BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Tuesday, July 26, 2011

எப்பொழுதும் உன் கற்பனைகள்..


இரவுகள் இங்கு உண்டு
கரங்களை குவித்தபடி,
அதனை இதழ்மேல் சாய்த்தபடி,
நிலா முற்றத்தில் நடந்தபடி,
வான் தாரகைகளை நோக்கி,
அதை எண்ணுவதாய் நடித்தபடி,
முழு நிலவு அதனில்,
பிரிந்திருக்கும் உந்தன் 
முகத்தினைத் தேடிய
இரவுகள் இங்கு உண்டு  

விடியல்கள் இங்கு உண்டு
நீராடி நல்லுடை சூடி,
உன் விழிப்புக்காய் உன் அருகே அமர்ந்திருக்க,
மார்கழியாய் உரைந்துபோன கன்னங்களில்,
ஆடித்தென்றலாய் உன் விரல் தீண்ட,
அதிகாலைக் கனவுகள்,
நாணத்தில் முடிந்த  
விடியல்கள் இங்கு உண்டு.

காலைப் பொழுதுகள் இங்கு உண்டு
அளவாய் சமைத்துவிட்டு,
இடையே சிறு சண்டையிட்டு,
கொஞ்சலிட்டு,
வம்பும் செய்து,
இறுதியில் அவசரமாய் அலுவலகம் கிளம்பும்,
தாயிலும் தந்தையிலும்,
உன்னையும் என்னையும் தேடிய,
காலைப் பொழுதுகள் இங்கு உண்டு

பகற்ப் பொழுதுகள் இங்கு உண்டு
புத்தகத்தின் மெலிதான பக்கங்கள் சேருமிடம்,
வரிகளைப் படித்தபடி,
எனையும் அறியாது,
மையற்ற விரல்கொண்டு,
உன் பெயரினை எழுதச் சென்ற
பகற்ப் பொழுதுகள் இங்கு உண்டு 

நன்மாலைகள் இங்கு உண்டு
இசையொன்றே சர்வமாய் உணர்ந்திருக்கும் கணத்தில்,
ஏதோ ஒரு பாடலை,
மனதில் எண்ணி முணுமுணுக்க,
காதலும் இருக்காது அதில்,
காமமும் இருக்காது,
இருப்பினும்,
வரியடுத்து வரும் உயிரொத்த இசைத்துளியில்
உன் அருகாமையைத் தேடிய
நன்மாலைகள் இங்கு உண்டு.

 

Monday, July 25, 2011

மதப்போரால் ஈனமான
மண்ணின் சிசுவொன்று,
மரத்திடா  வலிகள்,
அதன் விழியோரம்,
கசிவது கண்ணீர் அல்ல,
கோரிக்கை..

மறுபிறப்பற்ற மதத்தில் பிறந்த அவன்,
இந்திய மதங்களில் சாத்தியம் உண்டென்றால்,
இன்னொரு மகாத்மாவை..
பிறந்திடச் செய் என..

Sunday, July 24, 2011

           "நீங்க வாழ்க்கைல இது வரைக்கும் உருப்படியா என்ன சார் செஞ்சுருக்கீங்க?!".இதைத் தான் கேட்டேன்,அவரிடம்.உறவினர் வீட்டு வைபவம் ஒன்றிற்க்கு நானும் என் தந்தையும் சென்றிருக்கையில்தான் இது நிகழ்ந்தது.சிறு பிள்ளை ஒருவனின் பூனூல் வைபவம்.நெருங்கிய உறவினர்தான்,ஆனால் காலமாற்றத்திற்கேற்ப,ஆசாரம்,சூழல் என்னும் பெயரால் நாங்கள் அவர்களிடமிருந்து தூரமாகிவிட்டோம்.அந்த சிறுவன் எப்போது பிறந்தான் என்று தெரியாத அளவு தூரம்.குடும்பத் தலைவர் என்ற மட்டில் உறவுகளை எங்களுக்காய் வலுப்படுத்தித் தருவது அப்பாவின் பொறுப்பு என்று அவர் கருதியதால்,என்னையும் அவருடன் அங்கு அழைத்துச் சென்றிருந்தார்.நன்றாகத்தான் இருந்தது,இதுவரை நான் பார்த்தே இராத தூரத்து உறவினர்களும்,இந்த நான்கு வருட கல்லூரி வாழ்க்கையினால் பார்க்க முடிந்திராத சில நெருங்கிய உறவினர்கள் என அனைவரையும் அங்கு சந்திக்க முடிந்தது.வயதான முதியவர்கள் முதல் நேற்று கல்லூரிப் படிப்பை முடித்த ஒருவர் என அனைவரையும் பார்த்து பேசிக் கொண்டிருந்தோம்.இதற்க்கிடையே விழா வீட்டார்க்கு வேலைகள் இருந்ததால் அவர்களுக்கு உதவுவதற்க்கு சென்றுவிட்டேன்.ஒரு அரைமணி நேரம் கழித்து திரும்பி வந்த பொழுது,அப்பா நான் இதுவரை பார்த்தேயிராத யாரோ ஒரு உறவினருடன் பேசிக் கொண்டிருந்தார்.உன் தாத்தாவின் அத்தான் பிள்ளை என்று அப்பா கூறினார்.புன்னகைத்துவிட்டு அப்பாவின் அருகில் அமர்ந்தேன்.
அவர்,"என்னடா பண்றா உன் பொன்னு?!"
நானே பதிலளித்தேன், பயோடெக் முடிச்சுருக்கேன்,இப்பொதைக்கு ஜாப் கிடைச்சுருக்கு,கால் லெட்டர்க்கு காத்துண்டு இருக்கேன், ஃபர்தர் படிக்கனும்.
அவர் அப்பாவிடம்,"எப்போ பையன் பாக்கபோறே?!கைவசம் ஜாதகம் இருக்கு ஃபர்ஸ்ட் க்லாஸ் பையன் நாலஞ்சு பேர் இருக்கா?!,பொன்னும் பாந்தமா இருக்கா,முடிக்சுடலாம் என்ன சொல்லறே?!,
அப்பா,"அவ இஷ்டத்துக்கு விட்டுட்டோம்,படிக்கனும்னு ஆசைப்படறா!",என்றார்.
அவர்,"இல்லடா!நான் என்ன சொல்லறேன்னா?!"
நான் இடையே குறுக்கிட்டு,"இல்ல uncle நான் ஃபர்தர் ஸ்டடிஸ் பண்றதாதான் இருக்கேன்,ம்யுஸிக் எனக்கு இன்டிரஸ்ட் ஆக அதுல எதாவது செய்யனும்,வேற எதுவும் இப்போதைக்கு மைண்ட்ல இல்ல".
நான் ஏன் என்னைப் பற்றி அவரிடம் கூறினேன் என்று மனதிற்க்குள் என்னையே வைதுகொண்டேன்.
பிறகு அவரிடம் எனக்குத் தெரிந்தே இராத அவரது குடும்பம் பற்றியெல்லாம் விசாரித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தோம்.
அடுத்தது அப்பாவின் அக்கா முறை என்று ஒருவரை சந்தித்தோம்.'என்னடா பொன்னு புடவைலாம் கட்டிண்டு வளர்ந்துட்டா?! இதுக்கு காது குத்தச்சே பார்த்தது",என்று கூறிக்கொண்டிருந்தார்.அவர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டு 12த்து படிக்கவிருக்கும் அவர்களது பிள்ளை பற்றிய அவரது அங்கலாய்ப்புகளையும் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தோம்.இடையே அவர்,"கல்யான சாப்பாடு எப்படா போடபோறே உன் அக்காக்கு என்று என்னை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு கேட்டார்.அப்பாவிற்கே உண்டான அந்த ஆர்வம் பொங்கும் சமயங்களில் அதிகப்படியாய் பேசும் இயல்பு அங்கே மீண்டும் உதித்தது "அப்படி ஏதாவதுனா,கண்டிப்பா உங்களுக்குத்தான் முதல் பத்திரிக்கை சந்தேகமே வேண்டாம்",என்று விஜய் பாணியில்,தானே பல வருடங்களுக்கு ஒருமுறை பார்க்கும் அந்த தூரத்து அக்காவிடம் ,எக்கச்சக்க பிட்டுகளை சேர்த்து போட்டுவிட்டு நகர்ந்தார்.
"கடவுளே!நான் எங்க போயி முட்டிக்கறது!",என்று மனதில் எழுந்த எரிச்சலை அடக்கிக் கொண்டு அவருக்கு பதில் எதுவும் கூறாமல் அங்கிருந்து நகர்ந்தேன்.
அடுத்து,பாட்டி வழி உறவு என்று ஒருவரை சந்திக்க நேர்ந்தது,அந்தக் குட்டிச் சிறுவனுக்கு ஒன்று விட்ட பெரியப்பா என்னும் பெயரில் அந்த மண்டபத்தையே ஒரு வழி செய்துகொண்டிருந்தார்.
"ஏன்னடா கோவிந்தா?! பொன்னு நன்னா சமைக்கறாளா,என்ன பாக்கலாமா சொல்லு?!காலாகாலத்துல இதெல்லாம் செஞ்சுடனும்",என்று. ஒருபடி மேலே சென்று என் ஜாதக விபரம் என அனைத்தையும் கேட்கத் துவங்கிவிட்டார்.எழுந்த எரிச்சலில் "நீங்க இதுவரைக்கும் வாழ்க்கைல உருப்படியா என்ன சார் செஞ்சுருக்கீங்க!".என்றேன்.சற்றும் அவர் அதை எதிர்ப்பார்க்கவில்லையோ தெரியவில்லை.
அப்பா உடனே,"ஜில்லு!,அங்க போ,அத்தை ஹெல்புக்கு கூப்பிடறா பாரு",என்று நகர்த்திவிட்டார்.நானும் நகர்ந்துவிட்டேன் ,அப்பா அவரிடம் என் ஜாதகம் பற்றிய விவரங்களை தந்திருக்க மாட்டார் என்ற நம்பிக்கையில்.
"என்னடா! உன் பொன்னு இப்படி பேசறா?!" என்று கூறியது என் காதில் மெலியதாய் வந்து சேர்ந்தது.
வைபவம் முடிந்து விடைபெற்றுக் கொண்டு ரயிலிற்க்காக காத்திருந்தோம்."என்ன பாத்துடலாமா?!" என்றார் அப்பா என்னை வெறுப்பேற்றுவதற்க்காகவே.
ஏற்கனவே கோபத்தில் இருந்த நானோ "பா!சொல்லிட்டேன் கேட்டுக்கோ,இனிமே அந்த கேஸையெல்லாம் எங்கையாவது பார்த்தேன்னா உன்னோட சேர்த்து இந்த தண்டவாளத்துல தள்ளிவிட்டுடுவேன்".
தெரியாம கேட்கறேன்,சீரியஸ்லி!இவங்களலெல்லாம் வாழ்க்கைல என்ன சாதிச்சுட்டாங்கன்னு இந்த கல்யாணம்,குடும்பம்,குழந்தைங்கனு அதே லைஃப்?!.அப்பா அதற்கு பதில் அளிக்கவில்லை.பேச்சும் வேறு ஏதோ ஒன்றைப் பற்றி மாறிவிட்டது.
ஆனால்,கல்லூரிக் சென்றுவிட்டு சான்றிதழ்கள் சிலவற்றை பெற்றுக் கொண்டு வருகையில். ஒருவர் பெண் என்னைக் கேட்ட கேள்வி,வைத்தீஸ்வரன் கோவிலில் இறங்க வேண்டியவர் அந்த இடம் வரும் வரை என் வாழ்வு திருமணம் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்.எப்படி இருந்தாலும் நீயும் அந்த வட்டத்தில் சேர்ந்துதான் ஆக வேண்டும் என்பது போன்ற அவரது ஏளனமான பார்வை வேறு.சென்ற வாரம் வீட்டிற்க்கு வந்திருந்த வேறு ஒரு உறவினரின் அதே போன்ற பேச்சு என மீண்டும் அந்த கேள்வி மனதுள் எழுந்தது.நமது வாழ்வை நாம் முடிவு செய்யாது நமது பெற்றோர் முடிவு செய்யாது யாரோ ஒருவர் அமர்ந்து முடிவு செய்து கொண்டிருக்கிறாரே என்ன இது என்று?!.
      ஒருவேளை திருமணம்,பிள்ளைகள் என்பதுதான் வாழ்வின் தலையாய குறிக்கோளோ?.அப்படியாயின்,"நான் டாக்டராக வேண்டும்,நான் பொறியியல் வல்லுனர் ஆக வேண்டும்",என்பது போன்று அதுவும் ஒன்று அவ்வளவுதானே.ஆனால் சிறு மாற்றம் இது பலரால் அவர்களே விரும்பியும் விரும்பாமலும் அடையப்படும் குறிக்கோள்.உன் குறிக்கோள் அதுவாயின் நான் அதை எதுவும் தடுக்கவில்லை.மாற்றிக் கொள்ளவும் சொல்லவில்லை.ஆனால் எனைப் பொருத்தவரை அது ஒரே சக்கரத்தில் உழல்வது போன்று,அபத்தம்.என் குறிக்கோள் வேறு,அதே சக்கரத்தில் தானும் சுழல்வதாயின்,தன் ஆன்மா,தன் வாழ்வு என்று ஒன்றிர்க்கு அர்த்தமே இல்லாது போய்விடும்.ஏதோ ஒரு ஆன்மாவின் குறிக்கோளை நீ சாதிக்க முற்படுகிறாய்,அவ்வளவே.தான் பிறந்ததிலிருந்து வாழ்வில் என்ன செய்தோம் என்று யோசித்தால்
1.பல் தேய்த்து,குளித்து,உண்டுவிட்டு,பள்ளி சென்றிருப்போம்,இரவில் உறங்கியிருப்போம்.
2.பல் தேய்த்து,குளித்து,உண்டுவிட்டு,கல்லூரி சென்றிருப்போம்,இரவில் உறங்கியிருப்போம்.    
3.பல் தேய்த்து,குளித்து,உண்டுவிட்டு,வேலைக்குச் சென்றிருப்போம்,இரவில் உறங்கியிருப்போம்.
4.நாம் ரேஷன் கார்டில் ஒரு பெயராக இருந்தது மாறி நாம் ஒரு ரேஷன் கார்டில் தலைவர்/தலைவி என்று முன்மொழியப் பட்டிருப்போம்.
இதையேதான் 6000 சம்பளத்திற்கு வேலை செய்பவனும் செய்கிறான்.60000 சம்பளத்திற்கு வேலை செய்பவனும் செய்கிறான்.இருவருக்கும் என்ன வேறுபாடு,டி.என்.ஏ-க்களைத்தவிர.
நட்பு ஒருத்தியின் வலைப்பூவில் அவள் அன்மையில் பதிவிட்ட ஒன்றைப் படித்தேன் நேற்று,சிறு சிறு ஆசைகள்,எண்ணங்கள் என்றுதான் அதைப் படிக்கும்ச்ச்ச் எவருக்கும் முதற்கண் தோன்றும்.ஆனால் அப்படித் எண்ணும் எவருக்கேனும் அவ்வாறு சிந்திக்கத் தோன்றி இருக்குமா?!,என்பது சந்தேகமே.என் இந்த எண்ணம் பற்றி சொன்னபொழுது தோழி ஒருத்தி நீ சாதிக்க நினைப்பதை அவர்கள் சொல்வது போல் மணம் செய்துகொண்டபின் செய்யலாமே என்றால்.
ஆம் செய்யலாம்தான் ஆனால்,அவர்களதும் நமதும் எண்ணம் ஒத்ததாக இருக்கும் அல்லது அவர்களால் அதை அனுமதிக்க முடியும் எனும்பட்சத்தில் மட்டுமே,அது சாத்தியம்.
ஒரு ச்சாரிட்டி துவங்க சிறுவயதிலிருந்து ஆசை,பெயர் கூட முடிவு செய்துவிட்டேன் ஆறு மாதங்களுக்கு முன்பு,"கரு அல்லது கருவறை"என்று.ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க எண்ணம்,என சிறு சிறு விருப்பங்கள்.இதெல்லாம் நிறைவேற்ற முடியுமா?!ஒரு வட்டத்தினுள் தானும் சுழலத்துவங்கியபின்.நான் அன்று கோபப்பட்டு அந்த பெரியவரிடம் அவ்வாறு கேட்டதாகத்தான் அவரும் எண்ணி இருப்பார்,அது அவர்களது இயல்பே.ஆனால் அவராய் என்றோ தனக்குக்தானே  கேட்டுக் கொண்டிருக்கவேண்டிய கேள்விகளையே நான் கேட்டென்.முதலில் வாழ்வதற்கான அர்த்தத்தை தேடு அதில்தான் உனது இயல்பும் உள்ளது உனது இயல்பு வாழ்க்கையும் உள்ளது,திருமணம்தான் உன் வாழ்வின் அர்த்தமென்றால் அதை செய் ஆனால் அதை உன் போல் அதே எண்ணம் கொண்டவருடன் மட்டுமே செய்.நம் எண்ணப்படி நாம் வாழ வேண்டும் அதை நாம் மட்டுமே வாழ வேண்டும்,பிறர் மீது தினித்தல் தவறு என்று அனைவ்ரும் தாமாக உணர்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.சுதந்திரம் என்ற ஒரு வார்த்தை அதில்தான் எங்கோ உள்ளது.லைஃப்னா,சும்மா இல்ல சார்!. 

Wednesday, July 20, 2011

கன்னத்தில் முத்தமிட்டா(ள்)ல், அமுதமாய்!

                                         பள்ளி காலத்திலிருந்தே இருக்கும் ஒரு பழக்கம்,எங்கு சென்றாலும் பையில் பாரதியார் கவிதைகள் புத்தகத்தை உடன் எடுத்துச்செல்வது.ஏன் என்று தெரிந்ததில்லை, பாரதியின் மீதான காதலா?! அல்லது அந்த எழுத்தில் உள்ள ஒரு வேட்கையா,முதன் முதலில் அப்பா எனக்கு அதை வாங்கித்தந்தது உள்ளூரில் நடந்த ஒரு போட்டியில் கலந்துகொள்வதற்க்காக, பாரதியார் பாடல்களைப் பாடுவதுதான் போட்டியே,எங்கள் பள்ளியிலிருந்து ஐவர் கலந்து கொண்டோம் நான் பாடிய பாடல்கள் மூன்று,காணி நிலம் வேண்டும்,முரசு பாடல் மற்றும் மனதில் உறுதி வேண்டும்,பரிசு கிடைக்கவே,அப்படி நாம் என்னதான் பாடினோம் பரிசளித்துவிட்டார்கள் என சிறுவயதில் தோன்றுமே நம்மை நாம் செய்யும் ஏதேனும் ஒரு செயலே வெற்றி கொள்ளச் செய்து ஊக்கப்படுத்தினால் ஏற்படும் தனி ஈர்ப்பு,அது அன்று தொடங்கியது அவ்வரிகள் மீதான கவனம்,கலத்தல் என அனைத்தும்.வீட்டுமாடிப்படியில் அமர்ந்து அப்பக்கங்களைப் புரட்டிய ஞாயிறு மதியங்கள் பல.அதிலிருந்து அதில் வரும் வரிகளை எங்கு எதில் நோக்கினாலும் அதற்கு தனி முக்கியத்துவம் அளிக்கத்தோன்றும்.அப்படித் தோன்றியதுதான் கன்னத்தில் முத்தமிட்டால் என்னும் வரியின் மீதான ஈர்ப்பும், அப்படத்தின் சுவரொட்டிகளை அது வெளியான புதிதில் எங்கள் ஊர் தியேட்டர்களில் கண்டபோதும்.இளமைப் பருவத்தின் துவக்க காலம் அது என்று உணர முடியாததான சிறுபிள்ளைப் பருவம் அப்பொழுது,ஆக அது மாதவனின் படமாகவும் எனக்குத் தோன்றவில்லை.சிம்ரனைப் பிடிக்கும் அதில் அவர் மூன்று குழந்தைக்கு தாயாக நடிக்கிறார் என்று அச்சமயம் வீட்டிற்க்கு வந்திருந்த சித்தி கூறிக்கொண்டிருந்தார்.கீர்த்தனா,ஆனந்த விகடனில் தன் அப்பா அம்மாவுடன் ஃபோட்டோவிற்க்கு போஸ் தந்த அதே கீர்த்தனா.இதையெல்லாம் கவனித்துவிட்டுதான் மேலே "மெட்ராஸ் டாக்கீஸ்" என்ற பெயரைப் பார்த்தேன்.கண்கள் மீண்டும் அந்த படத்தின் பெயரைப் பார்த்தது.மனதிற்க்குள் "பாரதி!" என்ற வார்த்தை மட்டும் எங்கோ பாதாளத்தின் அடியிலிருந்து பல பாதைகள் கடந்து வரும் குரல் போல ஒலித்துக்கொண்டிருந்தது.ஆனால் பல காரணங்களால் படத்தை இவர்கள் "இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக"  திரையிட்டபோதுதான் காணமுடிந்தது.சில நேரங்களில் பாடல்கள் மட்டும்தான் மனதை வருடும்,வலிக்கச்செய்திடும்,மனதிற்கு நெருக்கமானதாகச்செய்திடும்,சிரிக்கச்செய்திடும்,புரட்சி கொள்ளச்செய்திடும்.பத்து நிமிடப் பாடல்கள் செய்வதைப் பல நேரங்களில் இரண்டரை மணிநேரப் படங்கள் செய்வதுண்டு.அத்தகைய படங்களில் ஒன்றாகத்தான் ஆனது இந்த கன்னத்தில் முத்தமிட்டாலும்.பார்த்த முதல் தடவைமுதல்.பார்த்த முதல் கனமே ஒட்டிக்கொண்ட ஒரு அவா "இந்த அன்பே சிவம்,கன்னத்தில் முத்தமிட்டால் அப்புறம் இன்னும் பல படங்கள்,இதைப் பற்றி மட்டும் மனதில் தோன்றும் எண்ணங்களை வார்த்தைகளாக வடிக்க வேண்டும்"என்று.வருடங்கள் கடந்து அதற்குப் பிறகு பார்த்து மனதிற்கு மிகவும் நெருக்கமாகிபோன சில படங்களைப் பற்றி எழுதினாலும்.இந்த இரண்டு படங்களைப் பற்றி எழுத நினைக்கும் பொழுது மட்டும் வார்த்தைகள் அடுத்து அடுத்து கரைதொட்டுச் செல்லும் அலைபோலத் தொட்டுவிட்டு மறைந்துவிடும்.இப்படங்களில் எல்லாம் அதைப் பற்றி எழுதுவதையும் தாண்டி என்னமோ ஒன்னு இருக்கு சார்!".அதற்குப் பிறகு மற்றதைப் போல இப்படத்தையும் பலமுறைப் பார்த்தாகிவிட்டது.அன்று இருந்த அதே நிலையே இன்றும்.         
  

                            பாரதியின் கண்ணம்மா போல் அவள்-ஷாமா வீரமும் காதலும் கருனையும் எல்லையற்றதாயும், அளவற்றதாயும் உள்ளவள்.பட் பட் என்று வெடிக்கும் எழுத்தாளர் திருச்செல்வன்.மிகவும் உணர்ச்சிவசப்படும் பெண்ணாக தாயாக இந்திரா,புரட்சி புரட்சி என்று வெடிக்கும் தம்பிக்கு தமக்கையாக "ஊருடன் ஒத்து வாழ்" கொள்கையைக் கடைபிடிக்கும் ஒருத்தி,கிராம நகர வாழ்க்கைக்கேற்ப தன் வாழ்விலும் உருவிலும் தோன்றும் மாற்றத்தை அழகாய் வெளிப்படுத்தும் தாத்தா.சுற்றி நிகழும் அவலங்களை கண்டு அந்நேரம் மட்டும் மனதிற்குள்,ஒரு மாற்றத்திற்க்காக ஏங்கும் ஒரு குடிமகனாக,டாக்டர்.கடவுள் யாரென்று தெரியும் ஆனால் அவனைப் பற்றிப் படித்ததில்லை,தெரிந்ததைவைத்துக் கொண்டு அவனைத் தேடுகிறேன் என்னும் மனநிலை கொண்ட குழந்தை அமுதா,நிஜமாகவே அமுதம்.படம் நெடுக நறுக்கென்ற வசனங்களில் இயல்பாக ஆனால் சுருக்கென்று தோன்றும் மணிரத்னம் படத்திற்கே உரிய அழகு,சுஜாதாவைத் தவிர யாரால் தரமுடியும்.வசன உச்சரிப்பிற்க்கு தகுந்தவாறு அந்த பின்னனி இசை.இளையராஜா இசை மட்டுமல்ல ஏ.ஆர்.ரஹ்மானின் இசையிலும் அந்த ஆன்மாவினை உணர முடியும் என்று உணரவைத்த படங்களில் இதுவும் ஒன்று.ஆன்மாவைத் தேடுகிறாயா?!அதோ,அந்த குழல் ஓசைதான் அதன் தொடக்கம்.இருளும் வெண்மையும்,வெறுமையும் முழுமையும் போல்தான் இப்படத்தில் பல இடங்களில் தோன்றும் குழலும் அதைத் தொடர்ந்து வரும் கீபோர்டும்.அத்தகைய ஆன்மாவிற்கு உருவம் அந்த கேமிரா எனலாம்.போரும் பேசுகிறது,புத்தமும் பேசுகிறது.
 
                     தாய் என்பவள் யார்?,அனைத்திலும் முதிர்ச்சி மிக்கவள் இல்லை அவள்,தியாக உள்ளத்தின் மொத்த உருவம் இல்லை அவள்.அன்னை இல்லை அவள்,அம்மா!.திருமணம் குடும்பம் என்று தான் கண்ட சுழலில் தானே முக்கியப் பாத்திரமாகிவிடும் ஒருத்தி.தன் சரிபாதியை விட தன் பிள்ளைகளிடமே அதிகம் அன்னியோனியத்தை உணருபவள்.அதுவும் பெண் பிள்ளையாயின் அவளே இவளுக்கு தோழி, ஆதி முதல் அந்தரங்கம் வரை அனைத்தும் பகிர்ந்துகொள்ளும் தோழி,ஒரு காலத்தில் தானும் மகளாக இருந்தவள்,அந்த பிஞ்சு மனம் இறுதி வரை மாறாதவள்.
                  
தந்தை மகள் உறவு?!,அதன் அழகு,வெளிப்பாடு,புனிதம் அனைத்தையும் உணர்ந்துவருபவள் நான்,அதைப் பற்றி ஒரு தனிப் பதிவே எழுதலாம்,தந்தைக்கே உண்டான அந்த முதிர்ச்சி,தாயன்பை விட எதோ ஒரு விதத்தில் பெரியதாகவே தோன்றும் அந்த பாசம்.இவற்றை தன் வரிகளால் பக்கங்களில் அழகாய் அளந்துவிடும் வைரமுத்துவின் பேனா ,அதைத் தன் குரல்களில் அளந்துவிடும் சின்மயீயும்,ஜெயச்சந்திரனும்;என்ன ஒரு உணர்வு அந்த இரு குரல்களிலும்,அதைக்கேட்டுக்கொண்டு கண் மூடி ஒரு ஓரமாய் அமர்ந்துவிடத்தோன்றும்,தமிழ் சினிமா கண்டெடுத்த சிறந்த குரல்களில் சின்மயீயினதும் ஒன்று எனலாம்.கதைக்கரு வேறாயினும் காதலை மேலோட்டமாகத் தொட்டு செல்கிறது,பறவைகள் பறக்கும்பொழுது அந்த சிறகுகள் அதன் உடல் தொட,தோன்றும் ஒரு மென்மை போல,நான்-எண்ணம் நீ-உருவம் என்பது போன்ற மென்மை.சட்டெனத் தான் நனைந்து விடுகிறது நெஞ்சம் அந்த மென்மையில்.இது அனைத்தையும் தாண்டி மண்ணுடன் மனம் கொண்ட உறவைப் பேசும் இடங்களில் மனமும் காணும் விழியும் இனைந்து இளகிவிடும்.வெள்ளைப் பூக்கள் பாடல் ஒரு அமைதி உணர்வையும்,என்றேனும் ஒரு நாள் அவ்வரிகள் மெய்யாகாதா?! என்ற ஏக்கத்தையும் விட்டுச்செல்லும் கேட்கும் ஒவ்வொரு முறையும்,நூற்றாண்டின் மிகச் சிறந்த வரிகளுள் இப்பாடல் வரிகளும் ஒன்று எனலாம் .இறுதிகாட்சி உடல் என்றால் பின்னணி இசை அதற்கு உயிர்,கலங்கவைத்துவிடும்.

                    

              ஒரு படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கத்தோன்றுவது என்றால் என்ன?!,எண்ணிப் பார்த்ததுண்டு.ஒரு மனிதரைச் சந்திப்பதைப் போல்தான்,முதல் சந்திப்பில் அவரிடமிருந்து ஏதோ ஒன்றைக் கற்று,மீண்டும் பல முறைச் சந்தித்தாலும் அத்தருனத்தில் எதோ ஒன்றைப் புதிதாய் கற்றுணர்ந்து வருவது போன்று.இதோ இந்தப் படமும் அவ்வாறுதான்,ஒவ்வொரு முறையும் பலதை உணர்த்துகிறது,கடையக் கடையக் கிடைத்த அமுதம் போல்.

                              
                                கண்ணத்தில் முத்தமிட்டால்-கண்ணம்மா
                               அமுதம் சுரக்குதடி! 

Friday, July 15, 2011

செவிவழி பரவும் சுவாசம் நீ,
நாளம் நடமிடும்
செவ்வணு நீ,
கருவிழிகொள்ளும் நாணம் நீ,
மூடிய விழி மறை பொருளும் நீ,
விரல்கள் வரையும் அலைகள் நீ,
இதயம் ஜனிக்கும் இருள் இம்சையும் நீ,
பெண் அவள் சொல்லாத சொற்கள் நீ,
ஆண் அவன் மறைத்த ஏக்கங்கள் நீ,
மழலை மனதின் புரிதல்கள் நீ ,
அண்டம் பேசும் அனைத்தும் நீ,

புலப்படாது உணர்ந்ததில் தலையாயது நீ, 
நீ..
இசை..

Sunday, July 3, 2011

பரிபூரணங்களில்தான்,
குறை உள்ளவளாகிறேன்.. 
அங்குதான் எனது எல்லைகள்,
தீர்மானிக்கப் படுகிறது.