BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Monday, November 8, 2010

என் கண்மணிக்காய்...

அவன் என்னுள் நிறைந்த நொடி,
நான் அவனுள் கரைந்த நொடி,
என்னுள் உதித்தவளுக்காய்..

பிறப்பிலுண்டு இசையென்பர்..
 இசை என்னுள் பரவிவிட,
வெளிதோன்றிய சிறு ஸ்வரத்தை,
இசையே பிறந்ததென்பேன்..

பிஞ்சுகள் அழகென்பர்..
அழகதற்கு காரணமாயின்,
எவ்வாறு உரைத்திட?
என் பிஞ்சு அவள் அழகை..

புன்னகைகள் இறையென்பர்,
மோகனத்தின் அந்தம்தான்..
இதோ,
என் மடி கிடப்பவள்
அவள் மோகனம்..
மோகனங்கள் இறையோ?
 
குறும்புகள் பிரதிபலிப்பென்பர்,
எவரதென்ற வினா,
எழுந்துவிடும் இருவரிடத்தும்..
சமபகிர்தல் இதிலுண்டு எங்களுள்ளே,
அதனால்..

தீண்டல்கள் வெளிப்பாடென்பர்,
அன்று பெண்மையாய்..
தொடர்ச்சி,
இன்று தாய்மையாய்..
நன்றி..!!
தொட்ட கரத்திற்கு,
முகம் தொட்ட சிறு கரத்திற்கு..

மழலை இறைமொழியாம்..
விடியா இரவுகளில்,
புரியா உரையாடல்கள் அவளுடன்,
மனதோடு மழலையாய்..
அவனும் சிறுபிள்ளை போல்..
அவள் மொழியில் ஒன்றிடுவான்..

என்னவனை நான் கொஞ்ச,
சற்றே சினம் கொள்வாள் என்னை போல்..
பாவம்..
அவள் அறியாள்,
அவனும் சிறுபிள்ளையென..

தளிர் அது கண்ணுறங்க,
லயித்திருக்கும் மனம் அதில்,
அந்த அழகு மௌனத்தில்..
இதோ என் பரிபூரணமென்று..
                                                      -என் கண்மணிக்காய்
                                                           


 

0 comments: