BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Sunday, January 9, 2011

சிற்றெறும்புகள்

  நிலவு தன் துயிலிலிருந்து விழித்தும் விழித்திராததுமாய் ஒரு பொழுது.ஒரு அமைதியான செவ்வான மாலை.அப்பொழுதுகள் எப்போதுமே சற்று வித்தியாசமானதுதான் கடலோரங்களிலும் பசும்புல்வேளிகளிலும் அமர்ந்திருப்பவர்கள் இரைச்சலுடன் பேசினாலும் அதில் ஏதோ அமைதி இருப்பதாய் தோன்றும் மாலைப்பொழுதுகள் அவை.அத்தகைய ஒரு வேளையில் தன் வீட்டு மொட்டை மாடியில் அந்த கீரிச்சிடும் சிறு பூச்சிகளின் சத்தங்களுக்கிடையே,செய்கூலி சேதாரமின்றி வாங்கிய சரவணா ஜுவல்லரியின் அந்த மெல்லிய செயினை தன் பற்களால் கடித்தபடி ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்தாள் நந்தினி.பெண்கள் ஒரு புரியாத புதிர் என்று கூறிடும் ஆண்களிடையேயும்,ஆண்கள் ஒரு சுயநலவாதிகள் என்று கொடியேற்றும் பெண்களிடையேயும்,ஆத்திகம் நாத்திகம் என்று வாதிடுபவர்க்கு இடையேயும்,உலகம் சமூகம் என்று முழங்குபவர்களிடையேயும் அன்றாடம் தன் வாழ்வை செலுத்திக்கொண்டு தன்னை அறிய முற்பட்டுக்கொண்டிருக்கும் சிலரில் ஒருத்தி நந்தினி.ஆனால் அவளுள்ளும்  பொதுப்படையான "புரட்சித்தனம் மிக்க" என்று அவளே எண்ணிக்கொள்ளும் எண்ணங்கள் அவ்வப்போது தோன்றுவதுண்டு.அவ்வாறு தோன்றிய ஒரு எண்ணம்தான் இதோ இந்த மெத்தைப்படி அமர் சங்கிலிக்கடிகள்.காரணம்,அன்று காலை அவள் பணிக்கு செல்லுகையில் சந்தித்த பள்ளிகாலத்தோழன் ஒருவன்.பெயர் பாரதி, பெயருக்கு ஏற்ப பள்ளிநாட்களில் அவன் பேச்சினாலும் எழுத்துக்களினாலும் ஈர்க்கப்பட்டோர் பலர் உண்டு. சுதந்திரம்,தேசியம்,பெண்ணுரிமை,வெங்காய விலை என இவர்கள் இருவரும் விவாதம் செய்யத்தொடங்கினால் தேசிய அளவில் மாற்றம் வந்திடுமோ இல்லையோ, அவர்களை சுற்றி அமர்ந்து கேட்கும் அவர்களை ஒத்த வயதுடைய சிறுவர்களிடையே அந்த "இருபது நிமிட நாட்டுப்பற்று"\இருந்தே தீரும்.நாட்டை வளர்க்க அரசாங்கம் போட்ட திட்டங்களை விட இவர்கள் இருவரும் தங்கள் பள்ளி நாட்களில் போட்ட திட்டங்கள் மிக அதிகம்.பின்னர் ஏதோ சில காரணங்களால் பாரதி வேறு மாநிலத்திற்கு அவன் பெற்றோருடன் சென்றுவிட பல வருடங்கள் கழித்து இன்றுதான் சந்திக்க நேர்ந்தது.நெடுநாளைக்குப்பின் நட்பை சந்தித்த களிப்பில் உற்சாகமாய் அவனை நோக்கி கையசைத்தாலும்,அருகில் இருந்தது அவன் குடும்பமென்று பார்வையாலேயே உணர்ந்துகொண்டபின் உற்சாகப்பெருக்கின் அளவை சற்று குறைத்துக்கொண்டாள்.அவனை நோக்கி நடக்கையிலேயே அவன் இப்பொழுது ஏதாவது புரட்சிகரமான செயலில்தான் ஈடுபட்டிருக்கவேண்டும் என்று மனதிற்குள் எண்ணியபடி நகர்ந்தாள்.அவன் அருகில் அவனை விட சற்று குள்ளமாக கொஞ்சம் பருமனாக இக்காலத்திற்கே உரிய அடக்கப்போர்வை கலந்த பகட்டுடன் ஒருத்தி அவன் கரங்களை பற்றியபடி."சரிபாதியாகத்தான் இருக்கவேண்டும்!" ,இவளது உள்ளம்.எந்நிமிடமும் தாம் கீழே விழுந்துவிடலாம் என்ற அச்சத்துடன் அவள் இடுப்பில் அக்குழந்தை.பாரதி இவளை குசலம் விசாரித்த பின் தன் மனைவிக்கு அறிமுகப்படுத்தினான்.அவள் பெயர் சௌந்தர்யா என்று தெரிந்தது.பருமன் திருமணத்திற்கு பின் உண்டான ஹார்மோன் மாற்றங்களின் விளைவாக இருக்கலாம் என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டாள் நந்தினி.சாலையோரம் சிறிது நேரம் நின்றபடி நட்பு வட்டாரங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.நந்தினிக்கு அலுவலகம் செல்ல நேரமாகிவிட்டதால் அவனது "காபி ஆர் டீ"அழைப்பை மறுக்கவேண்டியதாகிவிட்டாது."அப்புறம் பாரதி என்ன செய்யற?" என்று இவள் கேட்கும் முன்னரே இவளிடம் தனது முகப்பு அட்டையை நீட்டினான்.அட்டையில்,ஒரு ஓரத்தில் பசுமையாக ஒரு மரம் வரையப்பட்டு அட்டையின் நடுவிலே இவனது பெயர்,பட்டம் தொடர்ந்து "மர ஏற்றுமதியாளர்" என்று கொட்டை வடிவில் எழுதப்பட்டு இருந்தது."உலகில் அனைத்துமே நியாயத்திடமிருந்து பிறந்ததாகத்தான் இருக்க வேண்டும் என்று ஒரு காலத்தில் கொடி பிடித்தவனா இன்று மரங்களை வெட்டி அதனை ஏற்றுமதி செய்கிறான்?" என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டாலும் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் பதில் பகட்டாய் தனது அட்டையை அவனிடம் தந்துவிட்டு விடைபெற்று நகர்ந்தாள்.அதுதான் இவளது தற்போதைய சிந்தனை,எவரேனும் இந்த சிந்தனாதி விவரங்கள் பற்றி கேட்டாள்  சிரித்துவிட்டு பிறர் பற்றி நீ எதற்கு கவலைப்படுகிறாய் என்று அறிவுரை கூறிவிட்டு செல்வர்.அது தர்கத்தில் முடிந்துவிடுமோ என்று எண்ணியே மலை உச்சி கடவுள் போல் வீட்டு மாடியில் அமர்ந்து சிந்தித்துக்கொண்டிருந்தாள்.அவன் ஒருவன் மரத்தை விற்று காசாக்குவதால் உலகமே அவளுக்கு வீரப்பனின்  கூட்டாளிகள் போன்று  ஒரு நொடி தோன்றிவிட்டது."சுயநலவாதமும் பாரதியும்" என்று புத்தகம் எழுதும் அளவிற்கு அந்த சிந்தனையின் உயரம் தற்போது எட்டியிருந்தது.வெப்பமயமாதலால் நாளை உலகம் அழிந்திடும் என்றால் அதற்கு காரணம் பாரதியாகவே இருப்பான் என்ற எண்ணம் கூட முளைத்துவிட்டது.
                 இந்நிலையில் பாரதி தனது நாற்காலியில் அமர்ந்தபடி அவள் கொடுத்த அட்டையை நோக்கிக்கொண்டு இருந்தான்.அவள் பெயர்,பட்டம் கீழே ஒரு பெரிய இரசாயனத்தொழிற்சாலையில் அவள் வகிக்கும் பதவி யாதும் குறிப்பிடப்பட்டு இருந்தது.தன்னுடன் எழுச்சியுடனும் உயிர்ப்புடனும் புரட்சி ஜாலம் பேசியவளா இவள் இன்று உலகப்பசுமையை நிர்கதியாக்கிவிட்டிருக்கும் அத்தகைய  ரசாயனங்களை உருவாக்கும் தொழிற்சாலையில் பணிபுரிகிறாள் என்று மனதிற்குள் அவள் மீது பல சாடல்களை வரிசைப்படுத்திக்கொண்டிருந்தான்.
               அப்பொழுது உலகில் ஏதோ ஒரு மூலையில் தன் கூட்டத்துடன்  சாரியாக சென்றுகொண்டிருந்த ஒரு சிற்றெறும்பு  சற்று விலகி நடைபாதையில் சென்றுகொண்டிருந்த ஒரு உருவத்தின் கால்களில் தன் சிறு பற்களை பாய்ச்சி  கடித்துவிட்டு விலகியது.பிறரை கடிக்காமல் அவைகளால் உயிர் வாழ இயலும் என்பது கடினம்.கடிவாங்கிய உருவத்திற்கும் இதனால் எதுவும் பிரச்சனை  இல்லை கடித்தது தேளாகவோ பாம்பாகவோ இல்லாத வரை.
இவர்களும் சிற்றெறும்புகள்தாம்.                                                     

0 comments: