BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Monday, November 8, 2010

தருணங்கள் திரும்பாதென்று...?!

            மூன்று நாட்களுக்கு முன்தான் நான் ஏழாம் வகுப்பு முடித்தேன்..நம்புவீர்களா?..நம்பித்தான் ஆகவேண்டும் .இழந்த அல்லது இறந்தகாலமாகிவிட்ட தருணங்கள் திரும்பக்கிடைத்தால் அந்த காலத்திற்கே சென்றுவிட்ட உணர்வு ஏற்படும்.அத்தகையதுதான் நான் மேற்ச்சொன்னதும்.இம்முறை தீபாவளி விடுமுறை நாட்கள் சற்றே அழகியதாய் அமைந்தது பல அழகிய தருணங்களுடனும்    ,அழகிய உறவுகளுடனுமாய்.அதிலொன்று, தீபாவளிக்கு முதல் நாள் அன்று இரவு, காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை நன்றாக பெய்துகொண்டிருந்தது .நான் அப்பா மற்றும் என்னுடன் தீபாவளிக்காக என் வீட்டிற்கு வந்திருந்த தோழி என மூவரும் மெகா டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த ஒரு மெல்லிசை நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தோம். அந்நிகழ்ச்சியில் எஸ்.பி.பி ,உன்னி மேனன் ,சுஜாதா என மூவரும் பங்கேற்றிருந்தனர் .விடுதியில் தங்கியிருப்பதால் தொலைக்காட்சிக்கும் எனக்குமான உறவு முற்றிலுமாய் அறுபட்டது போல் இருக்கையில் அன்று அந்நிகழ்ச்சியை வீட்டில் அமர்ந்து பார்த்ததில் ஏதோ ஒரு மகழ்ச்சி,அதுவும் நீண்ட நாட்களுக்கு பிறகு தந்தையுடன் ஒன்றாக அமர்ந்து ஒரு இசை நிகழ்ச்சியை ரசிப்பது. நான் சென்று அமர்கையில் "ஆஹா ஆஹா ஆஹா" என்று எஸ்.பி.பி ,சாருகேசியில் பாடத்துவங்க இருவருக்கும் மிகப்பிடித்த பாடல் என்பதோடு மட்டுமல்லாமல் அப்பாவின்  நண்பர் ஒருவர் நினைவுக்கு வந்துவிட நானும் அப்பாவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டோம்,அப்பாடல் ஒளிபரப்பாகும்பொழுதெல்லாம்  நாங்கள் இருவரும் ஒருசேர சொல்லும் வரிகள் "ரஜினி இதுல அழகு இல்ல?!,என்ன ஸ்டைல் அந்த ஸ்டைல்கெல்லாம் இனிமே ஒருத்தன் பொறந்துதான் வரணும்!?"..அடுத்து அது எஸ்.பி.பி  பற்றிய விவாதம் ,சங்கராபரணம் என்று கொண்டுபோய்விடும்  ஆனால் அடுத்தடுத்து நல்ல பாடல்களை எஸ்.பி.பி மேடையில் பாடிக்கொண்டிருந்ததால் நாங்கள் எந்த விவாதமும் செய்யாது பாடல்களை கேட்டுக்கொண்டிருந்தோம்.அடுத்து "சுமதி என் சுந்தரி" படத்திலிருந்து "பொட்டு வைத்த முகமோ" பாடலை எஸ்.பி.பி பாடிக்கொண்டிருந்தார். பி.வசந்தாவின் அந்த ஹம்மிங் பகுதி வர எங்கள் வீட்டு வசந்தாவும் ஜோதியில் வந்து ஐக்கியமானார். அந்த ஹம்மிங் பகுதியை எஸ்.பி.பி யுடன் பாடிய பெண்ணை வைத்து பரிசோதிக்காமல் பியானோவை அதற்கு உபயோகப்படுத்திக்கொண்டனர்.நான் அதனுடன் சேர்ந்து "லலலா" என்று முனுமுனுத்துக்கொண்டிருந்தேன் அடுத்தது "ரோஜாவை தாலாட்டும் தென்றல்" பந்துவராளியில் அழகாக துவங்கிட ஷைலஜாவிற்கு பதிலாக சுஜாதா அங்கு பாடிக்கொண்டிருந்தார், எஸ்.பி.பி யின் ஜிம்மிக்ஸிற்காகவே அந்த நிகழ்ச்சியை இப்பொழுது மீண்டும் பார்க்கவேண்டும் போல் உள்ளது,அப்பாடலை கேட்டுக்கொண்டே நானும் தந்தையும் ஸ்ரீதர் படங்களை பற்றி விவாதித்துக்கொண்டிருந்தோம்.ஸ்ரீதரின் ஒரு சில படங்கள் நன்றாக ஒடாவிடினும் அப்படங்களில் வரும் பாடல்கள் ஒவ்வொன்றும் செதுக்கப்பட்ட ஒன்றாக கொடுத்திருப்பார் என பேசிக்கொண்டிருந்தோம்.அப்பொழுது இடைவேளையில் அடுத்து என்ன பாடல் பாடப்போகிறார் என்று ஒளிபரப்பப்பட்டது. திடீரென்று தொலைக்காட்சியில் "நந்தா நீ என் நிலா.." என்று எஸ்.பி.பி குரல் ஒலிக்க அதுவரை என்னுடன் பேசிக்கொண்டிருந்த அப்பா,உடனடியாக "ஆஹா" என்று கூறிக்கொண்டே தொலைகாட்சி பக்கம் திரும்பிவிட்டார்.அவரை  தொடர்ந்து நானும் தொலைகாட்சி பக்கம் திரும்பினேன்.வெளியில் பெய்து கொண்டிருந்த மழையானது ஒளிபரப்பிற்கு இடையூறாய் இருந்தாலும் இடைவேளைக்கு பிறகு முழு பாடலையும் நன்றாக கேட்கமுடிந்தது.நீண்ட நாளைக்கு பிறகு எஸ்.பி.பி மேடையில் அப்பாடலை பாடி கேட்க முடிந்தது ஒரு ஆனந்தம்.ஆனால் அதே போன்று முன்பு ஒருமுறை நிகழ்ந்தது என் நினைவிற்கு வந்தது. ஏழாம் வகுப்பு முழு ஆண்டு விடுமுறையில் ஒரு மதியபொழுதில்  அப்பா என்னுடன் என்னை வேறு பள்ளியில் சேர்ப்பது குறித்து பேசிக்கொண்டிருந்தார் நானும் வேறு பள்ளியில் சேரவேண்டுமே,நண்பர்களை பிரியவேண்டுமே என்று சோகத்தில் இருந்த சமயம்,அப்பொழுதெல்லாம் ராஜ் டிஜிட்டல் பிளஸ்-இல் மதிய வேலையில் பழைய படங்களை ஒளிபரப்புவது வழக்கம்,அவ்வாறாக "நந்தா என் நிலா" படம் ஓடிக்கொண்டிருந்தது.நானும் தந்தையுடன் பேசிக்கொண்டே படத்தை பார்த்துக்கொண்டிருந்தேன்.அப்படத்தையும் அப்பொழுதுதான் முதன்முதலில் பார்க்கவும் நேர்ந்தது,என் தந்தை அந்த சேனலை வைக்கவும் அந்த பாடல் ஒளிபரப்பப்படவும் சரியாக இருந்தது,அதற்கு முன் அப்பாடலை நான் கேட்டிருந்ததும் இல்லை,அன்று அப்பாடலை கேட்டதும் இன்று இதோ இப்பொழுது கூறியது போல் "ஆஹா" என்றார். அப்பா அன்று கூறியது இன்றும் நினைவில் இருக்கிறது "இந்த பாட்டுலலாம் எஸ்.பி.பி வாய்ஸ் அப்படியே இழையும் கண்ண மூடிட்டு கேட்டா டிவைன்" என்றார்.பள்ளி மாற்றம் பற்றிய பேச்சிலிருந்து விடுத்து வேறு எதிலாவது மனதை செலுத்த நானும் அப்பாடலை கேட்டுக்கொண்டிருந்தேன், "ஆகமம் தந்த சீதை.." வரியை அவர் அந்த பாடலுடன் சேர்ந்து பாடிய விதம் அவருக்கு நினைவில் இருக்கிறதோ? இல்லையோ?, எனக்கு இன்றும்  நன்றாக நினைவில் உள்ளது, அப்பொழுதெல்லாம் ராகங்கள் பற்றியும் அவ்வளவாக நான் அறிந்திருந்ததில்லை (இப்போழுதும்தான் ;-) ) ஆனால் அந்த பாடல் துவங்கிய விதம் மற்றபாடல்களிலிருந்து சற்று மாறுபட்டதாக இருந்ததாலோ,என்னவோ?.அப்பாடலை முதலில் கேட்டதிலேயே ஒரு விதமாக பிடித்திருந்தது அதனால் மீண்டும் கேட்க வேண்டும் போல் தோன்றியது.ஆனால் எனக்கு தெரிந்து அதற்கு பிறகு அவர்கள் அதனை எந்த சேனலிலும் ஒளிபரப்பவில்லை.நான் அது எம்.எஸ்.வி-யின் இசையாக இருக்கலாம் என்று ஊகித்தேன் ஆனால் தாத்தாவின் எம்.எஸ்.வி ஒலிநாடாக்களிலும் பழைய பாடல்கள் ஒலிநாடக்களிலும் அப்பாடல் இருந்ததில்லை,பிறகு புதிய பள்ளி,புதிய சூழல் என அனைத்திற்கும் நடுவில் அப்பாடல் பற்றி யோசிக்க நேரமற்றுபோனது அதனால் அப்பாடலை தேடிப்பிடிக்கும் எண்ணம் அந்நிலையில்  தற்காலிகமாக கைவிடப்பட்டது ஆனால் என்னிடம் மடிகணினி வந்த பின் முதன்முதலில் தரவிறக்கம் செய்யப்பட்ட பாடல்களின் பட்டியலில் அப்பாடல் இருந்தது என்பது ஆச்சரியப்பட தேவையற்ற ஒன்று.தரவிறக்கம் செய்தபின்தான் அதன் இசையமைப்பாளர் வேறெவர் என்று தெரிந்துகொண்டேன்.அப்பாடலை மீண்டும் அன்று வீட்டில் அதே இடத்தில் நான் அமர்ந்தபடியும்,அருகில் தந்தை அன்று போல் இன்றும் அதே ஆஹா என கூறிக்கொண்டு அமர்ந்தபடி என இருவரும் கேட்டுக்கொண்டிருந்தோம். பாடல் அதிலிருந்து மிஸ்டர்.பாரத்திற்கு மாற,எஸ்.பி.பி யும், உன்னிமேனனும்  பாடத்துவங்கினர்,"யாரவன் சொன்னது? தருணங்கள் மீண்டும் திரும்பாது" என்று எண்ணி புன்னகைத்தபடி வெளியில் பெய்து கொண்டிருந்த மழையை ரசிக்கசென்றுவிட்டேன்.

0 comments: