BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Friday, March 11, 2011

எப்படிச்சொல்வேனோ...!?

                  இசையைக் கேட்டபடி அந்த இலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன், "How to name it for?!"-வயலின் இசை, அந்த வயலின் பகுதியை கேட்கும்பொழுதெல்லாம் அதுவே எனக்கு அனைத்தும் ஆகிவிட்டது போன்ற உணர்வு தோன்றும்,இதைப் பற்றி பலரிடம் பல நேரங்களில் கூறியதும் உண்டு.ராஜாவின் இசையே இவ்வாறுதானோ?!.கேட்கையில் அந்த இலைகளும் அதற்க்கேற்ப தன் தலையை அசைப்பது போலத் தோன்றும்.அது வெறும் தோற்றமா அல்லது மெய்யாகவே அவ்வாறா?.காண்கையில் கண்களுக்கும் நடனமாடத் தோன்றிவிடும்,புன்னகை.ஆனால் இன்று புன்னகை இல்லை,மனம் எதையோ சிந்தித்துக்கொண்டிருந்தது.காற்று அடிக்கும் திசைக்கு ஏற்றவாறு கிளைகளும் இலைகளும் அப்பக்கம் சென்றுகொண்டிருந்தன.அது மிதமான தென்றல் காற்றே.புயற்காற்று வீசுகையில் இடது ,வலது,எதிர்திசை என தன்னைத் திமிறிக்கொண்டு காற்றின் பக்கம் செல்லாது நிற்கும் இலைகளும் கிளைகளும் இந்த மிதமான தென்றலுக்கு மட்டும் ஏனோ தன்னை அடிமைப் படுத்திக்கொண்டு விடுகிறதே.இன்று அதன் திசையில் அந்த இலைகள்.மனித மனமும் இவ்வாறுதானா,அந்த காற்றையும் இலைகளையும் போல?.தான் செல்லும் திசையில்தான் பிறர் வரவேண்டுமென்றும்.தன்னைப் போல்தான் பிறரும் சிந்திக்க வேண்டும் என்றும்.பிறர் என்று நான் இங்கு கூறியது ஒரு மனிதனைச் சுற்றி இருக்கும் அவனது நெருக்கமான வட்டாரத்தை.தனக்கு முக்கியமாய்த் தெரிவது  தன்னை சுற்றி உள்ளவர் பார்வையிலும் அவ்வாறே தெரியவேண்டும் என.அவ்வாறு தோன்றவில்லை என்றால் உனக்கு இவ்வுலகில் பிறரிடம் நடந்துகொள்ளும் முறை தெரியவில்லை,என்று கண்மூடித்தனமாக ஒரு  வரி.அவ்வாறெனின்,அதுதான் என் நிலை! மாற்றிக்கொள்வது கடினம் என்றால்,"என்ன அப்படி ஒரு அழுத்தத்தன்மை?" என்ற கேள்வி அடுத்ததாக. அனைவருக்கும் அனைத்திலும் ஒரே நிலை இருந்துவிடாது என்பதை ஏன் சிந்திக்க மறுக்கின்றனர் பல நேரங்களில்.அல்லது அத்தகைய சிந்தனையை தனக்கு ஏற்றவாறு ஏன் மாற்றிக்கொள்கின்றனர்?.உனக்கு முக்கியமாகத் தோன்றுவது உலகில் உனைப் போன்றே சிந்திக்கும் வேறு ஒரே ஒருவருக்கு மட்டும்தான் முக்கியமாகத் தோன்றும்,அதற்குத்தான் அழகாய் "சரிபாதி" என்ற பெயரும் உண்டு,ஒரு நட்பிடம் இதைதான் கூறிக்கொண்டிருந்தேன் ஒரு நாள் .நட்பையே உதாரணமாக எடுத்துக்கொள்ளலாமே!,ஒரு சில நட்பு,வார்த்தைகளால் அன்பை எதிர்பார்க்கும்,அவை பல நேரங்களில் என்னிடம் தவறி இருக்கலாம்,பல நேரங்களில் கடிந்து கொண்டு இருக்கலாம் ,ஆனால் அது என்னை எதிர்பார்க்காத நொடிகளிலும் எதிர்பார்த்த தருணங்களிலும் நான் அதற்காய் அங்கு இருந்ததுண்டு.நட்பினை மதிப்பிட பேசும் வார்த்தைகளும் ஒரு வழியன்றி அது மட்டும்தான் ஒரே  வழியா என்ன ?!.அந்த காற்றுபோல்தான் இவர்களுமோ?என் நிலைக்கு ஏற்றவாறுதான் நீயும் செயல்பட வேண்டுமென்று,அவ்வாறாயின் நான் அந்த கிளை மீதிருக்கும் இலைகளே,வேறுவழியில் அவர்களுடன் ஒன்றிடுவேன்.உணர்வதில்லை/உணர்ந்ததில்லை ஒரு சிலர் இதனை,தவறாய் உணர்ந்த சிலரும் உண்டு, அதனால் அத்தகைய ஒரு சிலருடன் ஒன்றாமல் அலைவரிசை  எதிர்திசையில் பயணித்ததுண்டு.பிறர் நிலை மாற்றம் மிக்கதாய் இருந்தால் அதற்கேற்றவாறு நடந்துகொள்வது என்பது வேறு,அதற்காகத் தன் நிலையையே மாற்றிக்கொள்வது என்பது வேறு,இரண்டாவதை சுய அடையாளத்தை இழத்தல் எனலாம்.முதல் விதிதான் எனக்கு பலநேரங்களில் ஒத்துவந்ததொன்று,ஏன் என்று இன்று வரைத் தெரிந்ததில்லை.நான் கூறுவது பலருக்கு ஏனோ அகந்தை மிக்க அல்லது கிறுக்குத்தனமான கூற்றாகத்  தோன்றலாம்.ஆனால் சற்று சிந்தித்தால் இத்தகையது அனைவர் வாழ்விலும் ஏதோ ஒரு நிலையில் நிகழ்ந்திருக்ககூடும்.ஏன் நானும் ஓர் நிலையில் அந்த காற்றாகவும் அவர்கள் அந்த கிளைகள் போலவும் இருந்திருக்கக்கூடும்,நான் ஒன்றும் மகாத்மா  அல்லவே,ஏன்?! மகாத்மாவே கூட.கோடை மேகங்கள் சூழ்ந்துகொண்டிருந்தன..           

