BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Monday, September 27, 2010

கார்மேகத்தின் கூடலுக்கு,
பிறந்த முத்துக்கள்..
மண்சேர..
உதித்தன மனிதப்புன்னகைகள்,
பசுமை கண்டு, 
பறவையாய்...

Monday, September 20, 2010

நல்ல மானுடம் போல்..

ஞானிபோல் பேசும் மனம் சிலநேரம்..
நெஞ்சம் மானுடம் போல்,
ஆசை கொள்ளும் பலநேரம்..
ஆனால் பாதை அவர்தமதல்ல..
இவள் செல்லும் பாதை அவர்தமதல்ல,
கூட்டத்தினுள் மௌனம் தேடும்,
தனிமையில் இயற்கையுடன் இசைமொழியும்
இவள் மனம்,
நகைச்சுவையும் உடன் சேர்ந்த நையாண்டியும்,
காதலும் அதில் கலந்த காமமும்,
பொறாமையும் அளவற்ற கோபமும்,
சிறு சுயநலமும் சோம்பித்திரிதலும்,
இவள்..
நல்ல மானுடம் போல்..
ஆனால் செல்லும் பாதை அவர்தமதல்ல..
அவை இவள் நிரந்தரம் அல்ல..
இனமறியா ஒன்றை உணர்திடும் இவள் மனம்
தினம் தினம்..
பிறர் அடையா ஒன்றை,
இவள் புரியா ஒன்றை,
ஆன்மா, விடை தேடி...
இவள் பாதை..
புதியதாய் பிறந்ததும் அல்ல,
அந்த பாதை..  
பலர் தனியே சென்றது,
பலர் தயக்கம் கொண்டது, 
முடிவற்ற பாதையில் இவள்,
தோல்வி வெற்றி இதற்கில்லை..
அவையனைத்தும் இதை தேட..
அவையனைத்தும் இதில் அடங்க
அப்பாதை நோக்கி இவள்
ஆனால்,
இவள் பாதை அவர்தமதல்ல..
நல்ல மானுடத்ததல்ல ..

Wednesday, September 8, 2010

தீண்டாய்...

                சென்ற ஞாயிறு எதேச்சையாக "தன்மத்ரா" திரைப்படத்தை மீண்டும் காண நேர்ந்தது.Alzheimer's நோய் அராய்ச்சி மீதான ஆர்வமும் எனக்கு அந்த படம் பிடித்தமைக்கு ஒரு காரணமாக கொள்ளலாம்.அந்த படத்தில் வரும் ஒரு வசனம் எனை மிக ஈர்த்த ஒன்று,ஏனில் யதார்த்தமாக யோசித்தால் நிஜ வாழ்விலும் அது நூறு சதவிகிதம் உண்மை என்று நம்புபவள்.
                            "Have you ever caressed them?,have you ever kissed them in their forehead? From a new born to everyone desires this touch.Skin Desires touch and their should be a Valid supply of stimulation.A touching and caressing is enough to stop breaking of Relationships".
                              இந்த வசனம் எனை ஈர்க்க என்ன காரணம்..வயதுக்கோளாறு என்ற பொதுப்படையான விடையை தரவோ அல்லது பிறரிடமிருந்து அதே விடையை எதிர்பார்க்கவோ விரும்பவில்லை.அதற்காக நான் முற்றும் துறந்த துறவியும் அல்ல.சற்று மாத்தியோசிப்போமே!.உலகில் உள்ள உறவுகள் அனைத்திற்கும் வரையறை என்று பார்த்தால் அது தொடல்/தீண்டல்/ஸ்பரிசம்  என்ற ஒன்றில் போய் முடிகிறது.உலகின் எல்லை கடல்தான் என்பது போல.
 நம்மில் பலரின் வரையறைதான் நான் இங்கே குறிப்பிடவிரும்புவது
-தந்தையுடன் தோள் மேல் கரம் போட்டு நடப்பது போல் வேறு ஒரு பெருமிதமும்  அரவணைப்பும் கலந்த தருணம் வேறில்லை என்பவர் இங்கு பலர்.
-தாய்மை, அவளிடமே கேளுங்களேன் கடவுளை எதில் உணர்ந்தாய் என்றால் தன் மகவுக்கு தாய்ப்பால் தந்த தருணத்தில் என்பாள்.
-ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான காதல் என்பதன் உச்சகட்டம் காமம் என்பதாகவே இன்றுவரை வரையறுக்கப்பட்டுள்ளது (ஏனோ அதை தாண்டி மக்கள் யோசிக்காது மாக்களை போல இருந்துவிடுகின்றனர் என்பது சற்று வருந்தத்தக்கதே).அது நட்பாகவே இருந்தாலும் அங்கு தொடல் என்பது ஏதோ ஒருவகையில் (உதாரணமாக:அக்கறை என்ற பெயரில்) தேவைப்படுவதாக இருக்கிறது.

