BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Monday, March 14, 2011

பயம்...


கோயிற்க்கருங்கல்லில்,
எட்டிபார்க்கும் குதிரைச்சிலை..
அப்பா என்று அழைத்ததும், 
அதன் மேல் அமரவைக்க,
 சிறிதாய் எனக்காய்..
அது கனைத்ததாய் உணர்வு..
அது பாசமா?
பரிவா?
அறியவில்லை நான்..
நட்பானது எனக்கங்கு,
குதிரைச் சவாரி பயம்...

தூக்கத்தில் முகம் மீது,
பஞ்சு போல் ஊர்ந்து  செல்ல..
சிற்றெறும்பு அதுவென,
கை சிதறிவிட்ட நொடி ..
காதோரம் எறும்புதான்,
கீ எனக் கீச்சிட..
உணர்ந்தேன் துதிக்கையோன், 
வாகனம் அதுவென..
இன்றுவரை எலியார்..
தெரிந்ததுவே பலருக்கு.

பட்டாசுகள் படபடக்க,
செவி இரண்டும்..
என் விரல் தேடும்..
கேள்புலனின் பயங்களுக்காய்,
கண்களில் பெருக்கெடுக்கும்..
பயங்கள் பறந்த நொடி,
உலகிற்கு ஏனோ..
புகையால் பயம் வர..
கனவாகிப் போனது,
பட்டாசுப் படபடப்பு..
இடிகளுக்கு மட்டுமே,
இன்றும் செவிகள்
விரல் தேடி..

வானத்துப் பறவைகள்,
சிரம் அமரக்
கரம் வருட
முதலைகள் வளர்ப்பு
பற்றி பல நேரம்
பேசிடுவேன்..
வெட்டுக்கிளிகளுக்கு,
அச்சம் கொண்டு
விரல் நகரும்  
காத தூரம்..

உயரங்கள் ஒருபோதும்,
அச்சத்தை தந்ததில்லை..
பள்ளங்கள் கடக்கத்தான்,
கண் இறுக மூடிக்கொள்ளும்..
சிறுவயது நிகழ்வுகள். 
இறுதிவரை நட்பு போல், 
இப்பயம் எனக்கு..

வெள்ளி இரவொன்றில்,
தனியமர்ந்து பேய்ப்படம்..
படத்தின் நாயகியே,
படம் பார்த்திருக்க 
மறித்தாளாம்.. 
மெத்தைக்குச் செல்லாது,
தந்தையின் மடியில்.. 
குறுகிய நினைவுகள்.
சிறிதே செல்கள்,
சிலிர்த்தபடி நின்றுவிடும்..
அமானுஷ்யம் என்று,
இன்றும் உச்சரிக்க.

நெடும்பாதை ஒன்றில்,
முன்னொருவர் சென்றிருக்க..
பின் தொடர்ந்து நானும்,
செல்வது போல்..
கனவு ஒன்று.
கரம் அது கை நீட்டும்,
யாரென்று தெரியாமல்,
என் கரங்கள் மறைந்துகொள்ள..
இன்றுவரை ஏனோ?
சில கனவுகளும் பயம் எனக்கு.

ஒருத்தியுடன்,
அவன் பேச..
யதார்த்தம் என்றாலும்
மனம் சிறிதாய்,
பயம் கொள்ளும்..
பயமோ கலக்கமோ..
பாதுகாப்பின்மை தோன்றும்,  
தனிமை உணர்வதுவோ..
வார்த்தைகள் பொருத்தமில்லை
ஆக,
பயமென்றே கூறத்தொன்றும்,
அது எதுவேயாயினும்.   

 நித்தம் ஒன்றாய்,
புதியதாய் ஜனிக்கிறது!
நேற்றைய நொடிகளில்,
புதையூண்டும் கிடக்கிறது!
புதைந்தவைகளுக்கு சிரிப்பும்..
பிறப்பவைகளுக்கு கண்ணீருமாய்..
மனதிற்க்குமட்டும்  ஏனோ,
பயத்திடம் பாரபட்சம்...




 

3 comments:

Yaathoramani.blogspot.com said...

புதைந்தவைகளுக்கு சிரிப்பும்
பிறப்பவைக்ளுக்கு கண்ணீருமாய்...
மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்

சிவா.. said...

அருமை! அருமை!! ஒவ்வொரு பயமும் மிக அழகாக பதியப்பட்டிருக்கிறது...

Aishwarya Govindarajan said...

Nandri :-)