண்டைகள்..

என் குறும்புகள்,
உனதருகே சிறு பிள்ளையாய்..

என் புத்தகங்கள்...
நீ அறியாது,
உனை வியக்கும் நான்.

என் நட்புகள்  வட்டாரம்,
நாம் நம் குடும்பத்துடன்..

இசைக்கும் வரிகள்,
நம் வாழ்க்கை..   

வாழ்கிறேன்,
நீ அறியாமல்..
உன்னுடன் நான்.

நீயற்ற என் நொடிகள்..
தலைப்பு பொய்த்ததோ?!

Thursday, October 7, 2010

எது கூறினும் வாதிடுவான் சிலசமயம்,
கூற்றை மறுப்பதற்கே பிறந்தவன் போல்,

அவளும் பேசவில்லை நான் ஏன் பேச?
இந்த சிறுபிள்ளை திமிருண்டு இவனிடம்

மழலையின் புரியா மந்திர சொல்போல்
இவன் பேச்சில் பொதிந்திருக்கும் ஆயிரம்

நினைத்ததை அடைந்திடும் குணமுண்டு இவனுக்கு
மிட்டாய்களுக்கு அடம்பிடிக்கும் பிஞ்சுகள்போல்..

அழகாய் புன்னகைக்கும் என் அழகு இது
அழகாயன் அவன் மோகனம் இதுவென்று தோன்றும்

கனநேரம் பேசிடுவான் சில நேரம் மௌனிப்பான்
மௌனத்தில் பல எண்ணம் அவன் நெஞ்சத்திலோடும்
தவழும் பாலம்அதன் மனதின் பல சிந்தை போல்..

பேசும் வார்த்தைகள் மெத்தனமாய் இருந்தாலும்,
அதில் தோன்றும் குழந்தை என் மனமிங்கு அறியும்..

இந்த வளர்குழந்தைக்கு..
எந்தன் சிறுகுறும்புக்கு 
நெற்றி முத்தமிட்டு மனம்,
ஆரிரரோ பாடும்..
உச்சந்தலை வருடி மனம்,
நல்லிரவு கூறும்..
நெஞ்சம் பூரித்து புன்னகைக்கும்,
எந்தன் பிள்ளையவன்..
மோகன உறக்கம் கண்டு.. 

Tuesday, October 5, 2010

சில நேரங்களில் சில மனிதர்களை சந்தித்ததில்...

சுற்றி இருப்பவர்களின் எண்ணங்கள் என்பது பல நேரங்களில் பல விதமாக மாறுகிறது..நேற்று நன்றாக பேசியவள் இன்று முகம் திருப்பிகொள்ளுவாள்..ஊரில் அனைவருக்கும் ஒருவரை பிடிக்கவில்லை என்றால் நானும் அவர்களுடன் சேர்ந்து  அந்த நபரை வெறுக்க தேவையில்லை..நேற்று என் மனம் தெளிவாக இருக்கிறது என்று கூறியவள் இன்று நேரம் போக்கவே புலம்புவாள்..நேற்று ஒருவர் செய்த காரியம் இன்று எனக்கு பிடிக்காமல் போகலாம்..நேற்று முகம் பார்த்து அனைவர் மத்தியிலும் புன்னகைத்தவன்  இன்று அதே அனைவர் மத்தியிலும் கண்டும் காணாது செல்லுவான்..நேற்று உன் கூற்று மிகச்சரி என்று சொன்னவன் இன்று அதே கூற்றை எதிர்ப்பான்..இவர்கள் என்னிடம் முறைக்கிறாள் ,புலம்புகிறாள்,ஒதுக்குகிறான்,எதிர்க்கிறான் என்பதற்காக நானும் அவர்களிடமிருந்து விலக முடியாது.அதற்கக்காக அவர்கள் கூற்றுடன் நான் ஒத்துபோகிறேன் அல்லது அவர்தம் கூற்றை மதிக்காது இருப்பதற்காகவே நான் சிலவற்றை செய்கிறேன் என்பது தவறு,ஏனில் அத்தருணங்களில் இவர்களைப்பற்றியதான என் எண்ணங்கள் மற்றவர்களிடமிருந்து சற்று மாறுபடுகிறது. எண்ண மாற்றங்களும் அவர்தம் நடவடிக்கைகள் மாறுவதும்  மனித இயல்பு.இதுவே நிலை என்பது என் ஆணித்தரமான எண்ணம்,அவ்வளவே.இந்த எமது எண்ணமானது பலருக்கு பிடிக்காமல் சென்றதுண்டு பலருக்கு பிடித்ததுண்டு,பலருக்கு பித்தென்று தோன்றியதுண்டு.அதற்காக என் நிலையிலிறிந்து நான் மாற இயலாது.ஏனில் என் இந்த சிறிய வாழ்வில் என் எண்ணங்கள்  படி வாழவே எனக்கு இங்கு நேரமில்லை ஆக பிறர் எண்ணங்கள் படி வாழ்வது என்பது சாத்தியமற்றவைகளையும் தாண்டிய ஒன்றாகிவிடுகிறது.

Monday, October 4, 2010

என்னவன் மடிசாய்ந்து
உணர்ந்திருப்பேன்,
இளையவனின் இசையை
தாலாட்டாய்,
இறுதி என்பது மறுநொடியாயின்
இது என்ன புதுவித ஆசை,
தாயிடத்தல்லாததாய்,
ஒரு தாலாட்டு கேட்டிட..
புரியவில்லை எனக்கு..
ஆனால் ஏனோ,
அத்தாயிடத்து சிறுகுழந்தைபோல் ஆகிவிடுகிறது..
அவன் தருவில் என் மனம்..

இப்படிக்கு
- ( :-);-) :P ;D :P)

Monday, September 27, 2010

கார்மேகத்தின் கூடலுக்கு,
பிறந்த முத்துக்கள்..
மண்சேர..
உதித்தன மனிதப்புன்னகைகள்,
பசுமை கண்டு, 
பறவையாய்...

Monday, September 20, 2010

நல்ல மானுடம் போல்..

ஞானிபோல் பேசும் மனம் சிலநேரம்..
நெஞ்சம் மானுடம் போல்,
ஆசை கொள்ளும் பலநேரம்..
ஆனால் பாதை அவர்தமதல்ல..
இவள் செல்லும் பாதை அவர்தமதல்ல,
கூட்டத்தினுள் மௌனம் தேடும்,
தனிமையில் இயற்கையுடன் இசைமொழியும்
இவள் மனம்,
நகைச்சுவையும் உடன் சேர்ந்த நையாண்டியும்,
காதலும் அதில் கலந்த காமமும்,
பொறாமையும் அளவற்ற கோபமும்,
சிறு சுயநலமும் சோம்பித்திரிதலும்,
இவள்..
நல்ல மானுடம் போல்..
ஆனால் செல்லும் பாதை அவர்தமதல்ல..
அவை இவள் நிரந்தரம் அல்ல..
இனமறியா ஒன்றை உணர்திடும் இவள் மனம்
தினம் தினம்..
பிறர் அடையா ஒன்றை,
இவள் புரியா ஒன்றை,
ஆன்மா, விடை தேடி...
இவள் பாதை..
புதியதாய் பிறந்ததும் அல்ல,
அந்த பாதை..  
பலர் தனியே சென்றது,
பலர் தயக்கம் கொண்டது, 
முடிவற்ற பாதையில் இவள்,
தோல்வி வெற்றி இதற்கில்லை..
அவையனைத்தும் இதை தேட..
அவையனைத்தும் இதில் அடங்க
அப்பாதை நோக்கி இவள்
ஆனால்,
இவள் பாதை அவர்தமதல்ல..
நல்ல மானுடத்ததல்ல ..

Wednesday, September 8, 2010

தீண்டாய்...

                சென்ற ஞாயிறு எதேச்சையாக "தன்மத்ரா" திரைப்படத்தை மீண்டும் காண நேர்ந்தது.Alzheimer's நோய் அராய்ச்சி மீதான ஆர்வமும் எனக்கு அந்த படம் பிடித்தமைக்கு ஒரு காரணமாக கொள்ளலாம்.அந்த படத்தில் வரும் ஒரு வசனம் எனை மிக ஈர்த்த ஒன்று,ஏனில் யதார்த்தமாக யோசித்தால் நிஜ வாழ்விலும் அது நூறு சதவிகிதம் உண்மை என்று நம்புபவள்.
                            "Have you ever caressed them?,have you ever kissed them in their forehead? From a new born to everyone desires this touch.Skin Desires touch and their should be a Valid supply of stimulation.A touching and caressing is enough to stop breaking of Relationships".
                              இந்த வசனம் எனை ஈர்க்க என்ன காரணம்..வயதுக்கோளாறு என்ற பொதுப்படையான விடையை தரவோ அல்லது பிறரிடமிருந்து அதே விடையை எதிர்பார்க்கவோ விரும்பவில்லை.அதற்காக நான் முற்றும் துறந்த துறவியும் அல்ல.சற்று மாத்தியோசிப்போமே!.உலகில் உள்ள உறவுகள் அனைத்திற்கும் வரையறை என்று பார்த்தால் அது தொடல்/தீண்டல்/ஸ்பரிசம்  என்ற ஒன்றில் போய் முடிகிறது.உலகின் எல்லை கடல்தான் என்பது போல.
 நம்மில் பலரின் வரையறைதான் நான் இங்கே குறிப்பிடவிரும்புவது
-தந்தையுடன் தோள் மேல் கரம் போட்டு நடப்பது போல் வேறு ஒரு பெருமிதமும்  அரவணைப்பும் கலந்த தருணம் வேறில்லை என்பவர் இங்கு பலர்.
-தாய்மை, அவளிடமே கேளுங்களேன் கடவுளை எதில் உணர்ந்தாய் என்றால் தன் மகவுக்கு தாய்ப்பால் தந்த தருணத்தில் என்பாள்.
-ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான காதல் என்பதன் உச்சகட்டம் காமம் என்பதாகவே இன்றுவரை வரையறுக்கப்பட்டுள்ளது (ஏனோ அதை தாண்டி மக்கள் யோசிக்காது மாக்களை போல இருந்துவிடுகின்றனர் என்பது சற்று வருந்தத்தக்கதே).அது நட்பாகவே இருந்தாலும் அங்கு தொடல் என்பது ஏதோ ஒருவகையில் (உதாரணமாக:அக்கறை என்ற பெயரில்) தேவைப்படுவதாக இருக்கிறது.

