BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Wednesday, January 26, 2011

உயிர்க்கல்..


        அகிலன் அந்த கல்லையே நோக்கிக்கொண்டிருந்தான்,அந்த கல் அவன் முட்டிக்கால் அளவு உயரம் கொண்டது.அவன் வளர்ந்து முட்டிக்கால் அளவு உயரம் இருந்தபோதிலிருந்தே அதனை நன்கு அறிந்தவன்.நமக்குத்தான் அக்கல் "அது". ஆனால் அவனை பொறுத்தவரை அது அவன் நட்பு ,தாய் என அனைத்தும்.யாருமற்ற அவனை அந்த கிராமம் வீட்டுக்கு வெளியில் அமரவைத்து சோறிட்டு,வெளிப்புறம் வழியாகவே கொல்லைக்கு சென்று கை கழுவ அனுமதித்து ,கோயில்களில் அவனை அனுமதிக்காவிடினும்  பண்டிகை மற்றும் திருவிழா நாட்களில் ஐந்து ரூபாய் என்று அளித்து தனித்து ஒதுக்கினாலும் பொருளாதார ரீதியாக ஓரளவு பார்த்துக்கொண்டாலும் அவன் மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள என்று அவனுக்கு எவரும் இருந்ததில்லை.அகிலன் என்ற பெயர் கூட ஊர் தமிழ் வாத்தியாரின் பெயர்,அர்த்தம் அறியாது அது ஏதோ அவனை ஈர்த்ததால் அதனை தன் பெயராக ஆக்கிகொண்டான்.இன்றுவரை அவனுக்கு அதன் அர்த்தமும் தெரியாது.அந்த கல்,அவன் ஒரு முறை யாரிடமிருந்தோ  தப்பிக்க ஓடி மாறாய் அதனிடம் நேராக தன் காலை சரணாகதி செய்ய,இளகிய கல் அவனுக்கு காலில் ரத்தம் வராமல் வெறும் சிறு சதை பெயர்தலோடு பார்த்துக்கொண்டது,அதுவே அவனைப் பொறுத்தவரை மிகப்பெரும் கருணை கூர்ந்த செயல் ஆதலால் அன்று முதல் அவனுக்கு அது நட்பானது, நட்பு ,தாய் எல்லாம் என அது அவனுக்காய் தருணத்திற்கு ஏற்ப அது தம்மை மாற்றிக்கொண்டது.என்றேனும் வேலை  அதிகம் செய்து முதுகு,கால் வலி என வந்தாலோ குப்புறப்படுத்துக்கொண்டு ரோட்டில் செல்வோரிடம் அந்த கல்லை தன் முதுகின் மீதிலோ அல்லாது காலின்  மீதிலோ வைக்க சொல்லுவான் போவோர் வருவோர்க்கு அது வினோதமானதாகவும் கிறுக்குத்தனமாகவும் தோன்றினாலும் அவன் கூறியதை செய்துவிட்டுச்செல்வர் ,ஏனில் அவனை பொறுத்தவரை அச்சமயங்களில் அது அவன் தாய்,அவனுக்கு கை கால்களை பிடித்துவிட்டு ஒரு மௌனத்தாலாட்டு பாடி உறங்கவைக்கும் தாய்.யாரிடமாவது கோபம் கொண்டால் தன் ஆத்திரத்தை அதனை காலால் உதைத்து வெளிப்படுத்துவான்,அது சில நேரங்களில் உதை வாங்கிக்கொள்ளும் சில நேரங்களில் அவன் காலில் குருதியாக தன் எண்ணப்பாட்டை  காண்பித்துவிடும்.மனது ஏதேனும் சஞ்சலமுற்றால் அதனை வெறித்து நோக்குவான் அவர்கள் இருவரும் என்ன பேசிக்கொள்கிறார்கள் என எவருக்கும் புரியாது.