BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Friday, March 25, 2011

இசை எனக்கு..

தினம் ஒரு கணம்,   
எனில் தோன்றும் எண்ணமும்..
எண்ணத்திடை சலனமும்,
சலனமற்ற மௌனமும்..
மௌனம் முழுதாட்கொள்ளும், 
ஆத்மாவும்..
ஆத்மாவின் அர்த்தமும்,
என் பெண்மையும் முழுமையும்..
எனக்கு உயிர் தந்த உருவும்,
எனில் உயிர் தரும் அவனும்.. 
உருவறைக் கருவும்,
கருவின்று கசியும்
முதல் சிறு ஸ்வரமும்..
அதன் விரல் அசைவில்,
ஜனித்திடும் லயமும்..
உலகில் சுருங்காத,
என் அண்டமும்..
அண்டம் உறைவிக்கும்   
என் பரமும்,
பரம் மறைந்திருக்கும் வெளியும்..
வெளி படர்ந்திருக்கும் ஐந்தும்,
ஐந்து போல் ஆதியற்ற ஒன்றும்..

Monday, March 21, 2011

புரிதல் முப்பதுநாள்.. உணர்தல் வாழ்நாள்..

                      "யோவ் புருஷா!", மது அவனை செல்லமாகக் கடிந்து கொண்டாள்.ராகுல் என்றும் போல் இல்லாது அன்று அவளுக்கு சமையலில் உதவுகிறேன் என்று சமையல் அறையைக் களேபரம் செய்து கொண்டிருந்தான்.மற்றநாட்களில் ஒன்பதரை மணி அலுவலகத்திற்கு ஒன்பதேகாலுக்கு எழுந்து "மது!ஆபிஸ்க்கு டயம் ஆச்சு", என்று அலறுபவன்.ஆம் மதுவைப் பொறுத்தவரை அவ்வாறுதான் கூறுவாள் "அலறாதே ராகுல்!,சீக்கரம் எழுந்துக்க வேண்டியதுதானே!". ராகுல்,"நான் லேட்டாதானே தூங்கினேன் மது,எப்படி சீக்கிரம் எழுந்துக்க முடியும்?!".மது அந்த கேள்விக்காய் காத்திருந்தவள் போல "நானும்தான் லேட்டா தூங்கினேன்,நான் எழுந்துக்கலே?!காரணம் சொல்லாத ராகுல்".இவ்வாறு சிறு சிறு ஊடல்கள் சிறுபிள்ளைத்தனமாய்.இன்று ஏனோ அதிசயமாய் சமையல் அறையில் அவளே எதிர்பாராமல் தோன்றி உதவுகிறேன் என்று ஏதோ செய்துகொண்டிருந்தான்.இடைஞ்சலாக இருந்தாலும் ரசித்துக்கொண்டுதான் இருந்தாள் அவளுக்கே உரித்தான அந்த குறுஞ்சிரிப்புடன்.அப்பொழுது திடீரென்று அருகில் வந்து காது மடலின் பின் ஊத அதற்குத்தான் அந்த கடிந்து கொள்ளல்.அவனது அன்றைய திடீர் மாற்றத்திற்கு காரணம் இல்லாமல் இல்லை.அதற்கு ஒரு வருடம் முன்புதான்  மதுபாலா (எ) மதுவிற்கும் ,ராகுல் ரஞ்சன் (எ) ராகுலிற்கும் உறவினர்கள் புடை சூழ சொர்க்கத்தில் இல்லையெனினும்,மகிழ்ச்சியும் ,சிரிப்பொலியும், பட்டும்,நகையும், கூடிக் குலவுதலும் என சொர்க்கம் போல தோற்றம் தந்த ஒரு மண்டபத்தில் நிகழ்ந்தது.ஆசை அறுபது மோகம் முப்பது என பல முப்பது நாட்களும் பல அறுபது நாட்களும்  இன்னும் சில முப்பதும் அறுபதுமாய் புரிதல், புரிந்திடினும் அழகான ஊடல்,காதல் எனக் கடந்து இன்றோடு ஒரு வருடம் ஆகிவிட்டது.இன்றும் அவ்வாறுதான் இருக்கிறது அவள் வாழ்வு அவனுடன் ,அவன் போலவே.காலையிலிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன வாழ்த்துக்கள் கூற.இடையிடையே பெரியவர்களின் மறைமுக ஆசிர்வாதங்கள் அதை தொலைபேசியில்.கேட்டுவிட்டு இருவரும் இங்கு ஒருவரைப் பார்த்து ஒருவர் புன்னகைத்துக் கொண்டனர்.அழைப்புகள் எல்லாம் முடித்துவிட்டு,மாலை வரப்போகும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்குமாய் உணவு தயார் செய்துகொண்டிருந்தாள்.ஒரு பத்து பன்னிரண்டு பேர் வரலாம் என்பது அவளது கணிப்பு அதற்கேற்றவாறு அனைத்தும் தயாராகிக் கொண்டு இருந்தது.அப்பொழுது காதருகில் இவன் இவ்வாறு திடீரென.என்ன ஆயிற்று இவனுக்கு திருமணநாள் மகிழ்ச்சியாகக் கூட இருக்கலாம், மனதிற்குள் எண்ணிக்கொண்டாள்.ஆனால் அவன் எதையோ கூறவந்தது அதை மனதிற்குள் வைத்துக்கொண்டு சொல்லத் தயங்கி வேறு எதையெல்லாமோ செய்வது  போலத் தோன்றியது மதுவிற்கு.அவன் அவ்வாறும் அல்லவே,அவள் நன்கு அறிந்தது.ஒருவேளை நாம்தான் அவனை இன்னும் புரிந்துகொள்ளவில்லையோ,அதற்குள் இவ்வாறாக மதுவின் மனதில் பல என்ன ஓட்டங்கள்.என்ன ஆச்சு ராகுல்? எனக்கு ஹெல்ப் எல்லாம் பண்ணற ,இன்னிக்கு நம்ம வெட்டிங் டே-னு சொல்லி சமாளிக்காத,அப்படி எதவாது பண்ணனும்னு தோன்றி இருந்தா! காலைல முதல் வேலையா நீ சீக்கிரம் எழுந்திருப்ப!இன்னிக்கு நான் டயம் பார்த்தேன் இன்பாக்ட் நீ அஞ்சு நிமிஷம் லேட் என்றாள்,குறும்புப் புன்னகையுடன்.கள்ளி!எப்படி படிக்கற என் மூளைய..என்று அவள் கன்னம் கிள்ளினான்.அவன் கரம் சற்றே  கடுமையானதுதான் ஆனால் எவர் கரத்திலும் இல்லாத மென்மை அதில் எங்கிருந்தோ திடீரென வந்து குடிகொண்டுவிடும்.தன் அதே சிரிப்புடன் அந்த கிள்ளலையும் வாங்கிக்கொண்டுவிட்டு "சார்! அதெல்லாம் இருக்கட்டும் முதல  நீங்க சொல்லவந்தத சொல்லுங்க",என்றாள் இடுப்பில் கை வைத்துக்கொண்டு ஒரு அழகு அதட்டலுடன்.அவன்,"மேடம் அதட்டரீங்களா?!".அவள், "அப்படியும் வெச்சுக்கலாமே"."ஓ!அப்படியா?!" என்றான் அவனுக்கே உரித்தான ஒரு ராகமான ஸ்தாயியில்.அது அவளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றும்.  "ம்ம்ம்ம்!",என்று இழுத்தபடி,"மது!ஞாபகம் இருக்கா கல்யாணத்துக்கு அப்புறம் ரெஜிஸ்தார் ஆபிஸ் போயிட்டு வரப்போ நம்ம பேசிட்டு இருந்தது.அவர்கள் பயணித்த சாலையின் நீரிய மரத்தின் மென் நிழல் போல அவள் மனத்தில் அப்பொழுது நிகழ்ந்த உரையாடல்.எவ்வாறு மறக்க முடியும் அவளால் அதை.                                                                     பதிவாளர் அன்றெனப் பார்த்து சரியான நேரத்திற்கு வந்திருந்ததால்,இவர்களது கையெழுத்துப் போடும் வேலை சீக்கிரமே முடிந்தது.நண்பர்களும் உறவினர்களும் அருகில் எப்பொழுதும் போல்.கையெழுத்துப் போட்டு முடித்ததும்,புதுதம்பதியருக்கே  உண்டான கவனிப்பாய் இருவரையும் தனி காரில் அனுப்பிவைத்தது உடன் வந்திருந்த உறவும் நட்பும்.பிடித்தவை பிடிக்காதவை என முன்பே பலது பற்றி பேசியாயிற்று.காரில் உள்ள எப்.எம் மெலிதாய் ஏதோ பாடலை முனுமுனுத்தபடி ,கூடவே மதுவும்.காரில் சென்றுகொண்டிருக்கையில் திடீரெனக் குறுக்கே கையில் ஒரு பாத்திரமும் அழுக்கு சட்டை அணிந்தபடியுமாய் அக்காரின்  காரின் முகப்பு விளக்கு உயரமே உடைய ஒரு சிறுவன் கடந்து சென்றான்.இருவரும் சற்றுநேரம் அவனையே நோக்கிக் கொண்டிருந்தனர், நோக்கிய பார்வையில் இருந்த அமைதி அந்த காருக்குள்ளும் சிறிது நேரம் சூழ்ந்துகொண்டது.மீண்டும் பேச்சை ராகுல்தான் தொடங்கினான். "என் மைண்ட்ல ஆழமா இருக்கற ஒரு சில தாட்ஸ் எல்லாம் நான் எல்லார் கூடவும் ஷேர் பண்ணிக்க மாட்டேன்,ஷேர் பண்ணிக்கனும்னு நினைக்கற என் நெருக்கமானவங்க கிட்டயும்  நானா நெனச்சாதான்,இல்லனா அதுவும் இல்ல.இதெல்லாம் எதுக்கு  இவன் இவளவு சீரியசா சொல்றான் பாக்கறியா?.இன்னும் கொஞ்ச நாள்ல நீயும் அந்த ரொம்ப நெருக்கமானவங்க லிஸ்ட்ல வந்துருவ அதனாலதான் இப்போவே ட்ரைனிங்!",என்றான் வலது கண்ணை சிறிது சிமிட்டிவிட்டு. "எனக்கு ஒரு ஆசை ஆனா இப்ப சொல்லல,இப்போ சொன்ன அதை ஏத்துக்கற தன்மை உன்னோடயது எப்படி இருக்கும் எனக்கு சரியா தெரியாது ,அதனால இப்ப வேணாம் என்னிக்காவது ஒரு அழகான நாள் இதைப் பத்தி கண்டிப்பா பேசலாம்!",என்று கூறிவிட்டு மீண்டும் அவளைப் பார்த்து சிரித்துவிட்டு காரின் ஸ்டீயரிங்கை திருப்பினான்.                       
                 நிழல் களைந்து நிஜத்திற்குத் திரும்பினாள் மது."சரி!புரியுது,அழகான நாள் கிடைச்சாச்சு,நீங்க சொல்ற வரப் போற அந்த உங்க ஆசையை என்னால ஏத்துக்க முடியுமா முடியாத அப்படிங்கறது இந்த ஒரு வருஷத்துல கண்டிப்பா உன்னால கெஸ் பண்ண முடிஞ்சுருக்கும் அப்புறம் எதுக்கு தயக்கம்,காமெடி பண்ணாதீங்க ராகுல்,அவ்வப்பொழுது அவளின் இந்த "வாங்க! போங்க!"அழகாய்த்தான் இருக்கும் அவனுக்கு. "மது நம்ம அன்னிக்கு கார்ல வரப்போ,ஒரு குட்டி பையன்.." என முடிப்பதற்குள் "அவன் சொல்லுக்கு ஒத்ததாய் இவளும் "ஒரு குட்டி பையன்..",என்று கூறி முடித்திருந்தாள்.இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகை.
                 மாலை,நண்பர்களுடன்,அவர்களுக்கு இவன் ஒரு வருடம் கழித்தும் இன்றும் அதே  புது மாப்பிள்ளைதான்."டேய் ராகுல்! அங்கயே பாக்காதடா எங்களையும் கொஞ்சம் கவனி.மது நீயுமா?!,போதும் நீங்க ரெண்டு பேரும் அப்றமா டெலிபதில பேசிக்கலாம்".புன்னகை இருவரிடத்தும்,அது வெளியுலகிற்கு நாணமாய்த் தோன்றினாலும்,அர்த்தம் இருவர் மனம் மட்டுமே உணரும்.                         
           

Saturday, March 19, 2011

அன்பு,
இவ்வாறெனத் தெரியாது  எனக்கு.

தனிமையிலும் உன் நினைவுகள்
வெறுமைகள் போக்கிட
அவ்வெண்ணம் என்றால் 
என் வரை அது அன்பே.

தவிர்த்ததுண்டு
உன்னைச் சில நேரம்,
பெண்ணுடன் பிறந்தது
அச்செயல் என்றால்
என் வரை அது அன்பே.

பிடிக்காத செயல்கள் பல
குறும்பாய்  செய்வதுண்டு 
சிறுபிள்ளை செயலன்றி
வேறெதுவுமாய் இல்லையெனினும்
என் வரை அது அன்பே.

நெருக்கங்கள் கேட்பதுண்டு, 
தொலைவுகளே மிஞ்சியிருக்க.
தீண்டல்களும் மீளல்களுமே,
அவைத் தேடியது என்பதாயின் 
என் வரை அது அன்பே.

தோன்றும் மௌனத்தில்
அமைதிகள் உண்டு
மனம் மட்டும் பேசும்
அவற்றில் என்றாலும்
என் வரை அது அன்பே.

நாணங்கள் இருப்பதுண்டு
உந்தன் சில கேள்விக்காய்
பெண்மைக்கே உண்டான
குணம் அதுவாயின்
என் வரை அது அன்பே.

கோபம் கொள்வதுண்டு
செயல்கள் சிலதிற்க்காய்
அடக்கமின்மை அதுவாய்
பார்வைக்குத் தோன்றினாலும்
என் வரை அது அன்பே.

உணவு உறக்க வினவல்கள்
எப்போதும் இருப்பதுண்டு
கேட்கும் பலரது
கேள்விகள் அதுவாயினும் 
என் வரை அது அன்பே.

சேய் போல் நீ எனக்குத்தோன்றும்
நொடிகளுண்டு
முழுமை நிலை அவ்விடம்
இல்லாது போயினும்
என் வரை அது அன்பே.

உரையாடி குறை தேடி  நிறை ரசித்துக் கூற
உந்தன் செவிதனைத்
தேடுவதும் உண்டு
ஆலோசனை அதற்குப் பெயரென்பர் பலர்
 என் வரை அது அன்பே.

அன்பு,
எவ்வாறென்று தெரிந்ததில்லை எனக்கு
ஆனாலும் அறிவேன் ஒன்றினை மட்டும்,
எழுபது கடந்திடினும் நான் இவ்வாறுதான் என.


  


 


Wednesday, March 16, 2011

புரிவதில்லை,சில நேரங்களில்...!!...

புரிவதில்லை சில நேரம்,
அவன் நிலை எனக்கிங்கு..
அருகிருந்தால் அறிந்திடலாம்,
தொடர்பிருந்தால் புரிந்திடலாம்,
பௌர்ணமி நிலவாய்தான்..
நாங்கள் பேசுவதும்,
தேய்பிறை கடைநிலையாய்..
பேசும் நொடிகளும்..

இப்பொழுதும் அதுதானா?
கேள்வி அது அவனது,
என்ன கேள்வி இது?!..
மனதில் பதில் எனது..
வேறென்ன இருந்திடும்!?
அவனுக்காய் பதில் எனது..
எதிர்பார்த்த கேள்விகள்,
ஏனோ அங்கில்லை..
பதில் எனது,
அவனுக்காய் இருந்தது..
தயக்கங்கள் இருப்பினும்,
விடையதனை  திணித்திட்டேன்.. 
பெண்ணாய்  அச்செயல்
பிடிக்கவில்லை எனினும்..  
ஆனால்,
யாரிடம் கூறிடுவேன்..
அவனிடம் கூறாது.


புரிவதில்லை சிலநேரம்,
அவன் மனநிலை எனக்கிங்கு..
தொலைவிருந்து அறிந்திட,
இறையும் நானில்லை..
அருகிருக்கும் நிலை,
தற்பொழுது எனக்கில்லை..
எப்பொழுதும் இல்லையா ?
அதுவும் தெரியவில்லை..
விடைகள் தேடுகிறேன்,
புரியாமல் போகிறது..
கண்ணீர்துளிகள் எவ்வாறு,
சர்க்கரை ஆகும்...   

Tuesday, March 15, 2011

எனக்குள் அவன்...


சிறிதாய் பலதாய்,
சிமிட்டல்கள்..
குறும்புக்கு அடையாளம்,
வேறெதுவோ?
எனக்குள் அவன்,
சிறு பிள்ளையாய்..

சிறிதாய் இயல்பாய்,
புன்னகைகள்..
அக்கறைக்கு அடையாளம்,
வேறெதுவோ ?
அது எனக்காய்..
இல்லையெனினும்,
எனக்குள் அவன்,
சிறு நட்பாய்..

சிறிதாய் சிலவாய்,
எதிர்ப்பார்ப்புகள்..
பொய்க்கும் நொடிதனில்..
ராட்சதமாய், 
எனக்குள் அவன்,
சிறு எதிரியுமாய்...

சிறிதாய் எதுவுமாய்,
எனக்குள் அவன்..
எதுவும் நிகரற்ற,
சில உறவைத் தவிர்த்து,
எதுவுமாய்..
எனக்குள் அவன்.
நான்...!

         "சிறுமழை" என்ற ப்ளாகில் கண்டது,பார்த்ததும் எனக்கு அலைபேசியில் எப்பொழுதேனும் வரும் இது போன்ற குறுஞ்செய்திக் கேள்விகளும்,பள்ளி காலம் முடிக்கையில்(கல்லூரி நாட்களும் இதோ இன்னும் இரு மாதங்களில் முடியப் போகிறது ) நண்பர்கள் என்னிடமும் நான் அவர்களிடம் நீட்டிய புத்தகங்களும் நினைவில் வந்து விட்டது.காலையில் எழுந்து பார்த்தால் என் தோழிக்கும் எனக்குமாய் அந்த கேள்விகள் கார்த்திக்கிடமிருந்து (http://bit.ly/dIlGqr) மெயிலில்.குறுஞ்செய்திகளுக்கு  விடையளித்த அதே பொறுமையுடன் இப்பொழுது.        

எனக்கு பிடித்தவை சில
….
பிடித்த நிறம் : neeeeeeeeeeeelam பிறகு வெள்ளை லாவெண்டர்  கருப்பு முதல் மூன்று நிறங்களில் அதுவாகவே சிறுவயதிலிருந்தே என்னிடம் பொருள்களும் ஆடைகளும் போதும் எனும் அளவிற்கு சேர்ந்துவிட்டது.போதும் என்று நானும் கூறவில்லை :D .கருப்புக்கு வீட்டில் தடா,அபசகுனம் என்கிறார்கள்.       
பிடித்த உணவு :தோசை,அதுவும் எனக்கு நானே தயார் செய்துகொள்வது (என் தம்பி என் தோசைக்கு விசிறி ,ஒரு விளம்பரம்), அம்மாவின் சாத்தமுது(ரசம்) நானும் கற்றுக்கொண்டுவிட்டேன் காரம் சற்று கூடுதலுடன்,வெங்காயக் குழம்பு ,எப்பொழுதும் போல் புளியோதரை ,சக்கரைப் பொங்கல்,தயிர் சாதம்.         
பிடித்த மாதம் : ஆங்கில மாதமா? தமிழ் மாதமா?.. அக்டோபர் என்று வைத்துக்கொள்ளுங்களேன்  
பிடித்த பாடல்:எப்பொழுதும் கூறும் பதில்தான், தனியாக வேண்டுமானால் இம்மாதம் கேட்ட "டாப் 25 பாடல்கள்" எனப் பதிவிடுகிறேன்  
பிடித்த படம்:இது முந்தையதை விட மிகக் கடினம்.நல்ல வேலை பிடித்த புத்தகம் என்ற கேள்வி எழவில்லை. 
பிடித்த விளையாட்டு: கிரிக்கெட் மட்டையால் தம்பியை அடிப்பது டென்னிஸ் மட்டையால் அவன் என்னை அடிப்பது.பாட்டுக்குப் பாட்டு.தந்தையுடன் எப்பொழுதாவது  செஸ்.!     
பிடித்த பருவம்(சீசன்):சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்துவைப்பேனோ!,மார்கழிப்பனி கலர் கோலம் போட்டுவிட்டு அதன் மேல் பனி கரைந்து உருகி சூரியன் தோன்றும் நொடி வரை,வெயிலோட வெளையாடி!!(சொல்லித்தான் ஆகவேண்டும்,பிறகு கேள்வி எழலாம் "மழையை ரசிக்கத்தெரிந்தவர்களுக்கு வெயில் ஏன் பிடிக்கவில்லை என!)...   
பிடித்த வார நாள்: வெள்ளி மாலை ஆறு மணி தொடங்கி ஞாயிறு 11 :59 Pm முடிய எதுவேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.  
பிடித்த ஐஸ் க்ரீம் ஃப்ளேவர்:   சாக்லேட்
பிடித்த பொழுது:  அந்தி மாலை தென்றல் காற்று..அவ்வப்பொழுது அழகு நிலவு இரவுகள்.  
பிடித்த அயல்நாட்டு நடிகர்: டாம் ஹாங்க்ஸ், டி காப்ரியோ பட்டியல் மிக நீளம்.    

தற்போதைய….
மனநிலை:தோழிக்கு அலுவலகத்தில் சேர்வதற்கான அழைப்புக் கடிதம் வந்த மகிழ்ச்சி.
உடை:  லாவண்டர் வெள்ளை சல்வார்,பல்லாவரம் ரயில் கேட் அருகே ப்ரீடம் எனும் கடையில் ருபாய் 256 க்கு நான்கு வருடங்களுக்கு முன்பு வாங்கியது.நல்ல கடை நல்ல தரம் அந்தக் கடையில் நீங்களும் துணிமணிகளை வாங்கலாம்.நல்லவிலைக்குக் கிடைக்கும். (இந்த கேள்வி மிகத் தேவையா? என்று இவ்வாறும் மறைமுகமாகக் கேட்கலாம்). 
கணிணியின் முகப்பு:   அழகான ஒரு கொல்லாஜ். 
சூழல்:மின் விசிறி சுற்றிக்கொண்டு இருக்கிறது, எதிர் காட் ஆளுயர டெட்டி பியர் என்னை முறைத்துக்கொண்டு இருக்கிறது."என் வானம் எங்கும் பௌர்ணமி இது என்ன மாயமோ.." என்ற வரிகள் மடி கணினியிலிருந்து ஒலித்துக்கொண்டு இருக்கிறது. 
எண்ணம்: பலரும்..பலதும்...எவராவது ஒரு நல்ல புத்தகம் படிக்க எனக்கே எனக்கென்று அளித்தால் நன்றாக இருக்குமென்றும். 
ரிங் டோன் : சொல்லியே தீர வேண்டுமா?! அவசியம் தெரிய வேண்டும் என்றால் எனக்கு இக்கேள்விகளை அனுப்பியவரையே கேட்டு தெரிந்துகொள்ளவும் :P
காலர் ட்யூன்: சுய சம்பாத்தியத்திற்க்காய் வெய்டிங்..  

ஐந்து “முதல்”கள்….
முதல் நெருங்கிய தோழன் :  எதிர் வீட்டு நிசார்,பிள்ளை பருவத்திலிருந்தே,குடும்ப நண்பர்கள் இரு குடும்பத்தினரும் சுமார் 40 வருடங்களாக, உருளைக்கிழங்கு போண்டா,முள்ளம்பன்றி என்று நாங்கள் வைத்த பெயர் அவனுக்கு,பள்ளியில்.   
முதல் நெருங்கிய தோழி : மகாலட்சுமி ,மூன்றாம் வகுப்பிலிருந்து, இன்று வரையும் அவளே... :)      http://bit.ly/bOEoWa 
முதல் காதல் மலர்ந்த வயது : முதல் ஈர்ப்பு எனலாமே பொருத்தமாக இருக்கும்!?... எதுவாயினும்,இங்கு,இதற்கு விடையளிக்கப் பிடிக்கவில்லை. 
முதல் செல்லப்பிராணி: பல்லி, நம்பமுடியவில்லை அல்லவா? இப்பொழுது நினைத்தால் என்னால் கூடதான்.வீட்டில்,நான் சாப்பிடும் பொழுதெல்லாம் வந்து அருகில் அமர்ந்து கொள்ளும்.எனக்கு அம்மா தரும் காய்கறிகள் அதற்கு உணவு.பின் மாயமாகி விட்டது.முதலை அல்லது ஆமை எதிர்காலப் பட்டியலில் உள்ளது.        
நினைவு தெரிந்து பார்த்த முதல் படம்:  தேவர் மகன், மூன்று வயது என நினைக்கிறேன் அப்பொழுது. "போற்றிப்பாடடி பொன்னே" பாடலுக்கு வீட்டு மர பெஞ்சின்  மேல் தத்தக்கா பித்தக்கா என ஆடிய நினைவு இன்றும்.   

ஆறு “கடைசி”கள்
கடைசி சிகரெட்: அப்பா, என் கண் முன் சிகரெட் பிடிக்க நான் அவரைப் பார்த்ததும் அவர் பின் அதை மறைக்க . அது என்னவென்று தெரியாமல் அவரிடமிருந்து அதைப் பிடுங்கி நான் தூர எறிந்தது  .அப்பொழுது எனக்கு வயது பத்து இருந்திருக்கலாம்.இன்றுவரை அப்பாவின் கடைசி சிகரெட் அது, நான் தொட்ட முதல் மற்றும் கடைசி சிகரெட்டும் அது.  
குடித்த திரவம்: காபி 
கார் பயணம்: தோழியுடன் பிச்சாவரம்.
பார்த்த படம் : In a Better world சிறந்த வேற்று மொழிப் படத்திற்கான இவ்வருடத்திய ஆஸ்கார் வென்ற படம்
தொலைபேசி உரையாடல்: அம்மாவிடம் காரடையான் நோன்பு பற்றி நேற்று இரவு பதினோரு மணிக்கு.
படித்த புத்தகம்:  மென் புத்தகங்கள் கணக்கில் உண்டா?! அவ்வாறாயின் தபு சங்கரின் "கண் மையில் எழுதிய கவிதைகள்".       

நீங்கள் எப்போதாவது சட்டத்தை மீறியிருக்கிறார்களா? உங்களைப் பொறுத்தவரை எது சட்டம்..?!.நமக்கேற்றவாறுதான் மாற்றிககொள்கிறோமே அதனை. 
நீங்கள் எப்போதாவது கைது செய்யப்பட்டிருக்கிறார்களா? பாசத்தால்..?!!..அவ்வாறாயின், பலமுறை 
நீங்கள் எப்போதாவது டீவியில் வந்ததுண்டா?  எவரேனும் தப்பித் தவறி 1994 சிதம்பரம் நாட்டியாஞ்சலியை தூர்தர்ஷனில் கண்டிருந்தால் நான் பிரபலமாகி இருப்பேன்.பார்வையாளராக அம்மாவின் மடியில் அமர்ந்தபடி.    
நீங்கள் எப்போதாவது பொய் சொன்னது உண்டா?  நான் மனிதம்.சொன்னது பொய்யென்று உடனடியாய்க் கூறிவிடுவதும் என் இயல்பு. 
நீங்கள் முன்பின் தெரியாத பெண்ணிற்கு முத்தம் கொடுத்திருக்கிறீர்களா? எதிர் வீட்டிற்கு  வந்த ஸ்னேஹா எனும் பெண்குழந்தைக்கு,எவர் குழந்தை என்று தெரிந்ததில்லை கேட்டுப்  பெயர் தெரிந்துகொண்டேன், சிரித்தது..தூக்கி முத்தமிட்டேன்..! (மீண்டும்,என்னக் கேள்வி இது!?  )

இன்று செய்த ஆறு செயல்கள் : வளையோசை பாடலை மீண்டும் மீண்டும் கேட்டு அதனுடனே முணுமுணுத்தது ,கேள்வி கேட்டது,எழுதியது ,உனக்கு 100 இயர்ஸ் என்று நண்பன் ஒருவனிடம் சொன்னது, ப்ராஜெக்ட் ஹெட் எங்கள் ஆசிரியரை சந்தித்தது.ஜிலேபி உண்டது.         
நீங்கள் இன்று சென்ற ஐந்து இடங்கள்: இரண்டு டிபார்ட்மென்ட்களுக்குசென்றது  ,காபி ஷாப், காலை தோசைக்கு கேண்டீன்.My Friend Ganesha -வை கோவிலில் சந்தித்தது.     
இப்போது காதால் கேட்கும் நான்கு ஒலிகள் : "ஏய்!.." என்று "புஜ்ஜிகாடு" எனும் ஒரு தெலுங்குப் படத்தின் வசனம்,அதை கேட்டு சிரிக்கும் அறைத்தோழியின் ஹா ஹா ஹா, இதற்கிடையில் என் சத்தமும் இதோ எனும் மின் விசிறியின் சத்தம்.இதைவிட சத்தமாக ஆனால் அழகாக,லதா மங்கேஷ்கரின் குரல் ராஜாவின் இசையில்.    
நீங்கள் சொல்லத்தோன்றியதை தயங்காமல் எந்த மூன்று பேரிடம் சொல்வீர்கள்: அப்பா,நட்பு இன்றுவரை. அடுத்த ஒரு இடம் இன்னும் காலியாக.   
போரடிக்கும் போது செய்யும் இரண்டு செயல்கள்: புத்தகம்(அ)இயற்கை,இசை.(போர் அடிக்காத பொழுதுகளிலும்) இரண்டு மட்டும்தான் கூறவேண்டுமா?!செயல்கள் பல உண்டே..  
இறப்பதற்குள் செய்ய விரும்பும் ஒரு காரியம் : ஆத்மார்த்தமாக வாழ்ந்தோம் என்று இறப்பதற்கு முன் நொடி நினைப்பது.       

Monday, March 14, 2011

பயம்...


கோயிற்க்கருங்கல்லில்,
எட்டிபார்க்கும் குதிரைச்சிலை..
அப்பா என்று அழைத்ததும், 
அதன் மேல் அமரவைக்க,
 சிறிதாய் எனக்காய்..
அது கனைத்ததாய் உணர்வு..
அது பாசமா?
பரிவா?
அறியவில்லை நான்..
நட்பானது எனக்கங்கு,
குதிரைச் சவாரி பயம்...

தூக்கத்தில் முகம் மீது,
பஞ்சு போல் ஊர்ந்து  செல்ல..
சிற்றெறும்பு அதுவென,
கை சிதறிவிட்ட நொடி ..
காதோரம் எறும்புதான்,
கீ எனக் கீச்சிட..
உணர்ந்தேன் துதிக்கையோன், 
வாகனம் அதுவென..
இன்றுவரை எலியார்..
தெரிந்ததுவே பலருக்கு.

பட்டாசுகள் படபடக்க,
செவி இரண்டும்..
என் விரல் தேடும்..
கேள்புலனின் பயங்களுக்காய்,
கண்களில் பெருக்கெடுக்கும்..
பயங்கள் பறந்த நொடி,
உலகிற்கு ஏனோ..
புகையால் பயம் வர..
கனவாகிப் போனது,
பட்டாசுப் படபடப்பு..
இடிகளுக்கு மட்டுமே,
இன்றும் செவிகள்
விரல் தேடி..

வானத்துப் பறவைகள்,
சிரம் அமரக்
கரம் வருட
முதலைகள் வளர்ப்பு
பற்றி பல நேரம்
பேசிடுவேன்..
வெட்டுக்கிளிகளுக்கு,
அச்சம் கொண்டு
விரல் நகரும்  
காத தூரம்..

உயரங்கள் ஒருபோதும்,
அச்சத்தை தந்ததில்லை..
பள்ளங்கள் கடக்கத்தான்,
கண் இறுக மூடிக்கொள்ளும்..
சிறுவயது நிகழ்வுகள். 
இறுதிவரை நட்பு போல், 
இப்பயம் எனக்கு..

வெள்ளி இரவொன்றில்,
தனியமர்ந்து பேய்ப்படம்..
படத்தின் நாயகியே,
படம் பார்த்திருக்க 
மறித்தாளாம்.. 
மெத்தைக்குச் செல்லாது,
தந்தையின் மடியில்.. 
குறுகிய நினைவுகள்.
சிறிதே செல்கள்,
சிலிர்த்தபடி நின்றுவிடும்..
அமானுஷ்யம் என்று,
இன்றும் உச்சரிக்க.

நெடும்பாதை ஒன்றில்,
முன்னொருவர் சென்றிருக்க..
பின் தொடர்ந்து நானும்,
செல்வது போல்..
கனவு ஒன்று.
கரம் அது கை நீட்டும்,
யாரென்று தெரியாமல்,
என் கரங்கள் மறைந்துகொள்ள..
இன்றுவரை ஏனோ?
சில கனவுகளும் பயம் எனக்கு.

ஒருத்தியுடன்,
அவன் பேச..
யதார்த்தம் என்றாலும்
மனம் சிறிதாய்,
பயம் கொள்ளும்..
பயமோ கலக்கமோ..
பாதுகாப்பின்மை தோன்றும்,  
தனிமை உணர்வதுவோ..
வார்த்தைகள் பொருத்தமில்லை
ஆக,
பயமென்றே கூறத்தொன்றும்,
அது எதுவேயாயினும்.   

 நித்தம் ஒன்றாய்,
புதியதாய் ஜனிக்கிறது!
நேற்றைய நொடிகளில்,
புதையூண்டும் கிடக்கிறது!
புதைந்தவைகளுக்கு சிரிப்பும்..
பிறப்பவைகளுக்கு கண்ணீருமாய்..
மனதிற்க்குமட்டும்  ஏனோ,
பயத்திடம் பாரபட்சம்...
 

Sunday, March 13, 2011

தோன்றும் இடைவெளியில்...!


சொல்லநினைக்கிறேன்..
நட்புக் கூட்டம் உனது,
மிகவே அழகு என்று..
தயக்கங்கள் சிறிது..
எனக்கு உண்டாயினும்..
உன்னவளாய் அதனுடன்,
ஒன்றிவிட எண்ணம்தான்.
தோன்றும் இடைவெளியில்,
எண்ணம் கானல் நீராய்..

அரியதாய் அழகியதாய்,
இயற்கையில் கண்டிட ..
மனம்தான் உன்னிடம்,
சொல்லத் துடித்திடும்..
தோன்றும் இடைவெளியில்,
துடிப்புகள் சப்தமின்றி..

எனக்கே உரித்தாய்,
சிலவற்றை செய்தாலும்..
நீயற்ற நிமிடங்கள்,
நீ உணரச் சொன்னாலும்..
ஏனோ அதைத் தவறாய் மனம்,
புரிந்திருக்கும் சில நொடிகள்..
யதார்த்தம்,
தவறில்லை..
தோன்றும் இடைவெளியில்,
என் விளக்கங்கள் வேலையற்று..

அழகாய் உனை ஏனோ..
பெயர் கூறி அழைக்க எண்ணம்..
வெட்கங்களும் தயக்கங்களும்,
கரம்கோர்த்துக் கொண்டுவிடும்.
உந்தன் குரல்தனை,
கேட்கும் நொடிகளில்..
தோன்றும் இடைவெளியில்
எண்ணம் சிற்றெறும்பாய்..  

நொறுங்கித்தான் போய்விட்டேன், 
இடைவெளிகள் நிலையென்று,
அவள் சொன்ன கணம் அதிலே..
தோன்றும் இடைவெளியில்,
மறைத்தவையில் இதுவும் ஒன்றாய்.

 

Saturday, March 12, 2011

வார்த்தைகள் கோடி இங்கு,
அன்பு  அறம்..
இசை இறை..
உடல் ஊடல்..
மனம் குணம்..
பெண்  ஆண்..
தாய் சேய்..
நான் நீ..
நீ நான்..
தீமை நன்மை..
தீ திரைக்கடல்..
வான் மண்..
காற்றுக்கூட்டங்கள்..
நெருக்கத்து செவி ரகசியங்கள்..
தொலைவிருந்து மொழியும் புன்னகைகள்..
பதின்மம் பழமை..
முதுமை புதுமை..
வளர் இரவும். 
தேய் பகலும்,
அறுசுவையும் நவரசமும்,
நட்பியலும் வாழ்வியலும்,
வார்த்தைகள் கோடி இங்கு..
புலன் நீ..
ஆன்மா நான்..

Friday, March 11, 2011

எப்படிச்சொல்வேனோ...!?

                  இசையைக் கேட்டபடி அந்த இலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன், "How to name it for?!"-வயலின் இசை, அந்த வயலின் பகுதியை கேட்கும்பொழுதெல்லாம் அதுவே எனக்கு அனைத்தும் ஆகிவிட்டது போன்ற உணர்வு தோன்றும்,இதைப் பற்றி பலரிடம் பல நேரங்களில் கூறியதும் உண்டு.ராஜாவின் இசையே இவ்வாறுதானோ?!.கேட்கையில் அந்த இலைகளும் அதற்க்கேற்ப தன் தலையை அசைப்பது போலத் தோன்றும்.அது வெறும் தோற்றமா அல்லது மெய்யாகவே அவ்வாறா?.காண்கையில் கண்களுக்கும் நடனமாடத் தோன்றிவிடும்,புன்னகை.ஆனால் இன்று புன்னகை இல்லை,மனம் எதையோ சிந்தித்துக்கொண்டிருந்தது.காற்று அடிக்கும் திசைக்கு ஏற்றவாறு கிளைகளும் இலைகளும் அப்பக்கம் சென்றுகொண்டிருந்தன.அது மிதமான தென்றல் காற்றே.புயற்காற்று வீசுகையில் இடது ,வலது,எதிர்திசை என தன்னைத் திமிறிக்கொண்டு காற்றின் பக்கம் செல்லாது நிற்கும் இலைகளும் கிளைகளும் இந்த மிதமான தென்றலுக்கு மட்டும் ஏனோ தன்னை அடிமைப் படுத்திக்கொண்டு விடுகிறதே.இன்று அதன் திசையில் அந்த இலைகள்.மனித மனமும் இவ்வாறுதானா,அந்த காற்றையும் இலைகளையும் போல?.தான் செல்லும் திசையில்தான் பிறர் வரவேண்டுமென்றும்.தன்னைப் போல்தான் பிறரும் சிந்திக்க வேண்டும் என்றும்.பிறர் என்று நான் இங்கு கூறியது ஒரு மனிதனைச் சுற்றி இருக்கும் அவனது நெருக்கமான வட்டாரத்தை.தனக்கு முக்கியமாய்த் தெரிவது  தன்னை சுற்றி உள்ளவர் பார்வையிலும் அவ்வாறே தெரியவேண்டும் என.அவ்வாறு தோன்றவில்லை என்றால் உனக்கு இவ்வுலகில் பிறரிடம் நடந்துகொள்ளும் முறை தெரியவில்லை,என்று கண்மூடித்தனமாக ஒரு  வரி.அவ்வாறெனின்,அதுதான் என் நிலை! மாற்றிக்கொள்வது கடினம் என்றால்,"என்ன அப்படி ஒரு அழுத்தத்தன்மை?" என்ற கேள்வி அடுத்ததாக. அனைவருக்கும் அனைத்திலும் ஒரே நிலை இருந்துவிடாது என்பதை ஏன் சிந்திக்க மறுக்கின்றனர் பல நேரங்களில்.அல்லது அத்தகைய சிந்தனையை தனக்கு ஏற்றவாறு ஏன் மாற்றிக்கொள்கின்றனர்?.உனக்கு முக்கியமாகத் தோன்றுவது உலகில் உனைப் போன்றே சிந்திக்கும் வேறு ஒரே ஒருவருக்கு மட்டும்தான் முக்கியமாகத் தோன்றும்,அதற்குத்தான் அழகாய் "சரிபாதி" என்ற பெயரும் உண்டு,ஒரு நட்பிடம் இதைதான் கூறிக்கொண்டிருந்தேன் ஒரு நாள் .நட்பையே உதாரணமாக எடுத்துக்கொள்ளலாமே!,ஒரு சில நட்பு,வார்த்தைகளால் அன்பை எதிர்பார்க்கும்,அவை பல நேரங்களில் என்னிடம் தவறி இருக்கலாம்,பல நேரங்களில் கடிந்து கொண்டு இருக்கலாம் ,ஆனால் அது என்னை எதிர்பார்க்காத நொடிகளிலும் எதிர்பார்த்த தருணங்களிலும் நான் அதற்காய் அங்கு இருந்ததுண்டு.நட்பினை மதிப்பிட பேசும் வார்த்தைகளும் ஒரு வழியன்றி அது மட்டும்தான் ஒரே  வழியா என்ன ?!.அந்த காற்றுபோல்தான் இவர்களுமோ?என் நிலைக்கு ஏற்றவாறுதான் நீயும் செயல்பட வேண்டுமென்று,அவ்வாறாயின் நான் அந்த கிளை மீதிருக்கும் இலைகளே,வேறுவழியில் அவர்களுடன் ஒன்றிடுவேன்.உணர்வதில்லை/உணர்ந்ததில்லை ஒரு சிலர் இதனை,தவறாய் உணர்ந்த சிலரும் உண்டு, அதனால் அத்தகைய ஒரு சிலருடன் ஒன்றாமல் அலைவரிசை  எதிர்திசையில் பயணித்ததுண்டு.பிறர் நிலை மாற்றம் மிக்கதாய் இருந்தால் அதற்கேற்றவாறு நடந்துகொள்வது என்பது வேறு,அதற்காகத் தன் நிலையையே மாற்றிக்கொள்வது என்பது வேறு,இரண்டாவதை சுய அடையாளத்தை இழத்தல் எனலாம்.முதல் விதிதான் எனக்கு பலநேரங்களில் ஒத்துவந்ததொன்று,ஏன் என்று இன்று வரைத் தெரிந்ததில்லை.நான் கூறுவது பலருக்கு ஏனோ அகந்தை மிக்க அல்லது கிறுக்குத்தனமான கூற்றாகத்  தோன்றலாம்.ஆனால் சற்று சிந்தித்தால் இத்தகையது அனைவர் வாழ்விலும் ஏதோ ஒரு நிலையில் நிகழ்ந்திருக்ககூடும்.ஏன் நானும் ஓர் நிலையில் அந்த காற்றாகவும் அவர்கள் அந்த கிளைகள் போலவும் இருந்திருக்கக்கூடும்,நான் ஒன்றும் மகாத்மா  அல்லவே,ஏன்?! மகாத்மாவே கூட.கோடை மேகங்கள் சூழ்ந்துகொண்டிருந்தன..           

கேட்டுக்கொண்டிருந்தது...  


Maestro's Divine composition by Music and Beyond

Monday, March 7, 2011

மூன்றாமவன்..


நட்பு வட்டாரம் மட்டில்,
நீ அவ்வாறு..
மூன்றாமவன்!..
மறைமுகமாய் நட்பு கூறும்
வார்த்தைகளிடை,  
நீ அந்த மூன்றாமவன்.
நட்பிற்கு முதன்மை தந்து.. 
அவ்விடம் மௌனித்தாலும்,
அவ்வாறு இல்லையே.
எனைப் பொறுத்தமட்டில் நீ..
நட்பும் கலந்ததாய் நீ எனக்கு, 
துன்பங்கள் இன்பங்கள்
செவி மறுத்து இருப்பினும்
அவ்வாறு இல்லையடா!
நீ எனக்கு,
மூன்றாமவனாய்..  
உன் இன்பத்தின் ஆதிகள்,
நான் இல்லாதபோதினும்.. 
துன்பத்தின் கரை சேர்தல்,
நானாய் இருப்பேனோ? 
மனம் வலிக்கும் நொடிகளில்
சிரம் வருடும் கரம் போல்...
உன் துன்பம் கரை சேர்தல்
நானாகி இருப்பேனோ ?!
எல்லைகள் எனது,
ஆகிய அம்மனதிற்கு.

மனம் ஏனோ
சஞ்சலித்து..
சிறுபிள்ளைக் காரணங்கள்,  
தேவையற்ற ஒன்றெனினும்,
தேவையற்றதென அறிந்தும்,
மனம் ஏனோ சஞ்சலித்து..
அதைப்
பகிர்ந்திட உனைத்தேட
செவிக்கத்தான் நீ மறுப்பாய்..
ஏனோ இம்மக்கள், ..
தாம் ஒன்றே இவ்வுலகில் என்று ..
ஏன் இந்த நிலையோ,
புரிந்துகொள் உணர்ந்துகொள் 
என்று கூறும் நட்பு , 
புரிதலின் எல்லைகளை
தன்னுள் சுருக்கிவிடல் ஏனோ?
அவ்வாறு இல்லையெனில் இவ்வாறுதானே?
இவ்வாறுதான் பிறரும் நினைத்திருப்பர்,
கற்பிதங்கள் தனக்குத்தானே,
தான் என்ற பார்வையில் உலகினைப்
பார்பதால்..
எப்பொழுதும் மனம் போலப் பேசிவிடும்
நான் ஏனோ..
தான் என்ற வார்த்தைக்கு..
மறுமொழி கூறாமல்,
மறுமொழி கூற இயலாமல்.
சுயமாய் கற்பிதங்கள்,
இப்பொழுது..
தவறனைத்தும் எனதென்று
மனம் ஏனோ சஞ்சலித்து..
சிறுபிள்ளை காரணத்திற்க்காய்
எவ்வாறு இவளுக்கு புரியவைப்பதென்று.
மனம் ஏனோ சஞ்சலித்து.     

Sunday, March 6, 2011

                                                                                                                                                   
பொறு
படித்துவிடாதே இப்பொழுது..
விதியும் உனைப்போல்தான்,
சுயம் நிரந்தரமன்று..
அதனால்,
எழுதிவிட்டேன் இந்நொடியே
பொறு ,
படித்துவிடாதே இப்பொழுது...
                                                   -- நிற்க--


உன்னவளாய் இருந்தபடி,
உனை எண்ணி இருந்தபடி,
எதுவென்று யான் அறியேன்
விதியும் உனைப்போல்தான்..

உனை எண்ணி இருந்தபடி
காகிதமலர்கள் இருக்கிறது..                                        
என் நூலகத்தில் நூலொன்றாய்,
உரையாடல் முடிவொன்றில்..
உனக்காய் வாங்க முடிவெடுத்தது,
திறக்கப்படாமல்,
திறந்தால் தர இயலா..
அதுவும் நீ அறிவாய்..

நான் என்றும் போல்தான்..
அவர்களும் என்றும் போல்,
இன்றும் என் செயல்களுக்கு,
உனைவைத்து,
நியாயம் கற்பிக்கின்றனர்.. 
புன்னகைகள், 
விடை எமது..
நீ புரியாததுபோல்,
தவறாய் புரிந்ததுபோல்..
அவர்களும்,
புன்னகைதான் விடை எமது இன்றும்
முட்டாள் இவன் என்று,
நீயும் குறுக்கிக் கொண்டாய்..
உன் பார்வையினை அதனால்,
அன்று போல் இன்றும்.


நீண்டநாளைக்குப் பிறகு,
செவித்தேன் ..
உயிர் உருக்கும் இசை ஒன்றை,
என்றும் போல் இன்றும்..
அருகில் நீயில்லை,
உணர்வினைப் பகிர்ந்திட.
இன்றும் எழுதுகிறேன்,
கடிதங்களில் அதனை,
வரிகளைப் பார்த்தால்..
சிரித்திடுவாய் சில நேரம்..
ஊன் உருகலும் இருந்ததில்லை
உயிர் துளைத்தலும் இருந்ததில்லை,

புலன் அங்கு உணர்வதைப், 
பட்டென எழுதிடுவேன்,
வரிகளைப் பார்த்தால்..
சிரித்திடுவாய் சிலநேரம்..
சில இடத்தில் இருந்திருக்கும்
பெண்மை வரிகள்,
கடுமை வரிகள்,
அன்பு வரிகள்,
வரிகளைப் பார்த்தால்..
சிரித்திடுவாய் சில நேரமேனும்.

அருகிருப்பவளின்,
சரிபாதிக் கதைப்புகள்..
உன்னிடம் தான் நினைவு செல்லும்,
அவனைப் பற்றி அவள் பேசவும்.
அவள் பேசாதிருக்கையிலும்.                         

நீ ஏன் வேறு போல்,
இன்றும் அன்று போல்..
இருப்பவர்கள் கேள்விகள்
என்னைத் நோக்கியதாய்..
நீ மட்டும் அறிவாய்,
சாதாரணம் அதுவென்று..
நீ மட்டுமே அறிவாய்,
அன்று இல்லையெனினும் இன்றேனும்.

தனித்துதான் செல்கிறேன் ,
இன்றும் திரைக்கு..
எவருக்கும் தோன்றவில்லை,
என்னுள்ளம் தோன்றுவது ,
உன் மொழியில் தோன்றுவது ,
எவருக்கும் தோன்றவில்லை..
உன்னிடம் சொல்லத் தோன்றும்,
அலைபேசி ஏனோ,
விரல்களிடை மறைந்தபடி..
அன்று போல் இன்றும்..

கடற்கரை அலைமணலில்,
அமர்ந்தபடி அமைதி நொடி..
புல்வெளியில் எனக்கென்று, 
கிடைத்ததுபோல்..  
திரு உனதும்  அமைதி அதும்,
ஒன்றியதாய்..
அன்று போல் இன்றும்..

பக்கங்களை படிக்கையில்,
பிடித்தவரி கோடிடுவேன்..
பிடிக்காத செயலெனினும்,
உன்னிடம் சொல்வதற்காய்,
பேசலாம் சில நேரம்,
அவ்வரி பற்றி என்று..
சொன்னதில்லை,
சொல்லவில்லை,
அன்று போல் இன்றும்..

சில இங்கு கற்பனையே,
நிஜமாகும் நொடி வரை..

விதியும் உனைப்போல்தான்,
நிரந்தரமற்றது..
பதித்துவிட்டேன்,
இந்நொடியே.

உன்னவளாய் இருந்தபடி

கண் மூடி மாயை போல்..
காலம் நகர்ந்ததோ,
இசையினும் மாயை போல்..
தெரியவில்லை எவ்வாறென.
என்று தொடங்கின இவை?
எங்கு தொடங்கியது இது?
என் வரிகளில்தான் தேடவேண்டும்,
நம் எண்ணம் ஒன்றியதோ ..
நமக்கு அது சாதாரணம்.. 
வாழும் நொடிகள்,
இருவர் நிலையும் நாம் அறிவோம்..
அதனால் அது சாதாரணம்,
புதிதாய்த் தோன்றாது எதுவும்,
வெளியின்று பார்ப்போனுக்கோ, 
நவரசம் பொங்கிவிடும்.. 

நேரடியாய்க் கூறமாட்டாய்,
அன்பென்ற ஒன்றை,
அழகாய்த்தான் இருக்கும்..
ஏனோ அது எனக்கு..
எனக்கும் சேர்த்ததாய்,
சிறு பிஞ்சிற்க்காய் உனது அன்பு..
எனக்கோ,
சிறிது கோபமும்,
சிறிது பொறாமையும்,
சிறிது புன்னகையும் ,
சிறிது பெருமிதமும்,
திட்டங்கள் ஏதும் இல்லை..
நடப்பவை நடக்கட்டும்..
நடந்தவரை அழகியதே,
ரசிக்கின்றோம் இருவரும் அதை..
துன்பங்கள் பற்றி நான்,
விளையாட்டாய் கூறினாலும்..
பெரிதாய்த் தெரிவதில்லை,
அடுத்த நொடி அது எனக்கு..

என்றும் போல் அன்றும்..
ஏனோ அழகாய் உலகம் நமது,
முன்பு,
வரிக்கு சொந்தம்..
நீயென்று அறியாமல்,
ரசித்தும் சிரித்தும்..
அதனுடன் ஒன்றியும்..
உறவாடிச் சென்ற பலர்,
உனக்காய் என்றறிந்ததும்..
இன்னும் குதூகலித்து ,
இதில்..
ஏனோ அழகானது உலகம் நமது..
என் எழுத்தில் எனக்காய்,
சிறிதே கரம் கொடுத்தபடி..
உன் எழுத்தில் அனுமதித்தால்,
உனக்காய் அதில் வரி சேர்த்து ..
ஏனோ அழகாய் உலகம் நமது,
நாளை எவ்வாறு..
அறியேன் நான் இங்கு,
நேற்றோ எனக்கு..
அழகாய்த்தான் இருந்தது,
பதித்துவிட்டேன் இந்நொடி..
விதியும் உன் போல்தான்,
சுயம் நிரந்தரமன்று.                                          

Thursday, March 3, 2011

அன்பு செய்யத்தவறினேனோ ,
உன்னை நான்..?!
எச்சமயமும் நினைவிருந்தும்,
விழித்திருப்பாயா?
சிரித்தாயா?
நட்பு  வட்டத்திடம் என்ன உரைத்தாயோ?  
குறும்புகள் என்ன இருந்ததோ?
இசை என்ன கேட்டிருப்பாய்?
அன்னையிடம்..?
இன்றேனும் பணி செய்தாயா?
உண்டாயா?
கதைத்தாயா?
துயில் கொண்டாயா?
என,
எச்சமயமும் நினைவிருந்தும்!
அன்பு செய்யத்தவறினேனோ 
உன்னை நான்?!

Wednesday, March 2, 2011

கருவுக்குத் தெரிவதில்லை,
மனிதன் தான்  என்று..
இருண்ட  இடத்தில்,
குறுகிக்கொண்டும்..
கொடுத்த ஒன்றை,
புசித்துக்கொண்டும் ..
கருவுக்குத் தெரிவதில்லை 
மனிதன் தான் என்று..

Tuesday, March 1, 2011

நட்புக்கு..

நான் அணுவாய் இறப்பது,
தெரியவில்லை உனக்கு..
எனினும்,
உன் நகைப்பை பார்க்க,
நான் நகைக்கிறேன்..
ஆனால் சில நேரம் மனிதம்,
தலை தூக்கிடுகையில்.
மிகவே அழுகிறேன்,
சற்றே கொதிக்கின்றேன்,
மௌனித்து இருக்கின்றேன்,
நீ உணர்ந்திடுவாய் எனும்
கண் மூடி  நம்பகத்தில்..
நட்பிற்க்குப்  பிறகே
அனைத்தும் எனக்கு
இவ்வுலகிலடி..
தாயாயினும் அவனாயினும்,
இதை,
உணராது போயினும்..
மௌனம் கொண்டிடு,
நீ புரிந்ததாய்
சுயம் பொய்த்துக்கொண்டு
உறங்குகிறேன் சிறிதேனும்..