BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Saturday, January 29, 2011

எண்ணம்- சுயம்,எழுதத்தோன்றியது ..

      
                     இதனை நீண்டகாலமாக எழுதவேண்டும் என்ற எண்ணம்.இன்று ஏதோ ஒரு விவாதத்தின் பொழுது இந்த எண்ணம் மீண்டும் நினைவுக்கு வர, இதோ எழுதிவிட்டேன் .எதை பற்றி என்று கேட்பவர்களுக்கு, இதோ இந்த "எண்ணம்" என்பது பற்றிதான்!.அதற்காக நான் இங்கே  உளவியல் பற்றிப் பேசப்போவதில்லை போதுமான அளவிற்கு அதை பற்றி, படித்தவர்கள் , படிக்காத மேதைகள் என உளவியலுக்கே உச்சந்தலை காயும் அளவிற்கு அலசி ஆராய்ந்துவிட்டோம்.மாறாய் தமது எண்ணம் சரி ,தமது எண்ணம் மட்டுமே சரி என்று கூறும் இயல்பு,அதற்காக வாதிடும் நிலை அங்கே நாம் தவறவிடும் யதார்த்த நிலை.அதை விட பிறர் பற்றிய தமதான அனுமானம் சரியாக இருப்பின் ஒரு சாசிக்கப்பட்ட வரி ஒன்றை கூறிவிடுவது "யு சி! நான் அப்பவே சொன்னேன் அது ஹுமன் டெண்டேன்சி, சைக்காலஜி!".அதாவது இவர்கள் அதை அதாவது தமது எண்ணத்திலிருந்து அனைத்தையும் யதார்த்தமான கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்களாம். இவ்வாறும் பேசுகிறார்கள்  ,ஆனால் அது ஏனோ சுயம் என்று வந்துவிட்டால் மட்டும்  இந்த யதார்த்தம் பதார்த்தமெல்லாம் பரண் மேல் ஏறி அமர்ந்துகொண்டுவிடுகிறது, என்னையும் சேர்த்துதான்.என் சிறு வயதிலிருந்தே நானும் என் தந்தையும் வாதம் செய்யும் விதம் ஒரு உதாரணம். பல நேரங்களில் விவாதமாய் இருப்பது சிற்சில நேரங்களில் வாதமாய் மாறிவிடும்,அது சில மாதங்கள் பேசாமல் இருந்த நிலைக்கும் கொண்டு சென்றதுண்டு.அந்நிலையில்  இருவரும் பிறர் கருத்தை ஒத்துக்கொண்டு விட்டுக்கொடுத்தபாடில்லை என்றால்  அம்மா அங்கிருந்து வந்து  "அட என்ன? குழந்தைங்களா நீங்க?!!போய் வேற வேலைய பாருங்கோ ரெண்டு பேரும்!!" என்று  சபையை கலைத்துவிட்டு செல்வார்.அதாவது நடுநிலை வகிக்கும் அம்மாவின் யதார்த்தத்தனம் அங்கே முக்கியமாக நினைவில் வைத்துக்கொள்ளப்படவேண்டும்.பின்னொருநாளில் அவள் மனம் சிறிதேனும் சோகம் கொண்டிருந்தாள் அந்த யதார்த்தநிலை தவறிவிடுகிறது.ஒரு பொருள் பற்றியதான நமது பார்வை சரி, ஆனால் பிறரது தவறு என்று தோன்றும்பொழுது வாதம் செய்யாது புன்னகைத்துவிட்டு அமைதியாக இருக்கலாம் என்று தோன்றினாலும் நாம் ஏன் அதை பின்பற்றுவதில்லை.யாராவது சோகமாக இருந்தால்"இந்த உலகில் உனக்கென்று நீ மட்டும்தான் துணை!",என்பேன் (அட்வைஸ்லாம் பலமாத்தான் இருக்கு),அடியேனும் அதை பின்பற்றினாலும் அதீத சந்தோஷத்திலோ அல்லது மிகுந்த துக்கம் பொங்கிவரும் வேலையிலோ உறவுகள் நெருக்கங்கள் போன்ற சொற்கள் நிரம்பிய வரிகளே மிகவும் பிடித்துப்போகிறது.எவ்வளவுதான் யதார்த்தமாய் நாட்களை நகர்த்தினாலும் அதில் ஒரு சில மணி நேரங்களாவது அந்தத்தன்மை தகர்ந்துவிடுகிறது  இவ்வாறு நான் மட்டும் அல்ல பலர் உள்ளனர் வரிசையில்.அது ஏன் அந்த சுயத்துக்கு அவ்வளவு முக்கியத்துவம் ,அடிக்கடி தோன்ற்வது கூட ,இந்த சரி,தவறு என்பதெல்லாம் தனியொருவன் கண்ணோட்டத்தை பொருத்தது என்று .அதாவது இந்த சுயத்தை பற்றிய எண்ணத்திற்கு ஏற்றவாறு.சரி,தவறு என்று மாற்றிக்கொள்வது. ஆடை உடுத்துவது சரி,ஆடை உடுத்தாது இருப்பது தவறு என்று அன்று தொடங்கி,உயர்ந்த ரக ஆடை உடுத்துவோர் சரி,தாழ்ந்த ரக ஆடை உடுத்துவோர் தவறு என்ற மத்தியம காலமும், (அதிக)ஆடைகள்  உடுத்துவது தவறு,(அதிக)ஆடைகள் உடுத்தாதது சரி என்று கூறும் இக்காலம் முடிய அனைத்திலும் இந்த சுயம்,சுயத்தின் எண்ணம்.யதார்த்தங்களும்,மெய் நிலைகளும்,புரிந்து  உணர்தல்களும் அங்கே எடுபடுவதில்லை.இதற்கும் நமக்கு ஒரு விடை உண்டு "மனித இயல்பு!".இவ்வாறெல்லாம் பேசிவிட்டால் அது முதிர்வடைந்த மனது என்று தனக்குள்,தனக்குத்தானே பட்டம் வேறு.இந்த எண்ணம்,வண்ணம் இதற்கெல்லாம் இந்த  மெச்சுரிட்டி என்கிற வார்த்தைதான் தான் சார் பிரச்சனையே, அனுபவமும் மெச்சுரிட்டியும் இரட்டைப்பிறவிகள் என்று நமக்கே ஒரு எண்ணம்,யோசித்துப்பார்த்தால் குழந்தையாகவே இருந்துவிட்டால் இவை எதுவுமே தேவை இல்லை.குழந்தைகளின் எண்ணப்பாடு என்பது ஒரு குறிப்பிட்ட வயது வரை ஒருபோலத்தான் இருக்குமாம்,எங்கோ படித்தது. சொல்ல மறந்துவிட்டேன் மெலிதாக இப்பொழுது மடிகணினியில் ஒரு பாடல் (உண்மையாகவே )ஓடிக்கொண்டிருக்கிறது "மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..குணம் குணம் அது கோவிலாகலாம்".அதனால்தான் இன்னும் இறை என்பது கண்டுபிடிக்கப்படவில்லையோ.

பி.கு: நான் கூறியதை யதார்த்தமாகவும் உளவியல் ரீதியாகவும் நோக்கினால் நூறு சதவிகிதம் சரியே ஏனென்றால் அது மனித இயல்பு  :P  :P :D .                             

Wednesday, January 26, 2011

உயிர்க்கல்..


        அகிலன் அந்த கல்லையே நோக்கிக்கொண்டிருந்தான்,அந்த கல் அவன் முட்டிக்கால் அளவு உயரம் கொண்டது.அவன் வளர்ந்து முட்டிக்கால் அளவு உயரம் இருந்தபோதிலிருந்தே அதனை நன்கு அறிந்தவன்.நமக்குத்தான் அக்கல் "அது". ஆனால் அவனை பொறுத்தவரை அது அவன் நட்பு ,தாய் என அனைத்தும்.யாருமற்ற அவனை அந்த கிராமம் வீட்டுக்கு வெளியில் அமரவைத்து சோறிட்டு,வெளிப்புறம் வழியாகவே கொல்லைக்கு சென்று கை கழுவ அனுமதித்து ,கோயில்களில் அவனை அனுமதிக்காவிடினும்  பண்டிகை மற்றும் திருவிழா நாட்களில் ஐந்து ரூபாய் என்று அளித்து தனித்து ஒதுக்கினாலும் பொருளாதார ரீதியாக ஓரளவு பார்த்துக்கொண்டாலும் அவன் மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள என்று அவனுக்கு எவரும் இருந்ததில்லை.அகிலன் என்ற பெயர் கூட ஊர் தமிழ் வாத்தியாரின் பெயர்,அர்த்தம் அறியாது அது ஏதோ அவனை ஈர்த்ததால் அதனை தன் பெயராக ஆக்கிகொண்டான்.இன்றுவரை அவனுக்கு அதன் அர்த்தமும் தெரியாது.அந்த கல்,அவன் ஒரு முறை யாரிடமிருந்தோ  தப்பிக்க ஓடி மாறாய் அதனிடம் நேராக தன் காலை சரணாகதி செய்ய,இளகிய கல் அவனுக்கு காலில் ரத்தம் வராமல் வெறும் சிறு சதை பெயர்தலோடு பார்த்துக்கொண்டது,அதுவே அவனைப் பொறுத்தவரை மிகப்பெரும் கருணை கூர்ந்த செயல் ஆதலால் அன்று முதல் அவனுக்கு அது நட்பானது, நட்பு ,தாய் எல்லாம் என அது அவனுக்காய் தருணத்திற்கு ஏற்ப அது தம்மை மாற்றிக்கொண்டது.என்றேனும் வேலை  அதிகம் செய்து முதுகு,கால் வலி என வந்தாலோ குப்புறப்படுத்துக்கொண்டு ரோட்டில் செல்வோரிடம் அந்த கல்லை தன் முதுகின் மீதிலோ அல்லாது காலின்  மீதிலோ வைக்க சொல்லுவான் போவோர் வருவோர்க்கு அது வினோதமானதாகவும் கிறுக்குத்தனமாகவும் தோன்றினாலும் அவன் கூறியதை செய்துவிட்டுச்செல்வர் ,ஏனில் அவனை பொறுத்தவரை அச்சமயங்களில் அது அவன் தாய்,அவனுக்கு கை கால்களை பிடித்துவிட்டு ஒரு மௌனத்தாலாட்டு பாடி உறங்கவைக்கும் தாய்.யாரிடமாவது கோபம் கொண்டால் தன் ஆத்திரத்தை அதனை காலால் உதைத்து வெளிப்படுத்துவான்,அது சில நேரங்களில் உதை வாங்கிக்கொள்ளும் சில நேரங்களில் அவன் காலில் குருதியாக தன் எண்ணப்பாட்டை  காண்பித்துவிடும்.மனது ஏதேனும் சஞ்சலமுற்றால் அதனை வெறித்து நோக்குவான் அவர்கள் இருவரும் என்ன பேசிக்கொள்கிறார்கள் என எவருக்கும் புரியாது.இன்றும் அவ்வாறுதான் அதனை வெறித்து நோக்கிக்கொண்டிருந்தான் ஆனால் கவலை  அவனைப்பற்றி அல்ல மாறாய் அதனை பற்றி அந்த கல்லை பற்றி.அடுத்த ஊர் பஞ்சாயத்துக்காரன் ஒருவன் ஊரில் புதியதாய் முளைத்த வேப்பமரத்தை சாமியாக்கும் பொருட்டு சம்பிரதாயப்படி அடுத்த ஊருக்கு கல் தேடி வந்துள்ளான்.சிறுசெங்கல் எடுக்க வந்த இடத்தில் வலுமிக்க அதை விட பெரிய கல்லை பார்க்க.சற்று பெரிய ஆத்தாவாகவே வைத்துவிடலாம் என எண்ணி அதை தூக்கப்போக,அகிலன் இல்லாத தருணம் பார்த்து, ஊர்க்காரன் எவனோ ஒருவன் அதை நோக்கித்தடுத்து அகிலன் வந்ததும் விஷயத்தை பேசிக்கொள்ளச் சொல்லி அனுப்பிவிட்டான்.தடுத்தவன் அகிலனிடம் இவ்விஷயத்தை கூறவேதான் அவனது இந்த நிலை.நம்மை விட்டு நெருக்கங்கள் பிரிகையில் ஏற்படும் துயர் போல் அது அவனுக்கு. அவனை பொறுத்தவரை அது ஒரு உயிர்,உருவற்ற உயிர்.ஆனால் சமூகத்திற்கு வெறும் கல்லே.எவரேனும் வந்து தகர்த்துக்கொண்டு போனால் கூட அதனை தட்டிக்கேட்க அவனுக்கு உரிமை இல்லை.நாளை அந்த அடுத்த ஊர் பஞ்சாயத்தான் வந்தாலும் அதே நிலைதான் ஆகப்போகிறது.தடுக்க வழியும் இல்லை,தன்னை ஏற்கனவே கிறுக்கென்று கூறுபவர்களிடம் எவ்வாறு உதவி கேட்பது என  அதனை காப்பாற்ற யோசித்து கவலையும் ஒண்டிக்கொண்டது.
                                           மறுநாள் பொழுது புலர்ந்தது.எப்பொழுதும் எவர்வீட்டுக்கேனும் அதிகாலை விஜயம் செய்து தன் அன்றைய  பணியைத்தொடங்கி,வேறு ஒருவர் வீட்டில் மதிய உணவு என இரவு வரை வெளிச்சுற்றும் அகிலனை அன்று எந்த வீட்டிலும் காணவில்லை.  அதே நேரம் பக்கத்து ஊருக்கு சுயம்புவாய் ஒரு வேப்பமரத்துக்கடவுள் வந்திருந்தார்,இலவச இணைப்பாக ஒரு பூசாரியுடன்.கடவுள் அது அவ்வூருக்கு .அவனுக்கு இன்று முதல் அது ,கடவுளும் கூட.      

Saturday, January 22, 2011

எதிர்பாரா அன்புகள்
தலையணைச்சண்டைகள்
நீ நான்..
ஓர் கனவு..

பணியதை முடித்துவிட்டு
காத்திருப்புகள் எமக்காய்
நீ நான்..
ஓர் கனவு..

ஒன்றாய் அமர்ந்தபடி
உணவருந்தும் நிமிடங்கள்
நீ நான்..
ஓர் கனவு..

சிறிதாய் சீண்டல்கள் உனது,
சிறு கோபங்கள் எனது..
 நீ நான்...
ஓர் கனவு... 

இசையதில் லயித்தபடி
இசைத்திடும் நிமிடங்கள்
நீ நான்..
ஓர் கனவு...

அரங்கத்து சினிமாவும்
காபி உரையாடலும்
நீ நான்..
ஓர் கனவு..

என் கரத்து புத்தகமும்
எனை அனைத்து உன் கரமும் 
நீ நான்..
ஓர் கனவு..

ஊடல்கள் கூடல்கள்
நட்புடன் நிமிடங்கள் 
நீ நான்..
ஓர் கனவு...

நாம் அது நிரந்தரம்,
கனாவிலே என்பதாயின்...
கேட்கிறேன் நிரந்தரமாய்..
நித்திரையைப்பரிசாய்.

படர்வில் பசுமையானால்,
தென்றலாய் நீ..
வளைந்து நெளிகிறேன்,
திமிறிப்பின் தவிக்கிறேன்,
நீ தீண்டும் நொடிகளிலே..

தெளிவில் நீரானால்,
ஆகாயம் நீ..
நான் நீயாவேன்,
என் தன்மை மாறாது.. 
நீ உனை அறிய,
உன்  நிறம் மாறும் நொடிகளிலே..

உருவில் காற்றானால்,
வலுநிலம் நீ..
தோற்கும் என் வலிமை,
உன் கரை சேறும் நொடிகளிலே...

சுடும் நெருப்பானால்,
பாயும் நீர் நீ..
இயல்புகள் எமதிருந்தாலும்,
காணாமல் போகிறேன்..
நீ அணைக்கும் நொடிகளிலே.. 

விரிந்த வானானால்,
பிழம்பு நீ..
வெட்கங்கள் செம்மையாய்..
நீ என்னுள் மறைகையிலே... 

இரண்டறக்கூடிவிட
நான்கெனும் நிஜம் பொய்த்து
ஒன்றென நிழல் கண்டோம்.
இயற்கைச்சேர்க்கையிலே... 

Thursday, January 20, 2011


கல் எனும் சொல் தாண்டி,
வேறேதும் புரிந்திடா.
ஓர் அடையாள அட்டை.
பெயர்,
கடவுள்.
பிறப்பு,
ஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்குமாய்.
பணி,
அவர்களுள் மனிதமாய் தமைத்தேடி.

Monday, January 10, 2011

நீயும் நானுமாய்,
சொப்பனம் ஒன்று..
முடிவற்றதொரு சாலை..
பெருமழையில்,
ஒரு குடையில்,
அருகருகில்,

மௌனம்..
அதற்கு பொருத்தம் என, 
சிறுதுளிகள் தூது விட்டு 
எண்ணங்கள் பேசினோம்..  

இயற்கையும் நாமுமாய்,
நாழிகையில் ஓர் உலகம்..
இம்முறை கரைந்தது..
மணித்துளிகள் அல்லாது,
அருகாமை மாந்தர்கள்..
சொப்பனம் ஒன்று,
நீயும் நானுமாய்..

Sunday, January 9, 2011

துவக்கங்கள் சிரிப்புகளில்,
பயணங்கள் சில சிந்தனைகளில்,
முடிவுகள் கண்ணீர் துளிகளில்,
பிறந்து..
வாழ்ந்து..
வீழும்..
ஒரு நாள்..
ஒவ்வொரு நாள்..

சிற்றெறும்புகள்

  நிலவு தன் துயிலிலிருந்து விழித்தும் விழித்திராததுமாய் ஒரு பொழுது.ஒரு அமைதியான செவ்வான மாலை.அப்பொழுதுகள் எப்போதுமே சற்று வித்தியாசமானதுதான் கடலோரங்களிலும் பசும்புல்வேளிகளிலும் அமர்ந்திருப்பவர்கள் இரைச்சலுடன் பேசினாலும் அதில் ஏதோ அமைதி இருப்பதாய் தோன்றும் மாலைப்பொழுதுகள் அவை.அத்தகைய ஒரு வேளையில் தன் வீட்டு மொட்டை மாடியில் அந்த கீரிச்சிடும் சிறு பூச்சிகளின் சத்தங்களுக்கிடையே,செய்கூலி சேதாரமின்றி வாங்கிய சரவணா ஜுவல்லரியின் அந்த மெல்லிய செயினை தன் பற்களால் கடித்தபடி ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்தாள் நந்தினி.பெண்கள் ஒரு புரியாத புதிர் என்று கூறிடும் ஆண்களிடையேயும்,ஆண்கள் ஒரு சுயநலவாதிகள் என்று கொடியேற்றும் பெண்களிடையேயும்,ஆத்திகம் நாத்திகம் என்று வாதிடுபவர்க்கு இடையேயும்,உலகம் சமூகம் என்று முழங்குபவர்களிடையேயும் அன்றாடம் தன் வாழ்வை செலுத்திக்கொண்டு தன்னை அறிய முற்பட்டுக்கொண்டிருக்கும் சிலரில் ஒருத்தி நந்தினி.ஆனால் அவளுள்ளும்  பொதுப்படையான "புரட்சித்தனம் மிக்க" என்று அவளே எண்ணிக்கொள்ளும் எண்ணங்கள் அவ்வப்போது தோன்றுவதுண்டு.அவ்வாறு தோன்றிய ஒரு எண்ணம்தான் இதோ இந்த மெத்தைப்படி அமர் சங்கிலிக்கடிகள்.காரணம்,அன்று காலை அவள் பணிக்கு செல்லுகையில் சந்தித்த பள்ளிகாலத்தோழன் ஒருவன்.பெயர் பாரதி, பெயருக்கு ஏற்ப பள்ளிநாட்களில் அவன் பேச்சினாலும் எழுத்துக்களினாலும் ஈர்க்கப்பட்டோர் பலர் உண்டு. சுதந்திரம்,தேசியம்,பெண்ணுரிமை,வெங்காய விலை என இவர்கள் இருவரும் விவாதம் செய்யத்தொடங்கினால் தேசிய அளவில் மாற்றம் வந்திடுமோ இல்லையோ, அவர்களை சுற்றி அமர்ந்து கேட்கும் அவர்களை ஒத்த வயதுடைய சிறுவர்களிடையே அந்த "இருபது நிமிட நாட்டுப்பற்று"\இருந்தே தீரும்.நாட்டை வளர்க்க அரசாங்கம் போட்ட திட்டங்களை விட இவர்கள் இருவரும் தங்கள் பள்ளி நாட்களில் போட்ட திட்டங்கள் மிக அதிகம்.பின்னர் ஏதோ சில காரணங்களால் பாரதி வேறு மாநிலத்திற்கு அவன் பெற்றோருடன் சென்றுவிட பல வருடங்கள் கழித்து இன்றுதான் சந்திக்க நேர்ந்தது.நெடுநாளைக்குப்பின் நட்பை சந்தித்த களிப்பில் உற்சாகமாய் அவனை நோக்கி கையசைத்தாலும்,அருகில் இருந்தது அவன் குடும்பமென்று பார்வையாலேயே உணர்ந்துகொண்டபின் உற்சாகப்பெருக்கின் அளவை சற்று குறைத்துக்கொண்டாள்.அவனை நோக்கி நடக்கையிலேயே அவன் இப்பொழுது ஏதாவது புரட்சிகரமான செயலில்தான் ஈடுபட்டிருக்கவேண்டும் என்று மனதிற்குள் எண்ணியபடி நகர்ந்தாள்.அவன் அருகில் அவனை விட சற்று குள்ளமாக கொஞ்சம் பருமனாக இக்காலத்திற்கே உரிய அடக்கப்போர்வை கலந்த பகட்டுடன் ஒருத்தி அவன் கரங்களை பற்றியபடி."சரிபாதியாகத்தான் இருக்கவேண்டும்!" ,இவளது உள்ளம்.எந்நிமிடமும் தாம் கீழே விழுந்துவிடலாம் என்ற அச்சத்துடன் அவள் இடுப்பில் அக்குழந்தை.பாரதி இவளை குசலம் விசாரித்த பின் தன் மனைவிக்கு அறிமுகப்படுத்தினான்.அவள் பெயர் சௌந்தர்யா என்று தெரிந்தது.பருமன் திருமணத்திற்கு பின் உண்டான ஹார்மோன் மாற்றங்களின் விளைவாக இருக்கலாம் என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டாள் நந்தினி.சாலையோரம் சிறிது நேரம் நின்றபடி நட்பு வட்டாரங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.நந்தினிக்கு அலுவலகம் செல்ல நேரமாகிவிட்டதால் அவனது "காபி ஆர் டீ"அழைப்பை மறுக்கவேண்டியதாகிவிட்டாது."அப்புறம் பாரதி என்ன செய்யற?" என்று இவள் கேட்கும் முன்னரே இவளிடம் தனது முகப்பு அட்டையை நீட்டினான்.அட்டையில்,ஒரு ஓரத்தில் பசுமையாக ஒரு மரம் வரையப்பட்டு அட்டையின் நடுவிலே இவனது பெயர்,பட்டம் தொடர்ந்து "மர ஏற்றுமதியாளர்" என்று கொட்டை வடிவில் எழுதப்பட்டு இருந்தது."உலகில் அனைத்துமே நியாயத்திடமிருந்து பிறந்ததாகத்தான் இருக்க வேண்டும் என்று ஒரு காலத்தில் கொடி பிடித்தவனா இன்று மரங்களை வெட்டி அதனை ஏற்றுமதி செய்கிறான்?" என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டாலும் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் பதில் பகட்டாய் தனது அட்டையை அவனிடம் தந்துவிட்டு விடைபெற்று நகர்ந்தாள்.அதுதான் இவளது தற்போதைய சிந்தனை,எவரேனும் இந்த சிந்தனாதி விவரங்கள் பற்றி கேட்டாள்  சிரித்துவிட்டு பிறர் பற்றி நீ எதற்கு கவலைப்படுகிறாய் என்று அறிவுரை கூறிவிட்டு செல்வர்.அது தர்கத்தில் முடிந்துவிடுமோ என்று எண்ணியே மலை உச்சி கடவுள் போல் வீட்டு மாடியில் அமர்ந்து சிந்தித்துக்கொண்டிருந்தாள்.அவன் ஒருவன் மரத்தை விற்று காசாக்குவதால் உலகமே அவளுக்கு வீரப்பனின்  கூட்டாளிகள் போன்று  ஒரு நொடி தோன்றிவிட்டது."சுயநலவாதமும் பாரதியும்" என்று புத்தகம் எழுதும் அளவிற்கு அந்த சிந்தனையின் உயரம் தற்போது எட்டியிருந்தது.வெப்பமயமாதலால் நாளை உலகம் அழிந்திடும் என்றால் அதற்கு காரணம் பாரதியாகவே இருப்பான் என்ற எண்ணம் கூட முளைத்துவிட்டது.
                 இந்நிலையில் பாரதி தனது நாற்காலியில் அமர்ந்தபடி அவள் கொடுத்த அட்டையை நோக்கிக்கொண்டு இருந்தான்.அவள் பெயர்,பட்டம் கீழே ஒரு பெரிய இரசாயனத்தொழிற்சாலையில் அவள் வகிக்கும் பதவி யாதும் குறிப்பிடப்பட்டு இருந்தது.தன்னுடன் எழுச்சியுடனும் உயிர்ப்புடனும் புரட்சி ஜாலம் பேசியவளா இவள் இன்று உலகப்பசுமையை நிர்கதியாக்கிவிட்டிருக்கும் அத்தகைய  ரசாயனங்களை உருவாக்கும் தொழிற்சாலையில் பணிபுரிகிறாள் என்று மனதிற்குள் அவள் மீது பல சாடல்களை வரிசைப்படுத்திக்கொண்டிருந்தான்.
               அப்பொழுது உலகில் ஏதோ ஒரு மூலையில் தன் கூட்டத்துடன்  சாரியாக சென்றுகொண்டிருந்த ஒரு சிற்றெறும்பு  சற்று விலகி நடைபாதையில் சென்றுகொண்டிருந்த ஒரு உருவத்தின் கால்களில் தன் சிறு பற்களை பாய்ச்சி  கடித்துவிட்டு விலகியது.பிறரை கடிக்காமல் அவைகளால் உயிர் வாழ இயலும் என்பது கடினம்.கடிவாங்கிய உருவத்திற்கும் இதனால் எதுவும் பிரச்சனை  இல்லை கடித்தது தேளாகவோ பாம்பாகவோ இல்லாத வரை.
இவர்களும் சிற்றெறும்புகள்தாம்.                                                     

Thursday, January 6, 2011

இசைக்கடவுளின் குழந்தைக்கு..!!

            இன்றளவும் நினைவில் உள்ள விஷயங்களில் ஒன்று மிக சிறு வயதில் பார்த்த அந்த பாடலின் ஒளியும் ஒலியும். சட்டமிடப்பட்ட ஜன்னலின் பின் நின்றபடி கதையின் நாயகன் பார்வையில் ஏக்கத்தோடு நினைவுகளை அசைபோட்டுகொண்டிருப்பான் அப்படியே புல்வெளியை நோக்கி அந்த கேமிரா நகர அங்கே தேவதை போன்ற அழகு மிக்க பெண் மான் போல் துள்ளி குதித்து சென்றுகொண்டு இருப்பாள்,இதன் பின்னணியில் கேட்பவர்க்கு இதமும் அதே சமயம்  பாடுபவரின் உள்ளார்ந்த வலியினை ஏக்கம் கலந்த நிலையை உணர்த்திவிடும் வகையில்  ஒரு அழகிய ஆலாபனை தொடர்ச்சியாக ஒரு மந்திரக்குரலில் "காதல் ரோஜாவே" என தொடங்கிடும் அப்பாடல்,ஆம்  ஞாபகம் என்று கூறுகையில் அரவிந்த் சாமி புன்னகை முதல் அதன் பின் தோன்றும் ஒரு வர்ணிக்க இயலாத இசையும் என இன்றளவும் அதன் ஒவ்வொரு ஒளி-ஒலி நிமிடமும்  நினைவில் உள்ள ஒன்று, முதல் பத்தியை பாடியவுடன் தொடர்ச்சியாக ஒரு மெய் சிலிர்க்கும் புல்லாங்குழலும் தொடர்ந்து அந்த அழகிய கொஞ்சும் குரலில் "ல ல ல ல..."என்று துவங்குவதும், தேவர் மகனின் இஞ்சி இடுப்பழக பாடலும், சாந்து பொட்டு பாடலும்,போற்றிப்பாடடி பாடலும் (எனை என் பெற்றோர் முதலில் அழைத்து சென்ற படம் "தேவர் மகன்" அவ்வயதில் படத்தின் காட்சிகளை புரிந்துகொள்ளும் அளவிற்கு சிறுபிள்ளை என்பதால் திறனும் பொறுமையும் இல்லையெனினும் சிவாஜியின் மீது அந்த சிறு குழந்தை ஏறி நின்று பாடுவது இப்பொழுதும் ஏனோ நிழல் போல் நினைவில் உள்ளது)  தூர்தர்ஷனின் ஒலியும் ஒளியும் மூலம் பார்த்து கேட்கத்துவங்கி ராஜா ரஹ்மான் என்றால் என்னவென்று தெரியாது! பாடல் என்றால் என்ன என்று அரைகுறையாய் அறியத்தொடங்கிய அந்த சிறு வயதில் (ஆம் மிகமிகச்சிறிய வயதுதான்) "போற்றிப்பாடடி.." என்று ஆரம்பித்து , அந்த "ல ல ல ல.." ஏனோ மிகவும் பிடிக்க ஆதலால் நானும் அந்த குரலுடன் மழலையாய் அதை சொல்லிக்கொண்டே லாலிபாப்பில் முடித்ததுண்டு என்று வீட்டில் பெரியவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன்(தொடங்கியது இளையராஜாவில்தான் போல :) ).பின்னர் வளர வளர இன்ன பிற பாடல்களையும் ரசிக்கத்தொடங்கினாலும் அந்த காதல் ரோஜாவே பாடலின் மீதிருந்த ஈர்ப்பு இன்றளவும் குறையவில்லை.சின்ன சின்ன ஆசையும், புது வெள்ளை மழையும் நிகர்.சிறிது வளர்ந்து உலகம் அறியத்தொடங்கிய பின் சின்ன சின்ன ஆசை பாடலை முதல் வரி மட்டும் சரியாக உச்சரித்துவிட்டு அடுத்த வரியிலிருந்து நேரடியாகத்தாவி "என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை என்று பாடியதை நினைத்தால் இப்பொழுதும் சிரிப்பு தோன்றிவிடும். .இன்னும் சொல்லப்போனால் பின்னணி இசையென்றால் என்ன என்று கூட தெரிந்திராத வயது அது.எனினும் பாடுகிறேன் பேர்வழி என்று எனை சுற்றி பலர் அமர்ந்திருக்க ஜென்டில்மேன் பட பாடல் வரிகளை தப்பும் தவறுமாக பாடிய அந்த சிறு பிள்ளை நாட்களும் நினைவில் இருக்கிறது.பின்னணி இசை பற்றியும் ஏ.ஆர்.ரஹ்மான் பற்றியும் நன்றாக அறிந்துகொண்டது 1995 -இல்தான், இந்தியன் படத்தில் துவங்கி,"பச்சை கிளிகள் தோளோடு" பாடலின் வரிகள் பிடித்து பின்னர் கூர்ந்து ரசிக்கையில் அதன்  இசையால் ஈர்க்கப்பட்டு.."என்னவளே" பாடல் பற்றி ஒற்றை வார்த்தையில்-chanceless ..அதன் prelude -இசையின் மேல் எப்பொழுதும் எனக்கு தனி கிறக்கம் உண்டு...இப்பவும் என் வீட்டில் இந்தியன்,காதலன்,திருடா திருடா ,ஜீன்ஸ்,படையப்பா,காதலர் தினம்,முதல்வன் ,ரட்சகன் பாடல்கள் தந்தை எனக்காக பதிவுசெய்து எடுத்துவந்த ஒலிநாடாக்கள் அந்த குவியலினூடே இருப்பதை காணலாம்.அதை எல்லாம் கேட்டு தேய்த்த பழைய பிலிப்ஸ் டேப் ரிக்கார்டர்தான் இப்பொழுது இல்லை(கடைசியாக அதில் கேட்டது பள்ளித்தோழியிடமிருந்து ஒரு வெள்ளிக்கிழமை வாங்கி வந்து கேட்ட பாய்ஸ் படப்பாடல்,அம்மாவுக்கு மாரோ மாரோ புரியாததால் நிறுத்த சொல்லிவிட்டார்,எனக்கும் அது அப்பொழுது புரியவில்லை என்பது வேறு விஷயம்,சுஜாதாவும் தன் கற்றதும் பெற்றதும் பகுதியில் அப்பாடலை esp -யுடன் ஒப்பிட்டு நகைக்க வைத்திருப்பார்  ).அவற்றில் ஏதோ ஒரு ஒலிநாடாவில் "குறுக்கு சிறுத்தவளே" பாடலின்  முடிவில் "பூவுக்குள் ஒளிந்திருக்கும்" பாட எண்ணி ஏனோ யாருக்கும் தெரியாமல் இறுதியில் நான் அரைகுறையாய் பாடிப்பதிவு செய்த "கண்ணோடு காண்பதெல்லாம் "-மும், "அன்பே அன்பே" பாடலும் இப்பொழுதும் உள்ளது :) :D அவை இரண்டும் நான் முதன்முதலில் பதிவு செய்ததும் கூட.அலைபாயுதே ,ரிதம்,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களை திரைப்படத்திற்கும்  இசைக்கும் பாடலுக்கும்  என பலபல முறை பார்த்தவர்கள் பட்டியலில் நானும் ஒருத்தி.இதற்காகவே விண்ணைத்தாண்டி வருவாயா நூறாவது நாளின் பொழுது வீட்டின் அருகில் எந்த திரை அரங்கிலும் அப்படம் திரையிடப்படாததால் அன்று மடிகணினியிலேயே அப்படத்தை பார்த்தது மற்றொரு பெரிய கதை."சந்தன தென்றலை" பாடல் கேட்டு அதை பிரிய மனமின்றி அடுத்த பாடலுக்கு தாவிய பொழுதுண்டு.கன்னத்தில் முத்தமிட்டால் பின்னணி இசை கேட்டால் உண்மையில் சட்டென நனைந்துவிடும் நெஞ்சம்.எப்படி இளையராஜாவின் குரலுக்கென்றே மக்கள் கேட்ட பாடல்கள் பல உண்டோ அதே போல் ரஹ்மானின் குரலுக்காய் கேட்ட பாடல்களும் பல அடக்கம்.அவ்வகையில் பார்த்தால் ஸ்ரீநிவாஸ் உடன் சேர்ந்து பாடிய "என்றென்றும் புன்னகை" கேட்டால் இப்பொழுதும் ஒரு புத்துணர்ச்சி புன்னகைதான், ரஹ்மான் குரலிற்கு நான் அவ்வளவு பெரிய விசிறி இல்லையெனினும் "வெள்ளை பூக்கள்" பாடலை அக்குரலில் கேட்டால் ஏனோ நிஜமாகவே மனதில்  ஒரு அமைதியை தோற்றுவிக்கும்.காந்தி பெயர் கூறி சுதந்திரப்பற்று நம்மிடையே பெருகியது போக "வந்தே மாதரம்" பாடலை அக்குரலில் கேட்டு அப்பற்றை மெருகேற்றிக்கொண்ட பலர் நம்மில் உண்டு.எதிர்பார்ப்புடனும் கேள்விக்குறியுடனும் ராஜா இல்லாத ஏமாற்றத்துடனும் ரோஜாவில் தொடங்கிய வெற்றிக்கூட்டணி மணிரத்னம்- ரஹ்மான் என்றவுடன் திரைப்பட-இசை ரசிகர்களை ஏனோ ஒருவித மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது என்பதை எவராலும் மறுக்க இயலாது .ஒரு ஆறு மாதங்களுக்கு முன்பு ஏதோ ஒரு நாள் அதிகாலை சுமார் ஐந்து மணி தூக்கம் சிறிது கூட வராத நிலை எப்பொழுதும் போல் பாடல்களை கேட்டுக்கொண்டிருக்க "புது வெள்ளை மழை" பாடலின் வரிகளற்ற புல்லாங்குழல்  இசை வடிவினை கேட்டு ஏனோ எனையும் அறியாது கண்களில் நீர் துளிர்த்திட அதனை தோழி ஒருத்தியிடம் கூறினால் அவள் எப்பொழுதும் போல் கேலி செய்தது இப்பொழுது நினைவில் வருகிறது.எவ்வாறு ராஜா என்றவுடன் புல்லாங்குழல் என்றாலும் என்னைப்போன்ற பலருக்கு சட்டென வயலினே நினைவிற்கு வருமோ அதே போல்தான் ரஹ்மான் என்றவுடன் புல்லாங்குழல்.பின்னர் அந்த புல்லாங்குழலுக்காகவே கேட்ட பாடல்கள் பல உதாரணம் பம்பாய் பின்னணி இசையை எடுத்துக்கொள்ளலாம்.  "எங்கே எனது கவிதை"பாடலின் விசிறியோ விசிறி நான் என்று சொல்லலாம்."மலர்களே மலர்களே" பாடலுடன் சேர்த்து "நாளை உலகம்" பாடல் இன்னும் மிகப்பிடிக்கும்,பார்த்தாலே பரவசம் படம் பிடிக்கவில்லை என்றாலும் "அழகே சுகமா ?! அன்பே சுகமா?!" பாடல்-damn addictive என்றே சொல்லுவேன்,அவ்வாறே படம் பிடிக்காமல் பாடலை மட்டும் ரசித்தது என்றால் "என் சுவாசக்காற்றே" அவ்வரிசையில் வரும் ,"உயிரும் நீயே?!"-வர்ணிக்க வார்த்தையில்லை,காதல் வைரஸின் "சொன்னாலும் கேட்பதில்லை" மிகப்பிடிக்குமென்றாலும்  "எந்தன் வானில்" எஸ்.பி.பி பாடல்களில் மிக மிகபிடித்த ஒன்று, "சொல்லாயோ சோலைக்கிளிக்கு" அடுத்தபடியாக  .சுருக்கமாக சொல்லபோனால் ரஹ்மானின் இசையில் இந்த பாடல் மிகப்பிடிக்கும் அது மிகப்பிடிக்கும் என்று பிரித்து வரையறுப்பது மிகக்கடினம்.ரஹ்மானின் இசையில் திரையில் தோன்றிய பாடல்கள் தவிர்த்து திரைக்கு வராத பாடல்கள் என்னைப்போன்று பலரை மிகவும் கவர்ந்த ஒன்று.ஆனால் ரோஜா, பம்பாய் ,அலைபாயுதே என பல படங்களில் கேட்டதும் பாடல்கள் பிடித்தது போக அவரின் தற்போதைய படப்பாடல்கள் ஏனோ கேட்க கேட்கதான் பிடிக்கிறது என்பது எனைப்போன்று பலரது கருத்து.அது ஏன் என்று புரியவில்லை .ரஹ்மான் உலகிற்கு காண்பித்தது  தனி இசைபாணி என்பது மட்டும் அல்லாது வெளி உலகிற்கு அறிமுகம் செய்வித்த  நல்ல குரல் வளங்களும்  பல.அவர் ஒரு நல்ல இசை அமைப்பாளர் என்பது மட்டும் அல்லாது அதையும் தாண்டி ஒரு நல்ல உள்ளம் கொண்ட மனிதர் என்பது "எல்லாப்புகழும் இறைவனுக்கே" என்று அமைதி கலந்த அடக்கத்துடன் உச்சரிக்கும் தொனியில் ஏனோ  பளிங்கு போல் தெரிந்திடும்.

 

Wednesday, January 5, 2011

பல பேசும் ஓவியங்களும், 
புரியாத கிறுக்கல்களும்.. 

தனை மறந்து இசையும்,
ரசித்த பிற கலையும்..

கை மறைத்து நாணமும்,
மௌனித்து வெடித்துவிடும்
பட்டாசுக்கோபமும்..

இடையற்ற பேச்சும்,
பல நேர மௌனமும்.. 

அரவணைப்பும்,
சிறு வெறுப்பும்..

நிரந்தரம் எதுவுமற்ற, 
 என்னுள்..
நிரந்தரமானது..
அன்று, 
புன்னகையும்..
இன்று,
கண்ணீரும்..
உன்னால்....

Monday, January 3, 2011

மழைக்காலச்சிதறல்கள்,
சில்லென்று சாளரத்தை  
தொட்டுவிட்டு சரிந்தோட...
புத்தகத்து நடுப்பக்கமாய், 
உனக்குள் நான் குறுகிய   
நம் ஜன்னலோரங்கள்..
வலுநரம்புக்கரங்களவை, 
விரல்களதை களைந்தபடி
சிறிதாய் பருகல்கள்..
அரைக்கோப்பை காபி தனை,
சுவைக்கும் சிறுநொடியில்
எண்ணங்கள் பலதோடும்,
இருவர் எண்ணமதில்...
சிறுதுளிகள் வெறித்தபடி,
விழிகள் எனதும்..
விரல்களதை வெறித்தபடி,
உனதும்..
நிலவும் அமைதிதனை..
மறைவாய் தோற்கடிக்கும்,
திமிர் தொலைக்கும் தற்காலிகத்தில்.. 
மனதோடும் எண்ணங்கள்,
ஏனோ முகம் பார்க்க..
திரும்பி உனை நோக்க,
ஏதோ உணர்ந்தது போல்..
சட்டென்று எதிர்பாரா,
உன்,
முன்னெற்றி முத்தங்கள்..
அதில்,
சரிந்தே மார் முகம் புதைக்கும்,
திமிர் தொலைக்கும் தருணங்கள்...
நம் திமிர் தொலைக்கும்,
தற்காலிகத்தருணங்கள்...