BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Thursday, January 6, 2011

இசைக்கடவுளின் குழந்தைக்கு..!!

            இன்றளவும் நினைவில் உள்ள விஷயங்களில் ஒன்று மிக சிறு வயதில் பார்த்த அந்த பாடலின் ஒளியும் ஒலியும். சட்டமிடப்பட்ட ஜன்னலின் பின் நின்றபடி கதையின் நாயகன் பார்வையில் ஏக்கத்தோடு நினைவுகளை அசைபோட்டுகொண்டிருப்பான் அப்படியே புல்வெளியை நோக்கி அந்த கேமிரா நகர அங்கே தேவதை போன்ற அழகு மிக்க பெண் மான் போல் துள்ளி குதித்து சென்றுகொண்டு இருப்பாள்,இதன் பின்னணியில் கேட்பவர்க்கு இதமும் அதே சமயம்  பாடுபவரின் உள்ளார்ந்த வலியினை ஏக்கம் கலந்த நிலையை உணர்த்திவிடும் வகையில்  ஒரு அழகிய ஆலாபனை தொடர்ச்சியாக ஒரு மந்திரக்குரலில் "காதல் ரோஜாவே" என தொடங்கிடும் அப்பாடல்,ஆம்  ஞாபகம் என்று கூறுகையில் அரவிந்த் சாமி புன்னகை முதல் அதன் பின் தோன்றும் ஒரு வர்ணிக்க இயலாத இசையும் என இன்றளவும் அதன் ஒவ்வொரு ஒளி-ஒலி நிமிடமும்  நினைவில் உள்ள ஒன்று, முதல் பத்தியை பாடியவுடன் தொடர்ச்சியாக ஒரு மெய் சிலிர்க்கும் புல்லாங்குழலும் தொடர்ந்து அந்த அழகிய கொஞ்சும் குரலில் "ல ல ல ல..."என்று துவங்குவதும், தேவர் மகனின் இஞ்சி இடுப்பழக பாடலும், சாந்து பொட்டு பாடலும்,போற்றிப்பாடடி பாடலும் (எனை என் பெற்றோர் முதலில் அழைத்து சென்ற படம் "தேவர் மகன்" அவ்வயதில் படத்தின் காட்சிகளை புரிந்துகொள்ளும் அளவிற்கு சிறுபிள்ளை என்பதால் திறனும் பொறுமையும் இல்லையெனினும் சிவாஜியின் மீது அந்த சிறு குழந்தை ஏறி நின்று பாடுவது இப்பொழுதும் ஏனோ நிழல் போல் நினைவில் உள்ளது)  தூர்தர்ஷனின் ஒலியும் ஒளியும் மூலம் பார்த்து கேட்கத்துவங்கி ராஜா ரஹ்மான் என்றால் என்னவென்று தெரியாது! பாடல் என்றால் என்ன என்று அரைகுறையாய் அறியத்தொடங்கிய அந்த சிறு வயதில் (ஆம் மிகமிகச்சிறிய வயதுதான்) "போற்றிப்பாடடி.." என்று ஆரம்பித்து , அந்த "ல ல ல ல.." ஏனோ மிகவும் பிடிக்க ஆதலால் நானும் அந்த குரலுடன் மழலையாய் அதை சொல்லிக்கொண்டே லாலிபாப்பில் முடித்ததுண்டு என்று வீட்டில் பெரியவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன்(தொடங்கியது இளையராஜாவில்தான் போல :) ).பின்னர் வளர வளர இன்ன பிற பாடல்களையும் ரசிக்கத்தொடங்கினாலும் அந்த காதல் ரோஜாவே பாடலின் மீதிருந்த ஈர்ப்பு இன்றளவும் குறையவில்லை.சின்ன சின்ன ஆசையும், புது வெள்ளை மழையும் நிகர்.சிறிது வளர்ந்து உலகம் அறியத்தொடங்கிய பின் சின்ன சின்ன ஆசை பாடலை முதல் வரி மட்டும் சரியாக உச்சரித்துவிட்டு அடுத்த வரியிலிருந்து நேரடியாகத்தாவி "என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை என்று பாடியதை நினைத்தால் இப்பொழுதும் சிரிப்பு தோன்றிவிடும். .இன்னும் சொல்லப்போனால் பின்னணி இசையென்றால் என்ன என்று கூட தெரிந்திராத வயது அது.எனினும் பாடுகிறேன் பேர்வழி என்று எனை சுற்றி பலர் அமர்ந்திருக்க ஜென்டில்மேன் பட பாடல் வரிகளை தப்பும் தவறுமாக பாடிய அந்த சிறு பிள்ளை நாட்களும் நினைவில் இருக்கிறது.பின்னணி இசை பற்றியும் ஏ.ஆர்.ரஹ்மான் பற்றியும் நன்றாக அறிந்துகொண்டது 1995 -இல்தான், இந்தியன் படத்தில் துவங்கி,"பச்சை கிளிகள் தோளோடு" பாடலின் வரிகள் பிடித்து பின்னர் கூர்ந்து ரசிக்கையில் அதன்  இசையால் ஈர்க்கப்பட்டு.."என்னவளே" பாடல் பற்றி ஒற்றை வார்த்தையில்-chanceless ..அதன் prelude -இசையின் மேல் எப்பொழுதும் எனக்கு தனி கிறக்கம் உண்டு...இப்பவும் என் வீட்டில் இந்தியன்,காதலன்,திருடா திருடா ,ஜீன்ஸ்,படையப்பா,காதலர் தினம்,முதல்வன் ,ரட்சகன் பாடல்கள் தந்தை எனக்காக பதிவுசெய்து எடுத்துவந்த ஒலிநாடாக்கள் அந்த குவியலினூடே இருப்பதை காணலாம்.அதை எல்லாம் கேட்டு தேய்த்த பழைய பிலிப்ஸ் டேப் ரிக்கார்டர்தான் இப்பொழுது இல்லை(கடைசியாக அதில் கேட்டது பள்ளித்தோழியிடமிருந்து ஒரு வெள்ளிக்கிழமை வாங்கி வந்து கேட்ட பாய்ஸ் படப்பாடல்,அம்மாவுக்கு மாரோ மாரோ புரியாததால் நிறுத்த சொல்லிவிட்டார்,எனக்கும் அது அப்பொழுது புரியவில்லை என்பது வேறு விஷயம்,சுஜாதாவும் தன் கற்றதும் பெற்றதும் பகுதியில் அப்பாடலை esp -யுடன் ஒப்பிட்டு நகைக்க வைத்திருப்பார்  ).அவற்றில் ஏதோ ஒரு ஒலிநாடாவில் "குறுக்கு சிறுத்தவளே" பாடலின்  முடிவில் "பூவுக்குள் ஒளிந்திருக்கும்" பாட எண்ணி ஏனோ யாருக்கும் தெரியாமல் இறுதியில் நான் அரைகுறையாய் பாடிப்பதிவு செய்த "கண்ணோடு காண்பதெல்லாம் "-மும், "அன்பே அன்பே" பாடலும் இப்பொழுதும் உள்ளது :) :D அவை இரண்டும் நான் முதன்முதலில் பதிவு செய்ததும் கூட.அலைபாயுதே ,ரிதம்,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களை திரைப்படத்திற்கும்  இசைக்கும் பாடலுக்கும்  என பலபல முறை பார்த்தவர்கள் பட்டியலில் நானும் ஒருத்தி.இதற்காகவே விண்ணைத்தாண்டி வருவாயா நூறாவது நாளின் பொழுது வீட்டின் அருகில் எந்த திரை அரங்கிலும் அப்படம் திரையிடப்படாததால் அன்று மடிகணினியிலேயே அப்படத்தை பார்த்தது மற்றொரு பெரிய கதை."சந்தன தென்றலை" பாடல் கேட்டு அதை பிரிய மனமின்றி அடுத்த பாடலுக்கு தாவிய பொழுதுண்டு.கன்னத்தில் முத்தமிட்டால் பின்னணி இசை கேட்டால் உண்மையில் சட்டென நனைந்துவிடும் நெஞ்சம்.எப்படி இளையராஜாவின் குரலுக்கென்றே மக்கள் கேட்ட பாடல்கள் பல உண்டோ அதே போல் ரஹ்மானின் குரலுக்காய் கேட்ட பாடல்களும் பல அடக்கம்.அவ்வகையில் பார்த்தால் ஸ்ரீநிவாஸ் உடன் சேர்ந்து பாடிய "என்றென்றும் புன்னகை" கேட்டால் இப்பொழுதும் ஒரு புத்துணர்ச்சி புன்னகைதான், ரஹ்மான் குரலிற்கு நான் அவ்வளவு பெரிய விசிறி இல்லையெனினும் "வெள்ளை பூக்கள்" பாடலை அக்குரலில் கேட்டால் ஏனோ நிஜமாகவே மனதில்  ஒரு அமைதியை தோற்றுவிக்கும்.காந்தி பெயர் கூறி சுதந்திரப்பற்று நம்மிடையே பெருகியது போக "வந்தே மாதரம்" பாடலை அக்குரலில் கேட்டு அப்பற்றை மெருகேற்றிக்கொண்ட பலர் நம்மில் உண்டு.எதிர்பார்ப்புடனும் கேள்விக்குறியுடனும் ராஜா இல்லாத ஏமாற்றத்துடனும் ரோஜாவில் தொடங்கிய வெற்றிக்கூட்டணி மணிரத்னம்- ரஹ்மான் என்றவுடன் திரைப்பட-இசை ரசிகர்களை ஏனோ ஒருவித மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது என்பதை எவராலும் மறுக்க இயலாது .ஒரு ஆறு மாதங்களுக்கு முன்பு ஏதோ ஒரு நாள் அதிகாலை சுமார் ஐந்து மணி தூக்கம் சிறிது கூட வராத நிலை எப்பொழுதும் போல் பாடல்களை கேட்டுக்கொண்டிருக்க "புது வெள்ளை மழை" பாடலின் வரிகளற்ற புல்லாங்குழல்  இசை வடிவினை கேட்டு ஏனோ எனையும் அறியாது கண்களில் நீர் துளிர்த்திட அதனை தோழி ஒருத்தியிடம் கூறினால் அவள் எப்பொழுதும் போல் கேலி செய்தது இப்பொழுது நினைவில் வருகிறது.எவ்வாறு ராஜா என்றவுடன் புல்லாங்குழல் என்றாலும் என்னைப்போன்ற பலருக்கு சட்டென வயலினே நினைவிற்கு வருமோ அதே போல்தான் ரஹ்மான் என்றவுடன் புல்லாங்குழல்.பின்னர் அந்த புல்லாங்குழலுக்காகவே கேட்ட பாடல்கள் பல உதாரணம் பம்பாய் பின்னணி இசையை எடுத்துக்கொள்ளலாம்.  "எங்கே எனது கவிதை"பாடலின் விசிறியோ விசிறி நான் என்று சொல்லலாம்."மலர்களே மலர்களே" பாடலுடன் சேர்த்து "நாளை உலகம்" பாடல் இன்னும் மிகப்பிடிக்கும்,பார்த்தாலே பரவசம் படம் பிடிக்கவில்லை என்றாலும் "அழகே சுகமா ?! அன்பே சுகமா?!" பாடல்-damn addictive என்றே சொல்லுவேன்,அவ்வாறே படம் பிடிக்காமல் பாடலை மட்டும் ரசித்தது என்றால் "என் சுவாசக்காற்றே" அவ்வரிசையில் வரும் ,"உயிரும் நீயே?!"-வர்ணிக்க வார்த்தையில்லை,காதல் வைரஸின் "சொன்னாலும் கேட்பதில்லை" மிகப்பிடிக்குமென்றாலும்  "எந்தன் வானில்" எஸ்.பி.பி பாடல்களில் மிக மிகபிடித்த ஒன்று, "சொல்லாயோ சோலைக்கிளிக்கு" அடுத்தபடியாக  .சுருக்கமாக சொல்லபோனால் ரஹ்மானின் இசையில் இந்த பாடல் மிகப்பிடிக்கும் அது மிகப்பிடிக்கும் என்று பிரித்து வரையறுப்பது மிகக்கடினம்.ரஹ்மானின் இசையில் திரையில் தோன்றிய பாடல்கள் தவிர்த்து திரைக்கு வராத பாடல்கள் என்னைப்போன்று பலரை மிகவும் கவர்ந்த ஒன்று.ஆனால் ரோஜா, பம்பாய் ,அலைபாயுதே என பல படங்களில் கேட்டதும் பாடல்கள் பிடித்தது போக அவரின் தற்போதைய படப்பாடல்கள் ஏனோ கேட்க கேட்கதான் பிடிக்கிறது என்பது எனைப்போன்று பலரது கருத்து.அது ஏன் என்று புரியவில்லை .ரஹ்மான் உலகிற்கு காண்பித்தது  தனி இசைபாணி என்பது மட்டும் அல்லாது வெளி உலகிற்கு அறிமுகம் செய்வித்த  நல்ல குரல் வளங்களும்  பல.அவர் ஒரு நல்ல இசை அமைப்பாளர் என்பது மட்டும் அல்லாது அதையும் தாண்டி ஒரு நல்ல உள்ளம் கொண்ட மனிதர் என்பது "எல்லாப்புகழும் இறைவனுக்கே" என்று அமைதி கலந்த அடக்கத்துடன் உச்சரிக்கும் தொனியில் ஏனோ  பளிங்கு போல் தெரிந்திடும்.

 

0 comments: