BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Tuesday, November 23, 2010

யாதுமாகி நின்றாயோ..?!
தந்தை தாய்,
உடன்பிறப்பு.. 
நட்பென..
ஒளி எவர் பெயரானாலும்,
ஒலிப்பது உன் பெயரே..
ஆம்,
ஒலிப்பதில் மட்டுமே,
உன் பெயரென்றாகிவிட்டது..
என் அலைபேசியில்..
உன்னில் அன்பு உயிர்பித்ததோ?
நான் அறியேன்,
ஆனால்..
உன்பெயர் கூறும் கணம்தோறும்..
உயிர்பிக்கிறாள் அவள்,
கணம்தோறும் உனை எண்ணி..
உயிர்த்திடும் எனைப்போல,
என் அலைபேசி..
யாதுமாகி நின்றாயோ..?!

Monday, November 22, 2010

நேற்று..இன்று..நாளை..

ஏனோ பிடிக்கவில்லை,
நாட்கள் நகர்வது..
நேற்றைய நீ
காணாமற்போவதால்..

ஆனால்,
வியந்திருக்கிறேன்..
நாளைய உனை,
எதிர்கொள்ளப்போவதென்னி..

இப்படிக்கு,
இன்றைய உன்னில்
லயித்திருக்கும் மனம்..
மாற்றங்கள் மட்டுமே,
நிலைத்திருக்கும் உன்னில்..
லயித்திருக்கும் என் மனம்.
      

Wednesday, November 17, 2010

நினைவுகள்..
ஏராளம்..
இங்கு சேமிக்க,
மனமதில் சேமிக்க..
எதிர்வரும் காலமதில்..
ஜன்னலிடை அமர்ந்து,
சிறிதாய் பின்னந்தலைதட்டி,
இதழோரம் சிரிக்கும்..
நொடிகளுக்காய்..
சேமிக்கும் நினைவுகள்
ஏராளம்..  

Monday, November 15, 2010

பெருங்கவிதையின் சிறுவரிகள் ..

வான்தோன்றும் நிலவதாய்
மாறிவிட எண்ணம்
உன்னவளை எண்ணியேனும்
எனை நோக்கி சிரிப்பாயே..

Sunday, November 14, 2010

இதோ என் கரத்தில்..
வெண்காகிதங்கள்,
காத்திருக்கிறது..
உனக்கான என் எழுத்துக்களுக்காய்..
நீலம் கொண்டு எழுதும் அவ்வரிகளுக்காய்..
எண்ணினேன்.
என் நிலையும் இங்கு அவ்வாறே..
உடல்,
ஊன்,
உயிர்,
உள்ளோடும்  குருதி,  
அவற்றிடை என் எண்ணங்கள்..
யாவும் காத்திருக்கிறது,  
உன்னால் எழுதப்பட...

Thursday, November 11, 2010

கவிவரி என்றாய்..
ஆம் அறிந்ததே,
சொல்வனத்தில் இடசொன்னாய்..
நீ உணர்ந்திடா வரிகளை,
உலகம் வியந்து என்ன பயன்..
எண்ணமதை கைவிட்டேன்..
அறிவிலித்தனமாய் தோன்றினாலும்

மெய் நானென..
உயிர் நீயானாய்..
உன்னால் உயிர்மைத்துவிட்டது,
என்னுள்..
ஏனோ இந்த நாணம்..
புகைப்படங்கள் காண்கையிலும்
புன்னகைக்கிறேன் வலம்திரும்பி..
இடதில்தான் நீயாயிற்றே..
அருகிருக்கும் தோழி
புதிராய் பார்க்கிறாள்..
அதிசய நிகழ்வை
அடங்காத்தனம் மிக்கவென்று
இவளையா வர்ணித்தோமென?
புரியவில்லை அவளுக்கு
அதற்கு விடை நீ என்று..
நிற்க..
உயிர் மட்டுமா நீயானாய்?
நான் என்ன செய்வேன்,
அகத்தியன் தமிழ்..
உயிர்..
மெய்..
உயிர்மெய்யோடு நின்றுவிட..
                                              
குறிப்பு : வர்ணித்த வார்த்தையை திரும்பப்பெற எண்ணமாம் தோழிக்கு..வேண்டாம் என்றுவிட்டது அவள் வர்ணித்த "சற்றே வளர்ந்த  பிசாசு".. :P x( ...

வான் தோன்றும் நிலவதில்
அன்பு முகம் தெரியுமாம்..
பிரிந்து வாடுகையில்..
என் வானில் ஏனோ,
கருநிலவு...

Tuesday, November 9, 2010

மகவு புசிக்கும் பாலில்,
தாயவள் காணா நிறைவை ..
காமத்து கடைநிலையில்,
இருபால் காணா நிறைவை..
பெறுகிறேன் நானிங்கு,
உனக்கான கடிதங்களில்..
                                          -  புன்னகையுடன்

Monday, November 8, 2010

என் கண்மணிக்காய்...

அவன் என்னுள் நிறைந்த நொடி,
நான் அவனுள் கரைந்த நொடி,
என்னுள் உதித்தவளுக்காய்..

பிறப்பிலுண்டு இசையென்பர்..
 இசை என்னுள் பரவிவிட,
வெளிதோன்றிய சிறு ஸ்வரத்தை,
இசையே பிறந்ததென்பேன்..

பிஞ்சுகள் அழகென்பர்..
அழகதற்கு காரணமாயின்,
எவ்வாறு உரைத்திட?
என் பிஞ்சு அவள் அழகை..

புன்னகைகள் இறையென்பர்,
மோகனத்தின் அந்தம்தான்..
இதோ,
என் மடி கிடப்பவள்
அவள் மோகனம்..
மோகனங்கள் இறையோ?
 
குறும்புகள் பிரதிபலிப்பென்பர்,
எவரதென்ற வினா,
எழுந்துவிடும் இருவரிடத்தும்..
சமபகிர்தல் இதிலுண்டு எங்களுள்ளே,
அதனால்..

தீண்டல்கள் வெளிப்பாடென்பர்,
அன்று பெண்மையாய்..
தொடர்ச்சி,
இன்று தாய்மையாய்..
நன்றி..!!
தொட்ட கரத்திற்கு,
முகம் தொட்ட சிறு கரத்திற்கு..

மழலை இறைமொழியாம்..
விடியா இரவுகளில்,
புரியா உரையாடல்கள் அவளுடன்,
மனதோடு மழலையாய்..
அவனும் சிறுபிள்ளை போல்..
அவள் மொழியில் ஒன்றிடுவான்..

என்னவனை நான் கொஞ்ச,
சற்றே சினம் கொள்வாள் என்னை போல்..
பாவம்..
அவள் அறியாள்,
அவனும் சிறுபிள்ளையென..

தளிர் அது கண்ணுறங்க,
லயித்திருக்கும் மனம் அதில்,
அந்த அழகு மௌனத்தில்..
இதோ என் பரிபூரணமென்று..
                                                      -என் கண்மணிக்காய்
                                                           


 

தருணங்கள் திரும்பாதென்று...?!

