BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Sunday, June 17, 2012

இவள் இசைக் காதலி...!

                        ஜூன் 15 மலேசியா வாசுதேவன் பிறந்தநாளாம், இணையத்தில் இருப்பவர்கள் வாழ்த்துக்களை அள்ளிச் சொரிந்திராது இருந்தால் எனக்கு தெரிந்தே இருந்திருக்காது, ஆனால் அந்த காரணம் எல்லாம் எதுவும் இல்லாமல் நான் அன்று கேட்டுக்கொண்டிருந்த பாடல் 'என்றென்றும் ஆனந்தமே!!',அந்த வயலின் ,கீ,  ட்ரம் பேட் என அனைத்தும் ஒருங்கிணைந்து ஒரு அழகு என்றால் , திடீரென்று சத்தமில்லாமல் வந்துவிட்டு நம்மை ஆனந்தப் படுத்திவிட்டு செல்லும் அந்த குழலோசை மற்றுமோர் அழகு.பாடல் அமைந்த ராகம் ஸரஸாங்கி.இதே ராகத்தில் அமைந்த மற்ற  சில பாடல்கள் 'மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ!', 'மகராஜனோடு ராணி வந்து சேரும்!'...இந்த ஒற்றுமை எல்லாம் விடுத்து இந்த பாடல்களில் புலப்படும் மற்றுமொரு விஷயம் அந்த புல்லாங்குழல் , அணைத்து வாத்தியக் கருவிகளும் உபயோகப் படுத்தப் பட்டிருந்தாலும், குழலினை மட்டும் ஆங்காங்கே தனித்து உபயோகித்திருப்பார் இளையராஜா. இந்த பாடல் இப்படியென்றால் 'நீ பாதி  நான் பாதி' பாடல், அதே குழலிசைக்காகவே பலரின் மனத்தைக் கொள்ளையடித்த பாடல் சக்கரக் கட்டி சக்கரவாகம் இந்த பாடல் ,இதே போல் அதே வரிசையில் வரும் வனிதாமனியும்,வானிலே தேநிலாவும், குழலாகப் பிறந்து தன்னை வயலினாக இசை மாற்றிக்கொள்ளும் அந்த கருவி..என் செல்ல சாருகேசிக்கும்(காதலின் தீபம் ஒன்று,மயங்கினேன் சொல்ல தயங்கினேன்,அரும்பாகி மொட்டாகி ) , காப்பிக்கும் (சங்கத்தில் பாடாத கவிதை, சின்னத்   தாயவள்,கண்ணே கலைமானே..) குழலுடன் குரல் ஜாலமாய் அந்த வார்த்தைகளற்ற ஹம்மிங் பகுதிகள், இந்த ராகங்களுக்கு புல்லாங்குழல் பதிக்கப்பட்டது என்றால். அடுத்து நரம்பினால் தொடுக்கப்பட்ட ராகங்கள் என்றால் சிம்மேந்திர மத்யமமும்(தாலாட்டும் பூங்காற்று ,ஆனந்த ராகம் போன்ற பாடல்கள்),சிவரஞ்சனியும்(வா!வா!அன்பே அன்பே! ), நம்மை எப்படியெல்லாம் ஊடுருவி உருக்கிவிடலாம் என்பதற்காகவே பயன்படுத்தப்  பட்டிருக்கும் வயலின் தந்திகள்..இந்த பதிவை எழுதத் தொடங்கும் முன் நான் படித்த பக்கங்கள் இதோ இந்த பதிவும்  அதன் தொடர்ச்சிகளும் தான்  http://bit.ly/LSIUNe ..என்னுள் எழுந்த கேள்விக்கு இங்கு பதில் அகப்படுகிறதா என்று தேடிக்கொண்டிருந்தேன்..பதில் கிடைக்கவில்லை எனினும் எனுள் எழுந்த கேள்வியை இன்னும் கூர்மைப் படுத்திக்கொள்ள மிகவும் உதவியது.என்னுள் வருடக்கணக்கில் அலைந்துகொண்டிருக்கும் கேள்வி இது ,ஆம் மேற்சொன்ன ராகங்களில் அமைந்த பாடல்கள் பெரும்பாலும் அனைத்து கருவிகளையும் உபயோகித்துக் கொள்கின்றன தன்னை நளினப் படுத்திக்கொள்ளவும் மெருகேற்றிக்கொள்ளவும்,சட்டென்று கேட்பவரை ஈர்த்துவிடவும் ,ஆனால் ஏதோ ஒரு இசைக்கருவி மட்டும்தான் அந்த மெட்டிற்கு, ஆயிரம் சிப்பிகள் ஆழத்தில் இருந்தாலும் ஏதோ ஒன்றிடம் மட்டுமே தன்னை முழுதுமாய் அளித்துவிடும் அந்த கடல் நீர்த்துளி போல் ஆகிவிடுகிறது.இது ,இன்னார்க்கு இன்னாரென்று மனிதர்களிடை ஒருவன் தேர்வு செய்வது போல் இசையிடை  இன்ன ராகத்திற்கு  இக்கருவி  என அவன் தேர்வு செய்ததா?. ஆனால் அந்த குழல் காற்று போல், அந்த நரம்புகள்  போல் என் உணர்வுகளைச் சோதித்துக் கொண்டிருப்பது, மனிதர்களாய் இருப்பினும் இருக்காது.

