அன்பு,
இவ்வாறெனத் தெரியாது எனக்கு. தனிமையிலும் உன் நினைவுகள்
வெறுமைகள் போக்கிட
அவ்வெண்ணம் என்றால்
என் வரை அது அன்பே.
தவிர்த்ததுண்டு
உன்னைச் சில நேரம்,
பெண்ணுடன் பிறந்தது
அச்செயல் என்றால்
என் வரை அது அன்பே.
பிடிக்காத செயல்கள் பல
குறும்பாய் செய்வதுண்டு
சிறுபிள்ளை செயலன்றி
வேறெதுவுமாய் இல்லையெனினும்
என் வரை அது அன்பே.
நெருக்கங்கள் கேட்பதுண்டு,
தொலைவுகளே மிஞ்சியிருக்க.
தீண்டல்களும் மீளல்களுமே,
அவைத் தேடியது என்பதாயின்
என் வரை அது அன்பே.
தோன்றும் மௌனத்தில்
அமைதிகள் உண்டு
மனம் மட்டும் பேசும்
அவற்றில் என்றாலும்
என் வரை அது அன்பே.
நாணங்கள் இருப்பதுண்டு
உந்தன் சில கேள்விக்காய்
பெண்மைக்கே உண்டான
குணம் அதுவாயின்
என் வரை அது அன்பே.
கோபம் கொள்வதுண்டு
செயல்கள் சிலதிற்க்காய்
அடக்கமின்மை அதுவாய்
பார்வைக்குத் தோன்றினாலும்
என் வரை அது அன்பே.
உணவு உறக்க வினவல்கள்
எப்போதும் இருப்பதுண்டு
கேட்கும் பலரது
கேள்விகள் அதுவாயினும்
என் வரை அது அன்பே.
சேய் போல் நீ எனக்குத்தோன்றும்
நொடிகளுண்டு
முழுமை நிலை அவ்விடம்
இல்லாது போயினும்
என் வரை அது அன்பே.
உரையாடி குறை தேடி நிறை ரசித்துக் கூற
உந்தன் செவிதனைத்
தேடுவதும் உண்டு
ஆலோசனை அதற்குப் பெயரென்பர் பலர்
என் வரை அது அன்பே.
அன்பு,
எவ்வாறென்று தெரிந்ததில்லை எனக்கு
ஆனாலும் அறிவேன் ஒன்றினை மட்டும்,
எழுபது கடந்திடினும் நான் இவ்வாறுதான் என.
0 comments:
Post a Comment