"யோவ் புருஷா!", மது அவனை செல்லமாகக் கடிந்து கொண்டாள்.ராகுல் என்றும் போல் இல்லாது அன்று அவளுக்கு சமையலில் உதவுகிறேன் என்று சமையல் அறையைக் களேபரம் செய்து கொண்டிருந்தான்.மற்றநாட்களில் ஒன்பதரை மணி அலுவலகத்திற்கு ஒன்பதேகாலுக்கு எழுந்து "மது!ஆபிஸ்க்கு டயம் ஆச்சு", என்று அலறுபவன்.ஆம் மதுவைப் பொறுத்தவரை அவ்வாறுதான் கூறுவாள் "அலறாதே ராகுல்!,சீக்கரம் எழுந்துக்க வேண்டியதுதானே!". ராகுல்,"நான் லேட்டாதானே தூங்கினேன் மது,எப்படி சீக்கிரம் எழுந்துக்க முடியும்?!".மது அந்த கேள்விக்காய் காத்திருந்தவள் போல "நானும்தான் லேட்டா தூங்கினேன்,நான் எழுந்துக்கலே?!காரணம் சொல்லாத ராகுல்".இவ்வாறு சிறு சிறு ஊடல்கள் சிறுபிள்ளைத்தனமாய்.இன்று ஏனோ அதிசயமாய் சமையல் அறையில் அவளே எதிர்பாராமல் தோன்றி உதவுகிறேன் என்று ஏதோ செய்துகொண்டிருந்தான்.இடைஞ்சலாக இருந்தாலும் ரசித்துக்கொண்டுதான் இருந்தாள் அவளுக்கே உரித்தான அந்த குறுஞ்சிரிப்புடன்.அப்பொழுது திடீரென்று அருகில் வந்து காது மடலின் பின் ஊத அதற்குத்தான் அந்த கடிந்து கொள்ளல்.அவனது அன்றைய திடீர் மாற்றத்திற்கு காரணம் இல்லாமல் இல்லை.அதற்கு ஒரு வருடம் முன்புதான் மதுபாலா (எ) மதுவிற்கும் ,ராகுல் ரஞ்சன் (எ) ராகுலிற்கும் உறவினர்கள் புடை சூழ சொர்க்கத்தில் இல்லையெனினும்,மகிழ்ச்சியும் ,சிரிப்பொலியும், பட்டும்,நகையும், கூடிக் குலவுதலும் என சொர்க்கம் போல தோற்றம் தந்த ஒரு மண்டபத்தில் நிகழ்ந்தது.ஆசை அறுபது மோகம் முப்பது என பல முப்பது நாட்களும் பல அறுபது நாட்களும் இன்னும் சில முப்பதும் அறுபதுமாய் புரிதல், புரிந்திடினும் அழகான ஊடல்,காதல் எனக் கடந்து இன்றோடு ஒரு வருடம் ஆகிவிட்டது.இன்றும் அவ்வாறுதான் இருக்கிறது அவள் வாழ்வு அவனுடன் ,அவன் போலவே.காலையிலிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன வாழ்த்துக்கள் கூற.இடையிடையே பெரியவர்களின் மறைமுக ஆசிர்வாதங்கள் அதை தொலைபேசியில்.கேட்டுவிட்டு இருவரும் இங்கு ஒருவரைப் பார்த்து ஒருவர் புன்னகைத்துக் கொண்டனர்.அழைப்புகள் எல்லாம் முடித்துவிட்டு,மாலை வரப்போகும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்குமாய் உணவு தயார் செய்துகொண்டிருந்தாள்.ஒரு பத்து பன்னிரண்டு பேர் வரலாம் என்பது அவளது கணிப்பு அதற்கேற்றவாறு அனைத்தும் தயாராகிக் கொண்டு இருந்தது.அப்பொழுது காதருகில் இவன் இவ்வாறு திடீரென.என்ன ஆயிற்று இவனுக்கு திருமணநாள் மகிழ்ச்சியாகக் கூட இருக்கலாம், மனதிற்குள் எண்ணிக்கொண்டாள்.ஆனால் அவன் எதையோ கூறவந்தது அதை மனதிற்குள் வைத்துக்கொண்டு சொல்லத் தயங்கி வேறு எதையெல்லாமோ செய்வது போலத் தோன்றியது மதுவிற்கு.அவன் அவ்வாறும் அல்லவே,அவள் நன்கு அறிந்தது.ஒருவேளை நாம்தான் அவனை இன்னும் புரிந்துகொள்ளவில்லையோ,அதற்குள் இவ்வாறாக மதுவின் மனதில் பல என்ன ஓட்டங்கள்.என்ன ஆச்சு ராகுல்? எனக்கு ஹெல்ப் எல்லாம் பண்ணற ,இன்னிக்கு நம்ம வெட்டிங் டே-னு சொல்லி சமாளிக்காத,அப்படி எதவாது பண்ணனும்னு தோன்றி இருந்தா! காலைல முதல் வேலையா நீ சீக்கிரம் எழுந்திருப்ப!இன்னிக்கு நான் டயம் பார்த்தேன் இன்பாக்ட் நீ அஞ்சு நிமிஷம் லேட் என்றாள்,குறும்புப் புன்னகையுடன்.கள்ளி!எப்படி படிக்கற என் மூளைய..என்று அவள் கன்னம் கிள்ளினான்.அவன் கரம் சற்றே கடுமையானதுதான் ஆனால் எவர் கரத்திலும் இல்லாத மென்மை அதில் எங்கிருந்தோ திடீரென வந்து குடிகொண்டுவிடும்.தன் அதே சிரிப்புடன் அந்த கிள்ளலையும் வாங்கிக்கொண்டுவிட்டு "சார்! அதெல்லாம் இருக்கட்டும் முதல நீங்க சொல்லவந்தத சொல்லுங்க",என்றாள் இடுப்பில் கை வைத்துக்கொண்டு ஒரு அழகு அதட்டலுடன்.அவன்,"மேடம் அதட்டரீங்களா?!".அவள், "அப்படியும் வெச்சுக்கலாமே"."ஓ!அப்படியா?!" என்றான் அவனுக்கே உரித்தான ஒரு ராகமான ஸ்தாயியில்.அது அவளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றும். "ம்ம்ம்ம்!",என்று இழுத்தபடி,"மது!ஞாபகம் இருக்கா கல்யாணத்துக்கு அப்புறம் ரெஜிஸ்தார் ஆபிஸ் போயிட்டு வரப்போ நம்ம பேசிட்டு இருந்தது.அவர்கள் பயணித்த சாலையின் நீரிய மரத்தின் மென் நிழல் போல அவள் மனத்தில் அப்பொழுது நிகழ்ந்த உரையாடல்.எவ்வாறு மறக்க முடியும் அவளால் அதை. பதிவாளர் அன்றெனப் பார்த்து சரியான நேரத்திற்கு வந்திருந்ததால்,இவர்களது கையெழுத்துப் போடும் வேலை சீக்கிரமே முடிந்தது.நண்பர்களும் உறவினர்களும் அருகில் எப்பொழுதும் போல்.கையெழுத்துப் போட்டு முடித்ததும்,புதுதம்பதியருக்கே உண்டான கவனிப்பாய் இருவரையும் தனி காரில் அனுப்பிவைத்தது உடன் வந்திருந்த உறவும் நட்பும்.பிடித்தவை பிடிக்காதவை என முன்பே பலது பற்றி பேசியாயிற்று.காரில் உள்ள எப்.எம் மெலிதாய் ஏதோ பாடலை முனுமுனுத்தபடி ,கூடவே மதுவும்.காரில் சென்றுகொண்டிருக்கையில் திடீரெனக் குறுக்கே கையில் ஒரு பாத்திரமும் அழுக்கு சட்டை அணிந்தபடியுமாய் அக்காரின் காரின் முகப்பு விளக்கு உயரமே உடைய ஒரு சிறுவன் கடந்து சென்றான்.இருவரும் சற்றுநேரம் அவனையே நோக்கிக் கொண்டிருந்தனர், நோக்கிய பார்வையில் இருந்த அமைதி அந்த காருக்குள்ளும் சிறிது நேரம் சூழ்ந்துகொண்டது.மீண்டும் பேச்சை ராகுல்தான் தொடங்கினான். "என் மைண்ட்ல ஆழமா இருக்கற ஒரு சில தாட்ஸ் எல்லாம் நான் எல்லார் கூடவும் ஷேர் பண்ணிக்க மாட்டேன்,ஷேர் பண்ணிக்கனும்னு நினைக்கற என் நெருக்கமானவங்க கிட்டயும் நானா நெனச்சாதான்,இல்லனா அதுவும் இல்ல.இதெல்லாம் எதுக்கு இவன் இவளவு சீரியசா சொல்றான் பாக்கறியா?.இன்னும் கொஞ்ச நாள்ல நீயும் அந்த ரொம்ப நெருக்கமானவங்க லிஸ்ட்ல வந்துருவ அதனாலதான் இப்போவே ட்ரைனிங்!",என்றான் வலது கண்ணை சிறிது சிமிட்டிவிட்டு. "எனக்கு ஒரு ஆசை ஆனா இப்ப சொல்லல,இப்போ சொன்ன அதை ஏத்துக்கற தன்மை உன்னோடயது எப்படி இருக்கும் எனக்கு சரியா தெரியாது ,அதனால இப்ப வேணாம் என்னிக்காவது ஒரு அழகான நாள் இதைப் பத்தி கண்டிப்பா பேசலாம்!",என்று கூறிவிட்டு மீண்டும் அவளைப் பார்த்து சிரித்துவிட்டு காரின் ஸ்டீயரிங்கை திருப்பினான்.
மாலை,நண்பர்களுடன்,அவர்களுக்கு இவன் ஒரு வருடம் கழித்தும் இன்றும் அதே புது மாப்பிள்ளைதான்."டேய் ராகுல்! அங்கயே பாக்காதடா எங்களையும் கொஞ்சம் கவனி.மது நீயுமா?!,போதும் நீங்க ரெண்டு பேரும் அப்றமா டெலிபதில பேசிக்கலாம்".புன்னகை இருவரிடத்தும்,அது வெளியுலகிற்கு நாணமாய்த் தோன்றினாலும்,அர்த்தம் இருவர் மனம் மட்டுமே உணரும்.
4 comments:
நல்ல கதை.. எனக்கு கதையை விடவும் தலைப்பு மிகவும் பிடித்திருந்தது.. ஐஷ்வர்யா, நெகட்டிவ் காண்ட்ராஸ்ட் படிக்க மிகவும் சிரமமாக இருக்கிறது. மாற்ற முடியுமா?
ரேவதி :-) நன்றி நான் இதை எழுதுகையில் எனக்கும் கூட தலைப்பே மிகவும் பிடித்திருந்ததாக உணர்ந்தேன்.மற்றும் நெகடிவ் கான்றஸ்ட் பொறுத்தவரை நீங்கள் சொன்னது போல் இன்னும் சிலர் கூறிவிட்டனர் இசையுடன் சுதந்திரமாய் என்று அந்த பட்டாம்பூச்சி உணர்த்தியது போல் தோன்றியதால் இதை வைத்தேன்.அதனால் இதை விட வேறு ஒரு நல்ல வலைப்பூ முகப்பு தேடிக்கொண்டிருக்கிரேன், கிடைக்கும் வரை பொருத்தருள வேண்டும் :-)
lol... :D
thangalin varugaikkum "lOl...:D" endra Pinnootatthirkkum nandri rachana Raghavan :P ;)
Post a Comment