BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Saturday, October 30, 2010

கடவுள்..
பந்தங்களை அழகாய் வரைந்தவன்..
அதற்கு தலைப்பிடுவதில் மட்டும் கஞ்சனான்..  
அம்மா..
அப்பா..
நட்பு..
இதுதான் சுருக்கி வரைதலோ?!

Tuesday, October 19, 2010

ஆயா!!

       எனக்கு அவளை ஒரு நான்கு மாதங்களாகத்தான் சார் தெரியும்,கரிசல் நிலத்தின் கடினத்தை ஒத்த தோல்.அவள் கிழம் என்பதற்கு அடையாளமாய் அத்தோல் சுருங்கிவிட்ட நிலை.நெற்றியில் அக்கருப்பிற்கு எதிர்மறையாய் தனித்தொளிரும் திருநீறு.நடப்பதில் முதுமைக்கான சிறு தோய்வு தெரிந்தாலும் அந்த கண்கள் எப்பொழுதும் எதையோ சிந்தித்துகொண்டிருப்பது போல் தோன்றும்.இவள்தான் எங்கள் ஆயா சார்!!.ஆயா என்றால் என் தந்தைவழி, தாய்வழி உறவன்று.அவர்களெல்லாம் பாட்டி என்ற வரிகளுக்கு சொந்தக்காரர்கள்.ஆனால் இவள் எங்கள் கல்லூரி விடுதியில் வேளை செய்யும் பத்தோடு பதினொன்றுகளில் ஒருத்தி,எழுபது வயது சுமார் இருக்கலாம் சார்.கல்லூரியிலிருந்து விடுதிக்கு வருகையிலும் செல்கையிலும் என எப்பொழுதும் அவளை பார்க்கலாம் அந்த மாடிப்படிகளில் அமைதியாக அமர்ந்திருப்பாள்.எப்பொழுதும் என்னை பார்த்தால் அந்த புகையிலை பல் தெரிய  புன்னகைசெய்வாள்.சுற்றி இருப்பவர்கள் அங்கலாய்க்கையில்,"அட சும்மா கட!!மனுசனா பொறந்தா ஆயிரம் இருக்கும்!!" என்பாள். அவள் கூறுவது அவளுக்கு சாதாரண வரிகள்தான் ஆனால் அதில் பொதிந்துள்ள மாபெரும் அர்த்தம் பற்றி அவள் யோசித்திருப்பாளா என்பது சந்தேகமே.அதே ஆயா வீட்டில் தன் பிள்ளை தன்னை வெய்துவிட்டான் என்று அவர்களிடம் சொல்லி கண்ணீர் சிந்தியதையும் கண்டிருக்கிறேன்,அழுதுவிட்டு "சரி ஒலகம் அப்டி, எம்புள்ள பாவம் அதுக்கென்ன கவலையோ" என்று கூறிவிட்டு நகர்வாள்.    ."தன் கடன் பணி செய்து கிடப்பதுதான்" அவள் கொள்கை போலும். மற்றவர்கள் போல் வேளை நேரத்தில் அவள் சிடுசிடுத்து கண்டதில்லை. மேற்பார்வையாளர்  வயதில் சிறியவராக இருந்தாலும் அந்த பதவிக்கும் அவரின் பத்தாம் வகுப்பு படிப்புக்குமான மரியாதையை அவளிடமிருந்து எதிர்பார்க்கலாம் "வணக்கங்கமா!!" என்பாள்.வராந்தாவை நேர்த்தியாக கூட்டி பெருக்கி குப்பை அள்ளுவதுதான் அவள் அனுதின வேளை.அவளிடம் நான் முதலில் பேசியது ஒரு வாரநாளில் கல்லூரிக்கு கிளம்பிக்கொண்டிருந்த சமயம், அறைவாசலில் இருந்த குப்பைகளை பெருக்க வந்த அவள் என் அறை முன்னே தயங்கிதயங்கி நின்றிருந்தாள்.நானும் முதலில் அதை கவனிக்கவில்லை ஆனால்,சிறிது நேரம் கழித்து "யம்மா!! பள்ளிக்கூடம் போறிகளா!! என்றாள்.  ஆம்!! என்று நான் தலையாட்டினேன். மறுபடியும் "ஒன்னு கேட்டா தப்பா நெனச்சுக்க மாட்டீகள?" என்றாள் புதிராய். நான் "சொல்லுங்க!" என்றேன். அவள்,"ஒன்னுமில்லடா தல கொஞ்சம் வலிக்குது தைலம் இருந்த குடுடா!!"என்றாள். ஓ!தாராளமா ஆயா, என்று என்னிடம் இருந்த மென்தோ ப்ளஸ்- ஐ நீட்டினேன்.அதில் நகக்கண் சிறியளவிற்கு எடுத்துக்கொண்டு மீண்டும் என்னிடம் திருப்பிதந்தாள். "இன்னும் கொஞ்சம் வேணும்னா எடுத்துக்கோங்க ஆயா!" என்றேன். "போதும்டா!" என்று கூறிவிட்டாள் அதுதான் முதல்முறை அப்படி ஒரு ஆயா இருப்பது எனக்கு தெரிய வந்தது.அவளிடம் பெயர் கேட்டதில்லை என்னை பொறுத்தவரை அவள் "ஆயா!!", அன்று முதல் எப்போது பார்த்தாலும் "வாங்கடா!" என்று ஒரு புன்னகையுடன் கூறுவாள். பல "ஞாயிறு காலை ஆறு மணிகள்"  காப்பிக்குமுன்,படி இறங்குகையில் அவள் புன்னகையில் தொடங்கியதுண்டு.திடீரென்று ஒரு நாள் "நல்லா இருக்கியாடா!" என்பாள்.அந்த கேட்கும் தோணியில் உள்ள பரிவு "நல்லா இருக்கேன் ஆயா" என்பதோடு நிறுத்திக்கொள்ள தோன்றாமல் "நீங்க நல்லா இருக்கீங்களா?!" என்று கேட்க தோன்றிவிடும்.அந்த முதுமைக்கே உண்டான  பரிவு மிக்க அழகான மனம் அவளது.கல்லூரி வாரத்தில் ஆறு நாட்கள் அரைநாள்தான் அதிலும் பல வகுப்புகள் நடக்காது அதனால், பசி கண்களை மறைக்க உச்சி வெயிலில் சோர்வுடன் திரும்ப நேரிடும். அறைக்கு நுழைகையில் எதிரே தென்படுவாள், ஏதோ நாம் நிலை அறிந்த அன்னை போல் " சாப்டயாடா??"  என்பாள். "இல்ல ஆயா இனிமேதான்!"என்றாள், "அட புள்ள காலிலேயே சாப்டாமதானே என் கண் முன்னாடி ஓடின  காலைலேர்ந்து சாப்டாமையா இருக்க? என்று கூறிவிட்டு அருகில் இருப்பவர்களிடம் " தா! பாறேன் இந்த புள்ள காலைலேர்ந்து சாப்டலா,இப்டியே போனா படிக்கறதுக்கு அப்றம் நாளைக்கு கண்ணாலம் காட்சி நடந்து புருசன் வீட்டுக்கு போனா அவங்க வீட்ல உழைக்க உடம்புல தெம்பு வேணாம்?!உடம்பு என்ன ஆவறது போய் மொதல்ல சாப்டு"  என்பாள்,எப்படியிருந்தாலும் மணி மூன்றிற்கு குறைந்து அவளுக்கு இங்கு உணவு கிடைக்காது என்ற விஷயம் அவள் அறிந்தது ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் " நீ சாப்டயாடா!!" என்னும் அந்த மனம் .பெற்ற தாயும் அவளினும் முதிய ஒருத்தியும் கொள்ளும் அக்கறை,அப்படி சற்றே கடிந்துகொண்டு கூறுவதில் அவள் எடுத்துக்கொள்ளும் உரிமை அழகாக இருக்கும் சார். நான் சொல்லவில்லை?! முதுமைக்கே உண்டான சுயநலமற்ற அழகிய மனம் அது என்று .அன்றும் அப்படித்தான், பிறந்தநாள் அன்று, இரவு வேறொரு விடுதியில் தங்கி இருந்ததால் காலையில் அவளை காண இயலவில்லை, திங்கள் காலை எப்பொழுதும் போல் முதல் இரண்டு வகுப்புகள் மட்டுமே நடுவில் எப்பொழுதும் போல் ஒரு பெரிய இடைவேளை  என்பதால் அறைக்கு திரும்பிவிட்டேன் மீண்டும்  பரிசோதனைக்கூடத்திற்கு செல்வதற்காக கிளம்புகையில்       அதே படிக்கட்டுகளில் அமர்ந்திருந்தாள். நான் என் பிறந்த நாள் உடையின் மீது பரிசோதனைக்கூடத்திற்க்கான அந்த வெள்ளை கோட் சீருடையை அணிந்திருந்தேன். படியில் அவள் அமர்ந்தபடி தென்படவே.அவள் முன் சென்று மண்டியிட்டு அமர்ந்து "ஆயா!! இன்னைக்கு எனக்கு பொறந்தநாள் ஆயா!!"  என்றேன். அவள் உடனே என்ன செய்தால் தெரியுமா அழகாக தன் இருகைகளால் தன் நெற்றியில் சொடுக்கி திருஷ்டி இட்டுவிட்டு "மகராசியா நல்லா இருடா!" என்றுவிட்டு அந்த இருகைகளால் என் கன்னங்களை தொட்டுக்கொடுத்தாள், ஏதோ என்னிடம் உரிமை எடுத்துக்கொள்பவர்களின் அரவணைப்பு போல் இருந்தது அதில் இருந்த பரிவும் அன்பும். அது சரி பொறந்தநாள் அண்ணைக்கு எதுக்கு புது சொக்கா போடாம இந்த உடுப்ப மாட்டிருக்க? என்றாள் படிப்பறிவற்ற என் ஆயா. நானும் அப்பொழுது யுனிபார்ம் என்பதை நடைமுறை தமிழில் மொழி பெயர்க்க தெரியாததால் "இல்ல ஆயா இத காலேஜுக்கு  போடணும்!" என்று கூறினேன். "அப்படியாடா அது என்ன படிப்போ என்னமோ?நமக்கு தெரியாது, அது கெடக்குது பொறந்தநாள் அன்னிக்கு  ஆயாவுக்கு முட்டாய் எங்க என்றாள், நாம் முன்பின் பார்த்திறாத சிறு குழந்தை நம்மிடம் மிட்டாய் கேட்பது போல்.இதோ வாங்கி வருகிறேன் என்று அருகில் இருந்த கடை பக்கம் நகர்ந்தேன். உடனே அவள் "அட நான் சும்மா சொன்னேன்டா கண்ணு ஆயாவுக்கு பல்லு ஹீணம் முட்டாய் எல்லாம் கடிக்க முடியாது நீ நல்லா இருடா!அது போதும்" என்று கூறினாள். "சரிங்க ஆயா!நான் வரேன்" என்று வகுப்புக்கு நேரமானதால் அவசரமாக அங்கிருந்து நகர்ந்தேன்.ஏதோ இறந்த என் கொள்ளு பாட்டி, எனக்கு பிடித்தமானவள்,அழகாய்  எப்பொழுதும் என்னை உரிமையுடன் "ஜில்லுக்கண்ணு!" என்று கூறி நெற்றியில் முத்தமிடுவாள் அவளுடன் சற்று நேரம் அமர்ந்தது போல் இருந்தது.வகுப்புக்கு செல்லும்பொழுது சாலையில் நடக்கையில் தோன்றியது,வாழ்வில் பிறந்ததிலிருந்தே நம்முடன் இருக்கும் உறவுகளினும், திடீரென்று புதிதாய் தோன்றும் இத்தகைய உறவுகள், இந்த உறவுகள் நிரந்தரமா என்று எவருக்கும் தெரியாது, ஆனால் நாம் வாழ்வை சுவாரசியமாக்குவதில் அந்த நிரந்தரங்களை விட இவர்களின் பங்கு ஏராளாமாகிவிடுகிறது என்பது மறுக்க இயலா உண்மை.ஆயா!!இப்பொழுது அந்த மாடிப்படி அருகில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருப்பாள்.   
 

Saturday, October 16, 2010

இசை..
வியக்கின்றோம் 
உருவற்ற, 
அதன் வடிவை..
என்ன ?
உனக்கும் எனக்குமான, 
நமது மறைமுக அன்போ?!       


உணர்கின்றோம் அதனை,  
நாடி நரம்புகளினூடே.. 
என்ன? 
நாம் இணையும் தருணங்களோ?!  


ரசிக்கின்றோம் 
அதன் நடையை.. 
இருவருமாய்,  
என்ன? 
நம் மகவோ? 

இன்னும் பல உண்டு இவளுள்ளே..
ஆழ்கடல் ஆழம்தாண்டி, 

என்ன?
இதுதான், 
வியத்தலும்..
உணர்தலும்.. 
ரசித்தலும் கடந்து,  
பல நிறைந்த.. 
நம் வாழ்க்கையோ?!

Thursday, October 14, 2010

பக்கங்கள் படமாக...திரைப்படமாக

        ஒரு மதிய உணவு இடைவேளையின்போது  என் தோழி ஒருத்தியுடன் நடந்த சிறு விவாதம்.புத்தகங்களை அதாவது நாவல்களை திரைப்படமாக உருமாற்றம் செய்யும் ஒரு நாகரிகம் பற்றி,இந்த விவாதம் தொடங்கியதற்கான காரணத்தை முதலில் கூறிவிடுகிறேன், பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத்தின் மற்றொரு நாவலும் படமாக்கப்படப்போவதாக வந்த செய்தியே அதற்கு காரணம்.நான் சரி பாதி அதற்கு ஆதரவாக  பேசினாலும்,அந்த நடைமுறையை எதிர்க்கவும் தோன்றுகிறது. புத்தகங்களை படிக்க இயலா, எழுத்து ஞானம் இல்லா பாமர மக்களை சேறும் வகையிலேயே நாங்கள் அதனை  புத்தகங்களை படமாக்குகின்றோம் என்று கூறும் ஒரு சாரார் இருக்கின்றனர். அவர்களை தற்காலிகமாக "பணம் மறை(பறி)க்கும் சப்பைகட்டு" இயக்கத்தில் சேர்த்துவிடலாம்.ஏன் சார் 100/-  புத்தகத்தையே வாங்க வழி இல்லாதவன் நீங்க தர 200,300  ரூபாய்   டிக்கெட்டை எப்படி வாங்குவான்?.அதுவாவது இருக்கட்டும்,படம்  எடுக்கிறேன் பேர் வழி என்று புத்தகத்தின் முன் பத்து பக்கத்தையும் பின் பத்து பக்கத்தையும் சேர்த்துவிட்டு  நடுவில் இருப்பவற்றை கழுதைக்கு இறையாக்கிவிட்டு படம் எடுப்பவர்கள்தான் இன்றைய நிலையில் அதிகம் உள்ளனர்,அதுவும் ஆங்கில பட இயக்குனர்கள் பலர் இதில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் என்றுதான் கூறவேண்டும், அவர்களுக்கே புரியாது போயினும் அதை திரைப்படமாக்குகிறேன் என்று களமிறங்குபவர்கள் பட்டியல் பெரியது,  சாதாரண உதாரணம் ஹாரி பாட்டர் தொகுப்பினை திரைப்படமாக உருவாகிய விதம்.. முதல் பாகத்தில் புத்தகத்தின் பத்து பக்கம் மறைக்கப்பட்டு, ஐந்தாம் பாகத்தில் புத்தகத்தின் பாதி பக்கம் மறக்கப்பட்டு மொத்தத்தில் இறுதியில் ஹாரியே காணாமற்போய்விடுவாரோ  என்று என்னும் அளவிற்கு எடுக்கப்பட்ட திரைப்படம்.அது போல்தான் டேன் ப்ரௌனின் படைப்புகளும் வாழை இல்லை போட்டு விழுங்கப்பட்டன..மரியோ புசோவின் காட் பாதரும் அவ்வாறே ஆனால் மார்லன் பிராண்டோ என்ற ஒருவன் இருந்ததால் மறைக்கப்பட்ட/மறக்கப்பட பல பிழைகள் பொறுத்தருளப்பட்டன. எங்களுக்கு  "லார்ட் ஆப் தி ரிங்க்ஸ்" திரைப்படம் இருக்கிறது என்று கூறுபவர்களுக்கு "ஆம்! நீங்கள் கூறுவதை ஆமோதிக்கிறேன் புத்தகத்தை விட திரைப்படத்தில் எளிதாக காண்பித்திருந்தார்கள்". ஆனால் அதில் இயக்குனர் என்னும் ஒருவரின் பங்கு எங்கு இருந்தது?,இயக்குனர் என்பவரின் உழைப்பு இருந்தாலும் தனித்துவம் என்ற ஒன்று எங்கே சென்றது, அவருக்கு இயக்குனர் அன்றே பெயர் அல்லவே எங்கோ உள்ளிருக்கும் புதையலை தோண்டி எடுத்து வெளியுலகுக்கு காண்பிக்கும் மானிடனுக்கு நிகர்,அவ்வளவே.அதற்காக நம் தமிழ் திரையுலகில் (குறிப்பு : நான் கோலிவுட் என்று கூறவில்லை) எவரும் அவ்வாறு முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என்று சொல்லவரவில்லை பகவதிபுரம் ரெயில்வே கேட்(கரையெல்லாம் செண்பகப்பூ), மோகமுள்,சில நேரங்களில் சில மனிதர்கள் , என பல முயற்சிகள் படங்களாக வெளிவந்துள்ளன.ஆனால்,அவ்வளவாக எதையும் அவர்கள் விழுங்கவில்லை,ஆனால் எப்படி பார்த்தாலும் புத்தகங்களாக படித்து அதை ரசித்து அவற்றை தம்மனதில் ஒரு உருவிற்கு கொணர்ந்து கதாப்பாத்திரமாக நிறுத்தியவர்களுக்கு,திரையில் வேறு  ஒருவர் தோன்றி அந்த பாத்திரத்திற்கு நியாயம் தருவது பல நேரங்களில் உகந்ததாக இருந்ததில்லை நானும் அப்படிப்பட்டவர்கள் கூட்டத்தில் ஒருத்தி , அதற்காக அப்படங்களை ரசிக்கவில்லை என்று நான் கூறவில்லை, ஆனால் வேறு எவரோ ஒருவர் படைத்த பாத்திரங்களை திரைப்படமாக்கி ஆஸ்கார் ,தேசிய விருதுகள் என அடுக்குவது , ஒரு உண்மையான இயக்குனரின்/திரைப்பட கதாசிரியரின் தனித்துவம்,கற்பனைத்திறம் உழைப்பு ஆகியவற்றை அவமதிப்பது போல் ஆகாது?அதுவே எம் எண்ணம்,வாதம் அனைத்தும்.கற்பனை திறம் தனித்துவம் என்றதும் நினைவில் வருகிறது இயக்குனர் மணிரத்னம் அவர்களை எடுத்துக்கொள்ளுங்கள், அவர் எந்த புத்தகத்திற்கும் திரை வடிவம் கொடுத்ததில்லை ஆனால் அவரது தளபதி , நாயகன் ,இருவர் போல மனிதத்தின் பல பரிமாணங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த படம் வேறில்லை,  ஒரு அலைபாயுதேவை போல் அழகிய ஊடல் கலந்த காதலை,கணவன் மனைவி உறவை யாமரிந்தவரையில் எந்த புத்தகத்தை படமாக்கியவரும் அழகாக சொல்லியது இல்லை.அவரினும் பெரிய சகாப்தம் தமிழ் சினிமாவிற்கு வடிவம் கொடுத்த பழம் நம் கே.பாலச்சந்தர் அவர் எந்த புத்தகத்தை படித்தும் அதனால் ஈர்க்கப்பட்டு  ஒரு திரைப்படத்தை உருவாக்கியதில்லை ஆனால் அவரைப்போல், சாதாரண புத்தகம் எழுதுபவனும் தன் கதாப்பாத்திரத்தை செதுக்கியதில்லை ,அவரைபோல் யதார்த்தம்,மனித இயல்பு என்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் கொடுத்தவர்கள் வேறில்லை , 'அன்பே சிவம்' என்ற ஒரு படம் மட்டும் போதாது நம் மற்றொரு கலைஞனின் தனித்துவ திறம் பற்றி கூற,வசந்தபாலன் என்பவனை போல் சகோதரத்துவத்தை எந்த புத்தகமும் வர்ணித்ததில்லை,கேமரூன் போல் அழகிய காதலை எவரும் சொல்லியதில்லை.இவர்கள் நான் கூற விழைந்த அந்த தனித்துவம் மிக்க கற்பனையாளர்கள் பட்டியலில் ஒரு பாகம் அவ்வளவே இன்னும் பலர் இருக்கின்றனர் அப்பட்டியலில்  நாம் எப்பொழுதும் தோள் தட்டிக்கொண்டு கூறும்  "உலகத்தரம்" என்ற வார்த்தைக்கு இணையானவர்கள், ஆனால் பக்கங்களை படமாக்கும் இயக்குனர்கள் இருக்கையில் இவர்கள் அனைவருக்கும் அங்கீகாரம் என்பது சரிவரக்கிடைப்பதில்லை அல்லது அத்திரைகளுக்கு பின்னால் மறைக்கப்பட்டுவிடுகிறது .ஒரு பொருளை பற்றி அதன் தகுதிக்கு மீறி புகழ்வதும், விலையற்ற ஒன்றிற்கு தராசு இடுவதும்தான் நம்மிடையே பலரின் பிறப்பு இயல்பாயிற்றே.                     