இன்றும் அவ்வாறுதான் அதனை வெறித்து நோக்கிக்கொண்டிருந்தான் ஆனால் கவலை  அவனைப்பற்றி அல்ல மாறாய் அதனை பற்றி அந்த கல்லை பற்றி.அடுத்த ஊர் பஞ்சாயத்துக்காரன் ஒருவன் ஊரில் புதியதாய் முளைத்த வேப்பமரத்தை சாமியாக்கும் பொருட்டு சம்பிரதாயப்படி அடுத்த ஊருக்கு கல் தேடி வந்துள்ளான்.சிறுசெங்கல் எடுக்க வந்த இடத்தில் வலுமிக்க அதை விட பெரிய கல்லை பார்க்க.சற்று பெரிய ஆத்தாவாகவே வைத்துவிடலாம் என எண்ணி அதை தூக்கப்போக,அகிலன் இல்லாத தருணம் பார்த்து, ஊர்க்காரன் எவனோ ஒருவன் அதை நோக்கித்தடுத்து அகிலன் வந்ததும் விஷயத்தை பேசிக்கொள்ளச் சொல்லி அனுப்பிவிட்டான்.தடுத்தவன் அகிலனிடம் இவ்விஷயத்தை கூறவேதான் அவனது இந்த நிலை.நம்மை விட்டு நெருக்கங்கள் பிரிகையில் ஏற்படும் துயர் போல் அது அவனுக்கு. அவனை பொறுத்தவரை அது ஒரு உயிர்,உருவற்ற உயிர்.ஆனால் சமூகத்திற்கு வெறும் கல்லே.எவரேனும் வந்து தகர்த்துக்கொண்டு போனால் கூட அதனை தட்டிக்கேட்க அவனுக்கு உரிமை இல்லை.நாளை அந்த அடுத்த ஊர் பஞ்சாயத்தான் வந்தாலும் அதே நிலைதான் ஆகப்போகிறது.தடுக்க வழியும் இல்லை,தன்னை ஏற்கனவே கிறுக்கென்று கூறுபவர்களிடம் எவ்வாறு உதவி கேட்பது என  அதனை காப்பாற்ற யோசித்து கவலையும் ஒண்டிக்கொண்டது.
                                           மறுநாள் பொழுது புலர்ந்தது.எப்பொழுதும் எவர்வீட்டுக்கேனும் அதிகாலை விஜயம் செய்து தன் அன்றைய  பணியைத்தொடங்கி,வேறு ஒருவர் வீட்டில் மதிய உணவு என இரவு வரை வெளிச்சுற்றும் அகிலனை அன்று எந்த வீட்டிலும் காணவில்லை.  அதே நேரம் பக்கத்து ஊருக்கு சுயம்புவாய் ஒரு வேப்பமரத்துக்கடவுள் வந்திருந்தார்,இலவச இணைப்பாக ஒரு பூசாரியுடன்.கடவுள் அது அவ்வூருக்கு .அவனுக்கு இன்று முதல் அது ,கடவுளும் கூட.      

4 comments:

Yaathoramani.blogspot.com said...

"கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும் "என
ஒருதிரைப் படப் பாடல் உண்டு
கல்லிலே எதும் இருக்க வேண்டியதும் இல்லை
நம்மில் இருந்தால் போதும்.
மிகச் சிறந்த படைப்பு ,தொடர வாழ்த்துக்கள்

Aishwarya Govindarajan said...

நன்றி :-).ஆம் கண்ணதாசனின் பெண்ணுள்ளம் பற்றியதான இயல்பான படைப்பு சுசீலாவின் குரலில் :-).ஆனால் எனக்கு ஏனோ இதை எழுதும் பொழுது பாரதியின்
"அல்லலில்லை, அல்லலில்லை, அல்லலில்லை,
அனைத்துமே தெய்வ மென்றா லல்லலுண்டோ?"
வரிகள்தான் நினைவில் வந்தது.

malarvizhi said...

பதிவு நன்றாக உள்ளது...

Aishwarya Govindarajan said...

nandri malarvizhi :-)