BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Monday, June 20, 2011

                                     இசை,புத்தகம்,Interior designing,ஒவியம்,அவ்வப்பொழுது சினிமா,எழுத்து,சமையல்,எப்பொழுதாவது வெட்டி சிந்தனைகள் என அதே போல்தான் நகர்ந்துகொண்டிருக்கிறது,நேரமும் காலமும்,கூடுதலாக நண்பரகளுடன் தொலைபேசியும்.நான்கு வருடங்களுக்கு முன் கல்லூரியில் சேர்ந்தபொழுது எப்படி இருந்ததோ?!,அவ்வாறே.பொன்னியின் செல்வனை மீண்டும் படித்து முடித்தாயிற்று.கல்கியின் படைப்புகளிலேயே மிகவும் சுமாரானதாக நான் கருதும் மகுடபதியையும்.The monk who sold his ferrari-யின் தமிழ் பதிப்பையும் சேர்த்து முடித்தாயிற்று.பொழுது போக இளையராஜாவின் இசைகளை பாடல்களிலிருந்து பிரித்து எடுத்துக் கொண்டிருக்கிறேன்.முன்பெல்லாம் தொலைபேசி என்றால் "இந்த தூத்துக்குடி பக்கம் திருநெல்வேலி பக்கம் இருக்கும்" என்றிடுவேன்,இப்போதோ?! ப்ராட்பேண்டின் அதிவேக இணைய இனைப்பு அருளால் நண்பர்களைப் பிடிக்க இயலாததால் அதற்கு உதவும் வொடஃபொனும்,BSNL தொலைபேசியும் புதிய நண்பர்களாகிவிட்டார்கள்.BSNL-ற்கு அதிக வருமானம் ஈட்டித் தந்ததற்க்காக அனேகமாக இம்மாத இறுதியில் எங்கள் வீட்டிற்க்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு வந்தாலும் வரலாம்.நண்பர்களுடன் குற்றாலம் அல்லது திற்பரப்பு செல்லலாம் என்று திட்டமிட்டு இருந்தேன்."நீ எங்க கூட இருக்கப்போறதே இன்னும் கொஞ்சநாள்தான்,அப்புறம் வேலை கீலைனு வந்துட்டா எங்க கூட இருக்க முடியாது" என்று அம்மா எதற்கெடுத்தாலும் ஒரே வசனத்தைக் கூற இப்போதைக்கு எங்கும் செல்வதில்லை என்று முடிவுசெய்துவிட்டேன்.இந்த sentiment எங்கே?!எப்பொழுது?! பிறந்ததோ.இப்படியெல்லாம் யோசித்துக்கொண்டு வாசலில் சென்று அமர்ந்தேன் இந்த ராஜஸ்தானிலிருந்து இங்கு வந்து வேலை செய்யும் சிறார் கூட்டங்களைப் பார்த்திருப்பீர்கள் இல்லையா?! அவர்களைச் சேர்ந்தவர்கள் போல,ஒரு சிறுமி,எண்ணெய் தடவாத தலை,வலைந்த சிறு கம்பியாலான ஒரு மூக்குத்தி அணிந்திருந்தால்.என்னைக் கடந்து செல்லுகையில் திரும்பிப் பார்த்து அழகாக சிரித்துவிட்டுச் சென்றாள்,சட்டென்று அது ஏனோ மனதில் பதிந்துவிட அதை பென்சிலால் கிறுக்கியும் ஆகிவிட்டது.அதற்க்கேற்ற வண்ணம் கொடுப்பதற்குள் தம்பியுடன் சிறு சண்டை அதனால் கோபத்தில் அதனை அப்படியே விட்டுவிட்டேன்.அந்த சிறு பெண்ணின் சிரிப்பு மட்டும் மனதில் இப்பொழுது கூட இருக்கிறது சார்.
                   
            சென்ற வாரம் "ஆரண்யகாண்டம்" பார்த்து விட்டு தலைப்பு வைத்தது படத்திற்கா அல்லது தமிழ் சினிமா சென்றுள்ள அடுத்த கட்டத்திற்க்கா?!என்று வியந்து கொண்டிருந்தது இந்த வாரம் அவன்-இவன் பார்த்ததோடு சென்றுவிட்டது.பக்கத்து திரையரங்கில் ஓடிக்கொண்டிருந்த கோ-வையே இன்னும் ஒரு முறை பார்த்திருக்கலாமோ? என்று எண்ணும்படி ஆகிவிட்டது.கதையே இல்லாமல் வெறும் கதாப்பாத்திரங்களையே கடைசி வரைக் காண்பித்து ஏமாற்றிவிட்டார்கள்.மறக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்,படம் பார்த்ததையும்,படத்தையும்.
         அன்பே சிவம்,கன்னத்தில் முத்தமிட்டால்,புன்னகை,kuch kuch hota hai,one flew over the cuckoo's nest  என்று கையில் கிடைத்த படங்களை மீண்டும் மீண்டும் போட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.அன்பே சிவம்,கன்னத்தில் முத்தமிட்டால் எல்லாம் படமே இல்லை சார்,அதையும் தாண்டி,திரைப்படம் என்ற சிறுவார்த்தையில் அதனை எல்லாம் சுருக்கிவிட முடியாது.புன்னகை ஜெமினியின் பாத்திரப்படைப்புக்காகவே பார்க்கலாம்.
          வெரைட்டி ஊத்தப்பம் செய்துபார்த்தேன்(as a result of innovativeness).ஐந்து வகையில்,வீட்டிற்க்கு வந்திருந்த குட்டீஸ்களுக்காக,எழுந்து செல்லவில்லை அவர்கள் ஆக அதுவரையில் முயற்சி நன்றாக வந்தது என்றே வைத்துக் கொள்ளலாம். சிறுவயதில் நான் வீட்டுச்சுவற்றில் கிறுக்கியதை எல்லாம் அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்தாகிவிட்டது.அம்மாவின் "நல்ல பொழப்பு" என்பது போன்ற வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு.சிறுவயதில் மாதக் காலண்டரின் பின் புறம் வரைந்த ஒரு தவழும் க்ருஷ்ணன் ஒவியத்தை தேடிக் கொண்டிருக்கிறேன் இன்னும் கிடைத்தபாடில்லை.மிகவும் பிடித்த ஒவியம் அது :( ஒரு ஃபைலில்தான் சார் வைத்திருந்தேன் நோட்டு அட்டையில் இருந்த குந்தவையுடன் சேர்ந்து இவரும் காணாமல் போய்விட்டார்.
        ஜூலை 1  நெய்வேலியில் புத்தகக் கண்காட்சி மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் செல்கிறேன். அந்த லிட்சிப் பழ ஜூசிர்க்காகவும் ;).இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே திட்டம் தீட்டியாகிவருகிறது.நானும் அப்பாவும்.     
        இப்படியெல்லாம் எவ்வாறெல்லாமோ கவனம் எப்பொழுதும் போல் எங்காவது திரும்பினாலும், காலையில் விழிக்கையில் இன்று நாம் எட்டு நாப்பதுக்கு வகுப்புக்குச் செல்லவேண்டிய தேவை இல்லை.அந்த வகுப்பறையில் உள்ள இருக்கையில் இன்று அமர வேண்டிய நிலை இல்லை.காலையில் எழுந்ததும் காபி குடிக்கச் செல்லுகையில் அந்த புல்வெளியைக் காணமுடியாது ,அந்த வார்டனின் அனுதின வசவுகளைக் கேட்கத்தேவை இல்லை என்று இது போன்ற சிறு சிறு ஆனால் அழகான விஷயங்களை இழக்கும் உணர்வை மனதால் வெளிப்படுத்தாமல் இருக்கமுடியவில்லை.இந்த உணர்வு சிறிது காலத்திற்க்கு மட்டுமே இருக்கலாம்.வருங்காலத்தில் Nostalgic என்று பேசப்படுவதில் ஒன்றாகவும் மாறலாம்.ஆனால் இப்பொழுது,இந்நொடி அது ஒரு இழப்பே.ஒரு நாளைக்கே மொத்தம் 86400 தருணங்கள் இருக்கு சார்.நான்கு வருடங்கள்!, நினைத்துப் பாருங்கள் எவ்வளவு தருணங்கள் இருக்கும் என்று.

Friday, June 17, 2011

என் கனாவில்..என் கனாவில்...

ஒரு நாள் உன் வாழ்வென்றால்
என்ன வரம் கேட்பாய்?
என்றது கனவில் உதித்த இருள்தோற்றக் கடவுள்
என்னவனுடன் எந்நொடியைக் கழித்திட விருப்பமென்றேன்
உச் கொட்டி
முகம் சுருக்கி
எனை நோக்கி இருள்தோற்றம்
தனித்துவம் சிலாகிக்கும் நீயும் அவ்வாறுதானா?
என்றே பொறுமையற்று
கேள்வி ஒன்றை போர்தொடுக்க
புன்னகையை உதிர்த்துவிட்டு
கால் அனைத்து அமர்ந்திருந்தேன்

இதற்கான பொருள் என்னவோ புரியாத புதிர்ப்பெண்னே?,என
நன்றாய்த்தான் இருக்கிறது
இறையின் தமிழ் இலக்கணமும் என்றேன்
அதுகிடக்க ஒரு புறம் 
அது என்ன அனைவரும் ஒரு போல ஒரே பதில்?!
துணையுடன் தன் நொடியைக் கழித்திட விருப்பம் கோரி
என கேள்விக்கனை மற்றொன்றைத் தொடுக்க
இருளுக்கு வெளிச்சம் விடையில் விளைந்தது

அவன் வரை அவன் அன்னை
பாசம் தருபவள்
பணிவிடை செய்பவள்
உதவும் நட்பு போல்
அவள் வரை அவன் என்னவென்று அருகிருந்து உணர எண்ணம்

அவன் வரை அவன் தந்தை
தாயின் நிலைகூட
இல்லாத கனவான்
மரியாதை என்பதொன்றே
இவ்வுறவிற்க்கான அவன் பாலம்
அவர் வரை அவன் என்னவென்று அருகிருந்து உணர எண்ணம்

அவன் வரை அவன் தம்பி
செல்லபிராணி என்பான்
தீராத இம்சை என்பான்
எலியும் எலியும் மோதக் கண்டால்
இவர்களின் இரு உருவே பிரசன்னமாகும்
அவன் வரை அவன் உறவு என்னவென்று அருகிருந்து உணர எண்ணம்

அவன் வரை அவன் நட்பு
நாலொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்
நட்பென்று வந்துவிட்டால் அவன் நிலை அவ்வாறே
கனநேர நெருக்கங்கள் கனத்துவிடும் சில நேரம்
யாவர் இவர்கள் வரை அவன் உறவு என்னவென்று அருகிருந்து உணர எண்ணம்

அவன் வரை அவன் காதல்
சில நேரம் அவள் என்பான்
சில நேரம் இவள் என்பான்
எந்நேரமும் எனக்கெந்தன் இசை என்பான்
அவள் வரை இசை வரை அவன் உறவு என்னவென்று அருகமர்ந்து உணர எண்ணம்

இருளே விடை புலர்ந்ததோ உமக்கங்கு? என்றேன்
இருள் சிரிக்க
துயில் புலர்ந்தது எந்தன் இளங்காலை
கடவுள்
இருள் விலக்கி போர்த்தியிருந்தான்
படர் மணலும் பசுமையையும்
மணல் மீது நீர் மகரந்தங்களையும். 


Wednesday, June 8, 2011

கல்லூரி முடிந்துவிட்டதால் தற்காலிகமாக சொந்த ஊரில் சிறிது நாட்கள் முகாம்.கேட்ட செய்திகளில் பலது பள்ளியிலும் கல்லூரியிலும் கூடப்படித்த சிலருக்கு திருமணம் என்பதே.மகிழ்ச்சிதான்,ஒரு குடும்பத்தை சுயமாக நிர்வகிக்கும் பொறுப்பு வந்துவிட்டால் திருமணம் செய்வதில் தவறில்லைதான்.என் நெருங்கிய தோழிக்கும் திருமணம்,அடுத்த மாதமாம்,"சார் என்ன செய்யறார்"-னு கேட்டதற்கு இதுதான் பதில் டெல்லியில் இனிப்புகள் மொத்த விற்பனைக் கடை வைத்திருக்கிறார் பன்னிரெண்டாவது ஃபெயில் என்றாள்.படிப்பறிவற்ற அவள் அண்ணனுக்கு விரைவில் திருமணம் செய்யும் பொருட்டு இவளுக்கு திருமணம்,தனக்கு விருப்பம் இல்லையெனினும் வேறுவழி இல்லை என்றாள்.அவளது அதைரியத்தையும் தயக்கத்தையும் எண்ணி ஆத்திரம்தான் வந்தது.நேரில் சந்தித்தால் நான் அவள் மனதை மாற்ற முயற்சிப்பேனாம் அதனால் என்னை சந்திப்பதையும் தவிர்த்துக் கொண்டிருக்கிறாள்.
               இது ஒரு புறம் இருக்க,இந்த சாதி மத பேதம் ஒழிந்தது,முன்னொரு காலத்தில் இருந்தது போல் கொடுமை இப்பொழுது நிலவவில்லை என்று கூறும் மகான்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.மேடம்!நீங்கள் உங்கள் நட்பை,பெற்றொரோ அல்லது வேறு எதோ உறவினருக்கோ அறிமுகம் செய்து வைப்பீர்கள்,நட்பு அந்த பக்கமாக நகர்ந்தவுடன் இங்கே நம் உறவு ஒரு கேள்வி கேட்கும் "அவங்க நம்மவங்களா?சும்மா சாதாரணமாத்தான் கேக்கறேன்''.ஏதாவது அக்கம்பக்கதினரிடம் பேசிக்கொண்டிருக்கையில் திடீரென "உங்களவங்கள்ள இந்த மாதிரி பழக்கவழக்கம் எல்லாம் உண்டா?"என்பது.இது போன்ற கேள்விகளை இதைப் படிக்கும் நீங்கள் சந்தித்திருக்காவிடினும் பள்ளி நண்பர்கள் தொடங்கி சொந்த பாட்டி வரை என சிறுவயதிலிருந்தே,இதோ இங்கு இதனை புலம்பும் நான் சந்தித்தது உண்டு.இது போன்ற கேள்விகளுக்கு மூன்றுவிதமாக நாம் பதிலளிக்கலாம்,கேட்பதற்கு ஏற்ற பதிலை மட்டும் கூறிவிட்டு நகர்ந்துவிடுவது.இது போன்ற கேள்விகள் வேண்டாமே?என்று பதில் அளிப்பது,ஏன் பதிலே அளிக்காமல் இருப்பது கூட ஒருவிதமான பதில்தான்.மூன்றையும் அமல்படுத்தியாகியும்விட்டது.நாகரிகம் வளர்ந்து வருவதற்க்கு ஏற்ப "மனரீதியாக சாதியக் கொடுமை" என்கிற அளவிற்கு வளர்ந்துவிட்டது.எம்.ஜி.ஆர் முடிந்து ரஜினி முடிந்து விஜய் என்பது போலத்தான் இதுவும்.
              பல நாள் கழித்து பள்ளித்தோழியை கோவில் சென்றபோது சந்தித்தேன்,நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.அப்பொழுது அவளிடம், "என்ன கேவலமான சமூகம் இது?"என்றபொழுது."எதுக்கு இப்படி ஒரு ஃபீலிங்க்ஸ்" என்றாள்.
              நீயே பாரேன்?,குழந்தைய கிள்ளிவிட்டு அழகு பாக்கற மாதிரி,தனக்கு இந்த மாதிரி ஒன்னு நடக்கறத கூட தட்டிக் கேட்க முடியாத ஒருத்தி,வெளியில கருனை பாசம் அது இது-னு பேசினாலும் மனசுக்குள்ள ஏதோ ஒரு மூலையில் இந்த மாதிரி கொடூரத்தை புதைச்சு வெச்சுட்டு இருக்கற இந்த மனுஷங்க.இந்த அழுக்கோட அழுக்கா,சூழ்நிலை அதுஇது-னு காரணம் சொல்லி கலந்துடற நாம.இப்படி ஒரு அழகான சமூகம்,நீ,நான்,நாம எல்லாரும். பாரதியாருக்கு தெரியல எதிர்காலத்துல தன்னொட வரிகள் எல்லாம் சினிமாவுக்கும் காதல் செய்யறவனுக்கும் காதல் செய்யப்போறவனுக்கும்தான் பயன்படப்போகுதுனு, மனுஷர் எழுதி இருக்கமாட்டார்,எழுதி இருந்தாலும் நம்ம கண்ணுல படற மாதிரி வெச்சு இருக்க மாட்டார்", என்றேன்.
              அவள்,"இது எல்லாம் இப்படித்தான்,மாத்தமுடியாது,நீயும் இதை திருப்பி திருப்பி சொல்லறதுலயும் ஒன்னும் நடக்கப் போறது இல்ல"என்று ஒரு வரியில் முடித்துவிட்டாள்.
              இதில் யதார்த்தம் என்பது எந்நிலை?!எவர்நிலை?!.புரியவில்லை.