BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Tuesday, April 26, 2011

மனம் ஒரு...!

                                  
                     அலைபேசித் திரையை நோக்கிக் கொண்டிருந்தாள் ரஞ்சனி ,நான்கு  நாட்கள் அலுவலக வேலை நிமித்தமாக வேலூர் வந்திருந்தாள் , பெற்றோர்  அங்கிருப்பதால் அலுவலகம் தரும் "விளம்பரங்களில் மட்டுமே அழகாய்த் தோன்றும்" அறைகளிலிருந்து தப்பித்த ஒரு இனம் புரியாத பெருமிதம் ,தொலைதொடர்பு வளர்ந்துவிட்ட நிலையிலும் நீண்ட நாளைக்குப் பிறகு நெருக்கங்களை நேரில் சந்திப்பதில் தோன்றும் ஒரு அலாதி இன்பம் என,அலுவலக நேரம் போக மகிழ்ச்சியுடன் அவர்களிடமும் அருகாமை மக்களிடமும்  கதைத்தபடி வந்து சேர்ந்த முதல் நாள் கழிந்தது.இரண்டாம் நாள் தோட்டத்தில் அமர்ந்தபடிதான் இவ்வாறு அவள் அலைபசியை நோக்கிக் கொண்டிருந்தாள்.விரல்கள் எண்களை அழுத்திவிட்டு மீண்டும் அதே விரல்கள் அதனை அழித்துக் கொண்டிருந்தன.இத்தனைக்கும் அந்த அழைப்பு வேறு யாருக்கோ அல்ல ,ரஞ்சனியின் மிஸ்டர் கரம் பிடித்தவருக்குத்தான்.அந்த தயக்கம் சற்றே கோபம் கலந்ததும் கூட.இது எப்பொழுதும் நிகழ்வதுதான்  என்று உதடு சமாதானம் கூறிக்கொண்டாலும், ஆழ்மனது "ஆனாலும்!", என்று எதிர் திசையில் இயங்கியது.தன்னைப் பற்றி கவலை இருந்தால்தானே அழைத்துப் பேச,"அவன்!இவ்வாறுதான்!",மனதிற்குள் மோதல்களும் சமாதானங்களும்.மனம் எங்கோ இருந்தாலும் விரல் இன்னும் எண்களை அழுத்தியபடிதான் இருந்தது.       
 
ஊருக்கு வருவதற்கு இரு நாட்களுக்கு முன்பு.
                               
                      "நந்துப்பா காபி குடிச்சிட்டீங்களா?!",ரஞ்சனியின் கேள்விக்கு இன்னும் பதில் வந்தபாடில்லை.ஹாலில்தான் அமர்ந்திருந்தான் நந்தினியின் அப்பா,பின்னறையில் தன் தோழியுடன் பேசிக் கொண்டிருந்த ரஞ்சனி  பதில் வராமல் போகவே எழுந்து ஹாலுக்குச் சென்றாள்.அங்கே அனந்தசயனப் பெருமாள் போல் படுத்த படி ஒரு கையால் தன் தலைக்கு முட்டுக் கொடுத்துக்கொண்டு தொலைக்காட்சியை நோக்கிக் கொண்டிருந்தான்,தொலைக்காட்சியையும் ஒழுங்காக பார்த்தபடில்லை ஏதோ சானல்களை மாற்றிக் கொண்டிருந்தான்.  அவன் முன் தன் கரத்தை ஆட்டி " "எக்ஸ்க்யுஸ் மீ! மிஸ்டர் வசந்த் யாராவது கேள்வி கேட்டா அதுக்கு பதில்-னு  ஒன்னு தரனும் தெரியுமா?".வசந்த்,  "தெரியும்!",இன்னும் தொலைக்காட்சித் திரையை நோக்கியபடி.
                       ரஞ்சனி டீ-பாயில் இருந்த காபி கப்பினைப் பார்த்தாள், காலியாக இருந்தது.அதனை எடுத்துக்கொண்டு, சரி விடு!, நந்தினி  ஸ்கூல்லேர்ந்து வர டைம் ஆச்சு போயி அவள கூட்டிட்டு வந்திரேன்.வசந்த்!.

வசந்த்,"இப்போ எனக்கு வேற வேலை இருக்கு  நான் போக முடியாது நீயே போயி கூட்டிட்டு வந்துரு".

"வசந்த் அது எப்படி போக முடியும்?,ரம்யா ரொம்ப நாள் கழிச்சு என்ன பாக்க வந்திருக்கா?,அவள விட்டுட்டு எப்படி போகறது?,அதுவும் உன்ன இங்க விட்டுட்டு? நம்ம கல்யாணத்தப்போ அவள சைட் அடிச்சவந்தானே நீ?",ரஞ்சனி  கண் சிமிட்டியபடி.

வசந்த் சிரித்துவிட்டு ,"எனக்கு வேற வேலை  இருக்கு ரஞ்சு,நேத்தி நான்தானே போனேன் நீ இன்னிக்கு போயேன் ஒரு அஞ்சு நிமிஷம்தானே ஆகப் போகுது.

ரஞ்சனி,"நானும் அதேதான சொல்லறேன்?!ஒரு அஞ்சு நிமிஷம் ஆகுமா?! இன்னிக்கு மட்டும் நீ போயி கூட்டிட்டு வந்துரேன் ".கேட்ட குரலில் கொஞ்சம் கோபம் ஏனோ கலந்துவிட்டது.

            பதில் வராது,அவள் அறிந்ததே,அதற்க்கு மேல் அவளும் அவனிடம் கேட்க மாட்டாள்,கெஞ்சுவது அவளுக்கும் பிடிக்காது,இவ்வளவு நேரம் ரஞ்சனி பொருத்திருந்ததே அதிசயம்தான்."சரி நானே போகிறேன்!" என்று கூறியபடி ரம்யாவுடன் தானே பள்ளிக்கு சென்று அவளை அழைத்துவரக் கிளம்பிவிட்டாள்.

 வழியில் ரம்யா, "அது என்ன என் முன்னாடி நந்துப்பா ,அங்க மட்டும் வசந்த்?",
என்ன மதிக்கற மாதிரி நடிப்பா?"
ரஞ்சனி," ச்ச!இதுல என்ன நடிப்பு வேண்டி இருக்கு,எனக்கு அப்படி கூப்பிட பிடிக்கும், அதுவும் இல்லாம சார் அப்படிலாம் அக்கறையா கேட்டாதான் பதில் சொல்லுவார். இல்லனா,மூஞ்ச தூக்கிவெச்சுண்டு பேசவே மாட்டான்.அவர் மட்டும் யாரையும் மதிக்கவே மாட்டார்,நாம கொஞ்சம் அக்கறை காமிக்கலேனா சட்டுன்னு கோபம் வந்துடும்.பேருக்குதான் ப்ராக்டிகல்,சொல்லனும்னா நந்தினியே எவ்வளவோ பரவாயில்ல என்றாள்  நகைத்தபடி.
  ஆனா,ரம்மி! ஹி ஈஸ் மை மேன்! இந்த மாதிரி சில்லி ரீசன்ஸ்காகவே அவன எனக்கு இன்னும் பிடிக்கும்.

ரம்யா ,"நீதான் மெச்சிக் கொள்ளவேண்டும்!..".என்றாள் நகைத்தபடி ராகமாக.

ரஞ்சனி,"மெச்சலும் இல்ல மேய்ச்சலும் இல்ல..!",அட் ஒன் பாய்ண்ட் யாராவது ஒருத்தர் விட்டுக் கொடுத்துதான் போயாகனும் ரம்யா.சண்டை போடறது இந்த ஈகோ எல்லாம்  ரீல் லைப்ல பாக்கற காதலுக்கு கல்யாணத்துக்கு வேணும்னா சரிவரலாம் பட் நாட் "ஆல்வேஸ்"  இன் ரியல்,குடும்பம்-னு இருந்தா அதுக்கு ஒரு புனிதம்,ஒரு அமைதி எப்பவுமே இருக்கும்,இருக்கணும்.

ரம்யா,"ஈகோ பத்தி நீ பேசறேயா? சொந்த அப்பா கிட்டயே மாசக் கணக்குல  பேசாம இருந்தவ நீ, ஞாபகம் இல்ல போலருக்கு?!"

"சூழ்நிலைன்னு ஒன்னு இருக்கே,ரம்யா!என்ன பத்தியும் உனக்கு தெரியும்,என்ன நடந்துதுனும் உனக்குத் தெரியும் "                     
 
எதுக்கெடுத்தாலும் பதில் ஒன்னு,உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியாது!.
       
பள்ளிக்கு சென்று,விளையாடித் திரிந்த அயர்ச்சியில் தூங்கிக் கொண்டிருந்த நந்தினியை தூக்கிக் கொண்டு வீடு வந்தாள் ரஞ்சனி.ரம்யாவிற்கு வழியிலேயே விடைகொடுத்துவிட்டு.

வசந்த்,அன்று இரவு கூட நந்துவிடம் தான் பேசிக் கொண்டிருந்தான்,இவள் பேசினாலும் பதில் இல்லை.ஊருக்குச்சென்று வருகிறேன் நான்கு நாட்களாகும் என்று சொன்னபோது கூட "சரி" என்ற ஒரு வார்த்தைதான்.கிளம்பும்பொழுது கண் சற்றுக் கலங்கித்தான் போனது,காட்டிக்கொள்ளவில்லை.மாலை அவன் அலுவல்களை முடித்து வந்ததும் அவனிடம் சென்றுவருவதாகச் சொல்லிவிட்டு நந்துவிற்கு கன்னத்தில் சிறு முத்தம் கொடுத்துவிட்டு புறப்பட்டாள்.

இதோ இன்று வீட்டுத் தோட்டத்தில்,முன்பெல்லாம் அதன் அழகை எண்ணி வியந்தபடி நடந்தது போக,இன்று மனம் பல எண்ணங்களைச் சுமந்தபடி நடந்துகொண்டிருந்தது.

பின்னிலிருந்து அப்பாவின் குரல் கேட்டது,"ரஞ்சு,மா! என்ன செய்யறே?!"

ஒன்னுமில்லப்பா!,உனக்கு தெரியாதா என்ன,எனக்கு இங்க நடக்கறது ரொம்ப பிடிக்கும்னு.

அது செரி! அதுக்குன்னு யாரும் மொபைல இந்த பாடு படுத்திட்டே நடக்கமாட்டாங்க.என்று மொபைலை வாங்கியவரின் கரங்களில்,தான் சிறுவயதில் கண்ட அதே நம்பிக்கையும் திடமும்.வாங்கி எப்பொழுதும் போல் அதனை வெறுமனே பரிசோதித்துக் கொண்டிருந்தார்.ஏனோ அவரை பார்க்கையில் அவளுக்கு வசந்தின் ஞாபகம் தோன்றிவிடும். வசந்திடம் கூட இதனை பலமுறை சொல்லி இருக்கிறாள்."நீ அப்படியே எங்க அப்பா!உன் ஒவ்வொரு நடவடிக்கையிலும்,அப்போ அப்போ உன் ப்ரெண்ட்ஸ் கூட உன்     போட்டோஸ் பாத்தாக்கூட திடீர்னு உன் முகம் என் அப்பாது மாதிரி தெரியும்",என்று அதற்க்குகூட வசந்த் கேலியாக "அது ஒன்னும் இல்ல ரஞ்சனி நீ என்னையே இருபத்தி நாலு மணி நேரமும் நெனச்சிட்டே இருக்கேயா?!அதான்,எல்லாம் ஒரு பிரமை" என்பான்.பெரும்பாலும் அதற்க்கு ரஞ்சனியின் பதில் "யே!சீ போ!ஸ்டுபிட்"  என்னும் நான்கு வார்த்தைகளிலும் ஒரு சிறு புன்னகையிலும் முடிந்துவிடும்.
ஆனால் உண்மை அதுதான் அவள் பார்த்தறிந்து உணர்ந்தது வரை.

                                   இப்போதும் அவள் மனதுக்குள் தன் தந்தையை நோக்கியபடி  எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன "அப்படியே நீங்கதான்பா அவன், உங்க குணம் ஒவ்வொன்னும், "தன்னையே தன் நெருக்கமானவங்க எல்லாரும் பம்ப்பர் பண்ணனும்-னு நெனைக்கறது,சட்டுன்னு டென்ஷன் ஆகறது.நீங்க என்ன வளர்த்த மாதிரியே அவன் நந்துகிட்ட காண்பிக்கற அன்பு. நான் ஏதாவது ரொம்ப சோகமா இருந்தா திடீர்னு அவன் என்கிட்டே காண்பிக்கற அன்பு, அம்மாவுக்கு நீங்க அவங்க தூங்கபோறப்போ போர்வை போர்த்திவிடுவிங்களே அழகா அதே மாதிரி.ஏனோ அந்த மாதிரி சமயத்துலலாம் வசந்த்தை அப்படியே இறுக்க கட்டிக்கணும்னு தோணும்,ஆனா சொன்னது இல்ல. எனக்கு ஏதோ ஆபரேஷன் செய்யனும்னு டாக்டர் சொன்னதும் அவ்வளவு மென்டலி ஸ்ட்ராங் நீங்க திடீர்னு அழுதீங்களே "ரஞ்சு உனக்கு மனசு தைரியம் ஜாஸ்தி ஆனா என் பொண்ணுக்குன்னு வரப்போ நான் அப்படிஇல்லன்னு"சொல்லிக்கிட்டே.உங்கள மாதிரியே சென்சிடீவ்ப்பா அவன்.இன்னும் பல விஷயத்துல அவன் உங்கள மாதிரியேப்பா".மனதுக்குள் பேசிக்கொண்டாள்,கண்களில் ஏனோ நீர்த்துளி,அவர் கவனிக்கவில்லை.
                                       உள்ளிருந்து அம்மாவின் குரல் "என்னங்க!வாட்டர் டாக்ஸ் கட்டசொல்லி பில் வந்துதே கட்டிடீன்களா?".

ரஞ்சனி சிரித்தபடி கண்களைத் துடைத்துக் கொண்டு "என்னப்பா வரீங்களா முனிசிபாலிடி வரைக்கும் ஒரு சின்ன வாக் போயிட்டு வரலாம்!",என்றாள்.

அவர்,"ஓ!தாராளமா உன்கூட வாக் போயே பல மாசம் ஆகுது".

வழியில்,அவள்  மனதுக்குள் "இடியட்!இரு ஊருக்கு வந்ததும் கவனிச்சுக்கறேன்",புன்னகை.                             
                                      

2 comments:

கோபிநாத் said...

நல்லாயிருக்கு...;)

Aishwarya Govindarajan said...

நன்றி :-)