 மேல் சொன்ன யாவற்றையும் சற்று யோசித்தால் அது,அதாவது தொடல்/தீண்டல் என்பது ஏதோ ஒரு விதத்தில் ஒரு தூண்டுதல் ஆயுதமாகவே இருக்கிறது.ஒருவரின் நாள் அன்று ஏனோ மந்தமாக இருந்து எதிர்பாராவிதமாக அவர் சந்திக்கும் குழந்தை ஒன்று கன்னத்தில் சிறு முத்தமிட்டால். அவர் முகம் தோன்றும் பிரகாசத்தின் முன் ஆயிரம் வாட்ஸ் பல்ப் தோற்றுவிடும்.ஆனால் நாட்டில் இப்பொழுது முதியோர் இல்லங்களும், விவாகரத்து புகழ் வக்கீல்களின் இல்லங்களும் நாளும் குறையாமல் நிரம்பி வழிவதை சற்று நோக்குவோமே. இந்த தம்பதிகளிடம் கேட்டால் "வாழ்க்கை வெறுத்துவிட்டது சார் எங்கள் இருவரிடையே" என்பர்.காரணம் இவர்களிடையே தொடல்/தீண்டல்/ஸ்பரிசம்  என்பது வளரும் நாகரிகத்திடயே மார்கழி மாதம் பிள்ளையார் கோவிலில் பொங்கல், பெருமாள் கோவிலில் தயிர் சாதம், புளியோதரை  பிரசாதம் தருவது ஒரு கடமை  என்பது போலவே ஆகிவருகிறது.ஆகா அதில் இருக்கும் அடித்தளமான அன்பு என்பது அந்த பொங்கல் வாங்கும் இலையை போல தூக்கி எறியப்பட்டோ அல்லது இலையிலேயே வாங்காமல் கடமை என்னும் கையேந்தி பவன் போலவோ ஆகிவிடுகிறது. பெற்றவர்,பிள்ளைகளிடையே இன்னும் சற்று காமெடி அதிகம் தந்தை இந்தியாவில்,மகன் அமெரிக்காவில் கம்ப்யுட்டர் திரை முன் அமர்ந்து "ஹாய் டாட்!" என்பான் காமிரா வழியாக. மகளாக இருந்தால் "அம்மா நான் இன்னிக்கு வத்த குழம்பு செய்தேன்! அப்படியே தி.நகரில் ஷாப்பிங் போயிட்டு வந்தோம்"  என்று சமாசாரம் இருக்கும்.இங்கு பல அப்பாவிற்கும் அவர்தம் பெண்ணிர்க்குமிடையேவோ அல்லது அன்னைக்கும் அவர்தம் மகனுக்குமிடயேவோ அதிகரிக்கும் வயதை விட,அதிகரிக்கும் இடைவெளிகளே அதிகம்.இல்லை என்று மறுக்கவே முடியாது.நம்மால் அவர்களுடன் கை கோர்த்து நடக்க முடியாததால் பாவம் கருணை மிக்க நாம் ஒரு வயதிற்கு பிறகு அவர்கள் கையில் ஊன்று கோளை கொடுத்து விடுகிறோம்.நாம் ஐந்து வயதில் நாம் கரம் பற்றி நடந்தவர்களுக்கு அவர்கள் எழுபதுகளில் நம் கரங்களுக்கு பதிலாக அந்த கோல்.சற்று தலை கீழாக பார்த்தால் பிள்ளைகளை பெற்றோர்களுடன் செலவிடும் நேரத்தை விட இந்நாட்களில் போகோ நிகழ்ச்சிகளும் ப்ளே ஸ்கூலிலும் செலவிடும் நேரமே அதிகம்.இதிலே எங்கே வந்துவிடும் அரவணைப்பு அவரைக்காய்,கத்தரிக்காய் எல்லாம்.கரன் ஜோகர் படங்களில் பார்ப்பதோடு முடிந்துவிடுகின்றன அவை.அதனால்தான் வசூல்ராஜாவின்  கட்டிப்பிடி வைத்தியம் கூட இங்கு பலருக்கு நகைச்சுவையோடு நகைச்சுவையாகவே தோன்றிவிட்டது.உண்மைதானே? .குடும்பம், உறவு, நட்பு இவைகளிடையே இந்த தீண்டல்/தொடல்/ஸ்பரிசம் போன்று இன்னும் காண இயலாத மறைந்து இருப்பவை பல இவை பற்றி கற்போம் சார் முதலில்.    
           


    

Friday, August 27, 2010

கடவுள்..
எல்லைகளற்றவன் என்றோம்,
அவனை..
இன்று ஏனோ..
கடையுள் இருக்கும்
வத்திகளுக்கிடயே
சுருங்கிவிட்டது,
அந்த எல்லையற்றதன்மை..    

Thursday, August 26, 2010

இறந்தகாலமும்,
எதிர்காலமும்,
நிகழ்காலத்தில்...
முதிறும் சிறிதும்,
சாலையில்..
பஞ்சுமிட்டாய் பரிமாற்றங்கள்..

Monday, August 23, 2010

ஒரு மாலை..மழைக்கால நேரம்..

வீட்டில் உட்கார்ந்திருக்க மனம் வரவில்லை..வீட்டில் இருந்தால் கூட ஒரு இடத்தில் அமர்ந்திருக்க மனம் வராது..உள்ளுக்கும் வாசலுக்கும் நடந்துகொண்டிருப்பேன்.காரணமே  இல்லாமல்(ஆம் காரணமே இல்லாமல்தான்,வீட்டில் ஏதாவது வேளை இருந்து வெளியில் சென்றுவர வேண்டுமென்றாலோ அல்லது அருகாமையில் இருக்கும் சொந்தங்களை சந்திக்க வேண்டும் என்றாலோ என்னுடைய சோம்பேறித்தனம் என்னுடன் ஒட்டிக்கொண்டுவிடும்,இவர்கள் சொல்லி நாம் கேட்பதென்ன என்ற சோம்பேறித்தனம்) .இப்படி இருக்க,எனக்காக மழை வாசலிலும்,வீட்டு முற்றத்திலும் பெய்துகொண்டிருக்கும்பொழுது என்னால் எப்படி ஒரே இடத்தில் அமர்ந்திருக்க முடியும். வீட்டில் உட்கார்ந்திருக்க மனம் வரவில்லை.வெளியே கிளம்பிவிட்டேன்.எங்காயினும் செல்வதென்றால் என் மிதிவண்டியில்தான் செல்வது வழக்கம்.TVS இருந்தும் BSA -வை ஓட்டுவதில் இருந்த மகிழ்ச்சி எனக்கு அதில் இருந்ததில்லை ,ஆனால் மழையில் பொறுமையாய் நனைந்திட,நமக்கு சைக்கிள் சரிபடாது என்று நடராஜா சர்வீசை துவக்கிவிட்டேன்.தோழி ஒருத்தி வீட்டுக்கு சென்றாகிவிட்டது.அவள் வீட்டு தோட்டத்தில் நானும் அவளும் அமர்ந்து மிக நேரம் பேசிக்கொண்டிருந்தோம்,அவளுக்கு மழை பிடிக்காது என்பதால் அவள் ஷெட்-இல் அமர்ந்துகொண்டுவிட்டாள்.அவளுடன் எங்கள் பள்ளிநாட்கள் பற்றி பேசிக்கொண்டிருந்துவிட்டு,மழையில் அமர்ந்தபடி கையில் அவள் அம்மா தந்த சாக்லேட் கேக் சாப்பிட்டுக்கொண்டு எங்கள் மாலை நேரத்திற்கான திட்டங்களையும் போட்டாகிவிட்டது.(இதை படிக்கும் சிலபேருக்கு இப்பொழுது நிச்சயமாக "stomach burnings of india" ஆகிக்கொண்டிருக்கும்).இங்கு "சிலபேர்" என்று சொன்னதை கவனத்தில் வைத்துகொள்ளுங்கள் எதற்கு என்று பின்னால் கூறுகிறேன்.வீட்டிற்கு வந்து அம்மா கூறாத வேலைகளையும் "வெளியே செல்லலாம்", என்ற காரணத்தால் நானே செய்தேன்.பிறகு ஆசை தம்பியுடன் அமர்ந்து ஒரு படம் பார்த்தாகிவிட்டது (ஆமாம் சார்,ஆசை தம்பி...அந்த டிவி ரிமோட்   அவன் கைக்கு போயிட்டா அவளோதான் சார்).ஆனால் இதெல்லாம் முக்கியமில்லை எங்கள் மாலை நேர திட்டம் அதைபற்றிதான் இங்கு கூற வந்தேன்.மாலை hi -fashion -இற்கு சென்று ரக்க்ஷா பந்தன் பரிசு வாங்க திட்டமிட்டிருந்தோம்.மாலை ஆறு மணிக்கு கோவில் வழியாக அந்த அரை ஈர கற்களின் மீது நடந்து சென்றோம்(அம்மா கொடுத்த குடையை அவர்கள் வீட்டில் வைத்துவிட்டேன்).கோவில் வழியாக பாதி தூரம் நடந்திருப்போம் சிறிதாக மழை பிடித்துக்கொண்டுவிட்டது. கற்கள் மேல் ஆங்கான்கே நீர் தேங்கி இருக்க அவள் "ஐஷு அதன் மீது நடக்காதே என்று சொன்னபோழுதே அதன் மீது நடந்து சென்றேன்.இடையே அவள் புலம்பல்கள் "ஒன்னு செய்யாதேன்னு சொன்னா செய்வ!!உன்ன மாத்தவேமுடியாது"..SVS -இற்கு சென்று கோபி-65 சாப்பிட்டுவிட்டு hi -fashion -இல் பரிசை வாங்கிக்கொண்டு திரும்பினோம் மழை பலமாக பிடித்துகொண்டு விட "ஐஷு உன்னாலதான் இன்னிக்கு முதல் முறையா மழைல நனையறேன்..உங்களுக்கெல்லாம் மட்டும்தான் இப்படியெல்லாம் தோணும் அப்நார்மல் கேஸ் சுமீத்-உம் இப்படிதான் மழைல நனையறதுக்கு சைக்கிள் எடுத்துட்டு சுத்துவான்.சொல்ற பேச்ச  கேக்கறது கிடையாது..நீங்க எல்லாமே ஒரு வித்தியாசமான கேஸ்" என்றாள்.அவர்கள் கூறுவது கேட்பதற்க்கு நன்றாக தோன்றினாலும் சிலசமயம் இவர்கள் முட்டாள்களோ என்று யோசிக்க தோன்றும். பிறகென்ன,சற்று யோசித்து பாருங்கள் யார் அப்நார்மல் என்று.இப்படி கூறுபவர்கள்தான் அப்நார்மல்கள் என்று தோன்றும்.நாங்களெல்லாம் மிக அரிதாக தோன்றும் நார்மல்கள்.அவளிடம் திருப்பி ஒரு கேள்வி கேட்டேன்."ஒருவேளை இந்த குடை எதுவுமே இந்த  உலகத்துல கண்டுபிடிக்கலேன்னா என்ன செஞ்சுருப்ப?" என்று.அவள் "உன்கிட்ட பேசி ஜெயிக்க  முடியாது ஏதோ பண்ணு" என்றாள் ஆனால் அவளிடம் எதிர்பார்த்த விடை அதுவன்று.நீங்களே   யோசித்து பாருங்கள் ஒருவேளை அந்த குடை என்னும் சமாசாரமே இந்த உலகில் இல்லையென்றால்?! கண்டிப்பாக அந்த மழையில் நனைந்துதானே சென்றிருப்போம்.ஆனால் குடை என்னும் அத்தியாவசியம் இருப்பதால் அதை உபயோகப்படுத்தும் எண்ணம் நம்மிடையே. இது மழை விஷயத்தில் மட்டுமல்ல பொதுவாகவே,யாராவது ஒருவர் அமைதியாக சில நேரம் இருந்தால் அவர் alien-லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டுவிடுவர்,சத்தம் என்பதே நாம் உருவாக்கிய வார்த்தைதானே அதனால்தான் மூங்கில் குழாயிலிருந்து வரும் காற்றுக்குமட்டுமே இசை என்று பெயரிட்ட நாம் மௌனத்தை வெறும் மெளனமாகவே பார்க்க பழகிவிட்டோம்,அதுவும் ஒரு இசை என்று தங்களை நார்மல் என்று சொல்லிக்கொள்பவர்கள் மனம் ஏற்க மறுக்கின்றது,இவர்களை பொறுத்தவரை மௌனம் என்பது ஒரு செயலற்ற தன்மை.வெள்ளைலிருந்து பிறந்தவைதான் மற்ற நிறங்கள் ஆனால் வெள்ளை என்பது ஒரு நிறம் அல்ல என்பதுபோல்தான் இதுவும் .இசைக்கு காதல், காமம்,குரோதம்,ஆச்சரியம் மகிழ்ச்சி என்று பல பரிமாணங்களை கொடுத்துவிட்டு மௌனத்திற்கு அடையாளத்தை மாற்றிவிட்டோம்.காரில் செல்பவர்கள் காலில் செருப்பின்றி ஒருவர் செல்வதை பார்க்கும்பொழுது என்றோ ஒரு நாள் அவர் மூதாதையர் நெருப்பை கண்டுபிடிப்பதற்கு முன்பு அறைக்கோமணம் கூட  கட்டியிராமல்தான் நடந்தார்கள் என்பதை  மறந்துவிடுகின்றனர் .அதனால்தான் அக்கால மனிதர்களை நாம் காட்டுமிராண்டிகள் என்று பட்டியலிட்டுவிட்டோம்.அட அவர்களும் நாமும் எதில் மாறிவிட்டோம்? raymonds, lakme தவிர ,அவர்களைப்போலவேதான் நாம் வாழ்வை சொகுசாகிக்கொள்ள நித்தம் ஏதாவது ஒன்றை  கண்டுபிடித்துகொண்டிருக்கிரோம்/ தேடிக்கொண்டிருக்கிறோம்  அதனூடே இயற்கையாய் இயற்கையிநூடே இருப்பதை  ரசிக்க அனுபவிக்க இங்கே பலர் தவறிவிடுகிறோம் (இப்பொழுது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் நான் "சிலபேர்" என்று சொன்னதன் அர்த்தம்) நாம் மனிதம் இல்லை சார் ,சற்று நாகரிகப்பட்ட காட்டுமிராண்டிகள்.யோசித்தேன் "வாழ்வின் ஒவ்வொரு நொடியும் போனால்  திரும்பப்பெற இயலாதது அதனால் அதை வாழ்ந்துவிடு" என்று எவனோ ஒருவன் சொன்ன வரிகளை,அந்த வரிகளுக்கு பின்தான் எவ்வளவு அச்சம் புதைந்துகிடக்கிறது  மனித இனத்தின் மொத்த அச்சமும் .இதை பற்றி பேசிக்கொண்டுபோனால் ,மனித இனம் வாழ்வில் எட்டியது மலையா? மடுவா? என்ற கேள்வியில்தான் கொண்டுவிடும்.ஆனால் நாம் இன்னும் மனித இனமாகவே மாறவில்லை  என்பது அந்த நெருப்பு பிறந்த சிக்கி முக்கி கல்லில் சிராய்ந்துபோன  ஒரு உண்மை. கேள்வியில் சிறு திருத்தம் "சற்று நாகரீகப்பட்ட காட்டுமிராண்டிகள்  இனம் வாழ்வில் அடைந்தது மலையா?மடுவா?".இதற்கும் விடையில்லை.ஒரு நிமிஷம், இதே மழை  நாளைக்கும் வருமா சார்?!..நம்ம ரமணன் என்ன சொல்லறாரு?!.   



Wednesday, August 18, 2010

நான் ஏங்கும் அரவணைப்பை
நீ மறுத்திடினும்,
உன் நிலை எண்ணியே நான் இங்கு இருக்கிறேன்..
இருப்பேன்..
எழுதல் முதல் துயில் வரை..
துயில் புகும் கனவுகளில்..
நாட்களின் சிறு அடிகளிலும்,நொடிகளிலும்..
உன்னவள் எண்ணாத பொழுதுகளிலும்,
உனை எண்ணி இருப்பேன் நான் இங்கு ,
அணைந்தாலும்,
அந்த எண்ணங்கள் உனை நீங்கா..
அரணாய் காக்கும்..
நீயும் அறியாது..
நான் விரும்பும் அவன்..
உன்னுள் இருக்கும் அவன்..
அவன் அடிகளிலும் நொடிகளிலும்..
அவனாய் அவன் இறுதிவரை இருக்க..
-,
-வாயோடு மறைந்திடும் வரிகள் இவையில்லை
நீ அவ்வாறு நினைந்தாலும் வருத்தம் எனக்கில்லை
ஏனில் எவரும் தரமுடியா அன்பு எனது
உன்மீதானது..
அது பாமரரின் வரிகள் போல் வாயோடு போகாது..
நாடிகளில் வேரூன்றி இருந்திட..