BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Saturday, September 24, 2011

சுஜாதாவும்..! சுஜாதாவும்..!


         அர்த்தங்களைத் தேடித் துவங்கும் வாரநாட்கள் வார இறுதியில் அந்த அர்த்தங்களாகவே மாறிவிடும்.அட! வாழ்வு என்பது இவ்வளவுதானா?!,என்று உறங்குவதற்குக் கண்களை மூடும் சமயம் தோன்றும் ஞாயிறு இரவுகள்,திங்கள் அன்று அடுத்த பிரம்மாண்டத்தை நோக்கிக் கண்களைத் திறக்கும்வரை.இந்தவாரம் கூட அப்படித்தான் துவங்கியது தோழி ஒருத்தியின் குறுஞ்செய்தியுடன். "And thr starts another week :(" என்று. அதற்கு "and thr awaits one happy end  too,Lolita morning :),Adventurous n pleasant day(s) ahead "  என்று பதில் அளித்துவிட்டு காலையைத் துவக்கினேன்.சொன்னதுபோல்தான் இருக்கவும் செய்தது வார இறுதி. சத்யமில் "எங்கேயும் எப்போதும்"-மா அல்லது நந்தம்பாக்கத்தில் தோழி ஒருத்தியுடன் சூப்பர் சிங்கரா என்ற இரு தேர்வுரிமையில், நான் கண்டிப்பாக அப்படத்தை ரசிப்பேன் என்று என் மாமா 
சொல்லி,முன்னமே டிக்கெட் புக் செய்திருந்த காரணத்தால் முதலாவதைத் தேர்வு செய்தேன்.பயிற்சி காலங்களில் விடுப்பு தர இயலாது என்ற மேனேஜரிடம் "சார்!படம் பார்க்கச் செல்ல அனுமதி வேண்டும்",என்று நேரடியாகக் கேட்டதும் முதலில் முறைத்தாலும் பின் சிரித்துவிட்டு அனுமதி தந்தார்.ஒன்றரை மணி நேரம் முன்னதாகவே அலுவலகத்தை விட்டுத் துவங்கியது வெள்ளிக் கிழமை வார இறுதி.
         "எங்கேயும் எப்போதும்"- இசை இன்னோரு முறைக் கேட்டால் பிடித்துவிடும் என நினைக்கிறேன்.மற்றபடி வாழ்வின் யதார்த்த நிகழ்வுகளை யதார்த்தமான பாத்திரங்களின் யதார்த்தமான நடிப்புகளோடு நகர்த்திச் சென்றுள்ளார்.fox-உம் ஏ.ஆர் முருகதாசும் சேர்ந்து தயாரிக்கும் அளவிற்கு படத்தில் என்ன இருக்கும் என்ற எதிர்பார்போடு சென்றேன்.ஆனால் படம் துவங்கிய நொடிமுதல் அந்த இருவருமே நினைவில் வரவில்லை.பார்த்து வெளியேவருகையில் ஒரு திருப்தி மட்டும்.நடுநிசி நாய்கள் படத்தை GVM இறுதியில் ஒரு டாகுமெண்டரி கதையாக மாற்றியது போல் சரவணன் தவறு செய்யாது அழகாக காட்சிக்குக் காட்சி நகர்த்திச் சென்றுவிட்டார்.அஞ்சலி தன் காதலை வெளிப்படுத்திய விதம் கண்டு.கல்லூரிக்கு சான்றிதழ்கள் வாங்கச் செல்லுகையில் பேருந்தில் அருகில் அமர்ந்திருந்தவர் ரத்ததான அட்டை ,கண்தான அட்டை தன் கையில் வைத்திருந்தார் என்ற ஒரே காரணத்திற்க்காக அவரைக் கேள்வி கேட்டு துளைத்ததுதான் நினைவில் வந்தது.பாவம் அம்மனிதர்.
             படம் முடித்து வீடு திரும்ப,பூஜா தொலைக்காட்சியில் "அன்பே இது நிஜம்தானா?!" என்று பாடத் தொடங்கி இருந்தார்",பலருக்குப் பிடித்த பாடல் எனினும், பெரும்பான்மையான மக்கள் கூட்டத்தை கவரும் அளவிலான பாடல் அது இல்லை."நல்ல பாட்டுதான்.ஆனா லார்ஜர் மாஸ்-க்கு இது ஒத்துவராதே மாமி இவோ ஏன் இந்த  பாட்ட எடுத்துருக்கா?!",என வீட்டு வாசலில் இருந்து சொல்லிக்கொண்டே வந்தேன். "தெரில!முதல் ரௌன்ட்ல நல்ல பாட்டு,மன்னவன் வந்தானடி! பாடினா" என்று பதில் அளித்தார் அவர்.அந்த பதிலை முதலில் என்னால் நம்ப முடியவில்லை, காரணம். நான் வியாழன் அன்றே அலுவலக நண்பர்களிடம் "பூஜா மன்னவன் வந்தானடி பாட சான்சஸ் நிறையா இருக்கு" ,என்று கூறிக் கொண்டிருந்தேன்.ஏனெனில் சென்ற முறை அல்காவின் "சிங்கார வேலனே"  ,மக்களைப் பெரிதளவில் சென்றடைந்தது.அதற்கு நிகராகத் தரவேண்டும் என்றால் அது போன்ற பாடலைத் தான் பூஜா பாடுவார் என்ற எண்ணம்."மறைந்திருந்து பார்க்கும்",பாடலை அவர் முதலிலேயே பாடிவிட்டதால் இப்பாடலைப் பாடுவார் என்று ஊகித்தேன்.மேலும்,"மயக்கம் என்ன?" படப் பாடல் கேட்டு பிடிக்காவிடினும் அதனை முணுமுணுத்துக் கொண்டிருந்தேன் அதிலிருந்து மீள்வதற்காக , ஐபாடில் "மயக்கம் என்ன?! இந்த மௌனம் என்ன?!" பாடலை கேட்டுவிட்டு அதற்கு முன்பிருந்த "மன்னவன் வந்தானடி!" பாடலை வியாழன் மதியம் யதேச்சையாய் கேட்கத்துவங்க,"கண்டிப்பாய் இதைத் தான் பாடுவார் பூஜா!".என்ற எண்ணம் ஆழமாகப் பதிந்துவிட்டது.கௌஷிக்கும் இல்லை ஸ்ரீநிவாசும் இல்லை,சத்யாவையும் சந்தோஷையும் தேர்ந்தெடுக்கமாட்டார்கள் என்று தெரியும்,சாய் பாடுவது பிடித்தாலும் அவரைப் பிடிக்கவில்லை.ஆனால் கண்டிப்பாக பூஜா அல்லது சாய்தான் தேர்வு செய்யப் படுவார்கள் என்று இருவேறு காரணங்களுக்காக தோழியிடம் கூறி இருந்தேன்.கௌஷிக்கை விடுத்து சாய்-யை வைல்ட் கார்ட் ரௌன்டில் தேர்வு செய்தபோதே அதை முடிவும் செய்துவிட்டேன்.விஜய் டிவி வரவர, தன் முந்தைய படங்களில் நடித்தவர்களைத் தன் அடுத்த படத்தில் ஆங்காங்கே சிறுசிறு பாத்திரத்தில் நடிக்கவைக்கும் வெங்கட்பிரபு போல் ஆகிவிட்டது.கௌஷிக்கை அக்கூட்டத்தில் ஒருவராகப் பார்த்ததும் மனசு ஆறவில்லை சார்!.
பாடல்களைப் பாடுபவர்களுக்கும் நிகழ்ச்சியாளர்களுக்கும் ஒரு வேண்டுகோள் முதலில் இந்த trademark பாடல்களைவிட்டு வெளியே வாருங்கள்.இந்த ஸஸ ரிரி உடைய பாடல்கள் எல்லாம் அரைகுறை இசைஞானம் உள்ள பாமரத்தால் மட்டுமே ரசிக்க முடியும். பாமரர்களில் பலர்,பாடல்கள் பிரபலம் என்ற ஒரே காரணத்திற்காகவே அதற்குக் கைகளால் அபிநயம் பிடித்துவிட்டு நகர்ந்துவிடுகின்றனர்.
              சனிக்கிழமையும் அலுவலகம் உண்டு ஆனால் பணி மட்டும் வேறு.பணி என்று சொல்லுவதை விட,விலைமதிப்பற்ற தருணம் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். சென்னை வரும் நாட்களில் முன்பெல்லாம் நேரம் கிடைக்கையில் அன்னை இல்லம் செல்வதுண்டு.இப்போதுள்ள அலுவலகத்தில் சனிக்கிழமைகளில் அன்னை இல்லம் அல்லது வரதப்பர் சிறுவர்கள் இல்லத்திற்கு வார இறுதிகளில் அவர்களாகவே எங்களை அனுப்பி வைக்கிறார்கள்.கேட்கவா வேண்டும்?!.வார இறுதியிலோ அல்லது வார நாட்களிலோ கூட அங்கு சென்றுவிடுவது உண்டு.இந்த வாரம் வரதப்பரில்,வெளி உலகம் ஆச்சரியப் படும் அளவிற்கு திறன் உள்ள பிள்ளைகள் அனைவரும்.இந்த வாரம் சந்தித்தது இரண்டு சுஜாதாவையும்,ஒரு ஜோதிகாவையும்,ஒரு ஈஸ்வரனையும்.அப்பிள்ளைகளின் பெயர்கள்.முதலில் பெயர் கேட்கையில்,"அவ பேர் ஜோதிகா கா,அவன் பேர் ஈஸ்வரன் கா,எங்க பேறு சுஜாதா கா",பேருக்கு ஏத்தமாதிரியே "அளகு" பண்ணிட்டே இருக்கும் கா அது" என்றால் ஒரு சுஜாதா.ஈஸ்வரன் தன் பெயருக்கு ஏற்றார் போல் நடனம். ஆடிக்கொண்டே இருந்தான்,"புலி உறுமுது புலி உறுமுது" என்று.மற்றவர்களைத் தவிர்த்து அவன் மட்டும் கடந்த இரு வாரங்களாகப் பழக்கம். 

நான்: daaaai! வேற  ஸ்டெப் மாத்தி ஆடுடா. 

ஈஸ்வரன்: akkaa!நீங்க  அதுகூட ஆட மாட்டிங்க போங்க.
நான்: daaaai!அதெல்லாம் இல்ல கத்துகிட்டேண்டா சின்னவயசுல,ஒரு நாள் என் பக்கத்துல ஆடிட்டு இருந்த பொண்ண என் கூட compare பண்ணி மிஸ் திட்டினாங்களா அது பிடிக்கல.நின்னுட்டேன்.அதுக்கு அப்புறம் ஆடறதும்  இல்ல.
(அதற்குள் வேறு ஒரு பெண்,அக்கா எனக்கு இங்க வெச்ச பேறு சுப்பலக்ஷ்மி ஆனா பாதர் வெச்ச பேருதான் சுஜாதா என்றாள் )
நான்:அப்படியா! எனக்கு சுஜாதா பேறு எவ்ளோ! எவ்ளோ! பிடிக்கும் தெரியுமா?!எனக்கு தெரிஞ்ச சுஜாதானு ஒருத்தர் நல்லா நல்லா எழுதுவாரு! இன்னொருத்தவங்க நல்லா நல்லா பாடுவாங்க! எனக்கு அவங்கள அவ்ளோ அவ்ளோ பிடிக்கும். 
 (இரண்டு சுஜாதாவும் கண்கள் விரிய )
சுஜாதா1:அக்கா அக்கா அந்த ரெண்டு பேரையும் கூட்டிடுவாங்ககா என 
நான்:அச்சோடா!ரெண்டு பேருமே முடியாதேடாமா!? :O
சுஜாதா2: ஏன்கா?!
நான்:அவரு வானத்துக்கு டாடா பை பை போயிருக்காரே.இன்னொருத்தவங்க,அவங்கள எனக்குத் தெரியும் ஆனா என்ன அவங்களுக்குத் தெரியாதே                  
சுஜாதா1:அப்ப அவங்க போட்டோவாவது எடுத்துட்டுவாங்கக்கா.
சுஜாதா2:அப்ப நானும் அவரமாதிரி நல்ல எழுதுவேனா அக்கா 
நான்: ஹ்ம்ம் எடுத்துட்டுவரேன்,.ஏன்!?அவரவிடவே நல்லா எழுதப் போற பாரேன்.
ஜோதிகா:அக்கா அடுத்தவாட்டி வரப்போ எனக்கு இன்னிக்கு போட்ட மாதிரியே hairstyle போட்டுவிடுங்கக்கா.அப்டியே ஒரு பட்டாம்பூச்சி கிளிப்பு வாங்கிட்டுவாங்கக்கா.   
நான்:ஹ்ம்ம்! சரி,ஜோ குட்டிக்கு ஒரு கிளிப் பார்சல்.சரி இன்னிக்கு என்ன படிக்கலாம்?!வெளையாட்டுக் கணக்குப் போடலாமா என்று மரத்தடிக்கு அழைத்துச் சென்றுவிட்டேன்.
ஐந்து மணிக்கு வீட்டிற்குப் பயணம். வீட்டில் இருப்பவர்கள் ஷாப்பிங்கிற்குத் தயாராகிக் கொண்டிருக்க அப்படியே கிளம்பியாயிற்று.சுஜாதாக்களுக்கு சிறுவர்கள் புத்தகமும்.ஜோதிகாவிற்கு க்ளிப்பும் வாங்கிக்கொண்டு திரும்பினேன்.
வாரத் தொடக்கத்தில் அனுப்பிய குறுஞ்செய்தி முதலில் சரியாக சென்று சேராததால் ட்ராப்டில் சேமிக்கப்பட்டு,  இன்னும் இருக்கிறது.