BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Wednesday, December 29, 2010

அதிகாலை ஒளி அதை 
ஜன்னல் வழி நோக்கிவிட்டு..
மீண்டும் குறுகிக்கொள்ள,
கண்கள் உறங்கிவிடும்..


நீ அங்கு இருந்திருந்தால்..?

பாடலிடை தோன்றும்
வரிகள் சில கேட்கையில்,
இதழோரம் தோன்றும்..
வெட்கங்கள்.

நீ அங்கு இருந்திருந்தால்..?

நட்பு குழாமுடன்
கோப்பை காபிக்கள்..
அதில்,
தேநீர்கரண்டியால்..
உருவற்ற ஓவியங்கள்..
சிந்தை,
அது எங்கோ சென்றிருக்க..

நீ அங்கு இருந்திருந்தால்..?

உறவுகள் ஒன்றாய்
கலந்திருக்க..
நினைவுகளாய் புகைப்படங்கள்,
அவர்தம் உறவுடன்
அவரவர் அமர்ந்தபடி ..

நீ அங்கு இருந்திருந்தால்..?

நண்டும் நரியும்,
கரங்களிடை ஊற என  
நினைவில் நிழலாடும், 
சிறுவயது விளையாட்டும்,
சேர்ந்தொலிக்கும் சிரிப்பொலியுமாய்.. 
நட்புடன் நிழலனைத்தும்,
தற்போது நிஜமாய்..

நீ அங்கு இருந்திருந்தால்..?

வலப்பாதம் அதை அழகாய்
அம்மி மீது அவள் வைக்க..
மெட்டியிட்ட பின் நிமிர்ந்து
அழகாய் அவன் பார்வை..
விடையாய் இவளது ,
நானப்புன்னகை.. 

நீ அங்கு இருந்திருந்தால்..?

கருப்பைமேல் செவிவைத்து,
கேட்டிரா  இசைகேட்கும்..
தந்தையெனும் பூரிப்பில்
அவளது சற்றே வளர்,
முதல் குழந்தை..
அவன்,

நீ அங்கு இருந்திருந்தால்...?

அவளும் அவனுமாய்,
கேள்விக்கணை பலதொடுக்க..
நகைத்தபடி பலபற்றி
அவன் விடையளிக்க ..
பெருமிதம் சிறிதுகொள்ளும்
பிஞ்சுகள் அவ்விரண்டும்..

நீ அங்கு இருந்திருந்தால்..?

நண்பர்கூட்டமென்று
பிறர் சொல்ல,
அழகு குடும்பமென்று
நட்பு வியக்க,

நமது அங்கு இருந்திருந்தால்..?

Sunday, December 26, 2010

என்னவன் சிறுகிறுக்கன்...

அழகிய ஒரு வரியை
என் மனம் முனுமுனுக்க,
ஒருகரத்தால் இடைபற்றி
நிறுத்தற்குறியிடுவான்...
மெய்யருகில் வரியதற்கு..
மௌனங்கள் நிரம்பிவிடும்,
உரையாடல் நேரங்கள்..
அவன் காற்றும் என் செவியும்..

இதழ்வரியில்,
விரல் எழுதும்..
நேரம் அதுவென்றால் ?!
என்னவன் சிறு கிறுக்கன்,
அழகாய் செவியருகே
செஞ்சுருட்டி சந்தம் சொல்வான்..
நானும்  சிணுங்கிவிட..

அருகில் கிடந்திருந்தால் கூடல்,
இது பிறர் பொருள்..
என்னவன் சிறுகிறுக்கன்
காதல் பேசிடுவான் கரஹரப்ரியாவில்..
கரைந்திடுமோ காலம் அது,
எங்கள் இசைக்கூடல் வயப்பட்டு ...

தந்திக்கம்பிதனில்,
தந்தவிரல் மீட்டி..
என்னவன் சிறுகிறுக்கன்,
கல்யாணியில் தொடங்க..
இந்த வீணைக்கும் தெரியாத
ராகங்கள் பிறந்திடுமோ..

உயிரது கலந்திடுமோ!
உடலல்லால் ஸ்வரமதனால்..
இரவுகள்  விடிந்திடுமோ!
இணைந்தபடி இசையதனால்..
சிறுகிறுக்கன் என்னவனுடன்...

Thursday, December 23, 2010

உன்னால்,
சுவர்சாய்ந்து  புன்னகைகள்..
பல் துலக்கும் நொடிகளில்.

உன்னால்,
மௌனம் கூடிய வெட்கங்கள்..
படிகளில் பாதங்கள் செல்லுகையில். 

உன்னால்,
மழையிடை தனிஉரையாடல்கள்..
உனை பிடிக்குமென்று,
உரத்தகூறல்கள்..
உனை மிகப்பிடிக்குமென்று...

பொழிவது பொதிமேகமன்று..
என் விழியும்தான் என
பிறர் அறியாத்தருனங்கள்.. 
உன்னால்..

உன்னால்,
மேசைமேல் கிறுக்கல்கள்..
கிறுக்குத்தனம் பிடிக்காதவளுக்கு.

உன்னால்,
எனை சோதிக்கும் கனவுகள்..
பெண்மைக்கே உரித்தாய்,
அவை..
வேண்டாம் என்று வெறுத்ததுண்டு..
சிறு வெட்கத்தில் முடிந்ததுண்டு..
அதில் கண்ணீர்கள் இருந்ததுண்டு..

உன்னால்,
உனைபற்றிய நினைவுகள்..
இச்சிறுவாழ்வில்,
எய்தாலும்..
எழுத்துகளாய்..
உன்னிடமும் உன்பிறகுமாய்
வாழ்ந்திடும் எழுத்துகளாய்..

உன்னால்...

Tuesday, December 21, 2010

சுவர் நோக்கும் தனிமைகள்,
அதில் பிம்பங்கள் உனதேனோ?! 
நீயற்ற வெறுமைகளை,

மனம்..
உருவற்ற உயிராக்க,

சுவர்..
நிஜமற்ற  நிழலாக்க,

விழிமடல்..
திரைமறை துளியாக்க,  

விரல்..
உயிரும் நிஜமுமாய்,
வரி  உருவம்தர..
என் மனநிழலுக்கு,

பிம்பங்கள் உனது..
அதனால்தானோ?!

Friday, December 17, 2010

விளைவுகள் பற்றியன்று..
வினைகள் பேசுவதாம் விஞ்ஞானம்
நாங்களும் பேசுவதில்லை,
காதல் பற்றி..
ஏன்..!
பேசாத மௌனங்களே பல நேரம்..

தென்றலாய் இருந்திட
எண்ணம்...
எங்கும் சுழலா,
நிலைத்தென்றலாய்....
நீயும் அறியாது
உன் அருகாமை தென்றலாய்..

வெண்ணிலவாய் இருந்திட
எண்ணம்...
உன்னவளை எண்ணியேனும்
எனை நோக்கி புன்னகைப்பாயே!

மழைத்துளியாய் இருந்திட
எண்ணம்..
அதையேனும் நீ ரசிப்பாயன்றோ? 

இசையாய் இருந்திட
எண்ணம்..
உன்னுள் நானும்,
என்னுள் நீயுமாய்,
உருவற்று ஒன்றிட..

புத்தகமாய் இருந்திட
எண்ணம்..
அடங்கியும் அடங்காதுமாய்,
உன் கரங்களுக்குள்..
சுதந்திரம் பேசுபவள் நானாயிற்றே
அதனால்...

உன் வெறுப்புகளாயேனும்
இருந்திட எண்ணம்,
அவையும் நினைவுகள்தானே..

எண்ணம் பல அதை உன்னுடன்
பகிர எண்ணம்...
பகிர்வுகளில் உனைப்பற்றிய
எண்ணமும் பலதென்று...

Tuesday, December 14, 2010

வாழ்வின் எல்லை,
இதன் பொருள்விளக்கம் தெரியாது..
இறப்பு என்றால்,
சிரிக்கத்தொன்றும்...

பயணம் முடிந்தபின்னும்,
பிறருள் வாழ்வதென்ன,
பொருள் பொய்த்திடுமோ?
அவ்வாறெனில்..

பொருள் அதுவாயின்..
சிறு அவா எனக்குள்ளே,
என் வாழ்வின் எல்லையறிய, 
பயணம் முடிந்தபின்னும் 
பயணிக்குமோ?
எம் எண்ணங்கள் உனை நோக்கி
என் வாழ்வின் எல்லை
எதுவென்று அறிய..

வாழ்வின் எல்லை எது?
எனக்கு பொருள் விளக்கம் தெரியாது...

Monday, December 13, 2010

கண்ணீர்கவிதை,
ஆம்..
ரசித்து உயிர் ஊன்றி எழுதல் நீங்கி..
கண்ணீரில் விளைந்தவை இவையாவும்,
தோல்விகளால் துவண்டாள் இல்லை,
மாறாய்..
துவண்டவளை தூக்கியதுண்டு,
பலரது மனக்குறிகள்,
கழித்தலானபொழுது..
குறுக்காற்கோடிட்டு,
புன்னகை கூட்டியதுண்டு..
இறுகப்பூட்டிவைத்து,
வெளிக்கொணரா ரகசியங்கள்.
கண்ணீர்க்கு திரையிட்டு, 
புன்னகைகள் பலநேரம்.. 
யதார்த்தம் என்பது,
மறுபெயர் ஆனதுண்டு..
ஆனால் இன்று ஏனோ,
சொன்னவைகள் பொய்த்திட்டது..
மேற்ச்சொன்னவைகள் பொய்த்திட்டது..
தந்தையின் தோள்தட்டலும்,
தோல்வியடைகிறது என் கண்ணீரிடம்..
அன்னையின் ஊக்கங்கள் அந்நேரத்திற்கே,
உடன்பிறப்புடன் உரையாடலில்,
தானாய் பெருக்கெடுக்கும் நீர்த்துளிகள்..
உன்னிடம் எதிர்பார்த்தால்,
பொய்த்துவிடும் தவிர்த்துவிட்டேன்..
பொய்ப்பதை எதிர்கொள்ளும்,
துணிவில்லை என் மனதுக்கு..
துணிவற்றதன்மை அது எனக்கு, 
உன்னிடம் மட்டும் ஏனோ..
ஆறுதல் என்பதென்
அகராதிக்கு தேவையில்லை,
இருப்பினும் ஏனோ தேடுகிறாள்
என்னுளவள்,
தோல்வியால் துவண்டிடல்
எந்தன் இயல்பில்லை,
இதை ஏற்கவில்லை ஏனோ..
என்னுள் அந்த மானிடம்..
வெளிப்பாடு இதோ,
நிழல் தேடும் மரம்போல்,
தொடுகரம் தேடி மனம்..
ஏனோ பிடிக்கவில்லை,
இவ்வரிகள் எதுவும் எமக்கு..

Saturday, December 11, 2010

தேவை.. 
உனது ஆழ்முத்தங்கள்
விழைவது என் ..
வெட்கப்புன்னகைகள்..

தேவை..
உனது அருகாமை
விழைவது என் ,
இருள் வானத்து,
வெண்ணிலா நிமிடங்கள்..

தேவை..
உனது குரல்மொழிகள்
விழைவது என்,
ரசிக்கும் தனிமைகள்

தேவை..
உனது தொடுகரங்கள் 
விழைவது என்,
துவளும் தருணங்கள்

தேவை..
உன்னுடன் ஊடல்கள்
விழைவது,
தொடரும் கூடல்கள்

தேவை..
உனது முகத்தோற்றம்
விழைவது என்,
விடியல்கள்

தேவை..
உனது பிள்ளைத்தனம்    
விழைவது என், 
பெண்மையும் தாய்மையும்

தேவை..
உன்னுடன் மெய் வாழ்வு 
விழைவது என்,
கனாக்காலங்கள் ..

Friday, December 10, 2010

நல்லதோர் வீணை செய்தோம்,
அதன் நரம்புகள் நவின்றவை,
நல்லிசை என்றோம்.. 
நற்றமிழும் நல்லிசையும் வயம்கொள்ள,
பெற்ற மகவுகள் நாம்,
அதை புழுதியில் எறிந்தோம்..
ஆம்,
நல்லதோர் வீணை செய்தோம்-அதை 
நலங்கெட புழுதியில் எறிந்துவிட்டோம்..
உன் வரிகள் உமக்காய் உரித்தானதோ,
நல்லிசையே?

Thursday, December 9, 2010

நம்மிடை நெருக்கங்கள்,
குறைந்ததாய் சிறு எண்ணம்..
அருகாமை உமதேனக்கு,
வேண்டும் என நினைக்க..
நெருக்கங்கள்..
கண்பெருகும் அத்துளியை,
சிறைபிடிக்க இமைகளிடை
நெருக்கங்கள்..

Wednesday, December 8, 2010

மழைக்காலத்து மையுதிறல்கள்...பச்சை நிற படறல்களில்,
உதிர்ந்து சிதறும் நீரினமே..
பிம்பமாய் பசுமையது,
குறுகிப்படறும் உன்னுள்ளே,
மறைத்தொளித்த காதலோ?
---------------------------
இருவரிடை தோன்றும்,
முத்தத்து முன் நிமிடம்
சுவாசமெனும் தூரிகையால்..
நிறமற்ற ஓவியங்கள்,
பிறபுலன்கள் சுயமிழந்து
உணரல்கள் புன்னகையாய்..
 ----------------------------
அந்திக்கும் நிலவுக்கும்
இடைதோன்றும் வான் நீலம்
ஏனோ குறுநகைகள்
காணும் கண்களினுள்..
இயற்கைக்கும் சொப்பனமோ
எவர் மீதோ என எண்ணி....

Saturday, December 4, 2010

ஆம் பிறர் பற்றிய கவலை எனக்கெதற்கு...


       
           இதை எழுதும்பொழுது எனக்கு எந்த கோபமோ ஆத்திரமோ இல்லை,ஆம் கண்டிப்பாக இல்லை மாறாக அது பரிதாப உணர்ச்சியாக மாறிவிட்டது.இரவு பத்து மணி சுமார்,எப்பொழுதும் போல் பெற்றோரின் தொலைபேசி அழைப்பு படிப்பு ,உறக்கம்,உணவு பற்றியெல்லாம் பேசிவிட்டு நானும் தந்தையும் அன்று நிகழ்ந்ததை பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.பேச்சுக்கிடையே என் பள்ளி தோழி ஒருத்தியை பற்றிய பேச்சு எட்டி பார்த்தது.செய்தி இதுதான்,அவளுக்கு இந்த மாத இறுதியில் திருமணமாம்,கேட்டதும் ஏனோ ஒரு எரிச்சல் கலந்த ஆத்திரம்,கோபம் என, என்னிலிருந்து எப்பொழுதும் போல் எட்டி பார்த்தது.என்னை போல் பொறியியல் படிப்பவள்தான் இன்னும் படிப்பு கூட முடிந்தபாடில்லை அதற்குள் திருமணம்.எரிச்சல் ஏனெனில் இவ்வாறான செய்திகள் பலதை கேட்டுக்கொண்டிருப்பதுதான்,கோபமும் ஆத்திரமும் அவர்களது பெற்றோரின் அறிவிலித்தனத்தை எண்ணி,மரியாதைக்குறைவாக தோன்றினால் மன்னிக்கவும் வேறு எவ்வாறு இதை வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை.இந்த செய்தியை என்னிடம் கூறிவிட்டு அப்பா தொலைபேசியை அம்மாவிடம் தர.அம்மாவிடம் நான் பேசிய முதல் வார்த்தை இதுதான் "என்னமா அவங்க லூசாகிட்டாங்களா?".என் அம்மாவுடன் பணிபுரியும் ஆசிரியர்தான் அவளது அம்மாவும்.இன்று என் அம்மாவை பார்த்ததும் கேட்டாராம் அவர்,"உங்க பொண்ணுகிட்ட விஷயத்த சொன்னீங்களா? என்ன சொல்லிச்சு" என்று.அம்மா அதனால் என்னிடம் செய்தியை கூறினார்.என் கோபம் உச்சகட்டத்தை அடைந்தது மற்றொரு செய்தியை கேட்டுவிட்டுதான், மணமகன் ஒரு பேரும் புகழும் உள்ள தனியார் பல்கலைகழகத்தில் உதவிப்பேராசிரியராக பணிபுரிபவராம்.இதை கேட்டுவிட்டு என் அன்னையிடம் நான் கேட்ட கேள்வி ... "புரோபசரா?!..ஏன்மா அவனுக்காவது அப்போ அறிவு வேண்டாம்? இன்னும் கிராஜுவேஷன் கூட முடிக்கல அந்த பொண்ணு அதுக்குள்ள கல்யாணம் பண்ணிக்கரோமேன்னு?!,நாளைக்கு ஆன்ட்டி கேட்டாங்கனா நான் இப்படி சொன்னேனே சொல்லு,என்ன நெனச்சாலும் பரவாஇல்ல"..அவர்களிடம் நான் கூறியதை அன்னை கூறினாலும் அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று நன்கு அறிவேன் இருப்பினும் எதிர்ப்பினை காண்பிக்க வேறு வழி தோன்றவில்லை.எனக்கு இருந்த கோபமெல்லாம் நான்கு வருடம் (நான்கு வருடம் கூட முழுதாய் முடிந்தபாடில்லை) லட்சம் லட்சமாய் கொடுத்து படிக்க வைத்த பெற்றோரே இவ்வாறு தடாலடியாய் அடுத்தகட்டத்திற்கு போவதுதான்.இதற்கு குடும்ப சூழல்,திருமணத்திற்கு பின் படிப்பு வேலைக்கு செல்லலாம் என்று காரணம் காட்டும் பலர் இருக்கின்றனர், கல்லூரியில் என் சீனியர் ஒருத்தியின்  நிலையும் அவ்வாறே,அவளது பாட்டி கூறினாள் என்ற ஒரே காரணத்திற்காக பன்னாட்டு நிறுவனத்தில் கிடைத்த பணியிலும் சேராமல் திருமணம் செய்துகொண்டாள்,கல்லூரி படிப்பு முடிந்த அடுத்த மாதமே..திருமணத்திற்கு பிறகு நான் படிப்பேன் அல்லது வேலைக்கு செல்லுவேன் என்று கூறிய அவள் அதை பற்றிய பேச்சை கூட இப்பொழுது எடுப்பதில்லை.அந்த காரணங்கள் எல்லாம் பலர் வாழ்க்கையில் வெறும் பேச்சுக்கு மட்டுமே பொருந்துகிறது.எக்காரணமாயினும் குடும்பத்தினரை  சமாதானம் செய்ய முடியாத இவ்விருவரை நான் கோழை என்றுதான் சொல்லுவேன்,அல்லது திருமணம் செய்வதுதான் வாழ்வின் குறிக்கோள் என்றிருந்திருந்தால் அது தவறில்லை யோசித்திருந்தால் அதற்கு பட்டபடிப்பு படித்திருக்க வேண்டிய அவசியமும் இருந்திராது ,வீணாக ஒரு நல்ல லட்சியம் உள்ள வேறொருவரின் படிப்பு ஆசையை அவர்கள் அறியாது நிராகரித்துவிட்டீர்கள் அவ்வளவே.தங்களுக்கென்று சுயமாக ஒரு அடையாளம் சமூகத்தில் கிடைக்கும் முன்னர் இவர்களுக்கு வேறு அடையாளம் கிடைத்துவிட சுய அடையாளம் பற்றி சிந்திக்க மறந்துவிடுகின்றனர்.அக்காலத்தில் நாங்கள் பத்தொன்பது வயதில் புகுந்த வீட்டில் அம்மி அரைத்துக்கொண்டிருந்தோம்  என்று பழங்கதை கூறுபவர்கள் இதிலிருந்து சற்று விலகிக்கொள்ளலாம்.இக்காலத்து பெண்கள் என்கிறோம்,நாகரிகம் என்கிறோம் ஆனால்  ஏன் இவ்வாறு? எது இவர்களை பேச விடாமல் தடுப்பது,மனோரீதியாக பார்த்தால் தங்கள் குடும்பம் பற்றிய கவலை என்பது மட்டுமல்லாது திருமணம் என்றதும் பொதுப்படையாக தோன்றும் பல எண்ணங்களின் மீது எழும் ஈர்ப்பா?அவ்வாறெனில் அதனுடன் அவர்களுக்கு கிடைக்க போகும் குடும்பம் என்ற ஒன்றிலிருந்து அவர்களது எண்ணங்களானது மிகவும் விலகியல்லவா இருக்கிறது!.இவர்களால் அந்த குடும்பம் என்ற ஒன்றை பற்றி புரிந்து அறிந்து அதனுடன்  ஒன்ற இயலுமா?இதனை அந்த படித்த அறிவுமிக்க பெற்றோர் சிந்தித்திருப்பரா? ,அல்லது அவளைவிட சற்று வயதால் மனதால் வளர்ந்த அவன்தான் சிந்தித்து இருப்பானா?.அவ்வாறு உள்ள ஒருவனாயின் அந்த மெத்த படித்த துணை பேராசிரியரின் விடை வேறாக அல்லவா இருந்திருக்க வேண்டும்.காத்திருப்பது அவ்வளவு இயலாத காரியமா?.எதை பின்பற்றுகிறோமோ இல்லையோ பெண்ணின் திருமண வயது இருபத்தி ஒன்று என்பதை மட்டும் நன்றாக மனதில் பதித்துகொண்டுவிட்டனர் பலர்  .இதையெல்லாம் கூறினாள் அவர்களை பற்றிய கவலை உனக்கு எதற்கு என்கிறாள் தோழி ஒருத்தி.அமாம் அவர்களை பற்றிய கவலை எனக்கெதற்கு.கல்லூரியில் நீ எனக்கு முன் இருக்கை போல் ,பள்ளியில் எனக்கு முன் இருக்கையில் அமர்ந்து படித்தவள் அவ்வளவே.கல்லூரி அடையாள அட்டை தாண்டி யோசிக்காத அவள் பற்றிய கவலை எனக்கு தேவை இல்லைதான்.ஆனால் நமக்குதான் எந்த நிகழ்விற்கும் பழமொழி கூறும் பழக்கம் உண்டாயிற்றே."அவரவர்களுக்கு வந்தால்தானே தெரியும் தலைவலியும் திருகுவலியும்".ஆம் அவர்களை பற்றிய கவலை எனக்கெதற்கு.

Thursday, December 2, 2010

சில்லிடும் மழைக்காற்று  
ஜன்னல் வழி உள்புக, 
ஏனோ ஏங்கிடும்..

குளிரில் குறுகிவிடும்
உடல் அது,
அணைத்திடும்
உன் கரங்களுக்காய்..

தன்னால் சிவந்திடும்
செவி மடல்,
இதம் தரும்
உன் சுவாசத்திற்காய்..

போர்வைக்குள் ஒளிந்துகொள்ளும்
பாதங்கள்,
கள்ளமாய் தீண்டிவிடும்
உன் விரல்களுக்காய்..

சிலிர்ப்பில் சிலையான
கன்னங்கள்,
வெம்மை படர்ந்தோடும்
உள்ளங்கைகளுக்காய்..

அகம் மட்டும் ஏனோ,
உறையாமல் குதூகலித்து..
உனைபற்றிய நினைவுகள்,
அதை அரவணைத்திருப்பதால்..