 மேல் சொன்ன யாவற்றையும் சற்று யோசித்தால் அது,அதாவது தொடல்/தீண்டல் என்பது ஏதோ ஒரு விதத்தில் ஒரு தூண்டுதல் ஆயுதமாகவே இருக்கிறது.ஒருவரின் நாள் அன்று ஏனோ மந்தமாக இருந்து எதிர்பாராவிதமாக அவர் சந்திக்கும் குழந்தை ஒன்று கன்னத்தில் சிறு முத்தமிட்டால். அவர் முகம் தோன்றும் பிரகாசத்தின் முன் ஆயிரம் வாட்ஸ் பல்ப் தோற்றுவிடும்.ஆனால் நாட்டில் இப்பொழுது முதியோர் இல்லங்களும், விவாகரத்து புகழ் வக்கீல்களின் இல்லங்களும் நாளும் குறையாமல் நிரம்பி வழிவதை சற்று நோக்குவோமே. இந்த தம்பதிகளிடம் கேட்டால் "வாழ்க்கை வெறுத்துவிட்டது சார் எங்கள் இருவரிடையே" என்பர்.காரணம் இவர்களிடையே தொடல்/தீண்டல்/ஸ்பரிசம்  என்பது வளரும் நாகரிகத்திடயே மார்கழி மாதம் பிள்ளையார் கோவிலில் பொங்கல், பெருமாள் கோவிலில் தயிர் சாதம், புளியோதரை  பிரசாதம் தருவது ஒரு கடமை  என்பது போலவே ஆகிவருகிறது.ஆகா அதில் இருக்கும் அடித்தளமான அன்பு என்பது அந்த பொங்கல் வாங்கும் இலையை போல தூக்கி எறியப்பட்டோ அல்லது இலையிலேயே வாங்காமல் கடமை என்னும் கையேந்தி பவன் போலவோ ஆகிவிடுகிறது. பெற்றவர்,பிள்ளைகளிடையே இன்னும் சற்று காமெடி அதிகம் தந்தை இந்தியாவில்,மகன் அமெரிக்காவில் கம்ப்யுட்டர் திரை முன் அமர்ந்து "ஹாய் டாட்!" என்பான் காமிரா வழியாக. மகளாக இருந்தால் "அம்மா நான் இன்னிக்கு வத்த குழம்பு செய்தேன்! அப்படியே தி.நகரில் ஷாப்பிங் போயிட்டு வந்தோம்"  என்று சமாசாரம் இருக்கும்.இங்கு பல அப்பாவிற்கும் அவர்தம் பெண்ணிர்க்குமிடையேவோ அல்லது அன்னைக்கும் அவர்தம் மகனுக்குமிடயேவோ அதிகரிக்கும் வயதை விட,அதிகரிக்கும் இடைவெளிகளே அதிகம்.இல்லை என்று மறுக்கவே முடியாது.நம்மால் அவர்களுடன் கை கோர்த்து நடக்க முடியாததால் பாவம் கருணை மிக்க நாம் ஒரு வயதிற்கு பிறகு அவர்கள் கையில் ஊன்று கோளை கொடுத்து விடுகிறோம்.நாம் ஐந்து வயதில் நாம் கரம் பற்றி நடந்தவர்களுக்கு அவர்கள் எழுபதுகளில் நம் கரங்களுக்கு பதிலாக அந்த கோல்.சற்று தலை கீழாக பார்த்தால் பிள்ளைகளை பெற்றோர்களுடன் செலவிடும் நேரத்தை விட இந்நாட்களில் போகோ நிகழ்ச்சிகளும் ப்ளே ஸ்கூலிலும் செலவிடும் நேரமே அதிகம்.இதிலே எங்கே வந்துவிடும் அரவணைப்பு அவரைக்காய்,கத்தரிக்காய் எல்லாம்.கரன் ஜோகர் படங்களில் பார்ப்பதோடு முடிந்துவிடுகின்றன அவை.அதனால்தான் வசூல்ராஜாவின்  கட்டிப்பிடி வைத்தியம் கூட இங்கு பலருக்கு நகைச்சுவையோடு நகைச்சுவையாகவே தோன்றிவிட்டது.உண்மைதானே? .குடும்பம், உறவு, நட்பு இவைகளிடையே இந்த தீண்டல்/தொடல்/ஸ்பரிசம் போன்று இன்னும் காண இயலாத மறைந்து இருப்பவை பல இவை பற்றி கற்போம் சார் முதலில்.    
           


    

Friday, August 27, 2010

கடவுள்..
எல்லைகளற்றவன் என்றோம்,
அவனை..
இன்று ஏனோ..
கடையுள் இருக்கும்
வத்திகளுக்கிடயே
சுருங்கிவிட்டது,
அந்த எல்லையற்றதன்மை..    

Thursday, August 26, 2010

இறந்தகாலமும்,
எதிர்காலமும்,
நிகழ்காலத்தில்...
முதிறும் சிறிதும்,
சாலையில்..
பஞ்சுமிட்டாய் பரிமாற்றங்கள்..

Monday, August 23, 2010

ஒரு மாலை..மழைக்கால நேரம்..

வீட்டில் உட்கார்ந்திருக்க மனம் வரவில்லை..வீட்டில் இருந்தால் கூட ஒரு இடத்தில் அமர்ந்திருக்க மனம் வராது..உள்ளுக்கும் வாசலுக்கும் நடந்துகொண்டிருப்பேன்.காரணமே  இல்லாமல்(ஆம் காரணமே இல்லாமல்தான்,வீட்டில் ஏதாவது வேளை இருந்து வெளியில் சென்றுவர வேண்டுமென்றாலோ அல்லது அருகாமையில் இருக்கும் சொந்தங்களை சந்திக்க வேண்டும் என்றாலோ என்னுடைய சோம்பேறித்தனம் என்னுடன் ஒட்டிக்கொண்டுவிடும்,இவர்கள் சொல்லி நாம் கேட்பதென்ன என்ற சோம்பேறித்தனம்) .இப்படி இருக்க,எனக்காக மழை வாசலிலும்,வீட்டு முற்றத்திலும் பெய்துகொண்டிருக்கும்பொழுது என்னால் எப்படி ஒரே இடத்தில் அமர்ந்திருக்க முடியும். வீட்டில் உட்கார்ந்திருக்க மனம் வரவில்லை.வெளியே கிளம்பிவிட்டேன்.எங்காயினும் செல்வதென்றால் என் மிதிவண்டியில்தான் செல்வது வழக்கம்.TVS இருந்தும் BSA -வை ஓட்டுவதில் இருந்த மகிழ்ச்சி எனக்கு அதில் இருந்ததில்லை ,ஆனால் மழையில் பொறுமையாய் நனைந்திட,நமக்கு சைக்கிள் சரிபடாது என்று நடராஜா சர்வீசை துவக்கிவிட்டேன்.தோழி ஒருத்தி வீட்டுக்கு சென்றாகிவிட்டது.அவள் வீட்டு தோட்டத்தில் நானும் அவளும் அமர்ந்து மிக நேரம் பேசிக்கொண்டிருந்தோம்,அவளுக்கு மழை பிடிக்காது என்பதால் அவள் ஷெட்-இல் அமர்ந்துகொண்டுவிட்டாள்.அவளுடன் எங்கள் பள்ளிநாட்கள் பற்றி பேசிக்கொண்டிருந்துவிட்டு,மழையில் அமர்ந்தபடி கையில் அவள் அம்மா தந்த சாக்லேட் கேக் சாப்பிட்டுக்கொண்டு எங்கள் மாலை நேரத்திற்கான திட்டங்களையும் போட்டாகிவிட்டது.(இதை படிக்கும் சிலபேருக்கு இப்பொழுது நிச்சயமாக "stomach burnings of india" ஆகிக்கொண்டிருக்கும்).இங்கு "சிலபேர்" என்று சொன்னதை கவனத்தில் வைத்துகொள்ளுங்கள் எதற்கு என்று பின்னால் கூறுகிறேன்.வீட்டிற்கு வந்து அம்மா கூறாத வேலைகளையும் "வெளியே செல்லலாம்", என்ற காரணத்தால் நானே செய்தேன்.பிறகு ஆசை தம்பியுடன் அமர்ந்து ஒரு படம் பார்த்தாகிவிட்டது (ஆமாம் சார்,ஆசை தம்பி...அந்த டிவி ரிமோட்   அவன் கைக்கு போயிட்டா அவளோதான் சார்).ஆனால் இதெல்லாம் முக்கியமில்லை எங்கள் மாலை நேர திட்டம் அதைபற்றிதான் இங்கு கூற வந்தேன்.மாலை hi -fashion -இற்கு சென்று ரக்க்ஷா பந்தன் பரிசு வாங்க திட்டமிட்டிருந்தோம்.மாலை ஆறு மணிக்கு கோவில் வழியாக அந்த அரை ஈர கற்களின் மீது நடந்து சென்றோம்(அம்மா கொடுத்த குடையை அவர்கள் வீட்டில் வைத்துவிட்டேன்).கோவில் வழியாக பாதி தூரம் நடந்திருப்போம் சிறிதாக மழை பிடித்துக்கொண்டுவிட்டது. கற்கள் மேல் ஆங்கான்கே நீர் தேங்கி இருக்க அவள் "ஐஷு அதன் மீது நடக்காதே என்று சொன்னபோழுதே அதன் மீது நடந்து சென்றேன்.இடையே அவள் புலம்பல்கள் "ஒன்னு செய்யாதேன்னு சொன்னா செய்வ!!உன்ன மாத்தவேமுடியாது"..SVS -இற்கு சென்று கோபி-65 சாப்பிட்டுவிட்டு hi -fashion -இல் பரிசை வாங்கிக்கொண்டு திரும்பினோம் மழை பலமாக பிடித்துகொண்டு விட "ஐஷு உன்னாலதான் இன்னிக்கு முதல் முறையா மழைல நனையறேன்..உங்களுக்கெல்லாம் மட்டும்தான் இப்படியெல்லாம் தோணும் அப்நார்மல் கேஸ் சுமீத்-உம் இப்படிதான் மழைல நனையறதுக்கு சைக்கிள் எடுத்துட்டு சுத்துவான்.சொல்ற பேச்ச  கேக்கறது கிடையாது..நீங்க எல்லாமே ஒரு வித்தியாசமான கேஸ்" என்றாள்.அவர்கள் கூறுவது கேட்பதற்க்கு நன்றாக தோன்றினாலும் சிலசமயம் இவர்கள் முட்டாள்களோ என்று யோசிக்க தோன்றும். பிறகென்ன,சற்று யோசித்து பாருங்கள் யார் அப்நார்மல் என்று.இப்படி கூறுபவர்கள்தான் அப்நார்மல்கள் என்று தோன்றும்.நாங்களெல்லாம் மிக அரிதாக தோன்றும் நார்மல்கள்.அவளிடம் திருப்பி ஒரு கேள்வி கேட்டேன்."ஒருவேளை இந்த குடை எதுவுமே இந்த  உலகத்துல கண்டுபிடிக்கலேன்னா என்ன செஞ்சுருப்ப?" என்று.அவள் "உன்கிட்ட பேசி ஜெயிக்க  முடியாது ஏதோ பண்ணு" என்றாள் ஆனால் அவளிடம் எதிர்பார்த்த விடை அதுவன்று.நீங்களே   யோசித்து பாருங்கள் ஒருவேளை அந்த குடை என்னும் சமாசாரமே இந்த உலகில் இல்லையென்றால்?! கண்டிப்பாக அந்த மழையில் நனைந்துதானே சென்றிருப்போம்.ஆனால் குடை என்னும் அத்தியாவசியம் இருப்பதால் அதை உபயோகப்படுத்தும் எண்ணம் நம்மிடையே. இது மழை விஷயத்தில் மட்டுமல்ல பொதுவாகவே,யாராவது ஒருவர் அமைதியாக சில நேரம் இருந்தால் அவர் alien-லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டுவிடுவர்,சத்தம் என்பதே நாம் உருவாக்கிய வார்த்தைதானே அதனால்தான் மூங்கில் குழாயிலிருந்து வரும் காற்றுக்குமட்டுமே இசை என்று பெயரிட்ட நாம் மௌனத்தை வெறும் மெளனமாகவே பார்க்க பழகிவிட்டோம்,அதுவும் ஒரு இசை என்று தங்களை நார்மல் என்று சொல்லிக்கொள்பவர்கள் மனம் ஏற்க மறுக்கின்றது,இவர்களை பொறுத்தவரை மௌனம் என்பது ஒரு செயலற்ற தன்மை.வெள்ளைலிருந்து பிறந்தவைதான் மற்ற நிறங்கள் ஆனால் வெள்ளை என்பது ஒரு நிறம் அல்ல என்பதுபோல்தான் இதுவும் .இசைக்கு காதல், காமம்,குரோதம்,ஆச்சரியம் மகிழ்ச்சி என்று பல பரிமாணங்களை கொடுத்துவிட்டு மௌனத்திற்கு அடையாளத்தை மாற்றிவிட்டோம்.காரில் செல்பவர்கள் காலில் செருப்பின்றி ஒருவர் செல்வதை பார்க்கும்பொழுது என்றோ ஒரு நாள் அவர் மூதாதையர் நெருப்பை கண்டுபிடிப்பதற்கு முன்பு அறைக்கோமணம் கூட  கட்டியிராமல்தான் நடந்தார்கள் என்பதை  மறந்துவிடுகின்றனர் .அதனால்தான் அக்கால மனிதர்களை நாம் காட்டுமிராண்டிகள் என்று பட்டியலிட்டுவிட்டோம்.அட அவர்களும் நாமும் எதில் மாறிவிட்டோம்? raymonds, lakme தவிர ,அவர்களைப்போலவேதான் நாம் வாழ்வை சொகுசாகிக்கொள்ள நித்தம் ஏதாவது ஒன்றை  கண்டுபிடித்துகொண்டிருக்கிரோம்/ தேடிக்கொண்டிருக்கிறோம்  அதனூடே இயற்கையாய் இயற்கையிநூடே இருப்பதை  ரசிக்க அனுபவிக்க இங்கே பலர் தவறிவிடுகிறோம் (இப்பொழுது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் நான் "சிலபேர்" என்று சொன்னதன் அர்த்தம்) நாம் மனிதம் இல்லை சார் ,சற்று நாகரிகப்பட்ட காட்டுமிராண்டிகள்.யோசித்தேன் "வாழ்வின் ஒவ்வொரு நொடியும் போனால்  திரும்பப்பெற இயலாதது அதனால் அதை வாழ்ந்துவிடு" என்று எவனோ ஒருவன் சொன்ன வரிகளை,அந்த வரிகளுக்கு பின்தான் எவ்வளவு அச்சம் புதைந்துகிடக்கிறது  மனித இனத்தின் மொத்த அச்சமும் .இதை பற்றி பேசிக்கொண்டுபோனால் ,மனித இனம் வாழ்வில் எட்டியது மலையா? மடுவா? என்ற கேள்வியில்தான் கொண்டுவிடும்.ஆனால் நாம் இன்னும் மனித இனமாகவே மாறவில்லை  என்பது அந்த நெருப்பு பிறந்த சிக்கி முக்கி கல்லில் சிராய்ந்துபோன  ஒரு உண்மை. கேள்வியில் சிறு திருத்தம் "சற்று நாகரீகப்பட்ட காட்டுமிராண்டிகள்  இனம் வாழ்வில் அடைந்தது மலையா?மடுவா?".இதற்கும் விடையில்லை.ஒரு நிமிஷம், இதே மழை  நாளைக்கும் வருமா சார்?!..நம்ம ரமணன் என்ன சொல்லறாரு?!.   



Wednesday, August 18, 2010

நான் ஏங்கும் அரவணைப்பை
நீ மறுத்திடினும்,
உன் நிலை எண்ணியே நான் இங்கு இருக்கிறேன்..
இருப்பேன்..
எழுதல் முதல் துயில் வரை..
துயில் புகும் கனவுகளில்..
நாட்களின் சிறு அடிகளிலும்,நொடிகளிலும்..
உன்னவள் எண்ணாத பொழுதுகளிலும்,
உனை எண்ணி இருப்பேன் நான் இங்கு ,
அணைந்தாலும்,
அந்த எண்ணங்கள் உனை நீங்கா..
அரணாய் காக்கும்..
நீயும் அறியாது..
நான் விரும்பும் அவன்..
உன்னுள் இருக்கும் அவன்..
அவன் அடிகளிலும் நொடிகளிலும்..
அவனாய் அவன் இறுதிவரை இருக்க..
-,
-வாயோடு மறைந்திடும் வரிகள் இவையில்லை
நீ அவ்வாறு நினைந்தாலும் வருத்தம் எனக்கில்லை
ஏனில் எவரும் தரமுடியா அன்பு எனது
உன்மீதானது..
அது பாமரரின் வரிகள் போல் வாயோடு போகாது..
நாடிகளில் வேரூன்றி இருந்திட..

Wednesday, July 21, 2010

சில்லென்ற காற்றை..
சிறுநடை இட்டு ரசித்தபடி,
"சின்னஞ்சிறுகிளியே"விற்கு..
"ஆஹா"ரம் செய்திருந்தேன்,
முன்சென்ற தமிழச்சியின்,
குறுக்கிட்ட குரல் இது..
"வாகா, வாகா, வாவ்!! வாவ்!!"
பத்தே நாட்களில் பிரபலமானது,
எண்ணினேன்,
நூற்றுப்பதினேழு அகவையாய்,
நாம் "வாவ்!!" சொல்ல காத்திருக்கும்,
கவியவன் வரிகளை

Friday, July 16, 2010

பக்..

           கப் என்று சொல்ல வராத ஒரு சிறு மழலையின் வாய்ச்சொல் அது.சுமார் ஒன்றரை வயது இருக்கும்."ஜான்வி!!அண்ணா கிட்டே போ,அண்ணா கூப்பிடறான் பாரு" என்றார் அக்குழந்தையை அழைத்து வந்திருந்த அவளது அன்னை ,அதுவும் என் தம்பியிடம் சென்று அழகாக அவனருகில் அமர்ந்துகொண்டது, என் பெரியம்மா என்னை அவர்களுக்கு அறிமுகபடுத்தியவுடன், "ஓ! நானும் இன்ஜினியர் தான் மா!" என்று கூறிக்கொண்டிருந்தார்.நான் அதை மறுத்து  இன்ஜினியர்க்கும் தொழிற்நுட்ப  வல்லுனருக்குமான   என் வழக்கமான விளக்கத்தை அளித்துகொண்டிருந்தேன்,என் நா அவருக்கு விளக்கமளித்துகொண்டிருந்தாலும் என் எண்ணம் அந்த சிறு குழந்தையிடமே இருந்தது.இதை உணர்ந்த ஜான்வியின் அம்மா!! "ஜானு!! அக்கா இருக்கா பாரு ..அக்கா கிட்டே போ..அக்கா பாரு!! என்றார்.அது மெதுவாக என்னை நோக்கி சோபாக்களின்மேல் கையூன்றி தத்தி தத்தி வந்தது. மற்றொரு சோபாவின் மீது அமர்ந்திருந்த என் கால்களினூடே புகுந்து என் மீது தலை சாய்த்து நின்று கொண்டிருந்தது.நான் அதனிடம்,"குட்டி பொண்ணு பேர் என்ன?!" என்றேன் அழகாய்  "jaaaaani" என்றது.மற்ற குழந்தை கள் போல் அது என் முகம்  பார்த்து சிரிக்கவில்லை.சிரித்தது ஆனால் வேறெங்கோ பார்த்து சிரித்துகொண்டிருந்தது.என் கைகளை அழகாய் அதான் பிஞ்சு விரல்களால் தொட்டு பார்த்து கொண்டிருந்தது .இது வழக்கமான குழந்தையின் செயல் என்று நானும் அதை பொருட்படுத்தவில்லை .இன்னும் சொல்லப்போனால் அது குழந்தைகளிடம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.சிறிதுநேரம் கழித்து என் தம்பியிடம் திரும்பவும் சென்றது,ஆனால் அதன் நடை சாதாரண குழந்தையினும் சற்று வித்தியாசமாக எனக்கு தோன்றியது. என் தம்பியும் அதனுடன் விளையாட துவங்கினான். அவன் திடீரென்று என்னிடம் "பாவம் ஜில்லு இந்த கொழந்த பொறந்ததுலேர்ந்தே ரெண்டு கண்ணுலயும் பார்வை இல்ல. அவாளுக்கே 22  டேஸ் கழிச்சுதான் தெரியவந்துது !!" , என்றான்.  நான் என் பெரியம்மாவிடம் "எதனால இப்படி?,டாக்டர் கிட்டே போனாலா?!" என்றேன். பெரியம்மா " போனா, ஏதோ ரெட்டினால் டிடாச்மெண்டாம் (retinal detachment) ,கடைசி ஸ்டேஜ் அதனால டாக்டர் எதுவும் பண்ண முடியாது சொல்லிட்டா !!..".எனக்கு அப்பொழுது , மனதில் ஏதோ ஒரு வலி தோன்றியது போல் இருந்தது,இனம் தெரியாத ஏதோ ஒன்று மனதை இறுக அழுத்துவதுபோல் ,ஏனோ கண்ணில் சிறு துளிகூட வரவில்லை  நான் அக்குழந்தையின் செயலையே கவனித்து கொண்டிருந்தேன்..  என் தம்பி அதனை " ABC.." கூற சொன்னான் அழகாக மழலை maaraadhu கூறியது, என் பேர் சொல்லு "அரபு!! சொல்லு,அரபு!!". அது அழகாக "அப்பு" என்றது.."மிக்கி எங்க?"  என்றான்,அதன் கையில் இருந்த சிறு பொம்மையை காண்பித்து.."மிச்சி!!" என்றது.  .சிறிதுநேரம் விளையாடிகொண்டிருந்த அர்விந்த் முன்தினத்து கால்பந்தாட்டத்தின் மறுஒளிபரப்பை காண அமர்ந்துவிட்டான். அக்குழந்தை தரையில் அமர்ந்து அந்த மிக்கி பொம்மையை தடவி பார்த்து அதன் அமைப்பை உணர்ந்து கொண்டிருந்தது.அவளையே நோக்கி கொண்டிருந்தேன். "இம்மி..ம்ம்ம்ம்.. issskkh " என்று அழகாய் அந்த பிஞ்சு தான் மட்டுமே பொருள் உணர்ந்த ஒன்றை சொல்லிக்கொண்டிருந்தது.நான் அமர்ந்து இருப்பது தெரியாமல் என் அருகில் வந்து அமர்ந்தது.நான் பொறுமையாய் அதன் அருகில் சென்று "ஜானுமா!!" என்றேன் மெதுவாக , அதற்கு என்ன தோன்றியதோ!! மெதுவாக என்னிடம் வந்து என் முகத்தை தடவியது, சட்டென்று குத்துக்காலிட்டு அமர்திருந்த என் மீது பாய்ந்து வந்து என் கால்களின் மேல் படுத்துக்கொண்டது.நானும் அதனிடம் அந்த "பக்" விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தேன்.என்னிடம்  ஒரு விளையாட்டான பழக்கம் உண்டு எந்த குழந்தையாக இருந்தாலும் அதன் உள்ளங்கையை மெதுவாக வருடிக்கொடுப்பேன்.கெளதம் முதன்முதலில் சிரித்ததே அவ்வாறுதான்.அந்த mudhal  புன்னகைக்கு இவ்வுலகில் வேறு ஈடு இணை இல்லை ,எந்த குழந்தையும் அதற்கு அழகாய் புன்னகைக்கும். ஜானவியும் அழகாய் புன்னகைத்துகொண்டே மருதாணி இடுவதற்கு கரம் காண்பிப்பது போல் காட்டிக்கொண்டிருந்தது.பிறகு எல்லா குழந்தைகளிடமும் நாம் அனைவரும் விளையாடும் "முட்டு முட்டு"க்கள். நான் குத்துக்காலிட்டிருந்ததால்  என் முட்டியின்  மீது தலைவைத்து படுத்திருந்தாள்.,அதனிடம் பொறுமையாக "முட்டு முட்டு முட்டு முட்டு முட்டு முட்" என்று அதன் நெற்றியில் அதற்கு வலிக்கதவாறு இடித்தேன்.. இடித்ததும்தான் தாமதம் அதுவரை அமைதியாய் இருந்த குழந்தை வாய்விட்டு "ஹி ஹி" என் சிரிக்கத்தொடங்கியது..நான் மீண்டும் அவ்வாறு முட்டு முட்டு என்றேன் மீண்டும் அழகாய் சிரித்தது. பக்கத்தில் இருந்த பெரியம்மா.. "ஜில்லு இது இதுவரைக்கும் இப்படி சிரிச்சதே இல்லேடி!!,என்னமோ இப்படி சிரிக்கறது பாரேண்டா அர்விந்த் "..என்றார், நான் மீண்டும், மீண்டும் அவ்வாறு செய்தேன்,அழகாய் வாய்விட்டு சிரித்துக்கொண்டே இருந்தது. அதுவரை மனதுள் அடக்கிவைத்திருந்தது இப்பொழுது கண்ணீர் துளியாய்   என் கண்களை மறைக்கத்துவங்கியது,கண்ணீரை துடைத்துக்கொண்டு "கப்" என்றேன், "பக்" என்றது அக்குழந்தை.ஏன் என்று தெரியவில்லை, இதை எழுதும்பொழுதும் கண்ணீர். மனிதம் புதைந்தது என்கிறோம் நாம், அதைப்போல் கடவுளிடமும் கடவுள் இல்லையோ...!!

Thursday, July 15, 2010

என் நாசிக்குள்,
நம் இரவின் பதிவுகள்,
உன் ஆடைகாற்று  வாசமாய்..

சாருகேசியினும் மோகமிக்க,
பொழுதுகள் அவை...

 உன் தீண்டல்களில்,

உன் கெஞ்சல்களில்,

உன் கொஞ்சல்களில்,         

என் மிஞ்சல்களுக்காய் பிறந்த
உன் வலிமைகளில்,

மோகம் ஒரு நெருப்பாய்..

நல்ல சந்தங்கள் சேர்ந்ததுபோல்,
என் இடதில் நீ நெடுக, 
உன் வலதில் நான் குறுகி,

சிறு மோகனத்தில் முடிந்தது
நம் சாருகேசி..

Monday, July 5, 2010

எண்ணச்சிதறல்..

ஒரு பாடல் வரியை கேட்டுகொண்டிருந்தபோது தோன்றியது, இசையை உணர்ந்து "நாம் அதற்கு அடிமை" என்று கூறும் சொற்கள் பொய்யோ ?!,நாம் அடிமை படுபவைகளை உணர்த்த அது ஒரு கருவியாக நமது அடிமையாக மாறிவருகிறதோ?! என்று தோன்றுகிறது,யோசித்தேன் இசையும் இயற்கைதானே.. நமக்குத்தான் தெரியுமே மனிதத்திற்கும் இயற்கைக்கும் இடையிலான பந்தம்...

Saturday, July 3, 2010

ரயில் பயணத்தில் யோசித்தது..

 கற்கள் கரைந்திடாதென்றார்கள்..
இதோ காண்கிறேன்,
மண்ணாய் போகும் மனிதர்களை..

Tuesday, June 29, 2010

கடவுளர்

                       ஒரு  வாதத்தின்பொழுது  எழுந்து கேள்வி இது..“உனக்கு ரஜினி பிடிக்குமா?! ,கமல்  பிடிக்குமா ?!”.நான்  கூறிய  பதில்  “ரெண்டு  பேருமே ..”எனது  விடை  கேள்வி  கேட்டவருக்கு  ஒரு  சமாளிப்பாக  தோன்றலாம் .ஆனால்  அது  எனது  மனதில் ஆணித்தரமாக தோன்றிய ஒரு விடை.இருவரும்  அவர், அவர் வழியில் தனித்து  தோன்றுபவர்கள் .இதே  கேள்வியை  நான்  என்னை  வினவியவரிடம் திருப்பி கேட்டேன். “கமல் ஆ!!  ச்ச! எனக்கு  பிடிக்கவே  பிடிக்காது ..அவன்  படம்னாலே  அதுல  எதாவது  கன்றாவியான  சீன்  தான்  வரும் ,கமலோட  எதாவது  ஒரு  படம்  சொல்லு  மினிமம்   ஒரு  கிஸ்ஸிங் சீன்  இல்லாம?!”.அந்த  நபர்  மட்டும்  அல்ல  இந்த  தமிழகத்தில்  பலரின்  கோணத்திலும்  கமல் என்ற ஒரு பாத்திரம் அவ்வாறானதே.ஒரு  வேளை  அவரது  சொந்த  வாழ்க்கை  அதற்கு  காரணமாக  இருக்கலாம் . பெண்களை  சுற்றியே  அவரது  சொந்த  வாழ்கையின்  கருக்களம்  வெளி உலகிற்கு தோன்றுகிறது .முதல்  முறையாக  குருதி  புனல்  படம்  பார்த்த  பொழுது . பின்னிருந்து  படத்தை  பார்த்து  கொண்டிருந்த   என் பாட்டியின்  கமல்-இன்  மீதான  சரமாரி  சொல்  தாக்குதல்  இன்னமும்  என்  நினைவில்  உள்ளது.”எப்ப பாத்தாலும்  அசிங்கமா படத்துல  காமிச்சுண்டு ,அவ  கூட  இவ  கூட  சுத்தறது ..சென்சர் போர்டு  எதுக்கு  இருக்குனே தெரியலே!!”.அவள் பாவம் அக்காலத்து ஒன்பதாம் வகுப்பு, "அ" என்னும் வார்த்தையை முழுதாய் கற்கும் முன்னரே திருமணம் செய்து வைக்கப்பட்டவளுக்கு எந்த ஒரு பொருள் பற்றியும் குடும்பம் என்ற கண்ணோட்டத்திலேயே பார்க்க பழகிவிட்டது.ஏன், கமலின்  மீதான  எனது  பார்வையும்  அவ்வாறே  இருந்தது  எனது  சிறுபிள்ளை  நாட்களில்,அப்பொழுது  எனக்கு  யோசிக்க  தோன்றியதில்லை .மாலை  நேரத்தில்  மைதானத்தில்  அமரும்பொழுது  தோன்றும்  “வெட்டி  நேர  யோசிப்புகளில் ” தோன்றியதுதான்  இங்கே  நான்  கூற  இருப்பது .பாலகுமாரன்  நாவல் -களில்  வரும்  பாத்திரங்களை  ஏற்று  ரசிப்பவர்களுக்கு  அந்த  பாத்திரங்களில்  ஒன்று  பரமக்குடி  அய்யர்வாளின்  மகனாக பிறந்ததும்  ஏன்  அதை  ஏற்க  மறுக்கின்றனர்.எனக்குள்  தோன்றிய  ஒரு  கேள்வி , நம்மில்  எத்தனை  பேர்  நாம்  வாழ்க்கை   இவ்வாறாக  அமைய  வேண்டும்   இவ்வாறாக  இருக்க  வேண்டும்  ,இவ்வாறாக  வாழ  வேண்டும்  என்று  பல  திட்டங்களை  வகுத்திருப்போம்? .விரல்  விட்டு  எண்ணி  விடலாம்?!.அது  போகிற  போக்கில் போவோம் ,நமக்கு தேவை உணவு உறக்கம் உறைவிடம் என்று எண்ணுபவரே இங்கு அதிகம்.சரி, அவ்வாறேயாயின் நாம்  எண்ணியபடி நம்மில் எத்தனை பேர் வாழ்ந்திருப்போம்?!..என்னை கேட்டால் “பூஜ்ஜியம்”  என்றுதான் சொல்லுவேன்.ஒன்றுமில்லை சார்,சாதாரண கண் தானம், அதற்கே இங்கு  தயங்குபவர் எத்தனை பேர்?!,என்  நண்பர்களில் சிலரையே  உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம், “என் அம்மா  அப்பா  கிட்ட  கேட்டுட்டு  சொல்றேண்டி..” என்பர் , விடை கண்டிப்பாக “இல்லை'’ என்றுதான் இருக்கும்,அவர்களின்  பெற்றோர்  மறுத்திருப்பர் ,இவர்களுக்கு அந்த எண்ணம்  இருந்தாலும் பெட்ட்றவர்  கூறினர் என்ற  காரணத்திற்க்காக அந்த  எண்ணத்தை  ஒதுக்கி இருப்பர்!..விதிகளை மீற முடியாதவர்களிடயே ஒருவன் புது சாத்திரம் கூறினால் அது நக்கீரரின் "குற்றம் குற்றமே"க்களில் பட்டியலிடப்பட்டு விடுகின்றன.'face book' விளையாட்டுகளில் என் தோழியிடம் கேட்கப்பட்ட கேள்வி “pick out a friend of yours he/she is living life to the fullest (தன் வாழ்க்கையை நிறைவுடன் வாழும் ஒருவரை உன் நட்பு வட்டத்திலிருந்து தேர்ந்தெடு )” இந்த  கேள்விக்கு அவள் என் பெயரை பதிலாக அளித்திருந்தால், ஆனால் அந்த கேள்வியை படித்ததும் எனக்கு கமலஹாசனை பற்றிதான் எண்ணத்தோன்றியது( ஏன் என்று கேட்காதீர்கள்,என்னிடம் பதில் இல்லை)  நடிகனாக அல்ல, தன் எண்ணங்கள் படி தன் வாழ்வின் ஒவ்வொரு பாகமும் வாழும் ஒரு மனிதனாக,அந்த பாகங்களில் ஒன்று நடிப்பு,அவ்வளவே.அவ்வாறெனில்,சொந்த வாழ்க்கையில் மனைவி என்ற பந்தத்திற்கு  முக்கியத்துவம்  தராததிற்கு பெயர்தான்  கொள்கையா?!,என்ற குதர்க்கவாதிகளின்  கேள்வி  கண்டிப்பாக  எழும்,உண்மையை  சொல்லப்போனால் நம்மில் பலர்,நமக்கு  பிடித்தவர்களுக்காக நம்மையே மாற்றிக்கொண்டுதான் வாழ்கிறோமே தவிர,நமது  எண்ணமும் பிறருடயதும் ஒத்துபோகிறதா  என்று  எவரும் சிந்திப்பதில்லை.மைக்கேல் ஜாக்சன் மட்டுமே பிடித்த நான் அவளால் "ச ரி  க ம" க்களை பழகிக்கொண்டேன் என்பதும், எனக்கு ச ரி க ம க்களும் பிடிக்கும் ஆதலால் அவளுடன் பழகினேன் என்பதற்கும் முற்றிலுமே பொருள் மாறுபடும்.”Adjustment” என்ற  வார்த்தைக்கு அதிக  இடமளித்து  பழக்கப்பட்டவர்கள்  நாம்.அதனால்தான் நம்மவர்களுக்கு கமல் போன்ற நிலை  ஏற்படவில்லை.யதார்த்தமாக யோசித்தால் அன்பு,காதல் என்பது அளவற்றது,எல்லை இட முடியாதது.”உன்  பிள்ளையிடம் மட்டும்தான் நீ அன்பு செலுத்த வேண்டும் என்று எந்த தாய்க்கும் எவரும் கட்டளை இட்டதில்லை“. அதை போன்று இதுவும் ஒன்று என்று  நான் கூறவரவில்லை,இது சற்று காமத்துடன் பின்னப்பட்டது..ஆனால் அதற்கு  ஆணையிடாதவர்கள் இதற்கு மட்டும் ஏன் கருப்பு கொடி ஏற்றுகின்றனர்.அந்த  அன்பு,காதல் என்பது நம்மை பொறுத்த வரை ஒரு லிமிடெட் சர்வீஸ்.  லிமிடெட் சர்வீஸ் மேல் மோகம் கொண்டவர்களுக்கு,அன்லிமிடெட் என்பது  நரிக்கு எட்டாத ஒரு புளிப்பு திராட்சையே.அதை புரிந்தும்,உணர்ந்தும் ஏற்க மறுக்கும் ரகம் நாம்.சற்று  யோசியுங்கள் உலகில் “first crush” என்ற வார்த்தை எதனால் வந்ததென்று? .நாட்குறிப்புகளிலும்,பிறந்த முதல் குழந்தைக்கு பெயர் இடுவதிலும் மறைமுகமாக  தோன்றும் அந்த “first crush”.இந்த மறைமுக வாழ்வை அங்கே ஒருவன் வெளி உலகிற்கு தெரியும் படி வாழ்கிறான் அவ்வளவே.நாம் நினைப்பது போல் "பெண்கள் மட்டுமே வாழப்போதும் என்று  எண்ணுபவனுக்கு,இசை,எழுத்து,கலை,நடனம்,நடிப்பு,சிந்தனை,வேதம் தேவையில்லை,அவனுக்கு ஒரு ப்ளேபாய்  புத்தக மர்லின் மன்றோ போதும்.மனித நேயம்  பற்றி  மனம் திறந்து பேச தேவையில்லை,மாறாக  மனித சதை பிண்டம் போதும் .இதையும் மீறி அவன் இ.பி.கோ 294உம் 509-இலும் போடப்படவேண்டியவன் என்று கூறுபவருக்கு,ஒரு படத்தில் நான் மிகவும் ரசித்த வசனம்,
 “I am Dishonest,because a dishonest person you can always believe to be dishonest,it’s the honest one you will never know,when they will do something incredibly stupid”.
வாழ்க்கையை இவ்வாறு என வகுத்துகொண்டான்,அவ்வாறே வாழ்கிறான்,"அட்ஜஸ்ட்மென்ட்" என்ற வார்த்தைக்கு சிறிதே இடம் கொடுத்துக்கொண்டு..இறை எனலாமா இவனை?!இவன் பாதைக்கு?!..நாமும்  அவ்வாறுதான் ,நமக்கென்று பல எண்ணங்கள்,ஆனால் வாழத்துனிவில்லை,அதனால் பத்தோடு பதினொன்றாய் நிற்கும் ஹைவேஸ் கடவுளர்களாகிவிடுகிறோம்.

Thursday, June 10, 2010

இறைக்கும் எனக்கும் இடைப்பட்ட தூரம்...

                            ஆன்மீக உணர்வு..இதை பற்றி விவரிக்க எனக்கு வயதும் இல்லை, அனுபவமும் இல்லை.ஆனால் கூட்டத்தினூடே " கோவிந்தாக்களையும்,பரலோகத்தில் இருக்கும் பரமபிதா"வையும் கடமைக்கென்று அழைப்பவர்களை  நினைக்கையில் என்னுள் தோன்றிய கேள்வி இது.சொந்த ஊர் சிதம்பரம் , சோழ மன்னர்கள் பலரால் கட்டப்பட்ட கோவில் எமது ஊரின் சிறப்பு ,இரு "ராசர்"களுக்கு பெயர் போன ஊர் ,நால்வர் பாடிய ஸ்தலம். இப்படிப்பட்ட இடத்தில் இருந்து கொண்டு ஏன் எனக்கு இந்த வேண்டாத கேள்விகள்?!,எனக்கும் அது தோன்றியது உண்டு .ஞாயிறுகளில் கோவில் சண்டி ஈஸ்வரரின் வருகை பதிவேட்டை நிரப்புபவர்கள் பட்டியலில் என் குடும்பமும் ஒன்று.எனக்கும் கோவிலுக்கு செல்ல பிடிக்கும்,காரணம் அதன் பிரம்மாண்டம்,கலையழகு,கோபுரவாசல் தென்றல் காற்று.அவ்வாறு  கோபுரவாசலில் அமர்ந்திருக்கையில் தம் கரங்களை குவித்தபடி வாயில் ஏதோ ஒன்றை முனுமுனுத்தபடி செல்லும் பலரை நான் கண்டுள்ளேன்.பத்து நிமிடங்களில் சென்ற அதே வேகத்தில் அவர்கள் திரும்பிவிடுவர்.உண்மையில் ஆன்மீகம்   என்பது இவர்களுக்கு ஒரு வாடிக்கை போலவே என்று நமக்கு தோன்றும்,அத்தகைய ஆன்மீகத்தில் உணர்தல் என்ற வார்த்தை கண்ணாம்பூச்சி ஆட்டத்தில் ஒளிவது போல் ஒளிந்துகொண்டுவிடுகிறது.கருவறையில் இருக்கும் சிலை முன் தோப்புகரனங்களும், கை மட்டும் இறையை நோக்கி,மனம் அன்றைய "சரவணா பவன் ஸ்பெஷல் மீல்ஸ்"-ல் நிலைத்திருக்க அவரையே ஒரு சில நிமிடங்கள் உற்றுநோக்குவது, "கடவுளே நான் இன்னிய பரீட்சையில எப்படியாவது பாசாகிட்டா உனக்கு தேங்கா உடைக்கறேன்" என்று கடவுளர்களையே நமது கம்பெனியில் சேர்ப்பது,"எனக்கு என் வீட்டு  பக்கத்திலேயே மாற்றலாகி வந்துட்டா  உனக்கு வெள்ளி காசு மாலை போடறேன்" என்று கலெக்டரிடம் முறையிடுவது போல விண்ணப்பம் வைப்பது.இவைதான் ஆன்மீகம் என்றால் "தம்பி நீங்க இன்னும் வளரனும்,காம்ப்ளான் குடிங்க!!" என்றுதான் சொல்லத்தோன்றும்.ஆனால் காம்ப்ளான் குடிக்கும் நானும் இதைத்தான் பின்பற்றுகிறேன்.                                                                        

          அவ்வாறெனில், "ஆன்மீக உணர்வு" என்பது என்ன?,எங்கோ படித்தது"ஆன்மீகம்-உன் ஆன்மாவை உணர்தல்" என்று அந்த புத்தகத்தில் இருந்தது.ஆனால் பிரம்மாண்டங்களையும், கலையழகையும் என்னால் ரசிக்க முடிந்ததே தவிர ஆன்மாவை என்னால் உணர முடிந்ததில்லை.அவையனைத்தும் என்னுள்ளே இருக்கும் வரலாற்றின் மீதான ஆர்வத்தைதான் தூண்டியதே தவிர வேறு எந்த உணர்வுமன்று.நாகூர் தர்காவும்,வேளாங்கண்ணி அன்னையும்,இஸ்கான் கிருஷ்ணரும்   இதற்கு விதிவிலக்கன்று.அவ்விடங்களில் எமக்கு பக்தி என்ற ஒன்று தோன்றியதில்லை என்னை நான் உணர்ந்ததும் இல்லை.ஆனால் என்னை உணர்திருக்கிறேன்..எங்கு என்று கேட்கிறீர்களா?
            சாலையில் சிறு குழந்தையை தூக்கிகொண்டு நடக்கும் சமயத்தில் எதிர்பாராவிதமாக அக்குழந்தை என் தோள் மீது சாய்ந்து உறங்க எத்தனிக்கும் தருணங்களில், சிறு புன்னகையுடன் அக்குழந்தை எனக்கு முத்தமிடுகையில்,எமக்குள் தாயன்பு என்ற ஒன்று இருந்தால் அது எவ்வாறானது என்பதை.
           சாலையை கடக்கும்பொழுது ,அருகில் நிற்கும் முதியவரும் கடப்பதற்காக தானாகவே மெதுவாய் நடக்கும் கால்களில் ,எனக்குள் கருணை என்ற ஒன்று இருந்தால் அது எவ்வாறானது என்பதை.
            நண்பர்களுடன் ஏற்படும் சண்டைகளையும் ,நிரந்தரப்பிரிவுகளையும் வெளியே காட்டிக்கொள்ளாமல் தலையணையை நனைத்த தருணங்களில் ,உணர்ச்சி மிக்க என்னை .
           இசையை என் செவிக்குள் சிறைபிடித்து வைத்த நிமிடங்களில், என்னையும் அறியாது சில வரிகளை உச்சரிக்கும்பொழுது.
           மழைச்சாரல்களினுடே நடந்து செல்லுகையில், என்னுள் காதல் என்ற ஒன்று இருந்தால் அது எவ்வாறானது என்பதை.    
           நான் நோயுற்றபொழுது எமைக்கண்டு கண்ணீர் சிந்திய தந்தைக்கு தைரியம் கூறுகையில் யதார்த்தங்களுக்கு முக்கியத்துவம் தரும் என்னை .  
        "மனப்பாடக்கல்வி ",விதியை நாம் ஏன் மாற்றக்கூடாது ?,என்று வினவியபொழுது,எம்முள் இருக்கும் "மாற்றம் விரும்பியை".
         என் எண்ணங்களுக்கு எழுத்தாய்  உயிர் கொடுக்கும்பொழுது தோன்றும் ஆக்கம் மிக்க என்னை. 
        இன்னும் உணர்தலின் தேடல்கள் ஏராளம்.
                 இவைகளினுடே என் மனம் ஒன்றி இருத்தலை என்னால் உணரமுடிகிறது .இவ்வாறே  என்னால் அவ்வுணர்வை வர்ணிக்கவும் இயலுகிறது .என் ஆன்மாவும் ஏதோ ஒரு இனம் புரிய மாற்றத்தை அன்நோடிகளில்தான் உணருகிறது.
இது ஆன்மீகமா?.உணர்ந்தவர்கள் கூறுங்களேன்.

   ( பி.கு )நான் இரு "ராசர்"கள் என்று கூறினேன் ஒன்று நம் "நடராசர்",மற்றொன்று "கோவிந்தராசர்" .வரலாறு இதை படிக்கும் எவருக்கேனும் பிடிக்குமென்றால் நான் கேட்கப்போகும் கேள்விக்கு விடை எளிதில் அளிக்கலாம்.தற்போது அந்த கோவிந்தராசர் சன்னிதியில் கருவறையில் இருக்கும் சிலையை நீங்கள் கண்டோ,புகைப்படத்தில் பார்த்தோ இருப்பீர்கள்.ஆனால் அது உண்மையான சிலை அன்று.அப்படியாயின் உண்மைசிலை  எங்குள்ளது?அது அவ்விடத்திலிருந்து அகற்றப்படக்காரணம் என்ன? 

Wednesday, June 9, 2010

இந்த புன்னகை எதற்கு?
தென்றலின் வருகையில்,
இந்த ஆனந்தம் எதற்கு?
சிறு சந்தங்களை ரசிக்கையில்,
இந்த சிலிர்ப்புகள் எதற்கு?
உன் பெயரை சொல்லுகையில்,
இந்த நெருக்கங்கள் எதற்கு?
இடைவெளிகள் அதிகரிக்கையில்,
இந்த மௌன மொழி எதற்கு?
பால் வண்ண நிலவுடன்,
விடையை தேடுகிறேன்..
அதை உணர்ந்தும் உணராதவள்/ன் போல்..

Monday, May 24, 2010

பெயரிடத்தேவையில்லை

உன்காமங்களுக்கு  நான்  இறை(ரை)யாக...  
என்  பாதைகளில் நீ  ஒரு  துணையாக.. 
கண்வழி  நீ  உன்  மனம்  சொல்ல.. 
இசையாய்  அதை  நான்  உணர்ந்திருக்க.. 
கள்வனே.. 
நீ  கவர்ந்தது  என்  மனமன்று..  
என்  வாழ்வின்  எழுதா பக்கங்களை.. 
நான்  ஏங்கிக்கிடந்த  தருணங்களை.. 
எனக்கென்றே  அவன்  படைத்த  நினைவுகளை.. 
கள்வனே… 
உனதாக்கிக்கொண்டாய்   இவை  அனைத்தையும், 
உனை  எனதாக்கிகொண்டேன்  நான்..
இதை காதல் என்பர்  கவிதையர்,  
காமம்  என்பர்  வேறு  பலர்..
இனக்கவர்ச்சி  என்னும் இந்த கற்றோர்  உலகம்.. 
கடவுளின்  புதுக்குழந்தை  இது என்பேன்.. 
நமதென்று  ஜனித்தது  நமக்குள்ளே..
உனை  நானும்  எனை  நீயும்,
மனம் அறிந்த நொடிப்பொழுதில்....
                                                    

Wednesday, May 19, 2010

ரொமேரோ தருணங்கள்....

அது ஒரு அழகிய இரவு நேரம் ,ஆனால் அழகியது என்று கூறலாகாது, இயற்கையும்  நவரசங்கள் நிறைந்தது,இன்று அது தன் ஆனந்த களிப்பின் உச்சநிலையில் இருந்தது,இயற்கை மட்டும் அல்ல அதன் ஒவ்வொரு படைப்பையும் வியக்கும்,ரசிக்கும்,அதனுடன் ஒட்டி உறவாடும் , அவளும்தான். ஆனால் அவளது இந்த மகிழ்ச்சி அவளது கூந்தலை தன் கரங்களால் வருடிச்சென்ற தென்றலால் ஏற்பட்டது.அவள் அமர்திருந்த இடம் ஒரு அழகிய நந்தவனம் பூக்கள் மிகக்குறைந்தே மலர்ந்தாலும்,அங்கு அடர்ந்து இருக்கும் மரங்களும்,அவை உதிர்க்கும் இலைகளும்,அங்கு நிலவும் அழகிய மௌனமும் அவற்றிடையே அவள் தனிமைகளும் அவள் வாழ்வின் மிகப்பசுமையான பகுதிகள்.இன்றைய பொழுதும் அவள் பசுமைபக்கங்களில் பதிவாகபோகும் பகுதியாக மாறும் என்று அவள் நினைத்திருக்கவில்லை.ஆனால் அவளை வருடிச்சென்ற தென்றல் தூதின் செய்தி அவள்  இதழோரத்தில் ஒரு மெல்லிய புன்னகையை விட்டுச்சென்றது.மரங்களின் அடியே இசையின் ஏற்ற  இறக்கங்களை ரசித்தபடி அமர்ந்திருந்த அவள் ,அந்த தென்றலின் ஈர்ப்புவிசையுடன் இணங்கி அதனுடன் மெல்ல நடையிட துவங்கினாள்.காற்றில் அவள் கூந்தல் கடலிற்கு போட்டியாய் அலைபாய்ந்துகொண்டிருந்தது.நெற்றியில் விழும் சிருகீற்று கூந்தல்களை காதருகே ஒதுக்கியபடி அடிமேல் அடி வைத்து நடந்து கொண்டிருந்தாள் ,அவளின் நடையில் பெண்மையின் அழகு என்பதை விட அதன் கம்பீரம் தனித்து தெரியும்.பெண்மைக்கே உரிய கம்பீரம்.இதுதான் ஒருவேளை அந்த மழை மேகத்தை ஈர்த்ததோ?!.இதோ அதன் முதல் துளி சீராய் இறங்கி நந்தவனத்தில் பூத்திருந்த மலர்களை வருடிக்கொண்டிருக்கும் அவள் கரங்களின் மேல் உதிர்ந்தது.அதன் வருகையும் அவள் அறிந்திருக்கவே வேண்டும்.இல்லையெனில் ஏன் இந்த ஆனந்த களிப்பு அவளிடத்தில்.அது ஒரு காதலும் காமநிலையும் கலந்த களிப்பு.அவள் மேல் விழுந்த மழை அமுதினை எதிர்நோக்கியிருந்த  அவள் காதல்,மனதை வருடும் மெல்லிய கிட்டார் இசையை செவிக்குள் சிறையிட்டு ஸ்பரிசம் செய்துகொண்டிருந்தது  அவள் காமம்.அந்த இசைக்கு இந்த சிறைவாசம் புதிதல்ல.ஆனால் நீண்ட நாள் கழித்து சந்தித்த உறவுபோல்,அவள் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு கேட்ட பகுதி.ஆனால் இது போன்ற அரிய பகுதிகளை  அவள் அரிதாகவே கேட்பாள்.இது அவளுக்கு நீண்ட நாளைய வெறுமைக்குப்பின் தன் காதலை சந்திப்பது போன்று,அவளும் அதை அவ்வாறே விரும்புவாள் .அவள் கண்கள்மூடி அந்த இசையுடன் அந்தரங்கப்பயணம் செய்துகொண்டிருந்தாள்.இப்போது மழைத்துளி அவள் மேல் விழுந்ததும் அவளையும் அறியாது ஒரு கிளர்ச்சி அவளுக்குள்.அந்த கிளர்ச்சியை தனக்காய் பயன்படுத்திக்கொண்டு மழைத்துளி ஒன்றிலிருந்து நூறாய் ஆயிரமாய் அவள் மேல் விழுந்துகொண்டிருந்தது.அது அவளை மொத்தமாய் ஆக்கிரமிக்க தொடங்கியிருந்தது.இசை அவள் ஆன்மாவுடனும்,மழை அவள் மெல்லுடல் உடனும்,இரண்டற கலந்துகொண்டிருந்தது.காதல் காமத்தின் முடிவதும் காமம் காதலில் முடிவதும் இயற்கை விதைத்திட்ட நியதி.இயற்கையின் ஒரு பகுதியான அவள் அதற்கு விதிவிலக்கன்று .இப்பொழுதும் அவள் நிலை அவ்வாறே .ஆண் தொடாத பாகம் தன்னில்  இறங்கி அவளின் பெண்மையை அவளுக்கு உணரச்செய்து அவள் நாணத்தை  மெருகேற்றிக்கொண்டிருந்தது.மறுபுறம் இசையும், அவள் ஆன்மாவும் நிகழ்த்திக்கொண்டிருந்த ஸ்பரிசம் உச்சத்தை அடைந்துகொண்டிருந்தது,நரம்பினூடே பாய்ந்து சென்றுகொண்டிருந்த அந்த ச ரி க ம- க்களுக்கு ஏற்ப அவள் விரல்கள் ஆனந்தத்தில் அபிநயம் செய்துகொண்டிருந்தன,அந்த அபினயத்திர்க்கேற்ப அவளதுகால்கள் நடந்துகொண்டிருந்தன.சக்கரவாகம் போல் அவள் அருந்திய மழை நீர், இசைக்கு போட்டியாய் அவளை தமதாக்கிக்கொள்ள யத்தனித்தது.இசையோ காமத்தின் உச்சமான காதலில் அவளின் நரம்புகளை இசையால் பின்னிக்கொண்டிருந்தது .அட! இது என்ன மழைக்கும் இசைக்கும் அவளிடம் அப்படி ஒரு ஈர்ப்பு.யாருக்கும் இதுவரை அவளிடம் ஏற்படாத ஒரு ஈர்ப்பு. ஒருவேளை அவள்  இந்த இயற்கைக்காகவே  படைக்கபட்டவளோ?.இது அவளுக்கும் அவ்விரண்டிடம் உண்டு,சற்று அதிகமாகவே.இசை அவளது வாழ்க்கை ,பரிவுகளில் தாய் போல், அவள்தனிமைகளில் காதல் போல்,இரவுகளில் சரிபாதிபோல்,வெளி உலக தேடல்களில் அவளுக்கு தோள் கொடுக்கும் நட்பு போல் ,மழை அவளது அன்பு,காதல்,காமம்,பரிவு,ஊடல்,சலனம் அனைத்தும். அவளுக்கு அவ்விரண்டும் ஒரு ரகசிய உறவு போல.சிறிதுநேரம் தோன்றினாலும் அவளை முழுதாய் ஆக்கிரமிக்கும் தன்மையது இரண்டும்இது என்ன இவளுக்கு இவ்வாறு ஒரு உறவு?!.இது எது போன்று?!.புரிந்ததில்லை அவளுக்கும்,.அவைகளிடமும் அவள் வினவியதில்லை.ஹெமிங்க்வேயின்
"சம்மர் சான்-பிரான்சிஸ்கோ" வரிகள்  போன்று.மிகவும் அரிதான ஒன்று.யாருக்கும் கிடைக்காத ஒன்று.கிடைத்தாலும் நெருங்கத்தயங்கும் ஒன்று.இவள் தயங்கவில்லை நெருங்கினாள்.அதன் விளைவு இதோ, பேரானந்தத்தில் அவள்.பிறர் உணர இயலாததை ஸ்பரிசித்துக்கொண்டு.        

                                                           
  

Thursday, May 13, 2010

உன்னை  ஏறிட்டும்  கண்டதில்லை...  
வாய் சொல்லும் கேட்டதில்லை..
அலைபேசியின் சிணுங்கல்களில் நீ  இருந்ததில்லை..  
பாட்டி சொல்லும் கதை போல் அறிந்துள்ளேன்..
ஆங்காங்கு உனைபற்றி ..
ஆனால் இவர்களின் நையாண்டி பார்வைக்கு,
நான் உந்தன் சரிபாதி,
கேட்க பிடித்ததில்லை..!!
பாடல் வரிகளை யான் ரசித்தால் ,
கனவில் சஞ்சாரமாம்..
அறியாது உன் பெயர் சொன்னால்
அன்றோடு முடிந்தது என் சரிதை,
வராத நாணத்திற்கு வருகைப்பதிவு,
என்னுள் எதுவும் மாறாதபொழுது,
இவர்களுள் ஏன் இந்த இரசாயன மாற்றம்
நினைக்கையில்,
புன்னகையை தவிர வேறு பதில் இல்லை...
இதை என்னவென்று கூற
கண்டதும்...?!!
இல்லை காணாமலே...
ஆனால் இதில் சிறுமாற்றம்,
காதல் இல்லாமலே நான் கவிதை வரைவது,
இதிலும் நான் சற்று வித்தியாசமானவள்  :)

Sunday, May 9, 2010

எமை சுமந்த பெண்மைக்கு அர்ப்பணம்..!!

தாய்,
ஈரெழுத்து  கவிதை இவள்..
இதன் பொருள் விளக்கம் யான் அறியேன்
எனினும் எமக்கொரு ஈர்ப்பு  உண்டு
இவளிடத்தில்
மொழியற்ற  மௌனத்துடன் ஏற்படும் பந்தம் போல்..
விண்ணவனின் கற்பனைத்திறம்,
காதல்...
அவனையே உணரச்செய்தது
தாய்மை...
உணர்கிறேன் என் கற்பனையை
ஆம் தாயே..!!
யாம் காதல் செய்கிறோம் உம்மை,
எமையே எமக்கு உணர்த்தியதால்..!!
                                                               -உன் அன்பு மகள் 

Monday, May 3, 2010

அவன் ,அவள், ஆனால்... அது?!!


 மனிதன் தசையுள்ள எந்திரம் என்று ஆன இவ்வுலகில் காதல் என்பது வெறும் எஸ்.எம்.எஸ்-களிலும் ,"  ஐ லவ் யு செல்லம்"-களிலும் ,ஏர்செல், ஏர்டெல் நிறுவனங்களை இரவு பத்து மணிக்கு மேல் கடின உழைப்பாளிகளாக ஆக்குவதை மட்டுமே வரையரையாகக்கொண்டுள்ளது,இரண்டு நாள் பார்த்து பேசியதும், மூன்றாம் நாள் "டியர்"-களிலும்,நான்கு நாட்களில் இரு கோப்பை தேநீரும் ,இரண்டு வாரங்களில் ஒரு பிளேட் பாவ் பாஜிக்களாக மாறி ,நான்கே வாரங்களில் "சற்றே பெரிய சிறுகதை" போல முடிந்துவிடுகிறது.வளர்ந்து வரும் வளை உலகம் தரும் அறிமுகங்களும் சில நேரங்களில்  இது போன்ற சிறுகதை காதல்களாகவே முடிகின்றன.கண்ணோடு கண் நோக்கிய அக்காலம் போய் ,செல்லோடு செல் நோக்கி நோக்கியாகளிலேயே  சுபம் போடப்பட்டுவிடுகிறது.கடலோர மணல்களை ஆக்கிரமிக்கும் அனைவரையும் நான் இதற்காக சாடவில்லை.ஆனால் காரணம்,மனிதனின் மனோதத்துவரீதியாக பார்த்தால் ,தனிமை(யும்) ஒரு முக்கிய காரணமாக தோன்றுகிறது.அவர்கள் காதல் என்பதன் பல்வேறு பரிமாணங்களை மறந்து வெறும்  "ஹார்மோன்" கடவுளர்களை நோக்கியே கடிவாளமிட்ட குதிரை போல் பயணிக்கத்துவங்கிவிடுகின்றனர்.
                      எம் தந்தையுடன் நிகழ்த்திய சிறு விவாதம் இது ."தனிமையும் இதற்கு ஒரு முக்கிய காரணம் என்பது என் வாதம்.என் தந்தை ஒரு உதாரணத்தை கூறி அவ்வாறில்லை  என மறுத்தார்.ஆனால் மனிதனின் மனம் என்பது அவன் வாழும் சூழல்,சுற்றுப்புறத்திற்கு ஏற்ப மிகவும் மாறும் தன்மையது."அமெரிக்காவில் இருப்பவன் எவனும் வெள்ளையர் பெண்ணுடன் வந்து பெற்றோர் காலில் விழுவதில்லை,அதே சமயம் சென்னையில் ஏதோ ஒரு பகுதியில் பெற்றோரை பிரிந்து வேலை செய்பவன் உத்தமனும் இல்லை" என்பது அவர் கூற்று.ஒரு வேளை அந்த "அமெரிக்க எவனி"ன் வாழும் சூழலை அறிந்திருந்தால் இதற்கு என்னால் பதிலளித்திருக்க முடிந்திருக்கலாம்.ஆனால் அமெரிக்காவில் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்தால் அவர்களையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கட்டாய சட்டம் மட்டும் இல்லை என்பது யாம் அறிந்ததே.
                தனிமையை ரசிப்பவர்களை இந்த ஈர்ப்பு நோய் பெரிதும் பாதிப்பதில்லை மாறாக அந்த சூழலுக்கு புதிதாக தள்ளப்பட்டவர்களுக்கு பெற்றொரிடம் இருந்த நெருக்கமும்,நட்பின்  நினைவுகளும் ஒரு மனோரீதியான அழுத்தத்தை தருகிறது நாளடைவில் அந்த அழுத்தம் தாங்காமல் உறவுகளிடம்  இருக்கும் அந்த நூலிழை பந்தம் பலவீனமடைகிறது.இந்நிலையில் இந்த தனிமை அவர்களை பெரிதும் மாற்ற வாய்ப்புகள் ஏராளம்.மற்ற ஒரு பிரிவு அதாவது "பெற்றோருடன் இருந்தும்.." என்ற பிரிவை  சார்பவர்கள்  .இவர்களின் மனநிலைக்கு பல காரணங்களை கூறலாம்.பெற்றோரிடையே  ஏற்படும் சண்டை சச்சரவு,இந்நிலையில் வாழ்க்கையையே வெறுக்கத்துவங்கும் இளைஞருக்கு சிறு மரம் தரும் காற்று கூட ஈர்ப்பயே ஏற்ப்படுத்தும். பழகப்பழக பாலும் புளிக்கும் என்பதில் ஒரு சிலர் அடங்குகிறார்கள்,என்னதான் தந்தையுடன் தோள் மேல் தோள் போட்டு நடக்கும் பிள்ளையாக இருந்தாலும்.ஒருசிலவற்றை தமது எதிர்பாலிடம் கூறும் திருப்தி அவர்களுக்கு  தம் பெற்றொரிடம் கூறும்போது வருவதில்லை.அது ஏன் என்று என்னிடம் கேட்டால் "கடலின் ஆழத்தை அறிந்து வா" என்று கூறுவேன்.மூன்றாவது,அவர்களின் பெற்றோரே ஒரு "அலைகள் ஓய்வதில்லை" பிரிவை சேர்ந்தவர்களாக இருப்பர்,இதற்கு காரணமே தேவையில்லை.இன்று இருப்பது போல் அக்காலத்தில் இல்லையே என்று யாராவது வினவினால் சிரிப்பதை தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை.அக்காலத்தில் வீட்டை தாண்டி வெளியூர் சென்று வசித்து வேளை செய்த பிள்ளைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.அப்படியானால் அவர்கள் வீட்டை விட்டு சென்றது தவறு என்று அதிரடி முடிவெடுப்பது அடிமுட்டாள்தனம்.வீட்டில் இருந்தாலும் அவர்கள் எதிர் வீட்டு  இருபதுகளை ஏறிட்டேனும் கண்டிருப்பர். இந்த "ஈர்ப்பு" என்பது ஆதாம் காலத்திலிருந்து வழிமுறையாக வருவதே,அவ்வாறு நான் இருந்ததில்லை என்று யாரேனும் கூறுவீர்களா?! அவ்வாறெனில்  அவர்களுக்கு எனது  பதில் "இந்த பொய்க்கு நெக்ஸ்டு ஜென்மத்துல சாப்பாடு இல்ல சார் ,சிங்கிள்  டீ கூட கெடைக்காது".இது எக்காலத்திலும் இருந்ததே, இருப்பதே,இருக்கப்போவதே ஆனால் அக்காலங்களில் முன்பு கூறியது போல இந்த வெளியூர் வேளை தனிமை இவ்வாறான சூழல் மிகமிகக்குறைவு,முக்கியமாக அக்காலங்களில் பாரதியையும் பாரதிதாசனையும் விடைத்தாள்களில்  ஒக்காளமிடப்படித்தவர்களே அதிகம்.இன்று அதனை உயிராகப்படிப்பவர்களும் இருக்கின்றனர்,நாகரிகத்திற்க்காக படிப்பவர்களும் இருக்கின்றனர்,ஒக்காளமிடும் கூட்டணியினரும் ஆங்காங்கே இருக்கின்றனர்.அவர்களின்  பார்வைக்கு ஏற்ப அவர்களின்  அந்த "அதுவும்" .அவர்கள் அதற்க்குத்தரும்  விளக்கங்களும் மாறுபட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.                                                            

Wednesday, April 14, 2010

கடவுளும் அறிவியலும்..

 இது ஆச்சரியமாகக்கூட  இருக்கலாம்.கவிதை என்னும் முகவரியில்,விவாதம்,கடவுளையும் அறிவியலையும் பற்றி.இது கடவுளின் இருப்பு இல்லாமை பற்றிய விவாதம் அன்று.மாறாக  கடவுளைப்போலவே விஞ்ஞானமும் ஒரு  மறைபொருளாக இருந்து வெளிப்படையாக நம்மை ஆக்கிரமித்து கொண்டிருப்பது பற்றி.வீட்டிலிருக்கும் வாஷிங் மெஷினுடன் பேசும் நமக்கு,பக்கத்துக்கு வீட்டு  அம்புஜம் மாமியும்,எதிர் வீட்டு மிலிட்டரி அங்கிள்-உம் ஒரு நுண்ணுயிரிகளாக மாறிவிடுகின்றனர் .மார்கழி மாதங்களில் பிள்ளையார் கோவில் வாசலில் பொங்கல் பிரசாதத்திற்க்காக நிற்கும் கும்பல் இன்று அதை ஆன்லைன-இல் முன்பதிவு  செய்து பெற்றுக்கொள்கின்றனர்.தெருவுக்கு தெரு இப்போது பகோடா பஜ்ஜி கடைகளை விட இந்த பிள்ளையார்.காம் மற்றும் வெங்கடாஜலபதி.காம்-களே அதிகம். ஒரு புத்தகத்தில் படித்ததாக நினைவு,
டாஸ்மாக்கில் இருவர் சந்தித்து நட்பாகின்றனர்.
முதலாமவர்:சார்! நீங்க எங்க இருக்கேங்க?! 

இரண்டாமவர்: இதே ஊருதான் சார்,
முதலாமவர்:அட நாணும் இதே ஊருதான்
இரண்டாமவர்:அட,எந்த ஏரியா சார் நீங்க!!?
முதலாமவர்:காவேரி நகர் ,முதல் கிராஸ் .
இரண்டாமவர் :அட நானும் அங்கேதான்,அங்கே எங்க?!
முதலாமவர்: 7-ஆம் நம்பர் வீடு 
இரண்டாமவர்:அட நானும் அங்கேதான்,அங்கே மேல் வீடா ? கீழ் வீடா?
 முதலாமவர்:கீழங்க!!
இரண்டாமவர்:அட!! நானும்,
(தூரத்தில் ஒருவர்: இந்த அப்பனும், பையனும் தண்ணிய போட்டுட்டு பன்ற ரவுசு தாங்களே?!)
தற்போது நாம் அனைவரும்  அந்த இரு குடிமகன்களின் நிலையில்தான் உள்ளோம்.அறிவியலின் படைப்பான விஞ்ஞானம் என்பது ஒரு "உட்கொள்ளப்படாத"   போதை என்று வகுக்கபட்டுவிட்டது. பிரிட்டன் -இல் முருகன் கோவிலுக்கு  எலிசபெத் ராணி  எலெக்ட்ரிக் மணியை அர்ப்பணம் செய்தார் என்பது தலைப்பு செய்தி.ஆனால் அந்த ஆண்டவனுக்கு புரியுமா? அதன் மெக்கானிசம்?!முற்காலங்களில்  கோவில் கருவறையில் வெறும் ஒற்றை விளக்கு ஏற்றப்பட்டிருக்கும்  ஆனால் இப்போது  வோல்டாஸ்  ஏசிக்கள் கருவறையில் கடவுளை விட பெரிதாக தெரிகிறது. கடவுளுக்கு ரேய்மாண்ட்ஸ்  அணிவிக்காததுதான் நம்மவர்கள் விட்டுவைத்த ஒன்று.அதற்காக நான் முற்றும் துறந்து தற்போது இமயமலைச்சாரலில் அமர்ந்து  இருக்கிறேன் என்று கூறவரவில்லை,மாறாக நம்மில் ஏன் இந்த உயிரற்றவைகளுக்கான   அடிமைத்தனம்? .உணவை வாழையிலையில் இருந்து தட்டுக்கு மாற்றம் செய்தனர்.அந்த தட்டும் இப்போது அடக்கம் செய்யப்பட்டு நமக்கு தேவையான கார்போஹைட்ரேட்களும்  புரதமும் இப்போது  மூன்று வேலைக்கு தேவையான அளவுக்கு சரிவிகிதம் செய்யப்பட்டு சாக்கலேட்கள்   போல வரத்துவங்கிவிட்டன. நம் மனிதம் கடின உழைப்பில் அலுத்து "மூன்று வேளையும் வேலை செய்யாமல் இருப்பது எப்படி ?!" என்ற புத்தகத்தை படித்ததின் விளைவே நம் விஞ்ஞானத்தின் காம்ப்ளான் வளர்ச்சி. சுஜாதா-வின் சிறுகதை ஒன்றில் 25 -ஆம்  நூற்றாண்டில்,வேற்றுக்ரகத்தில் உள்ள மனிதர்கள்  நம்  உலகில் உள்ள திமிலாவிற்க்கு  வந்து தரிசிப்பது போல் குறிப்பிட்டிருப்பார்.அதாவது தற்போதைய திருப்பதி.அது முற்றிலும் கற்பனை ஆயினும்.சிறிது சிந்திக்கும்படியாகவே தோன்றும்.எதிர்காலத்தில் என் வீட்டில், என் பேரன் பேத்திகள் மார்ஸ்-இல் "பூமியியல்-மற்றும் அம்மிக்கல் நாகரிகம்" படிக்கிறார்கள் என்று நான் சொன்னாலும் ஆச்சரிய படுவதற்கில்லை.      


 

Saturday, April 10, 2010

எல்டோரடோ ..

வரம்பற்ற பந்தங்களை தேடுகிறேன்..
இங்கு ,
உறவுகளை சாசனம் செய்ய,
ஒரு முழக்கயிறு..
இது அடிமுட்டாள்களினும் அப்பாற்பட்டவன்
அமைத்திட்ட அரிய விதி..
சர்வமும் பொய் என்பவனும்,
சரி என்கிறான்  இதனை..
இவர்களின்  பொது உலகில்,
எம் எண்ணங்கள் எல்டோரடோக்கலாயின..
                                                                                 -Aishwarya Govindarajan



 



 


 

Sunday, April 4, 2010

காகத்திற்கு தெரியவில்லை, 
உலகின் இறப்பு நாள்..
கரைகிறது ஒருபோல..

தெரிந்தும் மாறுகிறான் நம்மவன்
அனுதினமும்...!!

Sunday, March 14, 2010

நட்சத்திரங்கள் பொய்த்ததடா
எண்ணிக்கையில்...
நான் உன்வசப்பட்ட
தருணங்களுடன் ...!!!

Saturday, March 13, 2010

அன்பிற்கும் உண்டோ..??

உலவித்திரியும் காற்று நான்,
எனை சிறைபிடிக்க நினையாதே ,
முயற்சிகள் பலவாயினும்,
வெற்றிகள் பூஜியங்களாகவே இருக்கும்,
சொன்னது நான் தேடிய நட்பு..
 

Thursday, February 11, 2010

சிம்போனிகளின் சங்கமத்தில்...!!

என்ன மாயம் இது, 
காற்றில் விரல்கள் சிம்போனி இசைக்க..
வைரவரிக்கவிஞன் சிலைவடித்த வரிகளுக்கு..
உயிரோட்டமாய் நீயும் நானும்..!!
கண்டது ஓர் கனவாகி,
செல்லமாய்  எனையே  நான் தட்டிக்கொள்ள...
இதழோரம் வளையும்
அந்த சிறுஅசைவு,
இவள் என்ன பித்தோ?
என ஐயமுற... 
நடனம் புரிகிறேன் நான்
கனவுலகில் நீ மீட்டிய
நரம்பிசைக்கு...!!!