Saturday, October 9, 2010

நீயற்ற என் நொடிகள் ..

காபிக்கள்...
எனக்கான,
உன் முத்தங்களாய்

என் எழுத்துக்கள்..
உன்னுடன்,
நேரிடை எண்ணப்பகிர்தல்

லயித்திருக்கும் இசைக்கணங்கள் 
என் இறுதிவரை.. 
எனக்குள் ஒன்றிவிட்டாய்..
நீயும் அவ்வாறே..

உன்னால்..
என்னின்று பிறக்கும் கவி வரிகள்,
நமக்காய்..
நமதான பிள்ளைகள்.. 

அனைத்தும் கலந்த இயற்கை வாசம்,
நீயறியா உன்வாசம்..
உன் அருகாமை..

எனை வருடும் தென்றல்,
நீ  ஸ்பரிசிக்கும் நொடிகள்.. 

என்னுள் இறங்கும் மழைத்துளிகள்,
உன் காமக்கணங்கள்..

வாதிடும் தருணம்,
உன்னை வெறுப்பேற்றும் நொடிகள்..

தலையணை ஈரங்கள்,
உன் மடி சாய்ந்து கண்ணீர்..
நீ அரவணைக்காவிடினும்.. 

நட்பிற்கான அக்கறையில் ,
நீ எந்தன் குழந்தையடா..

என்னிலிருந்து உந்தன் வெளிப்பாடு
என் குரலாய்..
என் அலைபேசி சிணுங்கல்களில்,    
உன் பெயர்..


விரல் தீட்டும் ஓவியங்கள்
உன் மன வண்ணங்கள்..

என் சிரிப்புகள்,
நம் மகிழ்ச்சிகள்.. 

என் கண்ணீர்த்துளிகள்,
நம்மிடை சிறு சண்டைகள்..

என் குறும்புகள்,
உனதருகே சிறு பிள்ளையாய்..

என் புத்தகங்கள்...
நீ அறியாது,
உனை வியக்கும் நான்.

என் நட்புகள்  வட்டாரம்,
நாம் நம் குடும்பத்துடன்..

இசைக்கும் வரிகள்,
நம் வாழ்க்கை..   

வாழ்கிறேன்,
நீ அறியாமல்..
உன்னுடன் நான்.

நீயற்ற என் நொடிகள்..
தலைப்பு பொய்த்ததோ?!

Thursday, October 7, 2010

எது கூறினும் வாதிடுவான் சிலசமயம்,
கூற்றை மறுப்பதற்கே பிறந்தவன் போல்,

அவளும் பேசவில்லை நான் ஏன் பேச?
இந்த சிறுபிள்ளை திமிருண்டு இவனிடம்

மழலையின் புரியா மந்திர சொல்போல்
இவன் பேச்சில் பொதிந்திருக்கும் ஆயிரம்

நினைத்ததை அடைந்திடும் குணமுண்டு இவனுக்கு
மிட்டாய்களுக்கு அடம்பிடிக்கும் பிஞ்சுகள்போல்..

அழகாய் புன்னகைக்கும் என் அழகு இது
அழகாயன் அவன் மோகனம் இதுவென்று தோன்றும்

கனநேரம் பேசிடுவான் சில நேரம் மௌனிப்பான்
மௌனத்தில் பல எண்ணம் அவன் நெஞ்சத்திலோடும்
தவழும் பாலம்அதன் மனதின் பல சிந்தை போல்..

