BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Monday, May 24, 2010

பெயரிடத்தேவையில்லை

உன்காமங்களுக்கு  நான்  இறை(ரை)யாக...  
என்  பாதைகளில் நீ  ஒரு  துணையாக.. 
கண்வழி  நீ  உன்  மனம்  சொல்ல.. 
இசையாய்  அதை  நான்  உணர்ந்திருக்க.. 
கள்வனே.. 
நீ  கவர்ந்தது  என்  மனமன்று..  
என்  வாழ்வின்  எழுதா பக்கங்களை.. 
நான்  ஏங்கிக்கிடந்த  தருணங்களை.. 
எனக்கென்றே  அவன்  படைத்த  நினைவுகளை.. 
கள்வனே… 
உனதாக்கிக்கொண்டாய்   இவை  அனைத்தையும், 
உனை  எனதாக்கிகொண்டேன்  நான்..
இதை காதல் என்பர்  கவிதையர்,  
காமம்  என்பர்  வேறு  பலர்..
இனக்கவர்ச்சி  என்னும் இந்த கற்றோர்  உலகம்.. 
கடவுளின்  புதுக்குழந்தை  இது என்பேன்.. 
நமதென்று  ஜனித்தது  நமக்குள்ளே..
உனை  நானும்  எனை  நீயும்,
மனம் அறிந்த நொடிப்பொழுதில்....
                                                    

Wednesday, May 19, 2010

ரொமேரோ தருணங்கள்....

அது ஒரு அழகிய இரவு நேரம் ,ஆனால் அழகியது என்று கூறலாகாது, இயற்கையும்  நவரசங்கள் நிறைந்தது,இன்று அது தன் ஆனந்த களிப்பின் உச்சநிலையில் இருந்தது,இயற்கை மட்டும் அல்ல அதன் ஒவ்வொரு படைப்பையும் வியக்கும்,ரசிக்கும்,அதனுடன் ஒட்டி உறவாடும் , அவளும்தான். ஆனால் அவளது இந்த மகிழ்ச்சி அவளது கூந்தலை தன் கரங்களால் வருடிச்சென்ற தென்றலால் ஏற்பட்டது.அவள் அமர்திருந்த இடம் ஒரு அழகிய நந்தவனம் பூக்கள் மிகக்குறைந்தே மலர்ந்தாலும்,அங்கு அடர்ந்து இருக்கும் மரங்களும்,அவை உதிர்க்கும் இலைகளும்,அங்கு நிலவும் அழகிய மௌனமும் அவற்றிடையே அவள் தனிமைகளும் அவள் வாழ்வின் மிகப்பசுமையான பகுதிகள்.இன்றைய பொழுதும் அவள் பசுமைபக்கங்களில் பதிவாகபோகும் பகுதியாக மாறும் என்று அவள் நினைத்திருக்கவில்லை.ஆனால் அவளை வருடிச்சென்ற தென்றல் தூதின் செய்தி அவள்  இதழோரத்தில் ஒரு மெல்லிய புன்னகையை விட்டுச்சென்றது.மரங்களின் அடியே இசையின் ஏற்ற  இறக்கங்களை ரசித்தபடி அமர்ந்திருந்த அவள் ,அந்த தென்றலின் ஈர்ப்புவிசையுடன் இணங்கி அதனுடன் மெல்ல நடையிட துவங்கினாள்.காற்றில் அவள் கூந்தல் கடலிற்கு போட்டியாய் அலைபாய்ந்துகொண்டிருந்தது.நெற்றியில் விழும் சிருகீற்று கூந்தல்களை காதருகே ஒதுக்கியபடி அடிமேல் அடி வைத்து நடந்து கொண்டிருந்தாள் ,அவளின் நடையில் பெண்மையின் அழகு என்பதை விட அதன் கம்பீரம் தனித்து தெரியும்.பெண்மைக்கே உரிய கம்பீரம்.இதுதான் ஒருவேளை அந்த மழை மேகத்தை ஈர்த்ததோ?!.இதோ அதன் முதல் துளி சீராய் இறங்கி நந்தவனத்தில் பூத்திருந்த மலர்களை வருடிக்கொண்டிருக்கும் அவள் கரங்களின் மேல் உதிர்ந்தது.அதன் வருகையும் அவள் அறிந்திருக்கவே வேண்டும்.இல்லையெனில் ஏன் இந்த ஆனந்த களிப்பு அவளிடத்தில்.அது ஒரு காதலும் காமநிலையும் கலந்த களிப்பு.அவள் மேல் விழுந்த மழை அமுதினை எதிர்நோக்கியிருந்த  அவள் காதல்,மனதை வருடும் மெல்லிய கிட்டார் இசையை செவிக்குள் சிறையிட்டு ஸ்பரிசம் செய்துகொண்டிருந்தது  அவள் காமம்.அந்த இசைக்கு இந்த சிறைவாசம் புதிதல்ல.ஆனால் நீண்ட நாள் கழித்து சந்தித்த உறவுபோல்,அவள் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு கேட்ட பகுதி.ஆனால் இது போன்ற அரிய பகுதிகளை  அவள் அரிதாகவே கேட்பாள்.இது அவளுக்கு நீண்ட நாளைய வெறுமைக்குப்பின் தன் காதலை சந்திப்பது போன்று,அவளும் அதை அவ்வாறே விரும்புவாள் .