BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Tuesday, November 5, 2013

நீ! நான்! நிமிடங்கள்..-2

இது மழைப் பருவம்.இப்போது நம் குரல்களுக்கிடையே நிலவும் அமைதியை, மழைத்துளியின் சிதறல்கள் நிரப்பிக் கொண்டிருக்கின்றன.இந்த மழைதான் எவ்வளவு அழகானது, இசை போல.இசையும் இசை சார்ந்தும் தன பிள்ளைகளுக்குப் பெயர் வைக்கின்றனர் பலர்.'மழை' என்று ஏன் எவரும் பெயர் வைப்பதில்லை?.எனக்கு என்னவோ இசையும் ,மழையும் ஒரே பெயர் போல்தான் ஒலிக்கும் என்று தோன்றுகிறது .இலையுதிர் காலங்களில் நான் நடந்து சென்ற அதே பாதையில் எனக்கும் உன் நினைவுகளுக்கும் குடை பிடித்தபடி நான்.குடையின் மேல் பட்டும் படாமல் துளிர்த்திருக்கும் அந்த மழைத்துளிகளும் உன் போல்தான்,பட்டும் படாமல்.துளிகள் ஒவ்வொன்றும் என் சிறு சிறு உலகங்களாக.மழை நின்றது.குடைமீது துளிர்த்திருந்த என் உலகங்களும் நழுவிச் சென்று விழுகின்றன,இலையுதிர் காலத்துச் சருகுகளின் மேல்.  

நீ! நான்! நிமிடங்கள்..-1

இந்த இயற்கையின் ஒவ்வொரு பருவமும்  தன் துவக்கத்தில் ஏதோ ஒன்றை உடன் அழைத்து வருகிறது,முந்தைய பருவத்தின் தேய்பிறையில் மறைந்த உன் நினைவுகள் மீண்டும் வளர்ந்தபடியாய்,இதோ இந்த இலையுதிர் காலத்தின் சாலைகளில் கீழே உதிர்ந்து கிடக்கும் சருகுகளின் மெல்லிய உரசல்கள்,சில நேரங்களில் நம் பேச்சுகளிடையே நிலவிய மௌனங்களும் இவ்வாறுதான் இருந்தன. ஆனால் அது என்ன சட்டென இலைகள் வெவ்வேறு திசை நோக்கி நகர அங்கு ஒரு சஞ்சலம் மிக்க அமைதி நிலவுவது ஏன்?.இந்த இலையுதிர்வுகளுக்கு நடுவே அங்காங்கே முகம் கவனிக்கபடாத மனிதர்களின் குரல்களும் ஒலிக்கின்றது.எனோ உன்னைப் பற்றிய சிந்தனைகள் அவர்களது குரல்களையும் கவனிக்கத் தவிர்க்கிறது.அந்த குரல்களுக்கும் என் சிந்தனைகளுக்கும் இடையேதான் எங்கோ தொக்கி நிற்கிறது சிறு அமைதியும்.விளக்கமளிக்க முடியாத கேள்விகள் போல் விவரிக்க முடியாத இந்த அமைதி.அந்த அமைதியை தாங்கியபடி நானும் பயணித்துக் கொண்டிருக்கிறேன்,இந்த சாலையில் என் கண்முன்னே சருகுகள் உதிர்ந்தபடி.