BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Saturday, December 4, 2010

ஆம் பிறர் பற்றிய கவலை எனக்கெதற்கு...


       
           இதை எழுதும்பொழுது எனக்கு எந்த கோபமோ ஆத்திரமோ இல்லை,ஆம் கண்டிப்பாக இல்லை மாறாக அது பரிதாப உணர்ச்சியாக மாறிவிட்டது.இரவு பத்து மணி சுமார்,எப்பொழுதும் போல் பெற்றோரின் தொலைபேசி அழைப்பு படிப்பு ,உறக்கம்,உணவு பற்றியெல்லாம் பேசிவிட்டு நானும் தந்தையும் அன்று நிகழ்ந்ததை பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.பேச்சுக்கிடையே என் பள்ளி தோழி ஒருத்தியை பற்றிய பேச்சு எட்டி பார்த்தது.செய்தி இதுதான்,அவளுக்கு இந்த மாத இறுதியில் திருமணமாம்,கேட்டதும் ஏனோ ஒரு எரிச்சல் கலந்த ஆத்திரம்,கோபம் என, என்னிலிருந்து எப்பொழுதும் போல் எட்டி பார்த்தது.என்னை போல் பொறியியல் படிப்பவள்தான் இன்னும் படிப்பு கூட முடிந்தபாடில்லை அதற்குள் திருமணம்.எரிச்சல் ஏனெனில் இவ்வாறான செய்திகள் பலதை கேட்டுக்கொண்டிருப்பதுதான்,கோபமும் ஆத்திரமும் அவர்களது பெற்றோரின் அறிவிலித்தனத்தை எண்ணி,மரியாதைக்குறைவாக தோன்றினால் மன்னிக்கவும் வேறு எவ்வாறு இதை வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை.இந்த செய்தியை என்னிடம் கூறிவிட்டு அப்பா தொலைபேசியை அம்மாவிடம் தர.அம்மாவிடம் நான் பேசிய முதல் வார்த்தை இதுதான் "என்னமா அவங்க லூசாகிட்டாங்களா?".என் அம்மாவுடன் பணிபுரியும் ஆசிரியர்தான் அவளது அம்மாவும்.இன்று என் அம்மாவை பார்த்ததும் கேட்டாராம் அவர்,"உங்க பொண்ணுகிட்ட விஷயத்த சொன்னீங்களா? என்ன சொல்லிச்சு" என்று.அம்மா அதனால் என்னிடம் செய்தியை கூறினார்.என் கோபம் உச்சகட்டத்தை அடைந்தது மற்றொரு செய்தியை கேட்டுவிட்டுதான், மணமகன் ஒரு பேரும் புகழும் உள்ள தனியார் பல்கலைகழகத்தில் உதவிப்பேராசிரியராக பணிபுரிபவராம்.இதை கேட்டுவிட்டு என் அன்னையிடம் நான் கேட்ட கேள்வி ... "புரோபசரா?!..ஏன்மா அவனுக்காவது அப்போ அறிவு வேண்டாம்? இன்னும் கிராஜுவேஷன் கூட முடிக்கல அந்த பொண்ணு அதுக்குள்ள கல்யாணம் பண்ணிக்கரோமேன்னு?!,நாளைக்கு ஆன்ட்டி கேட்டாங்கனா நான் இப்படி சொன்னேனே சொல்லு,என்ன நெனச்சாலும் பரவாஇல்ல"..அவர்களிடம் நான் கூறியதை அன்னை கூறினாலும் அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று நன்கு அறிவேன் இருப்பினும் எதிர்ப்பினை காண்பிக்க வேறு வழி தோன்றவில்லை.எனக்கு இருந்த கோபமெல்லாம் நான்கு வருடம் (நான்கு வருடம் கூட முழுதாய் முடிந்தபாடில்லை) லட்சம் லட்சமாய் கொடுத்து படிக்க வைத்த பெற்றோரே இவ்வாறு தடாலடியாய் அடுத்தகட்டத்திற்கு போவதுதான்.இதற்கு குடும்ப சூழல்,திருமணத்திற்கு பின் படிப்பு வேலைக்கு செல்லலாம் என்று காரணம் காட்டும் பலர் இருக்கின்றனர், கல்லூரியில் என் சீனியர் ஒருத்தியின்  நிலையும் அவ்வாறே,அவளது பாட்டி கூறினாள் என்ற ஒரே காரணத்திற்காக பன்னாட்டு நிறுவனத்தில் கிடைத்த பணியிலும் சேராமல் திருமணம் செய்துகொண்டாள்,கல்லூரி படிப்பு முடிந்த அடுத்த மாதமே..