BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Sunday, February 10, 2013

விஸ்வரூபம் - இதுவல்ல               'அன்பே சிவம் படம் போல்  கமல் நடித்து வெளிவந்த படம் அதற்கு முன்னும் பின்னும் ஏதும்  இல்லை' என்று எப்படியும் விஸ்வரூபம் படத்தை பார்த்துவிட்டு வந்து த்விட்டரிலும் முகநூலிலும் பதிவிட்டுவிடவேண்டும் என்று படத்தை பார்ப்பதற்கு இரு நாட்கள் முன்பே முடிவு செய்துகொண்டேன்,.ஏறக்குறைய எல்லா திரையரங்குகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்ததால் முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்றாலும் இரண்டாம் நாள் மூன்றாம் காட்சிக்கு டிக்கெட் கிடைத்தது என் முந்தைய பிறப்பின் புண்ணிய பலன்.

                திரையின் முன்புறத்திலிருந்து  மூன்றாவது வரிசை,'எதுக்கு பிரன்ட்ல டிக்கெட் புக் செஞ்ச' என்று நண்பர்கள் கேள்வி!.ரஜினி படங்கள் அளவிற்கு இல்லையென்றாலும் படத்தின் துவக்கம் முதலே விசில் பறந்துகொண்டிருந்தது தியேட்டரில்(ரஜினியின் சிவாஜி படத்திற்கு படம் துவங்கும் முன் வரும் விளம்பரங்களில் இருந்தே விசிலடிக்கத் துவங்கிவிட்டனர்). நண்பர்கள் 'இப்படி விசிலடிச்சா?! டயலாக் ஒழுங்காவே கேக்க மாட்டேங்குது'.நான், 'பின்னாடி எங்கயாவது உட்கார்ந்திருந்தா இதுகூட கேட்காது'(அவசரமாக முன் வரிசையில் டிக்கெட் புக் செய்து நான் செய்த தவறை மூடிமறைத்த பெருமிதம் என்னுள்).
              
              திரைப்படம் இரண்டு பெண்மணிகளின் விவாதங்களுடன் தொடங்கியது. நியூகிலியர் ஆங்காலஜிஸ்ட் மற்றும் மிஸ்ஸஸ்.விஸ்வநாத்தாக நிரூபமா.ஏதோ ஒன்றைப் பறிகொடுத்தவர்கள் போலவே சுற்றித்திரியும் பெரும்பாலான விஞ்ஞானிகளைப் பார்த்துப் பழகிய எனக்கு எழுந்த முதல் கேள்வியே ஒரு விஞ்ஞானி (அதுவும் நியூகிலியர் ஆங்காலஜிஸ்ட் வேறு)இவ்வாறெல்லாம் யோசிக்க முடியுமா? என்பதுதான்.ஆண்ட்ரியா,எம்மாதிரியான தமிழை அவர் பேசுவது என்று முடிவெடுப்பதற்க்குள்ளாகவே படம் முடிந்துவிடுகிறது.        
      
               ராகுல் போஸ்,விக்ஸ்-தொண்டையின் கீச் கீச் என்பது போன்ற குரலில் பேசினாலும் ,அவரே தமிழ் பேசி நடித்திருக்கிறார்,கொடூரமாகப் பார்ப்பது கத்துவது  என்ற தமிழ் சினிமாவின் வில்லன்கள் சமுதாயத்தை ஓரங்கட்டிவைத்துவிட்டு,தனக்குள் அமைதியான ஒரு கருப்பு உலகத்தை உருவாக்கிக் கொண்ட ஒரு குரூர மனிதன் போன்ற பாத்திரம்,ஆரவாரமற்ற வில்லனாக மிகக் கச்சிதம் , பாராட்டுக்கள்!. 

               கர்னல் ஜகன்னாத்!,விஸ்வநாத்தின் மாமாவாக,சேகர் கபூர்.ஆண்ட்ரியாவைப் போல் இவரும் இக்கதைக்குத் தேவையா? தேவை இல்லையா? என யோசிக்க வைத்தாலும்,'ஹார்ட் அட்டாக் வந்து நான் செத்துடக் கூடாதுல்ல' எனும்போது தையற்காரன் நறுக்கென்று சீறாக ஒரு துணியைத் தைப்பதற்காக வெட்டுவது போன்ற  நடிப்பு.நிருபமாவை க்ளோசப் ஷாட்களில் காண்பித்த நொடிகளில் இவரை காண்பித்திருக்கலாம் .நடிப்பை இன்னும் ரசித்திருப்போம்.ஆமாம் இவருக்குத் தமிழ் பேசியது யார்?.


            கமல், விஸ்வநாதனாகவும்,வசீமாகவும் ,நடனத்திலும் நடிப்பிலும் நேர்த்தியோ நேர்த்தி.கமலின் படங்களுக்கே உரித்தான நாத்திகமும் சாடல்களும் கதையின் போக்கினூடே ஆங்காங்கே நகைச்சுவையும்.  'உன்னைக் காணாது' பாடல்,வாலியின் ஆனந்த விகடன் பக்கங்களிலிருந்து ஈர்க்கப்பட்டு எழுதிவிட்டார் போல நம் கவிஞர் கமல்.விக்ரமன் படத்தில் எஸ் .ஏ.ராஜ்குமாரின் லாலாலாக்கள் போல படம் முழுக்க ஒலிக்கிறது 'யாரென்று புரிகிறதா?'பாடல்.படம் ஹாலிவுட் தரம் என்று சொல்லும் நண்பர்களுக்கு,அமெரிக்கர்கள் எவரும் ஆப்கானிஸ்தான் அவலங்களைப் படம்பிடிக்க இன்னும் முன்வரவில்லை.ஆனால் கதையின் அந்த ஒரு பகுதிக்காக  மட்டுமே அவரின் ரசிகையான எனக்கு மதிப்பும் பெருமிதமும்  தோன்றுகிறது . ஒசாமாவின் உயரம் முதற்கொண்டு நுணுக்கமாகப் பார்த்து தேர்வு செய்திருக்கும் கமல் மீதமுள்ள கதையை விஸ்வநாதன் என்னும் நடனக்கலைஞன் நடனத்தினூடே சம்பந்தமில்லாமல் சமைத்த சிக்கன் போல ஆக்கிவிட்டார்.அதன் விளைவு  பாஷாவிற்கு பம்பாயின் மார்க் ஆண்டனி என்றால்,விஸ்வநாதன் அமெரிக்காவில்  வசிப்பதால் அவருக்கு ஒசாமாதான் சரிப்படும் என்பது போல ஆக்கிவிட்டது. கமலின் ரசிகையாக விஸ்வரூபம்-2 வெளிவருவது நல்ல விஷயம் என்று எண்ணினாலும்.ஒரு சினிமா பார்வையாளராக இக்கதைக்கு இரண்டாம் பாகம் எதற்கு? என்ற கேள்வி எழுகிறது. தொடக்கத்தில் சொன்ன அன்பே சிவம் பற்றிய குறிப்பையும் வாபஸ் வாங்கிக்கொள்கிறேன்.தசாவதாரம் வரிசையில் வந்த கமலின் வாரிசு இப்படம் என்பதால்.      

        உலகில் உள்ள அனைவராலும் உயரத்தில் தூக்கிவைக்கப்பட்டு தனித்துவிடப்பட்ட ஒருவன் தன்னை அவர்களுள் ஒருவனாக நிலையின் திரியாது திணித்துக்கொள்ள முயன்று  உருபெற்ற தோற்றமே இந்த விஸ்வரூபம்.இருப்பினும் கமலின் விஸ்வரூபம் இதுவல்ல.