BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Sunday, June 17, 2012

இவள் இசைக் காதலி...!

                        ஜூன் 15 மலேசியா வாசுதேவன் பிறந்தநாளாம், இணையத்தில் இருப்பவர்கள் வாழ்த்துக்களை அள்ளிச் சொரிந்திராது இருந்தால் எனக்கு தெரிந்தே இருந்திருக்காது, ஆனால் அந்த காரணம் எல்லாம் எதுவும் இல்லாமல் நான் அன்று கேட்டுக்கொண்டிருந்த பாடல் 'என்றென்றும் ஆனந்தமே!!',அந்த வயலின் ,கீ,  ட்ரம் பேட் என அனைத்தும் ஒருங்கிணைந்து ஒரு அழகு என்றால் , திடீரென்று சத்தமில்லாமல் வந்துவிட்டு நம்மை ஆனந்தப் படுத்திவிட்டு செல்லும் அந்த குழலோசை மற்றுமோர் அழகு.பாடல் அமைந்த ராகம் ஸரஸாங்கி.இதே ராகத்தில் அமைந்த மற்ற  சில பாடல்கள் 'மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ!', 'மகராஜனோடு ராணி வந்து சேரும்!'...இந்த ஒற்றுமை எல்லாம் விடுத்து இந்த பாடல்களில் புலப்படும் மற்றுமொரு விஷயம் அந்த புல்லாங்குழல் , அணைத்து வாத்தியக் கருவிகளும் உபயோகப் படுத்தப் பட்டிருந்தாலும், குழலினை மட்டும் ஆங்காங்கே தனித்து உபயோகித்திருப்பார் இளையராஜா. இந்த பாடல் இப்படியென்றால் 'நீ பாதி  நான் பாதி' பாடல், அதே குழலிசைக்காகவே பலரின் மனத்தைக் கொள்ளையடித்த பாடல் சக்கரக் கட்டி சக்கரவாகம் இந்த பாடல் ,இதே போல் அதே வரிசையில் வரும் வனிதாமனியும்,வானிலே தேநிலாவும், குழலாகப் பிறந்து தன்னை வயலினாக இசை மாற்றிக்கொள்ளும் அந்த கருவி..என் செல்ல சாருகேசிக்கும்(காதலின் தீபம் ஒன்று,மயங்கினேன் சொல்ல தயங்கினேன்,அரும்பாகி மொட்டாகி ) , காப்பிக்கும் (சங்கத்தில் பாடாத கவிதை, சின்னத்   தாயவள்,கண்ணே கலைமானே..) குழலுடன் குரல் ஜாலமாய் அந்த வார்த்தைகளற்ற ஹம்மிங் பகுதிகள், இந்த ராகங்களுக்கு புல்லாங்குழல் பதிக்கப்பட்டது என்றால். அடுத்து நரம்பினால் தொடுக்கப்பட்ட ராகங்கள் என்றால் சிம்மேந்திர மத்யமமும்(தாலாட்டும் பூங்காற்று ,ஆனந்த ராகம் போன்ற பாடல்கள்),சிவரஞ்சனியும்(வா!வா!அன்பே அன்பே! ), நம்மை எப்படியெல்லாம் ஊடுருவி உருக்கிவிடலாம் என்பதற்காகவே பயன்படுத்தப்  பட்டிருக்கும் வயலின் தந்திகள்..இந்த பதிவை எழுதத் தொடங்கும் முன் நான் படித்த பக்கங்கள் இதோ இந்த பதிவும்  அதன் தொடர்ச்சிகளும் தான்  http://bit.ly/LSIUNe ..என்னுள் எழுந்த கேள்விக்கு இங்கு பதில் அகப்படுகிறதா என்று தேடிக்கொண்டிருந்தேன்..பதில் கிடைக்கவில்லை எனினும் எனுள் எழுந்த கேள்வியை இன்னும் கூர்மைப் படுத்திக்கொள்ள மிகவும் உதவியது.என்னுள் வருடக்கணக்கில் அலைந்துகொண்டிருக்கும் கேள்வி இது ,ஆம் மேற்சொன்ன ராகங்களில் அமைந்த பாடல்கள் பெரும்பாலும் அனைத்து கருவிகளையும் உபயோகித்துக் கொள்கின்றன தன்னை நளினப் படுத்திக்கொள்ளவும் மெருகேற்றிக்கொள்ளவும்,சட்டென்று கேட்பவரை ஈர்த்துவிடவும் ,ஆனால் ஏதோ ஒரு இசைக்கருவி மட்டும்தான் அந்த மெட்டிற்கு, ஆயிரம் சிப்பிகள் ஆழத்தில் இருந்தாலும் ஏதோ ஒன்றிடம் மட்டுமே தன்னை முழுதுமாய் அளித்துவிடும் அந்த கடல் நீர்த்துளி போல் ஆகிவிடுகிறது.இது ,இன்னார்க்கு இன்னாரென்று மனிதர்களிடை ஒருவன் தேர்வு செய்வது போல் இசையிடை  இன்ன ராகத்திற்கு  இக்கருவி  என அவன் தேர்வு செய்ததா?. ஆனால் அந்த குழல் காற்று போல், அந்த நரம்புகள்  போல் என் உணர்வுகளைச் சோதித்துக் கொண்டிருப்பது, மனிதர்களாய் இருப்பினும் இருக்காது.

(பி .கு),என்னடா இவள் இசையைப் பற்றி ,நாம் புரிந்துகொள்ள முடியாவண்ணம் ராகம் அது இது எனப் பிதற்றுகிறாள்  என்று எண்ணுபவர்கள்,மன்னிக்கவும்.இன்று நாம் புதியதாய் ஒரு வார்த்தை கற்றோம்  என்று எண்ணிக்கொள்ளுங்கள்.ராகம்,தாளம்,பல்லவி, பல்வலி  பற்றியெல்லாம் அறியாது வெறும் இசையை மட்டுமே முழுதும் ரசிப்பவர்களுக்கு அது என்ன  என்பதைப் புரியும்படி சொல்லவேண்டுமாயின், இந்தப் பாடல்களையெல்லாம் வரிசைப் படுத்தி  உன்னிப்பாய்க் கேட்பவராயின்  ஒரே மெட்டில் அமைந்த பாடல்கள் போல் தோன்றும்,அதுவே ராகம் என்பதும் :)..