(பி .கு),என்னடா இவள் இசையைப் பற்றி ,நாம் புரிந்துகொள்ள முடியாவண்ணம் ராகம் அது இது எனப் பிதற்றுகிறாள்  என்று எண்ணுபவர்கள்,மன்னிக்கவும்.இன்று நாம் புதியதாய் ஒரு வார்த்தை கற்றோம்  என்று எண்ணிக்கொள்ளுங்கள்.ராகம்,தாளம்,பல்லவி, பல்வலி  பற்றியெல்லாம் அறியாது வெறும் இசையை மட்டுமே முழுதும் ரசிப்பவர்களுக்கு அது என்ன  என்பதைப் புரியும்படி சொல்லவேண்டுமாயின், இந்தப் பாடல்களையெல்லாம் வரிசைப் படுத்தி  உன்னிப்பாய்க் கேட்பவராயின்  ஒரே மெட்டில் அமைந்த பாடல்கள் போல் தோன்றும்,அதுவே ராகம் என்பதும் :)..

Wednesday, April 18, 2012

நிறமற்ற மலரிதழின்
விரல் எஞ்சும் வாசம்


காற்றுடன் காதலாகி
வண்ணம் கொஞ்சும் பட்டாம்பூச்சி


விண்ணின்று மண் விழும் இமைநொடியில்  
ஏதொருவன் ரசனையாய்  நீடூறும் மழைத்துளி 


தந்தி ஓலிக்கும்  ஒரு இசையின் 
அந்தம் தோன்றும் வெறுமை


இவை யாவுடன் அடக்கம்,
எந்நொடியும்!
எப்படியும்!
என்றான இவ்வாழ்வு.


இப்படியாய் முடிவிலியாய்,
முடிவுகளும் காரணங்கள்
அன்புடையாள் இவள்,
அவனை அன்பு செய்ய.Monday, February 27, 2012

மௌனமே

       
                 படம் வெளிவந்த புதிதில் ஆங்காங்கே பேசப்பட,படத்தைப் பார்க்க வேண்டும் என்று மனதில் எண்ணிக்கொண்டேன்,கருப்பு வெள்ளை என்றனர் ஆவல் மிகுந்தது.ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டது, பலபேர் பேசிவிட்டனர் ஆகையால் ஆஸ்காருக்குப் பரிந்துரைக்கப்பட வேண்டியதே(!).பொதுவாக ஆஸ்கார் பிடித்ததில்லை,மிகைப் படுத்தப்படும் ஆஸ்கார் திரைப்படத் துறைக்கான உயரிய விருது அல்ல என்னும் ஒரு எண்ணத்தினால்.கிடக்கட்டும்,இதோ ஆஸ்காரையும் வென்றுவிட்டது சிறந்த இயக்குனர்,படம், நடிகர் என எப்போதும் தரப்படும் விருதுகளைத் தாண்டி .சிறந்த அசல் இசை கோர்ப்புக்கான விருதையும் வாங்கியதுதான் இன்றே பார்த்துவிட வேண்டும்  என்று முடிவு செய்ய வைத்தது.நான் படத்தை பார்த்த சூழல் இதுவே ,மதியம் தூங்கி எழுந்த எனது மாமா பையன்,மூன்று வயது சுட்டி.நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பது அறியாது என்னிடம் பேச்சு கொடுத்துக் கொண்டிருந்த என் பாட்டி,அத்தை,மூன்று வயது சுட்டியின் தம்பி ,என என்றும் அமைதி மிஞ்சி இருக்கும்  இல்லம் இன்று கொஞ்சம் சலசலப்பாகவே இருந்தது.இந்த சலசலப்புகளுக்கிடையில் காதுகளில் செவிப்பொறிகளை அணிந்துகொண்டு படம் பார்த்துக்கொண்டு இருந்தேன்.அவர்களது கேள்விகளுக்கும்,கோரிக்கைகளுக்கும், விளையாட்டுகளுக்கும் pause பொத்தான்கள் ஈடுகொடுத்தாலும் மனது ஈடுகொடுக்காமல் "ஒரு ஒன்றரை மணி நேரத்துக்கு என்ன யாரும் தொந்தரவு செய்யாதீங்க pleeeeeeees! " என்றபடி பார்க்கத் துவங்கினேன்.என்னுடன் பேச்சு இல்லையெனினும் அவர்களிடம் ஏதோ ஒரு முனுமுனுப்பு இருந்துகொண்டுதான் இருந்தது.நான்,படத்தை மட்டும் கேட்டிருக்கும்படி உலகம் நிசப்தமானால் எப்படி இருக்கும் என மனதிற்குள் எண்ணிக்கொண்டேன்.படத்தின் கதைக் கருவும் அதுதான்.தனது கலை,தான் வாழ்ந்து சுவாசித்த நடிப்புக் கலை அதை கொண்டு பின்னிய சினிமாத்துறை இதில் ஏற்படும் திடீர் மாற்றங்களை அவன் எப்படிப் பார்க்கிறான் எதிர்கொள்கிறான்  என்று நகர்கிறது கதை.மௌனத்திலிருந்து வேறொரு மொழிக்கு தன்னை பக்குவப் படுத்திக்கொள்ள இயலாத ஒரு கலைஞனின் துடிப்பை மௌனம்,இசை,முகபாவம் என்ற மூன்றின் உதவியோடு செதுக்கி உள்ளார் இயக்குனர்.