கேட்டுக்கொண்டிருந்தது...  


Maestro's Divine composition by Music and Beyond

2 comments:

Ramani said...

எப்படிச் சொல்வேனோ என
தலைப்பிட்டிருக்க வேண்டியதில்லை
ஏனெனில் சொல்லவேண்டியதை
படிப்பவர் உணரும்படியாக மிகச் சரியாக
சொல்லிப்போகிறீர்கள்
கவித்துவமான படைப்பு
கடைசியில்தான் திடுமென திருவிழாவில்
அம்மாவின் கையைவிட்ட சிறுவன் போல்
கொஞ்சம் திணறித்தான் போனேன்
இளையராஜாவின் இசைதான்
ஆசுவாசப்படுத்தியது
நல்ல படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

Aishwarya Govindarajan said...

@Ramani,
எப்படிச் சொல்வேனோ எனத் தலைப்பிட்டது படிப்பவர் உணரும்படி எப்படிச்சொல்வது என்ற காரணத்திற்க்காக அல்ல..மாறாய் என் நிலை பற்றி என்னை சுற்றி இருப்பவர்களுக்கு தெரியப்படுத்தத்
தேவை இல்லையெனினும் சந்தர்ப்பங்கள் அவ்வாறு கொண்டு சேர்க்கையில் அவர்களுக்கு எவ்வாறு அதனை உரைப்பேனோ என்பதற்காகவே..வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றி :)