BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Saturday, April 30, 2011

புரிகோடுகள் .......வைஷு,ரயில் ஜன்னல் கம்பிகளுக்கு இடையே கண்களால் நோட்டம் விட்டபடி மீண்டும் அந்த காகிதத்தில் தன் பார்வையை செலுத்தினாள்.அவளுடைய கையெழுத்துதான்,என்றோ எழுதியது.பெறுனர் பகுதியும் ,அனுப்புனர் பகுதியும் எதுவும் எழுதப் படாமல். எழுத்து தொடங்குகயிலும் இறுதியிலும் மட்டும் பெயர் குறிப்பிடப்பட்டு.பழைய கடிதம் என்பதை குறிக்கும் விதமாக அதன் மடிப்புகளில் தங்கி இருந்த கரை,எழுதுகையில் கண்ணீர் சிந்தி இருக்கலாம் என்று ஊகிக்கும் அளவிற்கு ஆங்காங்கே கரைகள் போல் களைந்து இருந்த எழுத்துக்கள். 

                                                                                                                                                     கார்த்திக்,                                             
                எப்படி இருக்கீங்க ?!.இத கேக்கற மனநிலைல  நான் இல்லேனாலும் கேட்டாகணும்,இந்த லேட்டர வேற எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியல.அதுவும் நேற்று   ரச்சனா கிட்ட பேசின பிறகு ..!.உங்க ரெண்டு பேருக்கிடையில இந்த திடீர் பிரிவுக்கு நான் சொன்ன வரிகள்தான் காரணம்னு நெனச்சா ,அது மைன்ட்ல திருப்பி திருப்பி  வேவ்ஸ் மாதிரி வந்துட்டு போகறது ,கார்த்திக் !.ஒரு நல்ல பிரெண்ட்ஷிப்  நடுல இப்படி ஒரு விரிசல் விழ நான் காரணமா இருந்திருக்கேன் .ரச்சனா சொல்லிதான் நான் சொன்ன  வரிகள் இவ்ளோ தாக்கத்த ஏற்ப்படுத்திருக்கு  அப்படின்னு என்னால  உணரமுடிஞ்சுது . நான் அந்த வரிகள அங்க chat-ல  உபயோகப் படுத்தி இருக்க கூடாதுதான்.ஐ நோ  யு ஆர்  மச் மோர் சென்சிடிவ்.பட் அது ஏன் எனக்கு அங்க ஸ்ட்ரைக் ஆகாம போச்சு. ஒருத்தவங்க இப்படிதான் அப்படின்னு புரிஞ்சுக்கறது  ஒரு பெரிய விஷயமே இல்ல கார்த்திக்.ஆனா அப்படி புரிஞ்சதுக்கப்புறம் அவங்ககிட்டக்க நாம எப்படி ரியாக்ட் பண்ணறோம் அதை பொறுத்துதான் எல்லாமே இருக்கு.புரிஞ்சு என்ன பயன்,என் வரையில் எனக்கு அந்த சமயத்துல அப்படி ரியாக்ட் பண்ண தெரியலயே.. நீங்க என்கிட்டக்க அன்னிக்கு பேசி இருக்கவே கூடாது.எப்போதும் போலவே பேசாமயே போயிருந்துருக்கலாம். ஒதுக்கறது எனக்கு ஒன்னும் புதுசு கிடையாது பழக்கப் பட்ட விஷயம்தான் ஆனா அந்த நட்புக்கு அப்படி கிடையாது இல்லையா ?!கார்த்திக்.பேசாம  இருந்திருந்தா  என்கிட்டே எதையும் சொல்லி இருக்க நேர்ந்திருக்காது.
நானும் அப்படி சுபிரியாரிட்டி,இன்பிரியாரிடி-னு சொல்லி இருக்க மாட்டேன்.நீங்களும் அப்படி யோசிச்சு இருக்கும் வேண்டியதில்ல, திடீர்னு உங்க பழைய  பிரெண்ட்ஸ் கிட்டயெல்லாம் பேசறத நிறுத்தி இருக்க மாட்டீங்க இல்லையா.புரிஞ்சும் ரியாக்ட் பண்ண தெரியாம நான் அன்பை எதிர்பார்க்கறது தப்புதானே,எனக்கு அந்த தகுதியே இல்லைன்னு தோணுது கார்த்திக்.infact எனக்கு அன்பு செய்யத் தெரியலையோ? அப்படிங்கற மாதிரி தாட் எல்லாம்  மைன்ட்ல  வர ஆரம்பிச்சுடுத்து   கார்த்திக் .அது உண்மையாவே கூட இருக்கலாம்  தெரியல. ஆனா  அழகான ஒரு விஷயம் பாழ் படறதுக்கு எனக்கே தெரியாம நான் காரணமா இருந்துருக்கேனே ,ரொம்பவே கஷ்டமா இருக்கு,அவ சொன்னதுக்குப் பிறகு என்னால அழாம இருக்க முடியல  .லைப்ல ஒவ்வொன்னும் ஒவ்வோருத்தவங்களாவே புரிஞ்சுட்டு வளரனும் கார்த்திக்,அதனால எனக்கு இந்த அட்வைஸ் பண்றது சுத்தமா பிடிக்காது .ஆக நான் இப்போ சொல்லறத பஸ் இல்ல ட்ரைன்ல  போகறப்போ பாக்கற ஒரு பாஸ் பை  செண்டன்சா   எடுத்துக்கோங்களேன். " காதல்ங்கறது மட்டும்தான் வெளில நான் உன்னை நீயாவே விரும்பறேன்னு சொன்னாலும் 
மனசுக்குள்ள நீ எனக்காக இப்படி மாறினா நல்ல இருக்கும் அப்படி மாறினா நல்ல இருக்கும்-னு நினைக்கும்,உதாரணத்துக்கு-அழகு எனக்கு முக்கியம் இல்லை மனசதான் பாக்கறேன்னு சொன்னாலும் ,மைண்ட்ல ஏதோ ஒரு கார்னர் அந்த அழகதான் முதல்ல தேடும் .நட்பு அப்படி இல்லை ,அது நாம எப்படி இருந்தாலும்  நம்ம மனசு எப்படி இருந்தாலும் அப்படியே ஏத்துக்கறது  , கார்த்திக். பிரெண்ட்ஸ்ல  ஒருத்தருக்கு ஒரு விஷயம் நமக்கு முன்னாடியே தெரியுமா / தெரிஞ்சுருக்க வாய்ப்பிருக்கா அதை சொல்லவே தேவை இல்லை .அப்படி நமக்கு தெரிஞ்ச விஷயத்த நமக்கு பிரெண்ட்ஸ் யாராவது சொல்லறாங்களா,சரி அப்படின்னுட்டு போயிடலாம்,எனக்கும் தெரியும்னு காட்டிக்கவேண்டிய அவசியம் இல்லை. 
ஈகோ ,அட்டிட்யுட் தாராளமா இருக்கலாம் கார்த்திக் யாருக்கிட்ட வேண்டுமானாலும் காமிக்கலாம்,நானும் அதற்கு விதி விலக்கு இல்லை,  ஆனா அதை பிரெண்ட்ஸ் கிட்டக்க காமிக்கறது   யோசிச்சு பார்த்தா ரொம்பவே  தேவை இல்லாத விஷயம்,காமிச்சா அது முதலில் பிரென்ஷிப்பே கிடையாது,என்னைப் பொருத்தவரைக்கும் .இது உங்க ரெண்டு பேருக்கும் சேர்த்துதான் சொல்லறேன் .

take care ,
வைஷு
.


  
கடிதத்தை படித்துமுடித்ததும் ஒரு பெருமூச்சு,மீண்டும் அதை மடித்து நாட்குறிப்புப்  பக்கங்களுள் வைத்துக் கொண்டாள். ரயில் புறப்படத் தொடங்கி இருந்தது. அதிகாலையில் சென்று சேர்ந்தால் அலுவலகத்திற்கு சரியான நேரத்திற்கு இல்லையெனினும் ஒரு பத்து நிமிடம் தாமதமாகவாவது சென்று சேர்ந்து விடலாம் என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டாள்.கையில் எப்பொழுதுமே தன் கூட வைத்திருக்கும் பாரதியார் கவிதைகள்.பிரித்தாள்,
விட்டுவிடுதலை ஆகி நிற்ப்பாய் ,
         இந்த சிட்டுக் குருவியைப் போலே...   

என்னும் வரிகள் சிரித்துக் கொண்டே,"சொல்லுவது எளிதடா பாரதி ,செயல்படுத்தல் மிகக் கடினம் என்றுமே". என எண்ணிக் கொண்டும் நாட்குறிப்பில் இருக்கும் அக்கடிதத்தினை பார்த்துக்கொண்டும் அவ்வரிகளைப் பாடுவதற்கு ஏதுவாய் மெட்டமைத்துக் கொண்டிருந்தாள். இடையிடையே எங்கிருந்தோ கலந்திவிடும் பழைய பாடல் வரிகளுக்கான மெட்டுகள்.சிறு வயதுப் பழக்கம்!,சுடுகாடு வரைக்குமோ?! என்று சிறிதாக தன்னைத்தானே திட்டிக் கொண்டு வரிகளிடையே கண்கள் மேய்ந்தன..
                                 மற்ற பொழுது கதை சொல்லி  
துயில் கொண்டு,

                                            பின் வைகறை முன் பாடி விழிப்புற்று ,
சுதந்திரம் என்பதன் எல்லை அதுவரைதானா? ,ஏன் அதில் ஏதோ ஒரு இடுக்கில் சுயம் என்னும் வார்த்தையும் ஒளிந்து ஒலிக்கிறது.புரிதல் திறன் அத்துடன் முடக்கி முடிச்சுப் போடப்பட்டுவிட்டதா?,எதிலுமே புரிதல் என்பதின் எல்லை ஏன் ஒரு வரையறையோடு நின்றுவிடுகிறது.அந்த எல்லையினை தாண்ட ஏன் மனதிற்கு தயக்கம்?பயம்?.தாண்டினாலும் தவறுகளில் அல்லது தவறான கோணங்களில்.புரிதல் என்ற பாதை எங்கிருந்து தோன்றியது?!.   
                                   விட்டுவிடுதலை ஆகி நிற்ப்பாய் ,
                                   இந்த சிட்டுக் குருவியைப் போலே...
முனுமுனுத்துக்கொண்டாள்.

Tuesday, April 26, 2011

மனம் ஒரு...!

                                  
                     அலைபேசித் திரையை நோக்கிக் கொண்டிருந்தாள் ரஞ்சனி ,நான்கு  நாட்கள் அலுவலக வேலை நிமித்தமாக வேலூர் வந்திருந்தாள் , பெற்றோர்  அங்கிருப்பதால் அலுவலகம் தரும் "விளம்பரங்களில் மட்டுமே அழகாய்த் தோன்றும்" அறைகளிலிருந்து தப்பித்த ஒரு இனம் புரியாத பெருமிதம் ,தொலைதொடர்பு வளர்ந்துவிட்ட நிலையிலும் நீண்ட நாளைக்குப் பிறகு நெருக்கங்களை நேரில் சந்திப்பதில் தோன்றும் ஒரு அலாதி இன்பம் என,அலுவலக நேரம் போக மகிழ்ச்சியுடன் அவர்களிடமும் அருகாமை மக்களிடமும்  கதைத்தபடி வந்து சேர்ந்த முதல் நாள் கழிந்தது.இரண்டாம் நாள் தோட்டத்தில் அமர்ந்தபடிதான் இவ்வாறு அவள் அலைபசியை நோக்கிக் கொண்டிருந்தாள்.விரல்கள் எண்களை அழுத்திவிட்டு மீண்டும் அதே விரல்கள் அதனை அழித்துக் கொண்டிருந்தன.இத்தனைக்கும் அந்த அழைப்பு வேறு யாருக்கோ அல்ல ,ரஞ்சனியின் மிஸ்டர் கரம் பிடித்தவருக்குத்தான்.அந்த தயக்கம் சற்றே கோபம் கலந்ததும் கூட.இது எப்பொழுதும் நிகழ்வதுதான்  என்று உதடு சமாதானம் கூறிக்கொண்டாலும், ஆழ்மனது "ஆனாலும்!", என்று எதிர் திசையில் இயங்கியது.தன்னைப் பற்றி கவலை இருந்தால்தானே அழைத்துப் பேச,"அவன்!இவ்வாறுதான்!",மனதிற்குள் மோதல்களும் சமாதானங்களும்.மனம் எங்கோ இருந்தாலும் விரல் இன்னும் எண்களை அழுத்தியபடிதான் இருந்தது.       
 
ஊருக்கு வருவதற்கு இரு நாட்களுக்கு முன்பு.
                               
                      "நந்துப்பா காபி குடிச்சிட்டீங்களா?!",ரஞ்சனியின் கேள்விக்கு இன்னும் பதில் வந்தபாடில்லை.ஹாலில்தான் அமர்ந்திருந்தான் நந்தினியின் அப்பா,பின்னறையில் தன் தோழியுடன் பேசிக் கொண்டிருந்த ரஞ்சனி  பதில் வராமல் போகவே எழுந்து ஹாலுக்குச் சென்றாள்.அங்கே அனந்தசயனப் பெருமாள் போல் படுத்த படி ஒரு கையால் தன் தலைக்கு முட்டுக் கொடுத்துக்கொண்டு தொலைக்காட்சியை நோக்கிக் கொண்டிருந்தான்,தொலைக்காட்சியையும் ஒழுங்காக பார்த்தபடில்லை ஏதோ சானல்களை மாற்றிக் கொண்டிருந்தான்.  அவன் முன் தன் கரத்தை ஆட்டி " "எக்ஸ்க்யுஸ் மீ! மிஸ்டர் வசந்த் யாராவது கேள்வி கேட்டா அதுக்கு பதில்-னு  ஒன்னு தரனும் தெரியுமா?".வசந்த்,  "தெரியும்!",இன்னும் தொலைக்காட்சித் திரையை நோக்கியபடி.
                       ரஞ்சனி டீ-பாயில் இருந்த காபி கப்பினைப் பார்த்தாள், காலியாக இருந்தது.அதனை எடுத்துக்கொண்டு, சரி விடு!, நந்தினி  ஸ்கூல்லேர்ந்து வர டைம் ஆச்சு போயி அவள கூட்டிட்டு வந்திரேன்.வசந்த்!.

வசந்த்,"இப்போ எனக்கு வேற வேலை இருக்கு  நான் போக முடியாது நீயே போயி கூட்டிட்டு வந்துரு".

"வசந்த் அது எப்படி போக முடியும்?,ரம்யா ரொம்ப நாள் கழிச்சு என்ன பாக்க வந்திருக்கா?,அவள விட்டுட்டு எப்படி போகறது?,அதுவும் உன்ன இங்க விட்டுட்டு? நம்ம கல்யாணத்தப்போ அவள சைட் அடிச்சவந்தானே நீ?",ரஞ்சனி  கண் சிமிட்டியபடி.

வசந்த் சிரித்துவிட்டு ,"எனக்கு வேற வேலை  இருக்கு ரஞ்சு,நேத்தி நான்தானே போனேன் நீ இன்னிக்கு போயேன் ஒரு அஞ்சு நிமிஷம்தானே ஆகப் போகுது.

ரஞ்சனி,"நானும் அதேதான சொல்லறேன்?!ஒரு அஞ்சு நிமிஷம் ஆகுமா?! இன்னிக்கு மட்டும் நீ போயி கூட்டிட்டு வந்துரேன் ".கேட்ட குரலில் கொஞ்சம் கோபம் ஏனோ கலந்துவிட்டது.

            பதில் வராது,அவள் அறிந்ததே,அதற்க்கு மேல் அவளும் அவனிடம் கேட்க மாட்டாள்,கெஞ்சுவது அவளுக்கும் பிடிக்காது,இவ்வளவு நேரம் ரஞ்சனி பொருத்திருந்ததே அதிசயம்தான்."சரி நானே போகிறேன்!" என்று கூறியபடி ரம்யாவுடன் தானே பள்ளிக்கு சென்று அவளை அழைத்துவரக் கிளம்பிவிட்டாள்.

 வழியில் ரம்யா, "அது என்ன என் முன்னாடி நந்துப்பா ,அங்க மட்டும் வசந்த்?",
என்ன மதிக்கற மாதிரி நடிப்பா?"
ரஞ்சனி," ச்ச!இதுல என்ன நடிப்பு வேண்டி இருக்கு,எனக்கு அப்படி கூப்பிட பிடிக்கும், அதுவும் இல்லாம சார் அப்படிலாம் அக்கறையா கேட்டாதான் பதில் சொல்லுவார். இல்லனா,மூஞ்ச தூக்கிவெச்சுண்டு பேசவே மாட்டான்.அவர் மட்டும் யாரையும் மதிக்கவே மாட்டார்,நாம கொஞ்சம் அக்கறை காமிக்கலேனா சட்டுன்னு கோபம் வந்துடும்.பேருக்குதான் ப்ராக்டிகல்,சொல்லனும்னா நந்தினியே எவ்வளவோ பரவாயில்ல என்றாள்  நகைத்தபடி.
  ஆனா,ரம்மி! ஹி ஈஸ் மை மேன்! இந்த மாதிரி சில்லி ரீசன்ஸ்காகவே அவன எனக்கு இன்னும் பிடிக்கும்.

ரம்யா ,"நீதான் மெச்சிக் கொள்ளவேண்டும்!..".என்றாள் நகைத்தபடி ராகமாக.

ரஞ்சனி,"மெச்சலும் இல்ல மேய்ச்சலும் இல்ல..!",அட் ஒன் பாய்ண்ட் யாராவது ஒருத்தர் விட்டுக் கொடுத்துதான் போயாகனும் ரம்யா.சண்டை போடறது இந்த ஈகோ எல்லாம்  ரீல் லைப்ல பாக்கற காதலுக்கு கல்யாணத்துக்கு வேணும்னா சரிவரலாம் பட் நாட் "ஆல்வேஸ்"  இன் ரியல்,குடும்பம்-னு இருந்தா அதுக்கு ஒரு புனிதம்,ஒரு அமைதி எப்பவுமே இருக்கும்,இருக்கணும்.

ரம்யா,"ஈகோ பத்தி நீ பேசறேயா? சொந்த அப்பா கிட்டயே மாசக் கணக்குல  பேசாம இருந்தவ நீ, ஞாபகம் இல்ல போலருக்கு?!"

"சூழ்நிலைன்னு ஒன்னு இருக்கே,ரம்யா!என்ன பத்தியும் உனக்கு தெரியும்,என்ன நடந்துதுனும் உனக்குத் தெரியும் "                     
 
எதுக்கெடுத்தாலும் பதில் ஒன்னு,உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியாது!.
       
பள்ளிக்கு சென்று,விளையாடித் திரிந்த அயர்ச்சியில் தூங்கிக் கொண்டிருந்த நந்தினியை தூக்கிக் கொண்டு வீடு வந்தாள் ரஞ்சனி.ரம்யாவிற்கு வழியிலேயே விடைகொடுத்துவிட்டு.

வசந்த்,அன்று இரவு கூட நந்துவிடம் தான் பேசிக் கொண்டிருந்தான்,இவள் பேசினாலும் பதில் இல்லை.ஊருக்குச்சென்று வருகிறேன் நான்கு நாட்களாகும் என்று சொன்னபோது கூட "சரி" என்ற ஒரு வார்த்தைதான்.கிளம்பும்பொழுது கண் சற்றுக் கலங்கித்தான் போனது,காட்டிக்கொள்ளவில்லை.மாலை அவன் அலுவல்களை முடித்து வந்ததும் அவனிடம் சென்றுவருவதாகச் சொல்லிவிட்டு நந்துவிற்கு கன்னத்தில் சிறு முத்தம் கொடுத்துவிட்டு புறப்பட்டாள்.

இதோ இன்று வீட்டுத் தோட்டத்தில்,முன்பெல்லாம் அதன் அழகை எண்ணி வியந்தபடி நடந்தது போக,இன்று மனம் பல எண்ணங்களைச் சுமந்தபடி நடந்துகொண்டிருந்தது.

பின்னிலிருந்து அப்பாவின் குரல் கேட்டது,"ரஞ்சு,மா! என்ன செய்யறே?!"

ஒன்னுமில்லப்பா!,உனக்கு தெரியாதா என்ன,எனக்கு இங்க நடக்கறது ரொம்ப பிடிக்கும்னு.

அது செரி! அதுக்குன்னு யாரும் மொபைல இந்த பாடு படுத்திட்டே நடக்கமாட்டாங்க.என்று மொபைலை வாங்கியவரின் கரங்களில்,தான் சிறுவயதில் கண்ட அதே நம்பிக்கையும் திடமும்.வாங்கி எப்பொழுதும் போல் அதனை வெறுமனே பரிசோதித்துக் கொண்டிருந்தார்.ஏனோ அவரை பார்க்கையில் அவளுக்கு வசந்தின் ஞாபகம் தோன்றிவிடும். வசந்திடம் கூட இதனை பலமுறை சொல்லி இருக்கிறாள்."நீ அப்படியே எங்க அப்பா!உன் ஒவ்வொரு நடவடிக்கையிலும்,அப்போ அப்போ உன் ப்ரெண்ட்ஸ் கூட உன்     போட்டோஸ் பாத்தாக்கூட திடீர்னு உன் முகம் என் அப்பாது மாதிரி தெரியும்",என்று அதற்க்குகூட வசந்த் கேலியாக "அது ஒன்னும் இல்ல ரஞ்சனி நீ என்னையே இருபத்தி நாலு மணி நேரமும் நெனச்சிட்டே இருக்கேயா?!அதான்,எல்லாம் ஒரு பிரமை" என்பான்.பெரும்பாலும் அதற்க்கு ரஞ்சனியின் பதில் "யே!சீ போ!ஸ்டுபிட்"  என்னும் நான்கு வார்த்தைகளிலும் ஒரு சிறு புன்னகையிலும் முடிந்துவிடும்.
ஆனால் உண்மை அதுதான் அவள் பார்த்தறிந்து உணர்ந்தது வரை.

                                   இப்போதும் அவள் மனதுக்குள் தன் தந்தையை நோக்கியபடி  எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன "அப்படியே நீங்கதான்பா அவன், உங்க குணம் ஒவ்வொன்னும், "தன்னையே தன் நெருக்கமானவங்க எல்லாரும் பம்ப்பர் பண்ணனும்-னு நெனைக்கறது,சட்டுன்னு டென்ஷன் ஆகறது.நீங்க என்ன வளர்த்த மாதிரியே அவன் நந்துகிட்ட காண்பிக்கற அன்பு. நான் ஏதாவது ரொம்ப சோகமா இருந்தா திடீர்னு அவன் என்கிட்டே காண்பிக்கற அன்பு, அம்மாவுக்கு நீங்க அவங்க தூங்கபோறப்போ போர்வை போர்த்திவிடுவிங்களே அழகா அதே மாதிரி.ஏனோ அந்த மாதிரி சமயத்துலலாம் வசந்த்தை அப்படியே இறுக்க கட்டிக்கணும்னு தோணும்,ஆனா சொன்னது இல்ல. எனக்கு ஏதோ ஆபரேஷன் செய்யனும்னு டாக்டர் சொன்னதும் அவ்வளவு மென்டலி ஸ்ட்ராங் நீங்க திடீர்னு அழுதீங்களே "ரஞ்சு உனக்கு மனசு தைரியம் ஜாஸ்தி ஆனா என் பொண்ணுக்குன்னு வரப்போ நான் அப்படிஇல்லன்னு"சொல்லிக்கிட்டே.உங்கள மாதிரியே சென்சிடீவ்ப்பா அவன்.இன்னும் பல விஷயத்துல அவன் உங்கள மாதிரியேப்பா".மனதுக்குள் பேசிக்கொண்டாள்,கண்களில் ஏனோ நீர்த்துளி,அவர் கவனிக்கவில்லை.
                                       உள்ளிருந்து அம்மாவின் குரல் "என்னங்க!வாட்டர் டாக்ஸ் கட்டசொல்லி பில் வந்துதே கட்டிடீன்களா?".

ரஞ்சனி சிரித்தபடி கண்களைத் துடைத்துக் கொண்டு "என்னப்பா வரீங்களா முனிசிபாலிடி வரைக்கும் ஒரு சின்ன வாக் போயிட்டு வரலாம்!",என்றாள்.

அவர்,"ஓ!தாராளமா உன்கூட வாக் போயே பல மாசம் ஆகுது".

வழியில்,அவள்  மனதுக்குள் "இடியட்!இரு ஊருக்கு வந்ததும் கவனிச்சுக்கறேன்",புன்னகை.                             
                                      

Tuesday, April 19, 2011


உனக்கான நல்லிரவில்,
இதோ என் அக்கறைகள்..
குளத்திட்ட கல் திரும்பாது,
வெளித்தெரிக்கும் நீர்ச் சிதறல்கள்..
இட்டவருக்கு கவலையில்லை,
ஏனெனில் சிதறல்கள்,
ஆனந்தமே!
தோன்றிவிட்ட,
வெண் கதிரும்..
கடற்ச்சிறை மீளும்,
பொன் கதிரும்..     
காலத்தின்  கடைமகவாம், 
நொடிகள்,
உனது இயல்பும் நகைமையோடும் 
கடந்ததென்ற எண்ணத்தில்,
உனக்கான எனது,
நல்லிரவுகள்.
 

Saturday, April 16, 2011


தகக்கும் அவனுக்குத் தெரிவதில்லை,
இங்கு,
தனை வெறுக்கும் நரர்களே உண்டு என,
நாமாய்த் தேடும் இருளைத் தவிர்க்க,
நமக்காய்த் தன்னை எரிக்கின்றான்,
தானாய் கரம் தரும் தகைமை இவனுக்கு..
ஆயிரம் கரத்தில்தான் எத்தனை தெரேஸாக்கள்
ஆயினும் தருகிறோம் அவளுக்கிட்ட உமிழயே ..
ஆனாலும் அவன் கடன் பணி செய்து கிடப்பதே..

Wednesday, April 13, 2011

எவ்வாறாயினும் குற்றம் குற்றமே..!

முன் குறிப்பு : இங்கு யாரும் அரசியல் பேசவில்லை.ஆக அரசியல் என்று நினைத்து படிக்கத் துவங்குபவர்களுக்கு,உங்களை ஏமாற்றுவதற்கு மன்னிக்கவேண்டுகிறேன்.
                          
                                இதைப் பதிவிடும் பொழுது மனதில் ஒரு குற்ற உணர்ச்சி இருக்கத்தான் செய்கிறது,ஆம்,ஏற்கனவே நடக்கும் பல குற்றங்கள் தொடர நான் இம்முறை உறுதுணை புரியவில்லை,எனினும் உறுதுணை புரிந்தே ஆகவேண்டும் என்கிற குற்ற உணர்ச்சி.குழப்புகிறேனோ?!"நான் இம்முறை தேர்தலை புறக்கணித்துவிட்டேன்..!,அதுதான் செய்தி.
தவறென்று தெரிந்தும்.பாரதி,ஜனநாயகம், நம் உரிமை கடமை என நண்பர்களிடத்தும் சுற்றி இருப்பவர்களிடத்தும் உரைத்திடும் நான்",அக்குற்றத்தை புரிந்துவிட்டேன்.நேற்று காலை இதனை நண்பர்களிடம் கூறியபோது "நீயா? நீயா ?.." என பாக்யராஜ் படத்தில் வரும் அதிர்ச்சிப் பைத்தியம் போலவே வசனங்களை கூறினர்,இதற்கெல்லாம் உச்சமாக தந்தையின் பதில்,"நான் இதை உன்கிட்ட எதிர்பார்க்கல!",எனது விடை,"நானும்தான்!,சுத்தி நடக்கறதெல்லாம் பாத்து வெறுத்துட்டேன் பா!".இம்முறை அதுவும் எங்கள்  தொகுதியில் நிற்கும் கனவான்கள் அனைவரும் பல புண்ணியங்களை சேர்த்துவைத்துக் கொண்டுள்ளவர்கள்,சுயேட்சையையும் சேர்த்து.ஆக சுயேட்சைகளுக்காவது வாக்களிக்கலாம் என்ற எண்ணத்திலும் மண்."எனக்கு ஓட்டு போட விருப்பமில்லை" என்ற பொத்தானையாவது அழுத்தியிருக்கலாம் ,ஆனால் அது ஏனோ என்னை பயந்துபோனவர்கள் பட்டியலில் சேர்த்துவிடுமோ எனத் தோன்றியது.மேலும்,எந்த பொத்தானை அழுத்தினாலும் அழுத்தாவிட்டாலும்  இங்கு துரோகத்திற்கும்,"நாம் கே வாஸ்தே!" ஜனநாயகத்திற்க்கும்,அதை கண் மூடித்தனமாக பின் பற்றும் பல முழுக் கிறுக்கர்களுக்கும்தான் துணை நின்றாக வேண்டும்.இதற்காக ஏன் வீணாக ஒரு பதினாறும் பதினாறும்,முப்பத்தி இரண்டு ரூபாயை செலவு செய்வானேன் என்று சலிப்பும்,வெறுப்பும் கூடிய  எண்ணம் தோன்றிவிட்டது,ஒருவேளை பாரதி இன்று உயிரோடு இருந்திருந்தாலும் இதையே செய்திருக்கலாம்,ஆச்சரியப்படுவதற்கில்லை.  
சார்!,போலியோ சொட்டு மருந்திற்காக சிறுபிள்ளைகளுக்கு விரலில் மை இட்ட கை சார் இது.ஜனநாயகமும் தேர்தலும் வெறும் பெயர் அளவிலேயே என்கின்ற போது,அதே கரத்தால் ஒரு பாவத்தை செய்ய விரும்பவில்லை.
                                இங்கு சுற்றி இருப்பவர்களும் "நான் இந்த கட்சிக்கு ஓட்டிடப் போகிறேன்!","அந்த கட்சிக்கு ஓட்டிடப் போகிறேன்!", என்று கூறுகையில் ஏனோ இலவசம் என்ற வார்த்தையுடன் அவர்களது சுயநலமும்தான் வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது,தனக்கு வேலை வாய்ப்பு தந்த ஒரே காரணத்திற்க்காக  "நான் அக்கட்சிக்கு ஓட்டிடப் போகிறேன்!" என்று காலம் காலமாகக் கூறிவரும் என் அன்னையும் இதில் அடக்கம்.இலவசம் என்ற ஒரே காரணத்திற்க்காக ஓட்டுரிமை என்ற பெயரில் நாம் மற்ற அனைத்து உரிமைகளையும் இழந்து வருவதை உணர்வதே/புரிந்துகொள்வதே  இல்லை.அதனால் யார் ஆட்சி செய்தால் என்ன? என்று எப்பொழுதுமே இல்லாத  "சீ!இந்த பழம் புளிக்கும்!", என்ற அலட்சியத்தனமே  இம்முறை எனக்குத் தோன்றியது.வாயளவில் போய்விடும் "மாற்றத்திற்காக ஓட்டளிப்போம்!" என்ற வசனம் இம்முறையேனும் செயல்படுத்தப்பட்டால்.அடுத்த முறையேனும் நான் "இவர்கள் மாறிவிட்டார்கள் நான் ஓட்டளிக்கிறேன்!",என்று அறிந்தே இந்த குற்றத்தை(?!) புரியாமல் இருப்பேன். 
பி.கு : நாட்டைதான் சுத்தம் செய்ய  இயலவில்லை எனினும் அறையையாவது சுத்தம் செய்யலாம் என இதை பதிவிட்டுக் கொண்டே என் அறையையும் சுத்தம் செய்து கொண்டிருக்கிறேன்.சுத்தம் சோறு போடுமாம்!,இங்கு இவர்கள்  இத்தனை முறை ஓட்டு போட்டும்  நாடு சுத்தமாகவில்லை :)            

Monday, April 11, 2011

இரண்டாம் பக்கம்..