அவள் கண்கள்மூடி அந்த இசையுடன் அந்தரங்கப்பயணம் செய்துகொண்டிருந்தாள்.இப்போது மழைத்துளி அவள் மேல் விழுந்ததும் அவளையும் அறியாது ஒரு கிளர்ச்சி அவளுக்குள்.அந்த கிளர்ச்சியை தனக்காய் பயன்படுத்திக்கொண்டு மழைத்துளி ஒன்றிலிருந்து நூறாய் ஆயிரமாய் அவள் மேல் விழுந்துகொண்டிருந்தது.அது அவளை மொத்தமாய் ஆக்கிரமிக்க தொடங்கியிருந்தது.இசை அவள் ஆன்மாவுடனும்,மழை அவள் மெல்லுடல் உடனும்,இரண்டற கலந்துகொண்டிருந்தது.காதல் காமத்தின் முடிவதும் காமம் காதலில் முடிவதும் இயற்கை விதைத்திட்ட நியதி.இயற்கையின் ஒரு பகுதியான அவள் அதற்கு விதிவிலக்கன்று .இப்பொழுதும் அவள் நிலை அவ்வாறே .ஆண் தொடாத பாகம் தன்னில்  இறங்கி அவளின் பெண்மையை அவளுக்கு உணரச்செய்து அவள் நாணத்தை  மெருகேற்றிக்கொண்டிருந்தது.மறுபுறம் இசையும், அவள் ஆன்மாவும் நிகழ்த்திக்கொண்டிருந்த ஸ்பரிசம் உச்சத்தை அடைந்துகொண்டிருந்தது,நரம்பினூடே பாய்ந்து சென்றுகொண்டிருந்த அந்த ச ரி க ம- க்களுக்கு ஏற்ப அவள் விரல்கள் ஆனந்தத்தில் அபிநயம் செய்துகொண்டிருந்தன,அந்த அபினயத்திர்க்கேற்ப அவளதுகால்கள் நடந்துகொண்டிருந்தன.சக்கரவாகம் போல் அவள் அருந்திய மழை நீர், இசைக்கு போட்டியாய் அவளை தமதாக்கிக்கொள்ள யத்தனித்தது.இசையோ காமத்தின் உச்சமான காதலில் அவளின் நரம்புகளை இசையால் பின்னிக்கொண்டிருந்தது .அட! இது என்ன மழைக்கும் இசைக்கும் அவளிடம் அப்படி ஒரு ஈர்ப்பு.யாருக்கும் இதுவரை அவளிடம் ஏற்படாத ஒரு ஈர்ப்பு. ஒருவேளை அவள்  இந்த இயற்கைக்காகவே  படைக்கபட்டவளோ?.இது அவளுக்கும் அவ்விரண்டிடம் உண்டு,சற்று அதிகமாகவே.இசை அவளது வாழ்க்கை ,பரிவுகளில் தாய் போல், அவள்தனிமைகளில் காதல் போல்,இரவுகளில் சரிபாதிபோல்,வெளி உலக தேடல்களில் அவளுக்கு தோள் கொடுக்கும் நட்பு போல் ,மழை அவளது அன்பு,காதல்,காமம்,பரிவு,ஊடல்,சலனம் அனைத்தும். அவளுக்கு அவ்விரண்டும் ஒரு ரகசிய உறவு போல.சிறிதுநேரம் தோன்றினாலும் அவளை முழுதாய் ஆக்கிரமிக்கும் தன்மையது இரண்டும்இது என்ன இவளுக்கு இவ்வாறு ஒரு உறவு?!.இது எது போன்று?!.புரிந்ததில்லை அவளுக்கும்,.அவைகளிடமும் அவள் வினவியதில்லை.ஹெமிங்க்வேயின்
"சம்மர் சான்-பிரான்சிஸ்கோ" வரிகள்  போன்று.மிகவும் அரிதான ஒன்று.யாருக்கும் கிடைக்காத ஒன்று.கிடைத்தாலும் நெருங்கத்தயங்கும் ஒன்று.இவள் தயங்கவில்லை நெருங்கினாள்.அதன் விளைவு இதோ, பேரானந்தத்தில் அவள்.பிறர் உணர இயலாததை ஸ்பரிசித்துக்கொண்டு.        

                                                           
  

Thursday, May 13, 2010

உன்னை  ஏறிட்டும்  கண்டதில்லை...  
வாய் சொல்லும் கேட்டதில்லை..
அலைபேசியின் சிணுங்கல்களில் நீ  இருந்ததில்லை..  
பாட்டி சொல்லும் கதை போல் அறிந்துள்ளேன்..
ஆங்காங்கு உனைபற்றி ..
ஆனால் இவர்களின் நையாண்டி பார்வைக்கு,
நான் உந்தன் சரிபாதி,
கேட்க பிடித்ததில்லை..!!
பாடல் வரிகளை யான் ரசித்தால் ,
கனவில் சஞ்சாரமாம்..
அறியாது உன் பெயர் சொன்னால்
அன்றோடு முடிந்தது என் சரிதை,
வராத நாணத்திற்கு வருகைப்பதிவு,
என்னுள் எதுவும் மாறாதபொழுது,
இவர்களுள் ஏன் இந்த இரசாயன மாற்றம்
நினைக்கையில்,
புன்னகையை தவிர வேறு பதில் இல்லை...
இதை என்னவென்று கூற
கண்டதும்...?!!
இல்லை காணாமலே...
ஆனால் இதில் சிறுமாற்றம்,
காதல் இல்லாமலே நான் கவிதை வரைவது,
இதிலும் நான் சற்று வித்தியாசமானவள்  :)

Sunday, May 9, 2010

எமை சுமந்த பெண்மைக்கு அர்ப்பணம்..!!

தாய்,
ஈரெழுத்து  கவிதை இவள்..
இதன் பொருள் விளக்கம் யான் அறியேன்
எனினும் எமக்கொரு ஈர்ப்பு  உண்டு
இவளிடத்தில்
மொழியற்ற  மௌனத்துடன் ஏற்படும் பந்தம் போல்..
விண்ணவனின் கற்பனைத்திறம்,
காதல்...
அவனையே உணரச்செய்தது
தாய்மை...
உணர்கிறேன் என் கற்பனையை
ஆம் தாயே..!!
யாம் காதல் செய்கிறோம் உம்மை,
எமையே எமக்கு உணர்த்தியதால்..!!
                                                               -உன் அன்பு மகள் 

Monday, May 3, 2010

அவன் ,அவள், ஆனால்... அது?!!