பேசும் வார்த்தைகள் மெத்தனமாய் இருந்தாலும்,
அதில் தோன்றும் குழந்தை என் மனமிங்கு அறியும்..

இந்த வளர்குழந்தைக்கு..
எந்தன் சிறுகுறும்புக்கு 
நெற்றி முத்தமிட்டு மனம்,
ஆரிரரோ பாடும்..
உச்சந்தலை வருடி மனம்,
நல்லிரவு கூறும்..
நெஞ்சம் பூரித்து புன்னகைக்கும்,
எந்தன் பிள்ளையவன்..
மோகன உறக்கம் கண்டு.. 

Tuesday, October 5, 2010

சில நேரங்களில் சில மனிதர்களை சந்தித்ததில்...

சுற்றி இருப்பவர்களின் எண்ணங்கள் என்பது பல நேரங்களில் பல விதமாக மாறுகிறது..நேற்று நன்றாக பேசியவள் இன்று முகம் திருப்பிகொள்ளுவாள்..ஊரில் அனைவருக்கும் ஒருவரை பிடிக்கவில்லை என்றால் நானும் அவர்களுடன் சேர்ந்து  அந்த நபரை வெறுக்க தேவையில்லை..நேற்று என் மனம் தெளிவாக இருக்கிறது என்று கூறியவள் இன்று நேரம் போக்கவே புலம்புவாள்..நேற்று ஒருவர் செய்த காரியம் இன்று எனக்கு பிடிக்காமல் போகலாம்..நேற்று முகம் பார்த்து அனைவர் மத்தியிலும் புன்னகைத்தவன்  இன்று அதே அனைவர் மத்தியிலும் கண்டும் காணாது செல்லுவான்..நேற்று உன் கூற்று மிகச்சரி என்று சொன்னவன் இன்று அதே கூற்றை எதிர்ப்பான்..இவர்கள் என்னிடம் முறைக்கிறாள் ,புலம்புகிறாள்,ஒதுக்குகிறான்,எதிர்க்கிறான் என்பதற்காக நானும் அவர்களிடமிருந்து விலக முடியாது.அதற்கக்காக அவர்கள் கூற்றுடன் நான் ஒத்துபோகிறேன் அல்லது அவர்தம் கூற்றை மதிக்காது இருப்பதற்காகவே நான் சிலவற்றை செய்கிறேன் என்பது தவறு,ஏனில் அத்தருணங்களில் இவர்களைப்பற்றியதான என் எண்ணங்கள் மற்றவர்களிடமிருந்து சற்று மாறுபடுகிறது. எண்ண மாற்றங்களும் அவர்தம் நடவடிக்கைகள் மாறுவதும்  மனித இயல்பு.இதுவே நிலை என்பது என் ஆணித்தரமான எண்ணம்,அவ்வளவே.இந்த எமது எண்ணமானது பலருக்கு பிடிக்காமல் சென்றதுண்டு பலருக்கு பிடித்ததுண்டு,பலருக்கு பித்தென்று தோன்றியதுண்டு.அதற்காக என் நிலையிலிறிந்து நான் மாற இயலாது.ஏனில் என் இந்த சிறிய வாழ்வில் என் எண்ணங்கள்  படி வாழவே எனக்கு இங்கு நேரமில்லை ஆக பிறர் எண்ணங்கள் படி வாழ்வது என்பது சாத்தியமற்றவைகளையும் தாண்டிய ஒன்றாகிவிடுகிறது.

Monday, October 4, 2010

என்னவன் மடிசாய்ந்து
உணர்ந்திருப்பேன்,
இளையவனின் இசையை
தாலாட்டாய்,
இறுதி என்பது மறுநொடியாயின்
இது என்ன புதுவித ஆசை,
தாயிடத்தல்லாததாய்,
ஒரு தாலாட்டு கேட்டிட..
புரியவில்லை எனக்கு..
ஆனால் ஏனோ,
அத்தாயிடத்து சிறுகுழந்தைபோல் ஆகிவிடுகிறது..
அவன் தருவில் என் மனம்..

இப்படிக்கு
- ( :-);-) :P ;D :P)