BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Monday, February 28, 2011

எனக்கென்றே  ஓர் புன்னகை,
இருந்ததில்லை உன்னிடம்..
ஆனால்,
தேடியதுண்டு அதனை ,
உன் மௌனத்தில் இருக்குமென.

எனக்கென்றே ஓர் எழுத்து,
இருந்ததில்லை உன்னிடம்..
ஆனால்,
தேடியதுண்டு அதனை,
உலகறியா ஒருத்தியாய்,
பலருக்கான உன் எழுத்தில் இருக்குமென...

எனக்கென்றே ஓர் கரம்,
இருந்ததில்லை உன்னிடம்..
ஆனால்,
தேடியதுண்டு அதனை,
மனப்பாதுகாவல் பொய்க்கும் நொடி, 
தோன்றும் நீர்த்துளிகளிடை  இருக்குமென..

எனக்கென்றே ஓர் அன்பு,
இருந்ததில்லை உன்னிடம்..
ஆனால்,
தேடியதுண்டு அதனை..
என் பெண்மைக் காலங்களில்,
இருக்குமென. 

எனக்கென்றே ஓர் உரிமை,
இருந்ததில்லை உன்னிடம்..
ஆனால்,
தேடியதுண்டு அதனை..
என்றோ  கேட்கும்,
உன் குரலிடை இருக்குமென ..

எனக்கென்றே ஓர்  உறவு,
தேடுகிறேன் உன்னிடம்..
தேடல்,
பொயித்தபடி நாள் இறந்து, 
மெய்க்குமென நாள் பிறக்கும்.. 

எனக்கென்றே ஒன்றாய் நான்,
தேடாத ஒன்றளித்தாய்..
நீர்த்துளிகள்  அனுதினமும்
நன்றிகள்,
புன்னகையாய்..

நேற்று போல்,
இன்று இல்லை..
இன்று போல்,
நாளை இல்லை..
நாளை போல்,
என்றும் இல்லை...
இது என்ன?!
காலத்துக்குக் காதல்..
எப்போது தோன்றியது? 

Friday, February 25, 2011

பொய்யென நெருங்கிப் 
பைய அணைத்து ..
மெய்யதை உருக்கி,
கையடக்கச் சிலையாய்..  

அழகியல் ஆய்வில்,
அவிழ்ந்திடும் நாணம்.. 
இருளில் ஒளியாய்,
அச்சப்புன்னகைகள்..

கூடல் முடிவில்,
கூடும் கரத்தில்..
தோன்றும் நெருக்கம்,
நிலைத்திட நெடுநாள்..

காணும் கண்கள்,
ஒரு திசை நோக்கி..
கலைகள்  பற்றி,
காதல் பேசும்..

மௌனித்து தொடங்கி,
மௌனம் முடிய..
சிணுங்கல் சிறிதாய்,
நொடிகள்  களவ..

தீண்டல் தோன்றும்,  
கண்ணீர்த்துளிகள்..
கலவில் ஜனிக்கும்,
முதற்க் கரு அதுவோ..!













Wednesday, February 23, 2011

பொதுப் பெயர் காரணங்கள்

நினைக்காத தருணங்களும்,
நிழல் போலப்  பெயர் தொடரும்..
செவிதனை..
நேர்ந்திடும் நிமிடங்களில்
யதார்த்தம் கூறிடுவேன்,
பொதுப்பெயர் உமதென்று..

பேருந்துப் பயணங்கள்..
அருகிருப்பவன் அலைபேசியில்,
நான் பெயர் அறியா இவன்,
நான் முகம் அறியா அவனை,
உன் பெயர் கொண்டு விளிப்பான்..
வியப்புகள் இருந்ததில்லை,
பொதுப் பெயர் காரணங்கள்.
 நினைவுகள் இருப்பினும்..

பின்னிருக்கை கனவான்,
என் முன் இருப்பவனை
எனை விளித்து அழைப்பான்..
அதுவரைத் தெரியவில்லை,
அவன் பெயர் ரகசியங்கள்..
வியப்புகள் இருந்ததில்லை,
பொதுப் பெயர் காரணங்கள்.
நினைவுகள் இருப்பினும்..

நினைவுதனை விடுக்க,
இசையைத் தேடிடுவேன்.. 
எதேச்சையாய் கேட்பது,
உன் குரலாகிடும்..
பெயர் உனது கொண்ட,
அவன் குரலும் ஆகிடும்..
இசை மட்டும் ரசித்திடுவேன்
புன்னகைகளுடன்..
வியப்புகள் இருந்ததில்லை,
பொதுப் பெயர் காரணங்கள்.
நினைவுகள் இருப்பினும்.. 
வேறு பாடல் வரி மாற்ற,
தருணத்து இசை போல்..
"உன் வாசம் அடிக்கிற காத்து..."
சோதனை இதுவே..

உறவுகள் நிரம்பினும்,
அழகிய பல தருணம்..
என் மனம் உனைத்தேடும்,
அதனைப் படித்தது போல்..
அருகிருப்பவர் மொழிகள்,
"அலைபாயுதே படம் பார்த்தேன்
பல நாளைக்குப் பிறகு!"
புன்னகைகள் எனது,
வேறென்ன செய்திடுவேன்.

சாலையில் நடக்கையில்,
உன் பெயர் தாங்கிப் பேருந்து..
மெலிதாய் அதன் மேல்..
கரம் வருடல், 
வியப்புகள் இருந்ததில்லை,
பொதுப் பெயர் காரணங்கள்.
நினைவுகள் இருப்பினும்.. 
பின் தொடர்ந்த உறவுக்கு,
புரிதலில்லை,
கவனமில்லை.

மழலை ஒன்று அழகாய்,
மழலையில் உன் பெயர் கூறும்..
வியப்புகள் இருந்ததில்லை,
பொதுப் பெயர் காரணங்கள்.
நினைவுகள் இருப்பினும்..
அதை பதிவுசெய்து அனுப்பிட
ஆசை இருப்பினும்,
ஏனோ தவிர்த்துவிட்டேன்..
ஏனென்று எதுவுமின்றி.

நாள் முழுதும்,
மனம் அது
உன்னைத் தேடுகையில்
ஏனோ உன் அழைப்புகள்
அலைபேசி அதிலே
காக்கையும் பனம்பழமும்
நினைவில் நிழலாடும்..
மறுவிளிப்பில் விடை கேட்பாய்
புரியாத கதை அதுவெனக் கூறி..
நானும் விடையளிப்பேன்,
தவறாய் ஒன்றை,
தவறென்று தெரிந்தும்..
குறும்புகள் கொஞ்சம்,
எனக்கிங்கு உண்டு..
பிடித்திருக்காதுதான் உனக்கது.. 
எனைப்பற்றி கேள்வி இல்லை,
உனைப்பற்றி அறிந்ததே..
எதிர்ப்பார்ப்பும் எனக்கில்லை,
எதிர்ப்பார்ப்பு இருந்திடினும்..   

இப்பொழுதும் அந்நிலையே,
தோழியின் புரிதல்கள்..
எந்நிலை பற்றி,
உன் பெயர் கொண்டவன் பற்றி,
வியப்புகள் இருந்ததில்லை.
பொதுப் பெயர் காரணங்கள்.
நினைவுகள் இருப்பினும்...
புன்னகைகளுடன்...














Tuesday, February 22, 2011

தேடற் பயணம்..

                         
                                    ஒரு வியாழன் மாலை தொடங்கியது பயணம்,வீட்டிற்க்குச் செல்லத்தான்;கல்லூரி,விடுதி என நாட்களை கடத்துபவர்களுக்கு வீடு என்பது வீடுபேறாக ஆகிவிட்டது.பேருந்துப் பயணங்களை நான் அவ்வளவாக விரும்பியதில்லை,நமக்கு ரயில் பயணங்களே மிகவும் பிடித்தமான ஒன்று,எனினும் இந்த நான்கு வருடங்களில் அந்த நான்கு மணி நேரப் பேருந்துப் பயணத்திற்கு எனை பழக்கப்படுத்திக் கொண்டுவிட்டேன் என்றுதான் கூறவேண்டும்,இசையும் புத்தகமும் இயற்கையும்  வழித்துணைக்கு இருக்க அது சாத்தியமாகியது.மேலும் அந்த நான்கு மணி நேரம் மட்டுமே நீடிக்கும் அறிமுகங்கள்.அவர்களுக்கான ரெடிமேட் புன்னகைகள் அதற்குள் அடங்கும் சற்றே பயந்தபடியான கேள்விகளும் விடைகளும்,அனைத்தும் பழகிப் பிடித்துவிட்டது எனலாம்.அப்படி நான் அன்றைய பயணத்தில் சந்தித்ததுதான் அந்த சுமார் முப்பது வயது மதிப்பிடத்தக்க பெண் ஒருத்தியும் அவளது குழந்தையும்,அதற்கு சுமார் மூன்று அல்லது நான்கு வயது இருக்கலாம்.அழகாய் வெளிர் ஊதா நிறத்தில்,இந்த தேவதைகள் உடை போன்ற ஒன்றை உடுத்தி இருந்தது,மூன்று வயதிற்கே உண்டான வளர்ந்தும் வளராததுமான முடியில் இரட்டை குதிரை வால், கண்களில் மை கீற்றால் குருவி வால் என அழகு,இந்த அன்னையர்கள்தான் எவ்வளவு ரசனை உடையவர்கள் பிள்ளை வளர்ப்பு விஷயங்களில்.என் அருகில் தன் குழந்தையுடன் வந்து அமர்ந்தாள் அத்தாய்.பேருந்தும் புறப்பட்டது. பயணசீட்டு எடுப்பதற்காக பணத்தை வெளியே எடுத்துக்கொண்டிருந்தேன்.செவிகளில் "இதோ இதோ என் பல்லவி..".இடையே அவளது குரல் "ஏங்க குடிக்க தண்ணி இருக்கா? பாப்பா தண்ணி கேக்குது..தாகமா இருக்கு போல!".நான்கு மணி நேரம்தானே என்று நானும் குடிநீர் எதுவும் கையில் எடுத்துக்கொள்ளவில்லை."இல்லங்க!"என்றேன்,அறியாத நபர்களுக்கான அதே ரெடிமேட் புன்னகையுடன். சிறுது நேரத்தில் அந்த குழந்தை அதன் மழலை மொழியில் "அம்மா!!தண்ணி வேணும்!!".அக்குழந்தையை சமாளிப்பதற்காக அவளது பொய்கள்,என செவி இசைக்கு இடையே அவற்றையும் கேட்டுக்கொண்டு இருந்தது.நான் சற்று பின் திரும்பி அங்கு அமர்ந்து இருந்த வேறு ஒரு குடும்பத்திடம் "ஏங்க!தண்ணி இருக்கா ? இவங்க கொழந்த வெச்சிருக்காங்க,அதுக்கு தண்ணி தாகம் எடுக்குதாம்!".அவர்கள் ,"இல்லமா!".உதடுகள் பிதுக்கி ஏமாற்றத்தை,அந்த அன்னையிடம் கூறிவிட்டு மீண்டும் என் இசையுடன் ஒன்றிக்கொண்டேன்.இப்போது "அய்யயோ நெஞ்சு அலையுதடி!" பாடல் அந்தக் குரலில் கிறங்கடித்துக் கொண்டிருந்தது. மிதமான குளிர் கலந்த மாலைத் தென்றல் முகம் வருட,சில கணங்களுக்கு முன் பிறந்த அன்றைய நிலவினை நோக்கிக் கொண்டிருந்தேன்.அத்தருணத்திற்கு ஏற்ற வரிகள் போல் "உன் வாசம் அடிக்கிற காத்து,ஏங்கூட நடக்கிறதே..!" என,எண்ணத்தை திசை திருப்ப,அச்சிறு குழந்தையின் பக்கம் திரும்பினேன்,அது என்னையேதான் நோக்கிக் கொண்டிருந்தது போல,நான் திரும்பியதும் சட்டென்று தன் அன்னையை நோக்கி தன் முகத்தை திருப்பிக்கொண்டது.சிரித்துவிட்டு,மீண்டும் பாடல்வரிகளுடன் "தன்னனனனானேனனனானா.."முணுமுணுத்தபடியே, இந்த வரிகளை மட்டும் ஷ்ரேயா "ஹம்!" செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ?,என மனது நினைத்துக்கொண்டது.அந்த வரிகளுக்கு ஏனோ இடக்கை விரல்கள்  தானாக நடனித்துக் கொண்டிருந்தன.திடீரென்று ஒரு சிறு விரல் அந்த விரல்களைத்தொட,திரும்பினேன்.அக்குழந்தைதான்,ஏனோ என் உள்ளங்கைகளுக்குள் தன் விரலை புகுத்திக்கொண்டு சிரித்தது,நானும் சிரித்துவிட்டு,அக்குழந்தையுடன் சிறிது விளையாடினேன்.ஆனால் இம்முறை புன்னகை இயல்பாகவே தோன்றியது.தன் அன்னையின் சேலைக்குள் மறைந்து ஒளிந்தபடி அச்சிறிய இடத்தில் என்னுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தது.நான்,"குட்டிப் பொண்ண காணோமே!!,பாப்பாவ காணோமே! எங்க? ?டோச்சி! என அதனுடன் விளையாடிக் கொண்டிருந்தேன் இடை இடையே அந்த அன்னையின் புன்னகைகளை கவனித்தபடி.சட்டென்று அவள் அன்னையின் மடியிலிருந்து தாவி என் மடியில் வந்து அமர்ந்துகொண்டது,எதிர்பாராவிதமாக.பேருந்து இருக்கைகளின் சாய்வுக்கம்பிகளின்மேல் தன் விரலால் ரயில் விட்டபடி மீண்டும் விளையாடத்துவங்கியது.சற்றே பெரிய ரயில் ஒன்று எதிர் திசையிலிருந்து அந்த ரயில் மீது மோத வர,தன் ரயில் பயணத்தை நிறுத்திக்கொண்டு என்னை நோக்கி புன்னகைத்தது அக்குழந்தை.நானும் பதிலுக்கு "முட்டு! முட்டு! முட்டு! முட்டு !முட்".எனவிளையாடியபடியே புன்னகைத்துவிட்டு.மீண்டும் பேருந்து ஜன்னல் நோக்கி பார்வைகளைப் படரவிட்டேன்.நிலவு அந்த அரை மணி நேரத்தில் சற்றே வளர்ந்து இன்னும் வெண்மையாக முழு வட்டமாக காட்சி அளித்துக்கொண்டிருந்தது.நினைவுகள் எங்கோ சென்று கொண்டிருக்க,அதே தென்றல் காற்று.சிறிது நேரத்தில் அக்குழந்தை என் மடியில் அமர்ந்தபடியே உறங்கிவிட்டதை உணர்ந்தேன்.இன்னும் இருபது நிமிடங்களில் தன் ஊர் வந்துவிடும் என அந்தத்   தாய்  கூறிக்கொண்டிருந்தாள்,தூங்கிக் கொண்டிருந்த தன் குழந்தையை எழுப்ப அவளுக்கு  மனம் வரவில்லை.மனதில் ஏனோ சட்டென்று ஒரு எண்ணம், அன்று ஒரு நாள் இதே போல் ஒரு பயணத்தில் என்னுடன் பயணம் செய்த தோழி கூறிய வரிகள் " Everything in the world finally ends up there only and everything is for that purpose only". என்று,பலர் கூற நான் முன்பே கேட்டிருந்த கருத்து.உளவியல் ஆராய்ச்சி அது இது என வேலையற்ற வேலை மேற்கொள்பவர்களுக்கு தீனி போடுவன இது போன்ற கருத்துக்கள்.அதனால் என்னாலும் பல நாட்கள் சிந்திக்கப்பட்டதே இக்கருத்து.முதன் முதலில் இதை ஒருவர் கூறக் கேட்டு "என்ன ஒரு கருத்து?!" என நான் ஆச்சரியப்பட்டாலும்.அடுத்த தவணைகளில் அதே வரியை வேறு ஒருவர் கூற,இதை சொல்லுகையில் கூறுபவர்களின் மன நிலை எவ்வாறு இருக்கும் என மனம் சிந்திக்கத் துவங்கிவிட்டது,பல நேரங்களில் அது கூறுபவர்களின் வெளிப்படைத்தன்மையை நிருபிக்கும் ஆயுதமாகவே பயன்பட்டு உள்ளது .இது போன்ற கருத்துக்கள் வெறும் மனதில் தோன்றும் பள்ளத்தை நிரப்பிடும் மணல் போன்றது.இது உளவியில் ரீதியாக நான் புரிந்து உணர்ந்தது,என்பார்களாயின்.அவர்களது உளவியல் புரிந்துனர்தலை சற்றே திருப்புதல் செய்வது நன்று.வாழ்வின் குறிக்கோளே காமம் என்பதில்தான் அடங்கியுள்ளது என்பதாயின்,இந்த உலகும் அதன் உயிரினங்களும்  ஏன் அதையும் தாண்டி தனது செயல்களை ஆற்றிக்கொண்டு இருக்கின்றன. தேடல் என்ற வார்த்தையின் புரிதலை பலர் காமத்தோடு நிறுத்திக்கொண்டுவிடுவது எவ்வளவு பெரிய பிழை?.என் மடி உறங்கிக் கொண்டிருந்தவளை நோக்கினேன்.ஒருவேளை தேடல் என்பது இதோடு நின்றுவிடுகிறதோ?.அதன் சிரிப்புகளில், மழலை மொழிகளில் என வாழ்க்கைப் பயணம் அவ்வளவு எளிதானதா?.பேருந்து நிறுத்தம் வந்தது, "பாப்பா! எழுன்ச்சிறு,தண்ணி குடிக்கணும் சொன்னியே?!",அந்த அன்னையின் குரல்.அது என்னை விட்டு நகரவில்லை,ஆகையால் அவள் அக்குழந்தையை இழுத்துக் கொண்டு செல்லும்படி ஆயிற்று.அரை தூக்கக்குரலில் "அக்க  வண்ணம்(வரணும்)!" என்று கூறியபடியே அதன் அம்மாவுடன் நகர்ந்தது.நான் "டாட்டா!" என்றேன்.அலைபேசி திடீரென்று  தன் குரலில் ஒலிக்கத்துவங்கியது.எதிர் முனையில் அப்பா, என் பதில்கள், "நைட் பத்தரைக்கு மேல ஆகும் நினைக்கறேன்,என்னது? நீ வரேயா?!,அதெல்லாம் வேண்டாம் பா.. நான் பாத்துக்கறேன், எப்பொழுதும் நானே வரதுதானே இன்னிக்கு என்ன புதுசா நீ வந்து ரிசீவ் பண்ணிக்கரேனு?! பயப்படாதே..ஹ்ம்ம் செரி..செரி" என்று கூறிவிட்டு புன்னகையுடன் அழைப்பை துண்டித்தேன்.மீண்டும் இசையுடன் ஐக்கியமானது மனது,"காற்றின் மொழி...!".                    
.                                                           

Wednesday, February 16, 2011

புன்(ண்) கவிதை...


வரிகள் புரிந்துகொண்டேன்..
பெயரில் உணர்ந்துகொண்டேன்..
உன் மனம் உணர்ந்தவள்தானே,
நன்றென்றும் கூறிவிட்டேன்,
புன்னகையிட்டு..
இட்ட விரல்களில் மட்டும்,
பசை போல்..
கண்ணீர் மிச்சங்கள்,
ஏமாற்றிக்கொள்கிறேன் மனதை
உனக்காய் அவ்வரிகள்  என்று..
நீ அறிந்தது என் புன்னகை மட்டுமே..
ரணங்கள் மறைபொருளாய்..

Tuesday, February 15, 2011

சொல்லாமல் மறைத்தது,
அன்பல்ல..
உனை வேண்டும்,
தருணத்தையும் அல்ல..
கண்ணீரை அல்ல,
புன்னகைகளை அல்ல,
வெட்கங்களை  அல்ல,
தனிமைகளை அல்ல,
சிறிதாய் உனை வெறுக்கும்
நொடிகளை அல்ல,

பாடல் ஒன்றைப் பதித்து,
பின்னூட்டமும்  இடுவாய்..
அதுவும் சேர்த்ததாய்,
இன்னும் சில பிடிக்கும்,
"விருப்பம்" எனப்பதிக்க,
ஆவல் இருந்தும்..
செய்யாமல் தவிர்த்திடுவேன்,
அது ஏனோ!
எனை மீறி "விருப்பம்"
எனப்பதிப்பேன் ஆயின்,
விருப்பத்தின் உச்சம்.
அதுவாக இருக்கும்
அவை மீது உற்ற விருப்பம்,
அதுவாக இருக்கும்.

திரை ஒன்றைப் பார்த்துவிட்டு,
மனம் போல எழுதிடுவாய்..
என் மனம் போல்..
நானும் வரி ஒன்று எழுத,
நட்பு அது சொல்லும்..
இது அவன் பாதிப்பென..
பிறகே படித்தறிந்தேன்,
உன் எழுத்தும் அவ்வாறென,
பதில் விடையேதும் கூறவில்லை..
நட்பிடத்து ,
பாதிப்பாய் அவை இருக்கட்டுமே..
அந்நட்பின் வரையில்.

அவனுக்கும் இது பிடிக்கும்
என்று நட்பு  கூறும்
எதிர்பாராச் செயல் எனதை
நோக்கிவிட்டு,   
மனம் ஏனோ
அழகாய் சிரித்துக்கொள்ளும்
வெளியே சிறிதாய் "ஓ!"
எனக்கூறிவிட்டு..

மனம் அதற்குத்தெரியும்
உன் எண்ணத்தின் நடை பற்றி
வெளியே விடையளித்ததோ
"நான் ஏதும் ஊகிக்கவில்லை!"
எண்ணம் உனது அறிந்ததும்
பிறர் அறியாத வண்ணம்
மீண்டும் புன்னகைகள்..
ஊகங்கள் ரகசியமாய்.

ஏதோ ஒரு வரி ஈர்க்க,
அவனையும் அது ஈர்க்குமென்பேன்..
மனதிடம்,
மறுநாள்,
ஈர்ப்புகள் அங்கே,
உன் விருப்பங்களாய்..    
புன்னகைகள் அவை பார்த்தபின்பு 
மறைத்த என் விருப்பங்களுடன்..
நாட்கள் பல இவ்வாறு, 
நகர்ந்ததுண்டு .

பயணம் ஓர் பாதையில்..
அதை,
சொல்லாமல் மறைத்திட்டேன்,
உன் காத்திருப்புகள்..
அப்பாதையில்,
ஓர் தேவதைக்காய், 
என்றதும்.

படித்துவிட்டால் அழித்துவிடு..
சொல்லாததாய்,
இருக்கட்டும்..

Monday, February 14, 2011

மொழி புரிந்துவிடில்...

இரு நாட்களாக கிறுக்கிய சற்றே பெரிய பதிவு இறுதியாக இதோ முடிந்துவிட்டது :)
குறிப்பு:பொறுமை உள்ளவர்களுக்கு மட்டும்            
                
              சிறு வயதில் பள்ளியில் தோன்றிய எண்ணம்.இன்று வரை மாறவில்லை. இந்த "காதலர் தினம்" - "வேறு வேலையற்றவர்கள் தினம்" என்று. பதினோறாம் வகுப்பில் அருகில் அமர்ந்திருந்த பள்ளித்தொழியிடம் சொன்ன வசனம் இன்றும் நினைவில் உள்ளது "இந்த St.Valentine நிஜமா பாவம், அவர் பிறந்த நாள் எதிர்காலத்துல இப்படிலாம்  கொண்டாடுவாங்கன்னு தெரிஞ்சுருந்தா இன்னும் ஒரு பதினஞ்சு நாள் தள்ளியாவது பிறந்திருப்பாரு atleast கொண்டாடற frequency-யாவது குறைஞ்சிருக்கும்".ஏனெனில் அது காதல் என்பதன் மீது உள்ள வெறுப்பு  அல்ல மாறாய் பள்ளி காலத்திலேயே பல நண்பர்கள் காதல் என்ற பெயரில் செய்த அலம்பல்கள் அவ்வளவு,ஏதோ அவர்கள் செய்வதையெல்லாம் பார்த்தால் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் அந்த "லா லா லா" வுடன் , தற்போதைய டி.ஆர் ,வசனம் பேசி நடிக்கும் காதல் படத்தை யாரோ நம்மை பலவந்தமாகப் பார்க்கவைப்பது போல் இருக்கும்.கண்ணே,கனியே,முத்தே என்பதெல்லாம் சினிமாவோடு சரி, இயல்பு வாழ்க்கையில் எதிரில் அமர்ந்து யாராவது யாரிடமாவது அவ்வாறு வசனம் கூறினால்,எரிச்சலில் அவர்களை அறைந்திடமுடியாமல் எழுந்து சென்றுவிடுவேன் அல்லது தலையில் அடித்துக்கொண்டு நகர்ந்துவிடுவேன்.படங்களே பார்க்காமல் இருந்திருந்தால் இவர்கள் எவ்வாறு தன் காதலை வெளிப்படுத்தி இருப்பார்கள் என்று அவ்வப்பொழுது நினைத்துப்பார்ப்பது உண்டு.என் தோழி ஒருத்தியும் தோழனும் ஒருவரை ஒருவர் பார்த்ததும் பிடித்துவிட,செல்போன்,கேண்டீன் என்று அவர்கள் உறவு தொடர்ந்தது, திடீரென்று ஒருநாள் என்னிடம் "I think I like him,he is so fun"-என்றாள்,புன்னகைத்தேன்.ஒரு மாதம்  கழித்து விளையாட்டாய் நான் சற்று அவளை அவனுடன் இணைத்து பரிகசிக்க  "I don't know எனக்கு இப்போலாம் ஆரம்பத்துல இருந்த மாதிரி ஒரு எண்ணம் தோன்றது இல்ல" என்றாள்.ஒரே வரி-ஈர்ப்பு பலவீனம் அடைந்தது, இங்கு பலரது வாழ்க்கை இவ்வாறுதான், பார்த்தவுடன் பிடித்துவிட பழகுவர்,பழகியபின் தெரியும் எண்ணம் ஓத்ததில்லை என்று, பின்னர் அதனால் ஏற்படும் break up என்பதும்,"நாம் friends - ஆவே இருந்திடலாம்" என்ற வரிகளும்.சரி என்று இறுதி வரை விடமுடியாமல் சகித்துக்கொண்டு வாழும் ஒரு பிரிவும் உண்டு.  காதல் என்றால் என்னவென்றே புரியாமல்/தெரியாமல் ஆனால் அதன் பெயரால் சில நகைப்புகளையும் நடப்புகளையும் கண்டுகொண்டு அனைவரும் வாழ்கிறோமோ? என்ற எண்ணம் அவ்வப்பொழுது என்னுள் தோன்றுவது உண்டு. எது எதற்கோ அது உண்மையா? இல்லையா? என்று ஆராய்ச்சி செய்து  அனுதினம் நிரூபித்துக்கொண்டிருக்கும் நாம் ,ஏன் காதல் என்பதை மட்டும் எவ்வாறு இருக்கும் என்று பரிசோதிக்காமல்/ஆராயாமல் அதாம்-ஏவாள் காலத்து ஈர்ப்பாகவே உள்ளது உள்ளபடி  இன்றளவும் நம்புகிறோம்/ஏற்றுக்கொண்டுவிட்டோம்?.கவிதைகள் கிறுக்குபவளா இவ்வாறு பேசுகிறாள்? என்று குழம்பும் பலருக்கு,எழுதும் கவிதைகளும் வசனங்களும்  அவ்விடத்தோடு சரி இயல்பு வாழ்க்கைக்கு அவ்வரிகள் ஒத்துவராத ஒன்று என்பது என் அசைக்க இயலாத கருத்து.மேலும் அதனால் தானோ என்னவோ?என் வரிகளும் கண்ணே மணியே முத்தே என்று பெரும்பாலும் இல்லாமல் இயல்பு வாழ்க்கை நிகழ்வை சுற்றியே  இருக்கும்.அப்படியென்றால் "நீ காதல் உணர்வற்ற அனைத்தும் துறந்த துறவியா?" என்றால் .உங்கள் கணிப்பு மிகவே தவறு.  
                                                           
    
                    அது  Deep passion towards something என்று கூறுவார்களேயாயின்,என் முதல் காதல் இசைமீதுதான் என்று கூறவேண்டும்,புத்தகங்களும் எழுத்துக்களும் திரைப்படங்களும் சற்றே வளர்ந்தபின் தோன்றிய/அறிந்து உணர்ந்துகொண்ட காதல்கள் எனக்கூறலாம்.   உண்மையிலேயே,சிறுகுழந்தையாய்   இருக்கையில்  என் பாட்டி என்னை குளித்துவிடும்போழுது  கைவீசம்மா கைவீசு என்று ராகமாகப் பாடி என் இருகரங்களையும் குவித்து அதன் மேல் முத்தமிடுகையில் நான் "களுக்"கென்று சிரித்துவிடுவேனாம்,சொல்லுவார் என் முதல் சிரிப்பு பற்றி.என் முதல் சிரிப்பே அதற்குத்தான்.என்னைச் சிரிக்கவைத்தது இசை.
                    தேவர் மகன் படம் பார்த்தபின்பு முதல் முதலாய் நான் மழலையில் பாடியது.என் வீட்டில் ,அப்படத்தில் சிவாஜி படுத்திருக்கும் மரக்கட்டிலை போன்ற ஒன்று உள்ளது அதன் மீது ஏறி நின்றபடி "போற்றிப்பாடடி" என்று கால்களை உதைத்து நின்றபடி இடுப்பில் கைவைத்துக்கொண்டு பாடினேனாம். என்னை அதற்காய் முதலில் ஆட வைத்தது இசை.
                      "மாணிக்கம் கட்டி" என தந்தை பாடியும்,tape recorder -இல் பாடவிட்டுமென என என்னை உறங்கவைத்தது இசை.  
                      காலைவேளை வானொலியில் ஏதேனும் சுசீலா அல்லது டி.எம்.எஸ் அல்லது பி.பி.எஸ்  பாடல் ஓடிக்கொண்டிருக்க ,என் தாத்தா அவர்களை பற்றியும் இன்ன பிற இசைக்கலைஞர்கள் பற்றியும் விவரிப்பார்.தன்னைபற்றியும் தன்னை சுற்றியவர்கள் பற்றியும் தன் மூலமாகவே உணரவைத்தது இசை. 
                     சற்றுவளர்ந்தபின் மதியவேளையில் தந்தையுடன் சேர்ந்து அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கையில் ஏதேனும் ஒரு பழைய பாடல் வந்தால், "பாட்டி சேனலை மாத்தாதே இந்த பாட்டு இருக்கட்டும்" "அம்மா சேனலை மாத்தாதே மா இந்த பாட்டு இருக்கட்டும்" என்று நானும் தந்தையும் ஒரே குரலில் பாட்டியிடம் கூறுவோம் .அல்லது ஏதேனும் அழகிய பாடல் வந்தால் கால்களால் தரையில் தாளமிட்டபடியோ அல்லது ஆனந்தசயனப்பெருமாள் போல் படுத்தபடி ஒரு காலால் மற்றொரு காலில் தாளமிட்டபடி சிரித்துக்கொண்டு ரசித்து என, அது போன்ற அருமையான தருணங்களை தந்தது/தந்துகொண்டிருப்பது  இசை.
                    ஆறாவது படிக்கையில் என நினைக்கிறேன் முதன்முதலில் நான் அடுத்த தெருவில் நடந்த கர்நாடக இசை கச்சேரிக்கு சென்று புரியாத வரிகளுக்காய் ஏனோ பிடித்தும் பிடிக்காததுமாய் சம்பந்தமே இல்லாமல் தாளமிட்டபடி கேட்டுவிட்டு,வீட்டிற்கு வந்தபின் "அவா இப்படி புரியாதமாதிரி ததரினானா தயிர்நன்னானு பாடினா நமக்கு எப்படிபா பிடிக்கும்!" என்று சற்றே வெறுத்துக்கொண்டேன் அந்நிமிடம்.முதன்முதலில் அதனை வெறுத்தது.இரண்டு வருடங்களுக்குப்பின் அதே கர்நாடக சங்கீதம் என்றால் என்ன,என்று அறிந்துகொள்ளும் வரை.முதல் இசைக் கச்சேரி பாடிக்கேட்டது நித்ய ஸ்ரீ உடையது.        
                    துன்பங்களை புரிந்து, உணர்ந்து கொள்ள இயலாத வயதில் கூடப்படித்த தோழியின் மரணம்.நேரில் சென்று பார்க்க பெற்றோர் அனுமதிக்காத நிலையில்,எனை மீறி வெடித்து அழுதுபடி ஹாலில் அமர்ந்திருக்கையில்,எங்கிருந்தோ வந்த வயலின் இசை ஒன்று ஏனோ இனம் புரியாமல் மனதை வருடியது.பின்னாளில் அது இளையராஜா என அறிந்துகொண்டது வேறு விஷயம். துயரில் என்னுடன் கலந்து அருகில் இருந்து வருடியது அந்த இசை.
                           பள்ளிக்கும் தனிப்பாடவகுப்புக்குமென மிதிவண்டியில் செல்லுகையில் எனக்குத்துனை அங்கு நட்பு இருந்ததோ இல்லையோ.ஏதேனும் ஒரு பாடல்வரி கண்டிப்பாய் என் வாய் பிறந்தபடி இருக்கும்.
                                                 
                            இன்று வரையில்,பாடல்வரிகளில் சிலது  இசை தொடர்புடையதாகவோ அல்லது இசையையும் வாழ்வினையும் தொடர்புபடுத்துவதாகவோ இருப்பின் ஏனோ சட்டென்று என்னை ஈர்த்துவிடும்.
                          எனையும் மறந்து அதனிடம் சரண்புகுந்த நொடிகள் பல பல.
                          பாரதியாரின் வரிகளுக்கு ராகங்கள் பற்றி புரிந்திராத நாட்களில் நானாகவே ஏதோ ஒரு மெட்டமைத்த தருணங்களும் உண்டு.             
                        நட்பிடம் என் அவா ஒன்றைக் கூடக் கூறியுள்ளேன், "வயலின் கத்துண்டு நானே சொந்தமா ஒரு ட்யூன் கம்போஸ் பண்ணி,மழையோட மழையா கரைஞ்சுண்டே வாசிக்கணும்" என்று.      
                          
                          இசை அதனை உணர்ந்து ரசிப்பது வானொலி,டேப் ரிக்கார்டர், ஐ-பாட் என "காலங்கள் மாறினாலும் உன் மீது உள்ள அன்பு என்றும் மாறாது" என்று காதல் கவிதை வசனம் போல்,என்னால் அதுவன்றி இருக்க இயலாது.

                     தீபாவளிக்கு மறுநாள் காலை அனைவரும் பேசிக்கொண்டிருக்கையில்,"கண்ட நாள் முதலாய்...!!" என நான் பாடிக்கொண்டிருக்க,சித்தப்பா,மாமா,அம்மா,அப்பா என அனைவரும் என் பக்கம் நோக்கினர்.சட்டென்று தாத்தா,"உனக்கு ஏன் நாங்க ம்யூஸிக் கத்துக்கொடுக்க விட்டுட்டோம்?" என்றார்.அந்த குரலில் சற்று ஆதங்கம் தோன்றியது.அது ஏனோ எனக்குப்பிடிக்கவில்லை,சிறுவயதிலிருந்து இந்த cold n cough அடிக்கடி வருவதால் சட்டென்று குரல் கட்டிக்கொண்டுவிடும்(இன்று வரை அப்படித்தான் :D ),அதனால் அந்த எண்ணம் அப்பொழுது கைவிடப்பட்டது.நட்பு ஒன்றிடம் அவன் அறியாத பாடல் ஒன்று பற்றி விவரிக்க பாடல் வரியைப் பாட நேர்கையில் "நீ ஏன் கல்சுரல்ஸ்ல பாடல?" என்றான்.இவ்வாறு தருணங்கள் பல.சட்டென.அப்போது அத்தருணங்களில் அக்கேள்விகளுக்கு விளையாட்டுப்போக்காய் விடையளித்தாலும்  மனம் உடனே யோசிக்கத்தொடங்கிவிடும்.வெறும் அரைகுறை கேள்வி ஞானத்தோடு மட்டுமே உள்ள எனக்கும் இசைக்குமான புரிதல் பற்றி.
              பார்த்தவுடன் தோன்றிய காதல் வகையல்ல இது,மாறாய் கேட்டவுடன் தோன்றியது எனலாம்.உரு அறிந்ததில்லை,மொழி புரிந்ததில்லை.சர்வமாய் இருக்கும் இந்த இசையின் மொழி புரிந்தால்  தெரிந்திடுமோ,முதல் இருந்தும் முடிவற்ற அதற்கும் எனக்குமான பிணைப்பு.இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்...              
                          
                             
                              .
                          
                             
          
                                                   

 

Sunday, February 13, 2011

கயறு...



பிறப்பு,
அது கலை என்றால்
இறப்பும் கலைதானே?
தொப்புள் கயற்றை அறுத்திட
ஜனிப்பது.. 
பாசக் கயற்றில் தொடங்கையில்
மறித்திடுதே,,
நிறவெறி நமக்குள்ளே..
நாம் அறியாது,
கயறது கருப்பாய்
மாற்றம் கொண்டபின், 
மனமதை ஏனோ ஏற்பதில்லை..

Saturday, February 12, 2011

நீர்த்திரை நிமிடங்கள்...



தொலைவுகள் புதிதல்ல
நம்மிடையே,
மௌனங்கள் புதிதல்ல
நம்மிடையே,
ஆனால்
நீர்த்திரைகள்,
அவை தோன்றும் தருணங்கள்
புதிதாகையில்..

Thursday, February 10, 2011

ஒரு அழகிய நாளில்...

                       இன்று பொழுது அழகாகத்தான் துவங்கியது,அழகு என்பதை விட கலர்புல் என்றுதான் சொல்லவேண்டும்.நாள் ஒரு சிலருக்கு நான்கு மணியிலிருந்து தொடங்கலாம் பலருக்கு பத்து மணிக்கு,இன்னும் சிலருக்கு இரவு பன்னிரண்டு மணியிலிருந்தே.நாம் அந்த மூன்றாவது வகை."Biutiful" -திரைப்படத்தை ஆன்லைனில் பார்த்துக்கொண்டிருந்தபொழுது பாதியில் இணையம் துண்டித்துக்கொண்டுவிட சோகமாக இருந்த நொடி( மீண்டும் நன்றாகப் பார்க்கவேண்டும்,பார்த்தவரை ஜேவியர்-ஐ ஒற்றை வார்த்தையில் புகழவேண்டுமாயின் "awesome" என்ற வார்த்தை கூட குறைத்து மதிப்பிடலே),அறைக்குள் தோழி பிரசன்னமானாள் , கையில் சார்ட் அட்டை,ஸ்கெட்ச் பென் சகிதமாக. "ஐஷு!உன் கிரியேட்டிவிட்டி மொத்தத்தையும் வேணாலும் யூஸ் பண்ணு,எனக்கு வெள்ளிக்கிழமை இந்த சார்ட் வேணும்,சிவில்-லதான் ஒட்டப்போறேன்  ".புன்னகையுடன்,தமிழ் சரிவர பேசத்தெரிந்திராத அவளின் தமிழ் உச்சரிப்பை வியந்தபடி சரி என்று தலையாட்டினேன்.அவள் நகர்ந்தபின் இசையுடன் 10 -02 -2011 அன்றிற்க்கான பயணத்தை தொடங்கியது உயிர்,உடல் இரண்டும்."என்ன தவம் செய்தனை!!" செவிகளில்.மனம்,"இந்த இசையினை உணர நாம் மானுடம் என்ன தவம் செய்தோம்!" உண்மையிலேயே,வேறு எந்த உயிரினத்திற்காவது இந்த ஆட்ற்றல் உள்ளதா?.  விரல்,பேப்பரில் கிறுக்கிக்கொண்டிருந்தது  ஒரு நல்ல ஐடியாவிற்க்காக. ஆகமொத்தம் கலர்புல்லாகத் தொடங்கியது, biutiful-முழுதாய் பார்த்து முடிக்க இயலவில்லை என்ற வருத்தம் இருந்தாலும்.இடையே சிலதைப்பற்றிய எண்ணங்கள்,சிலரைப்பற்றியும் எண்ணங்கள்.மிக நாட்களாக அந்த சிலரது அருகாமையை  இழப்பது (missing என்பதை எவ்வாறு தமிழில் கூற!? )போன்ற எண்ணம் மீண்டும் மீண்டும் மனதில் உதிக்க,மனதின் ஒரு பாதி பேசு என்று கூறும் மறுபாதி வேண்டாம் என்று தடுக்கும்,கண்ணீர்?!! மிகவே .அதனால் பேஸ்புக்கிலும் பஸ்சிலும் "When You feel Like Missing SomeOne...!!U........ Record!!! (ஒன்றும் புரியவில்லையோ?!):-/"என பதிவிட்டுவிட்டு.மற்ற சில வேலைகளை முடித்துவிட்டு பெயருக்கு உறக்கம்,பெற்றோருடன் உரையாடல் என தொடங்கியது  சற்றே வெளிச்சம் நிரம்பிய காலைப் பொழுது."என்ன தவம் செய்தனை!" முனுமுனுப்புடன்.ப்ரொஜெக்டில் வேலைகளுக்கிடையே சங்கர் மகாதேவனும் ஸ்ரேயாவுமாய் "tere naina" எனப்பாடிக்கொண்டிருக்க test tube -ஆல்  தாளம் போட்டபடியே கேட்டாயிற்று. "dil ke taar mein hain sargam"-மனதிற்குள், எவ்வளவு அழகான வரி என்று கூறிக்கொண்டு மீண்டும் ப்ராஜெக்ட் வேலையில் மும்முரம்.sodium sulphate என்று பத்து முறை தவறாக கூறிய ஆசிரியரை பத்து முறையும் அது ammonium sulphate எனத் திருத்தி வேலையை மீண்டும் துவங்கும்போழுது "வைகைக்கரை காற்றே நில்லு" பாடல் நினைவில் வர அதை கேட்காமல் வெறுமனே முனுமுனுத்தபடி பேஸ்புக்கில் அவ்வரியை பதிவிட்டும் ஆகியது,பழக்க தோஷம் ஒன்றும் செய்ய இயலாது.இடையிடையே நண்பர்களுடன் பேச்சு,வேலை என அனைத்தையும் முடித்து அறைக்கு திரும்பினால் இரு மகிழ்ச்சியான விஷயங்கள் எனக்காய் அங்கு காத்திருந்தது.ஒன்று,நெடுநாளைக்குப் பின் ஊரிலிருந்து திரும்பி வந்திருந்த அறைத்தோழி மற்றொன்று வேறு ஒரு தோழி அவள் மடி கணினியில் பாடச்செய்த "maathae mantramu"-ராஜாவின் இசை எப்பொழுதும் போல் சுண்டி இழுக்க "where from they found him re?"என்று என்னையும் அறியாமல் வாய் விட்டுக் கூறிவிட்டேன்.மீண்டும் கல்லூரி வகுப்பு எனச் சென்றாலும் இசையும் என் கூடவே பயணித்துக்கொண்டிருந்தது.அடுத்ததாக பாடல் வரிசையில் வந்தது இந்நாட்களில் அடிக்கடி கேட்கும் பாடலில் ஒன்று "unaru mizhiyazhakae"-சின்மயி பாடுவதில் உயிர் உள்ளது என்றால்,அப்பாடலின் இசைமட்டுமேயான பகுதியை கேட்டால் உயிரும் உடலும் என அனைத்தும் அதில் நிலைத்துவிடுகிறது.மீண்டும் அறைக்கு விஜயம் செய்ய,சில அருமையான கதைகளையும் பதிவுகளையும் படித்தாயிற்று.குரலில் தோன்றும் முதிர்ச்சியும்,இசையும் தொடர்பான ஒரு பதிவினை படிக்கையில் ஏனோ மனதிற்குள் "எல்லாரும் எஸ்.பி.பி மாதிரி வரமுடியுமா?" என நினைக்க அடுத்த வரியில் அதைப்போலவே அப்பதிவர் குறிப்பிட்டிருந்தது மிக ஆச்சரியம். ஏனோ மனம் இன்னும் குதுகலித்தது.உணவருந்தும் வேலையில் 1947-Earth "Ishwar allah"பாடல் என இன்று மட்டும் நான்கு ஐந்து பாடல்கள் தொடர்ச்சியாகப் பலமுறை கேட்டுள்ளேன்       கேட்டுள்ளேன்.அடுத்தது கொஞ்சம் கிஷோர் குமார்,இன்னும் கூட அவர்தான் மடிகணினியில் பாடிக்கொண்டிருக்கிறார் இதில் என்ன இனிமை உள்ளது எப்பொழுதும்போல் மற்றொரு  நாள் அவ்வளவே என்று பலர் கேட்கலாம்!.இதில் இனிமை என்று எனக்கும் தோன்றவில்லை மாறாய் மற்ற நாட்களை விட சற்று ஆழகானதாய் இருந்ததாக ஒரு எண்ணம்,ஏனோ!.எல்லோராலும் உணர இயலாத ஒன்றை,ஒரு சிலருக்கு ,அதாவது அதனை நம்புபவர்க்கு மட்டுமே தன் இருப்பை உணர்த்திடும் பட்டியலில் இறைக்கு அடுத்தது இசைதான்,அல்லது இசைக்கு அடுத்தது இறை என்று கூட வைத்துக்கொள்ளலாம் ;-).தன்னிலை மறந்து நம்மை அதனுடன் ஒன்றிவிடச்செய்திடும், மேஜிக் போல.மேஜிக் இந்த வார்த்தைதான் எவ்வளவு பொருந்துகிறது  இந்த இசைக்கு. முனுமுனுத்துக்கொண்டிருக்கிறேன் இப்பொழுது "tere bina zindagi se koyi shiqwaa tho nahin".                                                

Tuesday, February 8, 2011

செல்போனில் தொடங்கும்
உறவுகள்,
அது..
சுக்கலானதும் பேசிடும்
புதுமைகள்,
நாகரிகப்பட்டது ஏமாற்றம்.
மனம் அல்ல,
மனிதனும் அல்ல..

Thursday, February 3, 2011

ஆயா...(பாகம் -2)

         இப்பொழுதெல்லாம் அவளுடன் நெருக்கங்கள் அதிகரித்துவிட்டதாகவே தோன்றுகிறது.இன்று காலையும் அவ்வாறுதான்,காலை காபி பருகிவிட்டு வருகையில்,எதிரே அவள்,படியில் அமர்ந்தபடி "என்ன கண்ணு சாப்பிட்டயா!!?" என் கரம் பிடித்துக்கேட்டாள் .காலை உணவருந்துவதெல்லாம் என்றேனும் நடக்கும் அதிசய நிகழ்வு.அம்மா கூட கேட்பார்,"சீக்கரமே எழுந்துடறேனுதான் பேறு!அப்படி சாப்பிடாம என்னதான்டி பண்ணுவே?!".விடை இன்று வரை தெரிந்ததில்லை.காலை உணவருந்தவில்லை என்றாலும் அவளுக்காய்,அந்த ஆயாவின் உரிமை மிக்க அன்புக்காய்,ஆம்! என்று தலையசைத்தேன் புன்னகையுடன்.இல்லையென்றால் வைதிடுவாள் இல்லை கோபித்துக்கொள்ளுவாள் .ஆனால்,அவள் விட்டபாடில்லை. "என்ன சாப்பிட்டே?",அடுத்த கேள்வி. காபி வாங்குகையில் அருகில் ஹாஸ்டல் வார்டன் இட்லி சாப்பிட்டுக்கொண்டிருந்தது நினைவில் வர,"இட்லி!" என்று கூறினேன்,சொல்லி இருக்கக்கூடாதுதான் ஆனால் அவளின் அந்த உரிமை ஏனோ கூறவைத்து விட்டது.சட்டென்று எதிர்பாரா விதமாய் வயிற்றில் கை வைத்து "எங்க சாப்பிட்ட மாதிரியே தெரியல!என்ன இது ஒடுங்கிபோன மாதிரி வயிறு!எத்தன சாப்பிட்டே?".நான்,"ஹா ஹா!  நாலு ஆயா!அதெல்லாம் இல்ல நல்லாதான் இருக்கேன்,டிரஸ் தொள தொளனு இருக்கு!".அதற்குள்," டிரஸ் தொள தொளவா?-சும்மா சொல்லாத கண்ணு, நாலா?போதுமா?! வளர்ற பிள்ள சாப்பிட வேண்டாம்?போ!".தலை எது,கால் எது என புரியாமல் இடையில் குறுக்கிட்ட தோழி ஒருத்தி "இல்ல ஆயா,இவ போடற டிரஸ் எல்லாமே அப்படித்தான்,சர்க்கஸ் கூடாரம்,டென்ட் கொட்டா,எல்லாம் நல்லாதான் சாப்பிடுவா!உடம்புதான் பிடிக்காது இவளுக்கு".என்னமோ போ,என்று ஆயா கூறிக்கொண்டே ,அதுவரை பற்றிக்கொண்டு இருந்த என் கரத்திற்கு விடுதலை அளித்தாள். அந்த அன்பிற்காய்,எனை மேலும் பொய் கூறாது காப்பாற்றிய தோழிக்கு மனதிற்குள் நன்றி கூறியபடி அங்கிருந்து நகர்ந்தேன்.ஏனோ அன்பிற்கு முன்னால் தோற்றுவிடுகிறது அனைத்தும்.என்னை பொங்கல் திருநாளிற்கு கூட அவள் வீட்டிற்கு அழைத்தாள் "கண்ணு எங்க வீட்டுக்கு வரது,எங்க பொங்கல பாக்கறது!?",அதே அழகிய உரிமையோடு,போக மனதில் ஆசை இருந்தாலும்,  "ரொம்ப நாள் கழிச்சு ஆத்துக்கு வரஅஅஅ ..!"என்று அம்மா இழுத்து இசைத்தபடி மறுத்ததால் அந்த எண்ணம் கைவிடப்பட்டது."ஆயாவுக்கு பொங்க காசு?" என்பாள்,அவளது ஏழ்மை கருதி பணம் அளித்தாள் "பிரிச்சுட்ட பாத்தியா!" என்று மறுப்பாள்.மனதளவில் ரொம்ப அழகு சார் என் ஆயா.அன்று ஏதோ பழைய பீ.சுசீலா பாடலொன்றை முனுமுனுத்தபடி வந்துகொண்டிருக்க,"இந்த காலத்துல யார் கண்ணு இந்த பாட்டெல்லாம் பாடறாங்க வார்த்தயே புரியமாட்டேங்குது இப்போலாம்!" என்று வயோதிகத்துக்கே உரித்தான பழம்பெருமை பேசியும் புதுமைச்சாடல்களும் புரிந்துகொண்டிருந்தாள்,"சரி உனக்கு இந்த பாட்டு தெரியுமா,கொஞ்சம் ரெண்டு வரி பாடறது ஆயாவுக்காக!" என்று அவள் காலத்து அழகான காதல் பாடலொன்றைப் பற்றிக் கேட்டாள்,பல வருடங்களுக்கு முன்பே உயிர் நீத்த அவளுடயவனைப் பற்றி எண்ணி இருக்கலாம்,தெரியவில்லை.ஆனால் அதே உரிமையுடன் கேட்டதால் அவளுக்காய் முதல் இரு வரியை "நிலவும் மலரும்.." என பாடிவிட்டு வந்தேன்.
             நடந்துகொண்டிருக்கையில் திடீரென்று வந்து எனை நிறுத்தி தன் இருகரத்தால் சொடுக்கி திருஷ்டி சுற்றுவாள்,அதே உரிமையுடன்,ஏன் என்று இதுவரை நான் வினவியது இல்லை.இவளுடன் இன்னும் எத்தனை காலம்?, என் கல்லூரி நாட்கள் முடியும் வரை?,இன்னும் மூன்று மாதங்கள்! அவ்வளவே.அதற்குப் பிறகும் அவளை சந்திக்க இயலுமா ?,சாத்தியக்கூறுகள் பற்றி இவ்விடம் பேசுவது பொருத்தமன்று.இங்கு பலருக்கு விதியும் கடவுளும் ஒன்றே,பிரித்துப்  பார்க்கத்தெரிந்ததில்லை அவர்கட்கு   .என்னைப்பொறுத்தவரை விதியை நம்பினால் இறையை நம்புதல் தவறு அல்லது இறையை நம்புபவன் விதியை நம்பக்கூடாது.மற்றவர்களைப் பொறுத்தவரை  இரண்டுமே இல்லாமல் இருக்கும் ஒரு பொருள்,சக்தி அவ்வளவே.இது போன்ற உறவுகளை நம்மிடம் விதி சேர்க்கிறதா? இல்லை இறை சேர்க்கிறதா? சர்ச்சைகள் தேவையில்லை,"நிலைத்திடுமா நிலைக்காதா?!",அது நம் கரங்களில் மட்டுமே இல்லை.ஆனால் இவ்வாறு உருவாக்கப்பட்ட உறவுகளால் "நாள் ஒன்றிலும் ஆனந்தமே!" என்று ஏதோ ஒரு அழகிய பாடலின் இடையே தோன்றும் ஒரு சிறு வரி சட்டென்று மின்னல் போல் மனதில் பளிச்சென்றுவிட்டு மறைகிறது.       

Wednesday, February 2, 2011

உன் குரல் கேட்க
விழைந்திடுவேன்,
என்றோ
நீ சொன்ன ஓர் வார்த்தை
எதிரொலிக்கும்,
மெல்லியதாய்..

உன் முகம் பார்க்க
விழைந்திடுவேன்,
கற்பனைக் குதிரையில்..
இன்று நீ,
இல்லாத இடம் தனிலும்..

உன் மடி சாய
விழைந்திடுவேன்,
தலையணைக்கு
கரம் இல்லை
கண்ணீர்தனை துடைக்க..

உன்  செவி சொல்ல
விழைந்திடுவேன்,
எனக்கு பிடித்த பல..
என் எண்ணம் போல்,
நீ உரைக்கையிலே..
காகிதங்கள் மட்டும் அறியும்
நான் சொன்ன மறுமொழிகள்..

இந்நொடி
உன் அருகாமை
வேண்டுமென்று விழைந்திடுவேன்,
நொடிகள் விழைவுடன்
கிளைத்து வளர்ந்திட,  
பசுமைப் புல்களிடை
பூட்டிவைத்த மறைபொருள்
உன்னிடம் சொல்லாத பல,
என் சலனமற்ற கண்ணீரும்
தனிமையில் அப்பசுமையுடன் பேசியதும்
சிறிதே அதில் கலந்தபடி..

விழைந்திடுவேன்...



Tuesday, February 1, 2011

தேவம்..

இறையோன்றும் தோன்றவில்லை
இப்பெயரை நினைக்கையிலே...
வேறென்ன உதித்துவிடும்
புதியதாய் எனக்கிங்கு?
நீ நான்..
நாம் நமது..
உணர்ந்தேன்,
தேவம்.

சந்தித்தோம் ஏனோ?
அது, 
உணர்ந்ததும் புரிந்தது
தேவம்.

எண்ணம் உதித்தவை பல,
அவை நாம் பேசவும்,
உணர்ந்தது..
தேவம்.

ஊர்க்கூடி இருக்கையிலே,
உறவென அறிவித்தும்..
அதன்முன்பே உறவென்று..
மனமிரண்டும் உணர்ந்தது,
தேவம்..

முடிச்சுகள் தேவையில்லை,
உறவென்று சொல்வதற்கு..
உன்னிலையும் அவ்வாறென,
வேறு வழி உணர்த்தினாய்..
நாம் சேர்த்து நால்வராம்,
சமூகம் அதற்க்காய்..
முடிச்சிட்டுத்  துவக்கினாய்,
நல்லுறவு அறிவிப்பை..
அறிந்ததும் உணர்ந்தது ,
தேவம்..

கலவென்று பெயரிட்டு,
கலைகள் பலபுரிந்தோம்..
கலவும் ஒருகலையாய்
நமக்குத்தோன்றிடவே..
முதல் கலவு..
அதன் அழகை..
இன்றும் உணர்ந்திட,  
தேவம்..

 உள்ளொரு சிசுவும்,
வெளியொரு நீயுமாய்..
தாய்மை மாதங்கள்,
உணர்ந்தது,
தேவம்..

ஒற்றைப் பெருவிரலை,
பிஞ்சின் கரம் அணைக்க..
அழகாய் அணைத்தபடி..
உன் நெற்றி முத்தம்,
அவளுக்காய்..
என் நெற்றி நீ பதித்த..
முதல் முத்தம் எண்ணம் வர..
அந்நொடி மனம் உணர்ந்தது,
தேவம்..

அதிகரித்த இடைவெளியில்..
அன்பு, 
பெருகியது நம்மிடை..
விரல் சூப்பி சிரித்துறங்கும்,
சிறு உள்ளம் அணைத்தநொடி..
உணர்ந்தது,
தேவம்..

அழகாய் உன் பெயர்,
அவள் உச்சரிக்க..
புதுமொழி..
ஒரு இசையாய்,
உணர்ந்தது,
தேவம்..

அதில் நீ,
இதில் நான்,
சிறிது அவள்..
தளிர் அதன் உருவகம்,
நாமென்று ஆகிட..
உணர்ந்தது,
தேவம்..

பலரில் தனித்ததாய்,
பாதை அவளது..
அதற்காய் சிறுபடியாய்,
நம் கரங்கள் அவளுக்காய்..
அந்நொடி அதை நினைக்கையிலே..
உணர்ந்தது,
தேவம்.  

இயல்,
இசை,
அனைத்துமாய்..
இயல்பினும் இயல்பாய்,
இல்லம் முத்தமிழாய்..
அதில் உணர்ந்தது,
தேவம்.

ஊடல் சில இருந்தும், 
நம்மிருவர் அருகாமை..
நாம் காணும் ஓர் அமைதி,
அதில் உணர்ந்தது,
தேவம்.

காலம் காற்றாகி,
மூப்பின் முதல் படியில்,
நீயும் நானும்..
வந்த பாதை திரும்புகையில்,
நினைவுகள் பசுமரமாய்,
நினைக்கையில் உணர்ந்தது..
தேவம்.

கடல்அலை கால் தொட,
சொற்கள் மனம் தொட,
கரங்கள் கலந்தபடி..
இன்றுவரை இன்றுமுதல்,
உணர்ந்தது..
தேவம்..

அன்பென்று சொன்னதில்லை,
இன்றுவரை என்னிடம் நீ..
அன்பென்ற சொல் தாண்டி..
பல அன்பை உணர்கின்றேன்,
சொல்லாத உந்தன்,
அழகான அன்பினிலே..
உணர்ந்தது,
தேவாதி தேவம்..