            மூன்று நாட்களுக்கு முன்தான் நான் ஏழாம் வகுப்பு முடித்தேன்..நம்புவீர்களா?..நம்பித்தான் ஆகவேண்டும் .இழந்த அல்லது இறந்தகாலமாகிவிட்ட தருணங்கள் திரும்பக்கிடைத்தால் அந்த காலத்திற்கே சென்றுவிட்ட உணர்வு ஏற்படும்.அத்தகையதுதான் நான் மேற்ச்சொன்னதும்.இம்முறை தீபாவளி விடுமுறை நாட்கள் சற்றே அழகியதாய் அமைந்தது பல அழகிய தருணங்களுடனும்    ,அழகிய உறவுகளுடனுமாய்.அதிலொன்று, தீபாவளிக்கு முதல் நாள் அன்று இரவு, காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை நன்றாக பெய்துகொண்டிருந்தது .நான் அப்பா மற்றும் என்னுடன் தீபாவளிக்காக என் வீட்டிற்கு வந்திருந்த தோழி என மூவரும் மெகா டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த ஒரு மெல்லிசை நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தோம். அந்நிகழ்ச்சியில் எஸ்.பி.பி ,உன்னி மேனன் ,சுஜாதா என மூவரும் பங்கேற்றிருந்தனர் .விடுதியில் தங்கியிருப்பதால் தொலைக்காட்சிக்கும் எனக்குமான உறவு முற்றிலுமாய் அறுபட்டது போல் இருக்கையில் அன்று அந்நிகழ்ச்சியை வீட்டில் அமர்ந்து பார்த்ததில் ஏதோ ஒரு மகழ்ச்சி,அதுவும் நீண்ட நாட்களுக்கு பிறகு தந்தையுடன் ஒன்றாக அமர்ந்து ஒரு இசை நிகழ்ச்சியை ரசிப்பது. நான் சென்று அமர்கையில் "ஆஹா ஆஹா ஆஹா" என்று எஸ்.பி.பி ,சாருகேசியில் பாடத்துவங்க இருவருக்கும் மிகப்பிடித்த பாடல் என்பதோடு மட்டுமல்லாமல் அப்பாவின்  நண்பர் ஒருவர் நினைவுக்கு வந்துவிட நானும் அப்பாவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டோம்,அப்பாடல் ஒளிபரப்பாகும்பொழுதெல்லாம்  நாங்கள் இருவரும் ஒருசேர சொல்லும் வரிகள் "ரஜினி இதுல அழகு இல்ல?!,என்ன ஸ்டைல் அந்த ஸ்டைல்கெல்லாம் இனிமே ஒருத்தன் பொறந்துதான் வரணும்!?"..அடுத்து அது எஸ்.பி.பி  பற்றிய விவாதம் ,சங்கராபரணம் என்று கொண்டுபோய்விடும்  ஆனால் அடுத்தடுத்து நல்ல பாடல்களை எஸ்.பி.பி மேடையில் பாடிக்கொண்டிருந்ததால் நாங்கள் எந்த விவாதமும் செய்யாது பாடல்களை கேட்டுக்கொண்டிருந்தோம்.அடுத்து "சுமதி என் சுந்தரி" படத்திலிருந்து "பொட்டு வைத்த முகமோ" பாடலை எஸ்.பி.பி பாடிக்கொண்டிருந்தார். பி.வசந்தாவின் அந்த ஹம்மிங் பகுதி வர எங்கள் வீட்டு வசந்தாவும் ஜோதியில் வந்து ஐக்கியமானார். அந்த ஹம்மிங் பகுதியை எஸ்.பி.பி யுடன் பாடிய பெண்ணை வைத்து பரிசோதிக்காமல் பியானோவை அதற்கு உபயோகப்படுத்திக்கொண்டனர்.நான் அதனுடன் சேர்ந்து "லலலா" என்று முனுமுனுத்துக்கொண்டிருந்தேன் அடுத்தது "ரோஜாவை தாலாட்டும் தென்றல்" பந்துவராளியில் அழகாக துவங்கிட ஷைலஜாவிற்கு பதிலாக சுஜாதா அங்கு பாடிக்கொண்டிருந்தார், எஸ்.பி.பி யின் ஜிம்மிக்ஸிற்காகவே அந்த நிகழ்ச்சியை இப்பொழுது மீண்டும் பார்க்கவேண்டும் போல் உள்ளது,அப்பாடலை கேட்டுக்கொண்டே நானும் தந்தையும் ஸ்ரீதர் படங்களை பற்றி விவாதித்துக்கொண்டிருந்தோம்.ஸ்ரீதரின் ஒரு சில படங்கள் நன்றாக ஒடாவிடினும் அப்படங்களில் வரும் பாடல்கள் ஒவ்வொன்றும் செதுக்கப்பட்ட ஒன்றாக கொடுத்திருப்பார் என பேசிக்கொண்டிருந்தோம்.அப்பொழுது இடைவேளையில் அடுத்து என்ன பாடல் பாடப்போகிறார் என்று ஒளிபரப்பப்பட்டது. திடீரென்று தொலைக்காட்சியில் "நந்தா நீ என் நிலா.." என்று எஸ்.பி.பி குரல் ஒலிக்க அதுவரை என்னுடன் பேசிக்கொண்டிருந்த அப்பா,உடனடியாக "ஆஹா" என்று கூறிக்கொண்டே தொலைகாட்சி பக்கம் திரும்பிவிட்டார்.அவரை  தொடர்ந்து நானும் தொலைகாட்சி பக்கம் திரும்பினேன்.வெளியில் பெய்து கொண்டிருந்த மழையானது ஒளிபரப்பிற்கு இடையூறாய் இருந்தாலும் இடைவேளைக்கு பிறகு முழு பாடலையும் நன்றாக கேட்கமுடிந்தது.நீண்ட நாளைக்கு பிறகு எஸ்.பி.பி மேடையில் அப்பாடலை பாடி கேட்க முடிந்தது ஒரு ஆனந்தம்.ஆனால் அதே போன்று முன்பு ஒருமுறை நிகழ்ந்தது என் நினைவிற்கு வந்தது. ஏழாம் வகுப்பு முழு ஆண்டு விடுமுறையில் ஒரு மதியபொழுதில்  அப்பா என்னுடன் என்னை வேறு பள்ளியில் சேர்ப்பது குறித்து பேசிக்கொண்டிருந்தார் நானும் வேறு பள்ளியில் சேரவேண்டுமே,நண்பர்களை பிரியவேண்டுமே என்று சோகத்தில் இருந்த சமயம்,அப்பொழுதெல்லாம் ராஜ் டிஜிட்டல் பிளஸ்-இல் மதிய வேலையில் பழைய படங்களை ஒளிபரப்புவது வழக்கம்,அவ்வாறாக "நந்தா என் நிலா" படம் ஓடிக்கொண்டிருந்தது.நானும் தந்தையுடன் பேசிக்கொண்டே படத்தை பார்த்துக்கொண்டிருந்தேன்.அப்படத்தையும் அப்பொழுதுதான் முதன்முதலில் பார்க்கவும் நேர்ந்தது,என் தந்தை அந்த சேனலை வைக்கவும் அந்த பாடல் ஒளிபரப்பப்படவும் சரியாக இருந்தது,அதற்கு முன் அப்பாடலை நான் கேட்டிருந்ததும் இல்லை,அன்று அப்பாடலை கேட்டதும் இன்று இதோ இப்பொழுது கூறியது போல் "ஆஹா" என்றார். அப்பா அன்று கூறியது இன்றும் நினைவில் இருக்கிறது "இந்த பாட்டுலலாம் எஸ்.பி.பி வாய்ஸ் அப்படியே இழையும் கண்ண மூடிட்டு கேட்டா டிவைன்" என்றார்.பள்ளி மாற்றம் பற்றிய பேச்சிலிருந்து விடுத்து வேறு எதிலாவது மனதை செலுத்த நானும் அப்பாடலை கேட்டுக்கொண்டிருந்தேன், "ஆகமம் தந்த சீதை.." வரியை அவர் அந்த பாடலுடன் சேர்ந்து பாடிய விதம் அவருக்கு நினைவில் இருக்கிறதோ? இல்லையோ?, எனக்கு இன்றும்  நன்றாக நினைவில் உள்ளது, அப்பொழுதெல்லாம் ராகங்கள் பற்றியும் அவ்வளவாக நான் அறிந்திருந்ததில்லை (இப்போழுதும்தான் ;-) ) ஆனால் அந்த பாடல் துவங்கிய விதம் மற்றபாடல்களிலிருந்து சற்று மாறுபட்டதாக இருந்ததாலோ,என்னவோ?.அப்பாடலை முதலில் கேட்டதிலேயே ஒரு விதமாக பிடித்திருந்தது அதனால் மீண்டும் கேட்க வேண்டும் போல் தோன்றியது.ஆனால் எனக்கு தெரிந்து அதற்கு பிறகு அவர்கள் அதனை எந்த சேனலிலும் ஒளிபரப்பவில்லை.நான் அது எம்.எஸ்.வி-யின் இசையாக இருக்கலாம் என்று ஊகித்தேன் ஆனால் தாத்தாவின் எம்.எஸ்.வி ஒலிநாடாக்களிலும் பழைய பாடல்கள் ஒலிநாடக்களிலும் அப்பாடல் இருந்ததில்லை,பிறகு புதிய பள்ளி,புதிய சூழல் என அனைத்திற்கும் நடுவில் அப்பாடல் பற்றி யோசிக்க நேரமற்றுபோனது அதனால் அப்பாடலை தேடிப்பிடிக்கும் எண்ணம் அந்நிலையில்  தற்காலிகமாக கைவிடப்பட்டது ஆனால் என்னிடம் மடிகணினி வந்த பின் முதன்முதலில் தரவிறக்கம் செய்யப்பட்ட பாடல்களின் பட்டியலில் அப்பாடல் இருந்தது என்பது ஆச்சரியப்பட தேவையற்ற ஒன்று.தரவிறக்கம் செய்தபின்தான் அதன் இசையமைப்பாளர் வேறெவர் என்று தெரிந்துகொண்டேன்.அப்பாடலை மீண்டும் அன்று வீட்டில் அதே இடத்தில் நான் அமர்ந்தபடியும்,அருகில் தந்தை அன்று போல் இன்றும் அதே ஆஹா என கூறிக்கொண்டு அமர்ந்தபடி என இருவரும் கேட்டுக்கொண்டிருந்தோம். பாடல் அதிலிருந்து மிஸ்டர்.பாரத்திற்கு மாற,எஸ்.பி.பி யும், உன்னிமேனனும்  பாடத்துவங்கினர்,"யாரவன் சொன்னது? தருணங்கள் மீண்டும் திரும்பாது" என்று எண்ணி புன்னகைத்தபடி வெளியில் பெய்து கொண்டிருந்த மழையை ரசிக்கசென்றுவிட்டேன்.