 மனிதன் தசையுள்ள எந்திரம் என்று ஆன இவ்வுலகில் காதல் என்பது வெறும் எஸ்.எம்.எஸ்-களிலும் ,"  ஐ லவ் யு செல்லம்"-களிலும் ,ஏர்செல், ஏர்டெல் நிறுவனங்களை இரவு பத்து மணிக்கு மேல் கடின உழைப்பாளிகளாக ஆக்குவதை மட்டுமே வரையரையாகக்கொண்டுள்ளது,இரண்டு நாள் பார்த்து பேசியதும், மூன்றாம் நாள் "டியர்"-களிலும்,நான்கு நாட்களில் இரு கோப்பை தேநீரும் ,இரண்டு வாரங்களில் ஒரு பிளேட் பாவ் பாஜிக்களாக மாறி ,நான்கே வாரங்களில் "சற்றே பெரிய சிறுகதை" போல முடிந்துவிடுகிறது.வளர்ந்து வரும் வளை உலகம் தரும் அறிமுகங்களும் சில நேரங்களில்  இது போன்ற சிறுகதை காதல்களாகவே முடிகின்றன.கண்ணோடு கண் நோக்கிய அக்காலம் போய் ,செல்லோடு செல் நோக்கி நோக்கியாகளிலேயே  சுபம் போடப்பட்டுவிடுகிறது.கடலோர மணல்களை ஆக்கிரமிக்கும் அனைவரையும் நான் இதற்காக சாடவில்லை.ஆனால் காரணம்,மனிதனின் மனோதத்துவரீதியாக பார்த்தால் ,தனிமை(யும்) ஒரு முக்கிய காரணமாக தோன்றுகிறது.அவர்கள் காதல் என்பதன் பல்வேறு பரிமாணங்களை மறந்து வெறும்  "ஹார்மோன்" கடவுளர்களை நோக்கியே கடிவாளமிட்ட குதிரை போல் பயணிக்கத்துவங்கிவிடுகின்றனர்.
                      எம் தந்தையுடன் நிகழ்த்திய சிறு விவாதம் இது ."தனிமையும் இதற்கு ஒரு முக்கிய காரணம் என்பது என் வாதம்.என் தந்தை ஒரு உதாரணத்தை கூறி அவ்வாறில்லை  என மறுத்தார்.ஆனால் மனிதனின் மனம் என்பது அவன் வாழும் சூழல்,சுற்றுப்புறத்திற்கு ஏற்ப மிகவும் மாறும் தன்மையது."அமெரிக்காவில் இருப்பவன் எவனும் வெள்ளையர் பெண்ணுடன் வந்து பெற்றோர் காலில் விழுவதில்லை,அதே சமயம் சென்னையில் ஏதோ ஒரு பகுதியில் பெற்றோரை பிரிந்து வேலை செய்பவன் உத்தமனும் இல்லை" என்பது அவர் கூற்று.ஒரு வேளை அந்த "அமெரிக்க எவனி"ன் வாழும் சூழலை அறிந்திருந்தால் இதற்கு என்னால் பதிலளித்திருக்க முடிந்திருக்கலாம்.ஆனால் அமெரிக்காவில் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்தால் அவர்களையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கட்டாய சட்டம் மட்டும் இல்லை என்பது யாம் அறிந்ததே.
                தனிமையை ரசிப்பவர்களை இந்த ஈர்ப்பு நோய் பெரிதும் பாதிப்பதில்லை மாறாக அந்த சூழலுக்கு புதிதாக தள்ளப்பட்டவர்களுக்கு பெற்றொரிடம் இருந்த நெருக்கமும்,நட்பின்  நினைவுகளும் ஒரு மனோரீதியான அழுத்தத்தை தருகிறது நாளடைவில் அந்த அழுத்தம் தாங்காமல் உறவுகளிடம்  இருக்கும் அந்த நூலிழை பந்தம் பலவீனமடைகிறது.இந்நிலையில் இந்த தனிமை அவர்களை பெரிதும் மாற்ற வாய்ப்புகள் ஏராளம்.மற்ற ஒரு பிரிவு அதாவது "பெற்றோருடன் இருந்தும்.." என்ற பிரிவை  சார்பவர்கள்  .இவர்களின் மனநிலைக்கு பல காரணங்களை கூறலாம்.பெற்றோரிடையே  ஏற்படும் சண்டை சச்சரவு,இந்நிலையில் வாழ்க்கையையே வெறுக்கத்துவங்கும் இளைஞருக்கு சிறு மரம் தரும் காற்று கூட ஈர்ப்பயே ஏற்ப்படுத்தும். பழகப்பழக பாலும் புளிக்கும் என்பதில் ஒரு சிலர் அடங்குகிறார்கள்,என்னதான் தந்தையுடன் தோள் மேல் தோள் போட்டு நடக்கும் பிள்ளையாக இருந்தாலும்.ஒருசிலவற்றை தமது எதிர்பாலிடம் கூறும் திருப்தி அவர்களுக்கு  தம் பெற்றொரிடம் கூறும்போது வருவதில்லை.அது ஏன் என்று என்னிடம் கேட்டால் "கடலின் ஆழத்தை அறிந்து வா" என்று கூறுவேன்.மூன்றாவது,அவர்களின் பெற்றோரே ஒரு "அலைகள் ஓய்வதில்லை" பிரிவை சேர்ந்தவர்களாக இருப்பர்,இதற்கு காரணமே தேவையில்லை.இன்று இருப்பது போல் அக்காலத்தில் இல்லையே என்று யாராவது வினவினால் சிரிப்பதை தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை.அக்காலத்தில் வீட்டை தாண்டி வெளியூர் சென்று வசித்து வேளை செய்த பிள்ளைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.அப்படியானால் அவர்கள் வீட்டை விட்டு சென்றது தவறு என்று அதிரடி முடிவெடுப்பது அடிமுட்டாள்தனம்.வீட்டில் இருந்தாலும் அவர்கள் எதிர் வீட்டு  இருபதுகளை ஏறிட்டேனும் கண்டிருப்பர். இந்த "ஈர்ப்பு" என்பது ஆதாம் காலத்திலிருந்து வழிமுறையாக வருவதே,அவ்வாறு நான் இருந்ததில்லை என்று யாரேனும் கூறுவீர்களா?! அவ்வாறெனில்  அவர்களுக்கு எனது  பதில் "இந்த பொய்க்கு நெக்ஸ்டு ஜென்மத்துல சாப்பாடு இல்ல சார் ,சிங்கிள்  டீ கூட கெடைக்காது".இது எக்காலத்திலும் இருந்ததே, இருப்பதே,இருக்கப்போவதே ஆனால் அக்காலங்களில் முன்பு கூறியது போல இந்த வெளியூர் வேளை தனிமை இவ்வாறான சூழல் மிகமிகக்குறைவு,முக்கியமாக அக்காலங்களில் பாரதியையும் பாரதிதாசனையும் விடைத்தாள்களில்  ஒக்காளமிடப்படித்தவர்களே அதிகம்.இன்று அதனை உயிராகப்படிப்பவர்களும் இருக்கின்றனர்,நாகரிகத்திற்க்காக படிப்பவர்களும் இருக்கின்றனர்,ஒக்காளமிடும் கூட்டணியினரும் ஆங்காங்கே இருக்கின்றனர்.அவர்களின்  பார்வைக்கு ஏற்ப அவர்களின்  அந்த "அதுவும்" .அவர்கள் அதற்க்குத்தரும்  விளக்கங்களும் மாறுபட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.