திருமணத்திற்கு பிறகு நான் படிப்பேன் அல்லது வேலைக்கு செல்லுவேன் என்று கூறிய அவள் அதை பற்றிய பேச்சை கூட இப்பொழுது எடுப்பதில்லை.அந்த காரணங்கள் எல்லாம் பலர் வாழ்க்கையில் வெறும் பேச்சுக்கு மட்டுமே பொருந்துகிறது.எக்காரணமாயினும் குடும்பத்தினரை  சமாதானம் செய்ய முடியாத இவ்விருவரை நான் கோழை என்றுதான் சொல்லுவேன்,அல்லது திருமணம் செய்வதுதான் வாழ்வின் குறிக்கோள் என்றிருந்திருந்தால் அது தவறில்லை யோசித்திருந்தால் அதற்கு பட்டபடிப்பு படித்திருக்க வேண்டிய அவசியமும் இருந்திராது ,வீணாக ஒரு நல்ல லட்சியம் உள்ள வேறொருவரின் படிப்பு ஆசையை அவர்கள் அறியாது நிராகரித்துவிட்டீர்கள் அவ்வளவே.தங்களுக்கென்று சுயமாக ஒரு அடையாளம் சமூகத்தில் கிடைக்கும் முன்னர் இவர்களுக்கு வேறு அடையாளம் கிடைத்துவிட சுய அடையாளம் பற்றி சிந்திக்க மறந்துவிடுகின்றனர்.அக்காலத்தில் நாங்கள் பத்தொன்பது வயதில் புகுந்த வீட்டில் அம்மி அரைத்துக்கொண்டிருந்தோம்  என்று பழங்கதை கூறுபவர்கள் இதிலிருந்து சற்று விலகிக்கொள்ளலாம்.இக்காலத்து பெண்கள் என்கிறோம்,நாகரிகம் என்கிறோம் ஆனால்  ஏன் இவ்வாறு? எது இவர்களை பேச விடாமல் தடுப்பது,மனோரீதியாக பார்த்தால் தங்கள் குடும்பம் பற்றிய கவலை என்பது மட்டுமல்லாது திருமணம் என்றதும் பொதுப்படையாக தோன்றும் பல எண்ணங்களின் மீது எழும் ஈர்ப்பா?அவ்வாறெனில் அதனுடன் அவர்களுக்கு கிடைக்க போகும் குடும்பம் என்ற ஒன்றிலிருந்து அவர்களது எண்ணங்களானது மிகவும் விலகியல்லவா இருக்கிறது!.இவர்களால் அந்த குடும்பம் என்ற ஒன்றை பற்றி புரிந்து அறிந்து அதனுடன்  ஒன்ற இயலுமா?இதனை அந்த படித்த அறிவுமிக்க பெற்றோர் சிந்தித்திருப்பரா? ,அல்லது அவளைவிட சற்று வயதால் மனதால் வளர்ந்த அவன்தான் சிந்தித்து இருப்பானா?.அவ்வாறு உள்ள ஒருவனாயின் அந்த மெத்த படித்த துணை பேராசிரியரின் விடை வேறாக அல்லவா இருந்திருக்க வேண்டும்.காத்திருப்பது அவ்வளவு இயலாத காரியமா?.எதை பின்பற்றுகிறோமோ இல்லையோ பெண்ணின் திருமண வயது இருபத்தி ஒன்று என்பதை மட்டும் நன்றாக மனதில் பதித்துகொண்டுவிட்டனர் பலர்  .இதையெல்லாம் கூறினாள் அவர்களை பற்றிய கவலை உனக்கு எதற்கு என்கிறாள் தோழி ஒருத்தி.அமாம் அவர்களை பற்றிய கவலை எனக்கெதற்கு.கல்லூரியில் நீ எனக்கு முன் இருக்கை போல் ,பள்ளியில் எனக்கு முன் இருக்கையில் அமர்ந்து படித்தவள் அவ்வளவே.கல்லூரி அடையாள அட்டை தாண்டி யோசிக்காத அவள் பற்றிய கவலை எனக்கு தேவை இல்லைதான்.ஆனால் நமக்குதான் எந்த நிகழ்விற்கும் பழமொழி கூறும் பழக்கம் உண்டாயிற்றே."அவரவர்களுக்கு வந்தால்தானே தெரியும் தலைவலியும் திருகுவலியும்".ஆம் அவர்களை பற்றிய கவலை எனக்கெதற்கு.

2 comments:

Prasanna said...

பெரும்பாலும் நம்மூரில் ஒரு பெண்ணுக்கு எப்போது திருமணம் நடக்க வேண்டுமென தீர்மானிப்பது சமூகம்தான்.. அவளுக்கு அந்த 'உரிமை' கிடையாது..

அதிலும் கொஞ்சம் வயது ஆனாலும் வரும் peer pressure (relatives/friends) இருக்கே.. ரெம்ப ஓவர்..

Aishwarya Govindarajan said...

Urimai irundhum oru silar sariyaay andha vaaypinai sarivara payanpadutthikkolvadhillai..adhayae naan koorinaen..