              
                                 
                இதோ நானும் எழுதிவிட்டேன் இதனை,"முஸ்தபா..!முஸ்தபா..!" "ஈஷ்வரா..!" "கல்லூரி மலரே மலரே..!!" என்று,பள்ளி நாட்களில் தொலைக்காட்சியில் பாடல்களைப் பார்த்துவிட்டு கல்லூரி என்றால் இவ்வாறுதான் இருக்கும்,கல்லூரியில் நண்பர்கள் என்றால் இவ்வாறுதான் இருப்பர் என்று மனதில் ஒரு பிம்பத்தை உருவாக்கிக்கொண்டு, அதில் நுழைந்து உள்ளிருக்கும் ஒவ்வொரு கல்லிலும் புல்லிலும் எங்களைப் பற்றி எழுதிவிட்டு அதைப் பற்றிய எங்கள் நினைவுகளைத் தாங்கிக் கொண்டு  வெளியேறும் தருணம் இதோ நெருங்கிவிட்டது.வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், எங்கு? எவ்வாறு? எப்படித் தோன்றுகிறது எனத் தெரியாமல் நமக்காயும்/நம்மிலும் தோன்றிவிடும் அன்பு,பாசம்,காழ்ப்பு,வன்மம்,சகோதரத்துவம் என இன்ன பிறவும். இதோ இங்கும் இவ்விடத்திலும் தோன்றியது எங்களுக்கு.நட்பாய்,வெறுப்பாய்,காதலாய்,ஈர்ப்பாய்,ஒதுக்குதலாய், எதிரி என்பதாய், எதுவென்று வரையறுக்க இயலாத ஒன்றாய்,என பல வடிவங்களில்.எங்கள் நினைவுப் பெட்டகத்தில் ஏற்கனேவே சேமித்து வைத்த லட்சக்கணக்கானப்   புன்னகைகளுடனும் சோகங்களுடனும் பின்னொருநாளில் நினைக்கையில் புன்னகையாய் மாறிவிடும் தருனங்களுடனும் இப்போது சேர்க்கை அதிகரித்துவிட்டது.தோன்றல் என்று இருந்தால் பிரிவு என்பது நியதி.மனம் நன்கு அறிந்ததே,ஆயினும் பிரிவினது நட்பு இன்னும் காலம் கடந்து கிடைத்திருக்கலாமோ?! என்ற  ஒரு சிறு ஆதங்கம் மனதில் இருக்கவே செய்கிறது.மழைக்காலத்தில் அசை போட முன்னமே தமக்கென உணவினை சேர்த்துவைத்துக் கொள்ளும் சிற்றெறும்பு போல, அதே மழைக் காலங்களில் ஜன்னல் இருக்கைகளும்,காபி கோப்பைகளும், பக்கொடாக்களுடனும்,என  கூடவே சேர்த்து அசை போட இன்னும் நினைவுகளை அதிகரித்து கிடங்கினில் சேர்த்து வைத்துக் கொள்ள எண்ணம். இது நிரந்தரமான பிரிவல்ல, தொழில் நுட்பம் "A complete food" அருந்துவது போல அதீத வளர்ச்சி கண்டுவிட்ட நிலையில் என்றுமோ அல்லது என்றேனும் ஒரு நாளோ நாங்கள் சந்தித்துக் கொண்டுதான் ஆகவேண்டும்,ஆனால் காலப்போக்கில் அடுத்த அடுத்த கட்டங்களை நோக்கி நகர்கையில் முதிர்ச்சி என்ற போர்வையில் நம்மில் பலர் உள்ளிருக்கும் இருக்கும் அந்த பிஞ்சுத்தனத்தை ஏனோ சிறையிட்டு விடுவதால் அந்த தருணங்கள் இப்போதயதைப் போன்றே அதே அழகுடன் அக்கறையுடன் சிரிப்போலிகளுடனும் மகிழ்ச்சிகளுடனும் சண்டைகளுடனும் இருக்குமா என்பது சந்தேகமே.முதல் நாளில் என் பெயரை மட்டும் கேட்டு அறிந்து கொண்டு பின்னர் ,நான் என்பது யார் என்று நான் கூறாமலே அறிந்தும்/புரிந்தும்,நான் அறிந்தும்/புரிந்தும் கொண்ட  நட்பும் உண்டு இறுதி வரை பெயர்க் கூடத் தெரியாமல் வெறும் புன்னகையுடனே சென்றுவிட்ட நட்பும் உண்டு.வெறும் "உதவி" என்ற ஒரு வார்த்தையில்தோன்றிவிடவில்லை.
அன்பினை அன்னையிடம் பெறலாம் அறிவுரைகளையும் நெரிபடுத்துதலையும் இன்ன பலதையும் தந்தையிடமிருந்து பெறலாம்.சண்டைகள் சமாதானங்கள் சுயநலங்கள்  உடன்பிறப்புடன்.இவைகளில் சில கலந்ததாய்க் காதல், சரிபாதியிடம்.நமக்காய் ஒன்று நிகழச் செய்வது, இறையிடம் .ஆனால் இவ்வனைத்தும் ஓரிடத்தில் நட்பு என்ற ஒரு வார்த்தையில் எங்கிருந்தோ வந்து அறிமுகமாகும்/அறிமுகமான இவர்களிடத்திருந்து. இதோ வாழ்வின் அடுத்த பகுதியை நோக்கி அடியெடுத்து வைக்கப் போகிறேன்,ஆனால் அதைப் பற்றிய பயம் இல்லை,தனிமைக்குப் பழகிய பின்னர் எதையும் சுயமாய்க்  கையாளும் தன்மை ஓரளவிற்கு வளர்ந்துள்ளதே/பழகியுள்ளதே.மாறாய், நடுநிசி அமைதிகளில் அதனைக் கிழித்தபடி எங்கிருந்தோ தோன்றும் அந்த  மெல்லிய "க்ரீச் க்ரீச்"களுடன் சேர்ந்து இந்த நினைவுகளே மிகவும் மனதை ஆக்கிரமித்துக்கொள்கின்றன.வருகையில் பல பிம்பங்களையும் கனவுகளையும் தாங்கி நுழைந்தோம்.பிம்பங்கள் பல இடத்தில் பொய்யானது  கனவுகள் பலருக்கு நிஜமானது,பலருக்கு அது பாதை மாறியது,பலரது கலைந்தது.பலர் அவர்களே மாறிவிட்டிருந்தனர்.இதோ அடுத்த கட்டத்திற்கான ஒரு புது பிம்பத்தையும்,பழையதின் நிஜத்தையும் அதன் எண்ணற்ற பிரதிகளையும் மனதில் சுமந்தபடி.வருகிறோம் பல்கலைக்கழகமே,பெயர் மிகப் பொருத்தம்,உன் புத்தகங்களுக்காக மட்டுமல்லாது.

புன்னகையுடன்.
உன் நினைவுகளில் ஒன்று.           
 

Friday, April 8, 2011இரவுகள் விடியாது,
முடியாது போகட்டுமே..
இலக்கியமாய்,
இசைக் கனவாய்.. 
உனதாய் எனதாய்,
நம் கணமாய்,
எவ்வாறாய்,
அது நமக்கு இருப்பினும்..

சிறிதாய் விழி அணைந்தால்,
இதழ் அணைத்து,
எழுப்பி விடு..
கூந்தலுடன் உன் விரலும்,
பொத்தான்களுடன் என் விரலும், 
 ஊடலும் கூடலும் பேச..  
கதைத்திருப்போமே நாம்,
பொருள் உள்ளதும் அற்றதுமாய்.

வெட்கம் கொண்டுவிட்டால்,
பிற நெருக்கம் தோன்றிடினும்
மன நெருக்கம்  மறைந்துவிடும்..
தேவை மன நெருக்கமே அந்நொடிக்கு, 

ஆதலால் சிறிதாய்,
பரிகாசம் செய்துவிடு..
உன்னவளாய் உன்னருகில்,
ஒண்டிக் கிடந்திடுவேன்.


விழித்தபடி கனவுகளும்,
விழிநுனிச் சிரிப்புகளும்,
சிரிப்பிடைச் சீண்டல்களும்,
சீண்டத் தொடர் சிணுங்கல்களும்,
பொருளில்லை அழகுண்டு,
அப்பொருட் பிழை கணத்திற்கு...

.விடியலில் விழித் துயிலும்,
அழகான நொடியினிலே,
பிழை நீக்கி முடித்திடிவோம்,
 இறவாத இலக்கியத்தை.. 
 
விடியாது போகட்டுமே,
நம் இறவாத இரவுகள்.


Tuesday, April 5, 2011

அன்பின் வண்ணம்..!


காட்டுத் தனிமைகளில், 
கூட்டுக் குடும்பமதில்,
மாலைத் தென்றலிலே,
காலைக் கதிரொளியில்,
நடுநிசி விழிப்புகளில், 
கானல் நண்பகலில், 
மாதம் மூன்று நாட்களில்,
சுயம் ததும்பும் ஸ்வரங்கள் தனில்,
நாளும் நகர்ந்திடும் ..
நொடிகளில் ஒன்றாய்..
இவை போல் பல,
அழகியதும்,
அமைதியுற்றும்,
அனுபவம் பல பிறந்தும்,
அதில் உணராத பல இறந்தும்,
மெலிதாய் இருள் சூழ்ந்தும்,
அனைத்தும் சேர்ந்ததுவாய்..
வானவில் வாழ்க்கை இது..
அனைத்திலும் தேடுவது,
அருகாமை தனை மட்டும்..
அன்பிற்குத் தகுதியற்றோள்,
இவள் என ஆகிடவே..
உருகி உருவாகும்,
மெழுகுவர்த்தி போல்..
கண்ணீரும்,
புன்னகையும், 
வானவில்,
நிறமற்றுப் போவதனால்..