            மௌனம்!அமைதி! என்பது பலருக்கு தனிமை என்பதில் மட்டுமே அதிகம் கிடைக்கிறது.ஒரு கலைஞன்  ஏன் தனிமையைத் தேடுகிறான்.மௌனத்திலும், அமைதியிலும்,தனிமையிலும் மட்டுமே ஏன் பெரும்பாலான கலைஞர்களின் படைப்பு உருபெருகிறது.விதையிலிருந்து வளர்ந்து,மலர்ந்து,கனிந்த பழம் வேறு ஒரு வளர்தலுக்கான விதியினை கொண்டிருப்பது போல திரையில் காட்சிகள் அடுத்தடுத்து நகர்கையில் கேள்விகள் அதிலிருந்து கிளைவிட்டுப் பிரிந்துகொண்டு இருந்தது. நம் மனதை அசைத்துப் பார்த்துவிடும் கலையை தன்வசம் வைத்திருப்பவனிடம் வெண்மை போர்த்தப் பட்ட ஒரு மனப்போர் நிச்சயம் உண்டு.கற்களில் நடக்கவிடும்,மலர் அள்ளி வீசிவிடும்,காற்றுக்கு உருவமிட்டும்,மண் எழும் புழுதி தற்செயலாயினும் அதற்கும் உயிர் கொடுத்து உனக்கெதிராய் திருப்பிவிடும் மனப்போர்.கலைஞன்,சுயநலவாதி கூட தன் உணர்வுகளை வெளிப்படுத்தி தன் மனச் சுமையை குறைக்க, ரசிகன் என்று சக இனத்தானையே தேர்ந்தெடுத்தானே.இவ்வரி எழுதுகையில் திரைப்படத்தில் வந்த கதாநாயகன் மீது ஒரு சந்தேகக் கேள்வி எழுகிறது, அவனுக்கு ஐந்தறிவு ஜீவனான நாயும் ஒரு ரசிகன்.அந்த கதாநாயகன் எத்தகையான கலைஞன்?. அவன் மௌனத்தில் நடிப்பை உணர்ந்த அக்காலத்து உயிர்களின் ரசிப்புத் தன்மை.ஆனால்  மெய் யாதெனின் ஒரு ரசிகனின் மனப்பாங்கிற்கு ஏற்ப காலம் காலமாக தன் உண்மைத்துவத்தை அழித்துக்கொண்டு தன்னை  புதுப்பித்துக் கொண்டிருக்கிறது கலை,சிறந்த உதாரணம்: நான் இப்போது எழுதி, பழகி,பேசி ரசிக்கும் தமிழ் என் முப்பாட்டனுக்கு முன் பிறந்த தமிழல்ல.இவற்றிடையில் இக்காலத்து ஜீவனாகிய நான் எவ்வகையில் என்னை ரசிகை என்று சொல்லிக்கொள்ளலாம்.அண்டை வீட்டுக்காரனின்  ரசிகத்தனம் அடுத்தவீட்டு சண்டையின் ஒலி-ஒளியை ரசிப்பதோடு குன்றிவிட்டதை அளவீடாகக் கொண்டா?!.வீட்டிலிருப்போரின் ரசிகமணி புகழாரங்கள் கொண்டா?!.உணர்ச்சிகள்  பொங்க புன்னகை,கண்ணீர்,ஆனந்தம்,ஆத்திரம் என எழும் நவரசங்களை அளவாகக் கொண்டா?!.யான் பெற்ற இன்பத்தை இவ்வையகத்தில் சிறிதில் ஒரு பங்கேனும் பெறவேண்டும் என்ற எண்ணம் அவ்வப்பொழுது எழுவதாலா?!.எனுள் இருப்பது ரசிகையில்லை,இருப்பதாகத் தோன்றின்?!என்றோ ஒருவர் செய்து சென்ற மாற்றங்களுக்கு தானறியாமல் அடிமைப்பட்ட ஒரு நிழல் அவள்.ஆதி கலை ஒன்று வேண்டும் எனுள் ரசிகையினை உணர என்றேன்.தேடல்கள் கண்டது மௌனம் ஒன்றையே.மௌனத்தை உணர ஏதொன்றும் தேவையில்லை அம்மௌனம் தவிர.இருப்பினும் அதன் அமைதிக்கு உருவம் தேடுகிறது மனம்.                       
        

Wednesday, February 1, 2012

கண்டேன் கண்டேன்..

நீண்ட நெடுஞ்சாலை இல்லை,
பூத்திருக்கும் கிளைகள் இல்லை,
செவியனைக்கும் அமைதி இல்லை,
கண்டதெல்லாம் 
பல உருவம்,
பல நிறங்கள்,
இரயிலடியின் சலசலப்பு ,
இருப்பினும் அதில் கண்டேன்
நிறமொத்த கரம் இரண்டில்,
பிணைவு மொழியை.  
அவன் நோக்கி அவள் நிமிர்ந்தும்,
அவள் பார்த்து அவன் சாய்ந்தும்,
புன்னகை மட்டும் முகம் பூக்க,
பேசின யாவும் கரங்கள் மட்டுமே.
இல்பொருளாய் அங்கு கண்டேன்,
நெடுஞ்சாலையும்,
பூமரமும்,
கரங்கள் நமதும்,
காதல் அதிலும்.

Saturday, January 28, 2012

முற்றில் பாதை..

முற்றற்று இருக்கலாம், 
தொடுதல் தீண்டலன்றி,
கதை பிறக்கும் கணங்கள்.
விழிமை மலர,
செவிமடுத்த சேதிகள்.

பேச்சற்ற பொழுதில்,
பாடலாய்,
உரை நிகழ்வாய்,
தமிழ் வரியாய்,
நீளம் கொள்ளும்
நம்மிடை இழைகள்.

முற்றற்று இருக்கலாம்,
அப்புறம் என்று சொல்லி,
அக்கம்பக்கம் பார்க்கையில்,
நமக்காய் கிடைத்துவிடும்
பேசுபொருள்.

முற்றற்று இருக்கலாம்,
வயலின் தந்திகளை,
இசைக்காய் கரம் இசைத்திருக்க,
இதழோரம் மென்னகைத்து,
காதலின் மேல் எழும் காதல்.

முற்றற்று இருக்கலாம்,
நீயும் நானும்,
நமது என்றான எதுவும்.
 

Wednesday, January 18, 2012

காத்தோட தூத்தலப் போல..

                உலக அளவில் கொலவெறியை வெறியோடு ரசித்துக்கொண்டிருப்பவர்களிடையே ,அதே உலகில் அதே வெறி கருவான நாட்டில் உள்ள அதே ஊரில் அக்கொலையை வெவ்வேறு கொலைகளத்தில் வெவ்வேறு ஆயுதங்களுடன் நிகழ்த்தியவர்களிடையே அமைதி தேடி அமர்ந்தபோது இந்த இரு பாடல்களும் கிடைத்தன.அவ்வாறு கேட்டுக்கொண்டிருந்த ஒரு விடுமுறை நாள் மதியத்தில் அருகில் வந்து அமர்ந்தான் என் குட்டித் தம்பி.எப்போதும் அவனைத் தூங்க வைப்பதற்காக அவனுக்குப் பிடித்த பாடல்வரிகளை முனுமுனுப்பது வழக்கம்.இல்லையெனில், ஐபாடின்  செவிப்பொறிகளை நான் ஒன்றும் அவன் ஒன்றுமாக காதினில் அணிந்துகொண்டு உறங்குவதும் உண்டு.அன்று மதியம் நான் கேட்டுக்கொண்டிருக்க எதேச்சையாக அவனாகவே காதினில் ஒரு பக்கத்துச் செவிப்பொறியை எடுத்து அணிந்துகொண்டு  கேட்கத்துவங்கினான்.அன்றிலிருந்து இரவு நேரங்களில் பெரும்பாலும் இவ்விருபாடல்கள்தான் அவனுக்கு "ஆரிராரோ!".நான் இங்கு ஒரு பக்கம் பக்கங்களைப் புரட்டிக்கொண்டிருக்க பின்னிரவு வாக்கில் அவன் பக்கம் நோக்கினால் அந்த பிஞ்சுக் கரத்தில் இந்த ஐபாடினை கரத்தில் அடக்கமாய் வைத்தபடி உறங்கிவிட்டிருப்பான்.கேட்டபொழுதுகளில் அவனுக்கு ஒரு சில வரிகள் கற்றுத்தர அழகாய் பாடவும் முயற்சிக்கிறான் மழலைத்தமிழில்.அந்த மழலையின் தமிழ் கூட காற்றோடு
தூறலைப் போலத்தான் இருக்கின்றது  பாடிக் கேட்கும் ஒவ்வொரு முறையும்.  மனதிற்கு மகிழ்ச்சி தரும் குளுமை,காற்றாலா? நீர்த்தூறலினாலா?! என்பது போல. அழகு,மழலையாலா?! அல்லது அந்த பாடல்களினாலா?!  எனப்புரியாமல்.