BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Monday, April 11, 2011

இரண்டாம் பக்கம்..

              
                                 
                இதோ நானும் எழுதிவிட்டேன் இதனை,"முஸ்தபா..!முஸ்தபா..!" "ஈஷ்வரா..!" "கல்லூரி மலரே மலரே..!!" என்று,பள்ளி நாட்களில் தொலைக்காட்சியில் பாடல்களைப் பார்த்துவிட்டு கல்லூரி என்றால் இவ்வாறுதான் இருக்கும்,கல்லூரியில் நண்பர்கள் என்றால் இவ்வாறுதான் இருப்பர் என்று மனதில் ஒரு பிம்பத்தை உருவாக்கிக்கொண்டு, அதில் நுழைந்து உள்ளிருக்கும் ஒவ்வொரு கல்லிலும் புல்லிலும் எங்களைப் பற்றி எழுதிவிட்டு அதைப் பற்றிய எங்கள் நினைவுகளைத் தாங்கிக் கொண்டு  வெளியேறும் தருணம் இதோ நெருங்கிவிட்டது.வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், எங்கு? எவ்வாறு? எப்படித் தோன்றுகிறது எனத் தெரியாமல் நமக்காயும்/நம்மிலும் தோன்றிவிடும் அன்பு,பாசம்,காழ்ப்பு,வன்மம்,சகோதரத்துவம் என இன்ன பிறவும். இதோ இங்கும் இவ்விடத்திலும் தோன்றியது எங்களுக்கு.நட்பாய்,வெறுப்பாய்,காதலாய்,ஈர்ப்பாய்,ஒதுக்குதலாய், எதிரி என்பதாய், எதுவென்று வரையறுக்க இயலாத ஒன்றாய்,என பல வடிவங்களில்.எங்கள் நினைவுப் பெட்டகத்தில் ஏற்கனேவே சேமித்து வைத்த லட்சக்கணக்கானப்   புன்னகைகளுடனும் சோகங்களுடனும் பின்னொருநாளில் நினைக்கையில் புன்னகையாய் மாறிவிடும் தருனங்களுடனும் இப்போது சேர்க்கை அதிகரித்துவிட்டது.தோன்றல் என்று இருந்தால் பிரிவு என்பது நியதி.மனம் நன்கு அறிந்ததே,ஆயினும் பிரிவினது நட்பு இன்னும் காலம் கடந்து கிடைத்திருக்கலாமோ?! என்ற  ஒரு சிறு ஆதங்கம் மனதில் இருக்கவே செய்கிறது.மழைக்காலத்தில் அசை போட முன்னமே தமக்கென உணவினை சேர்த்துவைத்துக் கொள்ளும் சிற்றெறும்பு போல, அதே மழைக் காலங்களில் ஜன்னல் இருக்கைகளும்,காபி கோப்பைகளும், பக்கொடாக்களுடனும்,என  கூடவே சேர்த்து அசை போட இன்னும் நினைவுகளை அதிகரித்து கிடங்கினில் சேர்த்து வைத்துக் கொள்ள எண்ணம். இது நிரந்தரமான பிரிவல்ல, தொழில் நுட்பம் "A complete food" அருந்துவது போல அதீத வளர்ச்சி கண்டுவிட்ட நிலையில் என்றுமோ அல்லது என்றேனும் ஒரு நாளோ நாங்கள் சந்தித்துக் கொண்டுதான் ஆகவேண்டும்,ஆனால் காலப்போக்கில் அடுத்த அடுத்த கட்டங்களை நோக்கி நகர்கையில் முதிர்ச்சி என்ற போர்வையில் நம்மில் பலர் உள்ளிருக்கும் இருக்கும் அந்த பிஞ்சுத்தனத்தை ஏனோ சிறையிட்டு விடுவதால் அந்த தருணங்கள் இப்போதயதைப் போன்றே அதே அழகுடன் அக்கறையுடன் சிரிப்போலிகளுடனும் மகிழ்ச்சிகளுடனும் சண்டைகளுடனும் இருக்குமா என்பது சந்தேகமே.முதல் நாளில் என் பெயரை மட்டும் கேட்டு அறிந்து கொண்டு பின்னர் ,நான் என்பது யார் என்று நான் கூறாமலே அறிந்தும்/புரிந்தும்,நான் அறிந்தும்/புரிந்தும் கொண்ட  நட்பும் உண்டு இறுதி வரை பெயர்க் கூடத் தெரியாமல் வெறும் புன்னகையுடனே சென்றுவிட்ட நட்பும் உண்டு.வெறும் "உதவி" என்ற ஒரு வார்த்தையில்தோன்றிவிடவில்லை.
அன்பினை அன்னையிடம் பெறலாம் அறிவுரைகளையும் நெரிபடுத்துதலையும் இன்ன பலதையும் தந்தையிடமிருந்து பெறலாம்.சண்டைகள் சமாதானங்கள் சுயநலங்கள்  உடன்பிறப்புடன்.இவைகளில் சில கலந்ததாய்க் காதல், சரிபாதியிடம்.நமக்காய் ஒன்று நிகழச் செய்வது, இறையிடம் .ஆனால் இவ்வனைத்தும் ஓரிடத்தில் நட்பு என்ற ஒரு வார்த்தையில் எங்கிருந்தோ வந்து அறிமுகமாகும்/அறிமுகமான இவர்களிடத்திருந்து. இதோ வாழ்வின் அடுத்த பகுதியை நோக்கி அடியெடுத்து வைக்கப் போகிறேன்,ஆனால் அதைப் பற்றிய பயம் இல்லை,தனிமைக்குப் பழகிய பின்னர் எதையும் சுயமாய்க்  கையாளும் தன்மை ஓரளவிற்கு வளர்ந்துள்ளதே/பழகியுள்ளதே.மாறாய், நடுநிசி அமைதிகளில் அதனைக் கிழித்தபடி எங்கிருந்தோ தோன்றும் அந்த  மெல்லிய "க்ரீச் க்ரீச்"களுடன் சேர்ந்து இந்த நினைவுகளே மிகவும் மனதை ஆக்கிரமித்துக்கொள்கின்றன.வருகையில் பல பிம்பங்களையும் கனவுகளையும் தாங்கி நுழைந்தோம்.பிம்பங்கள் பல இடத்தில் பொய்யானது  கனவுகள் பலருக்கு நிஜமானது,பலருக்கு அது பாதை மாறியது,பலரது கலைந்தது.பலர் அவர்களே மாறிவிட்டிருந்தனர்.இதோ அடுத்த கட்டத்திற்கான ஒரு புது பிம்பத்தையும்,பழையதின் நிஜத்தையும் அதன் எண்ணற்ற பிரதிகளையும் மனதில் சுமந்தபடி.வருகிறோம் பல்கலைக்கழகமே,பெயர் மிகப் பொருத்தம்,உன் புத்தகங்களுக்காக மட்டுமல்லாது.

புன்னகையுடன்.
உன் நினைவுகளில் ஒன்று.           
 

3 comments:

நிரூபன் said...

கல்லூரிக் கால நினைவுகளை, இரண்டாம் பக்கத்தினூடாக அழகாக அசை போட்டிருக்கிறீர்கள். அழகான மொழி நடையோடு, பல்கலைக் கழகம் என்றால் என்ன என்பதனை உங்கள் அனுபவங்களினூடாக விளக்கியும் உள்ளீர்கள்.

பதிவு கல்லூரி நாட்களின் காலத்தால் அழிக்க முடியாத வரலாறுகளைச் சுமந்து நிற்கிறது.


கொஞ்சம் பந்தி பிரித்து எழுதலாமே.

நிரூபன் said...

நீங்கள் சேர்த்திருக்கும் பாடல்கள் வரிசையில் சைற் அடிப்போம்.. தம் அடிப்போம், தண்ணியைத் தான் கலந்தடிப்போம்,
மனசே மனசே.. மனசில் பாரம்(ஏப்ரல் மாதத்தில்...)
எங்கேயோ பிறந்து எங்கேயோ வாழ்ந்த எங்களை ஒன்றாக்கிய கல்லூரிக்கு... இவை தான் எங்கள் கல்லூரிக் காலப் பாடல்கள்..
இவற்றினைத் தவற விட்டு விட்டீர்கள் என நினைக்கிறேன்.

Aishwarya Govindarajan said...

@நிரூபன்,நீங்கள் சொன்ன "சைட் அடிப்போம் தம் அடிப்போம்.." பாடல் அப்படத்தை பார்த்தபோதுகூட என்னை ஈர்க்காததால் ஏனோ இங்கு எழுத நினைவில் வரவில்லை.மேலும் "மனசே மனசே..!" பாடல்,மிகவும் சோகம் பொதிந்தது மேலும் கல்லூரியய் விட்டு பிரியும் நிலையில் அவர்கள் பாடிய பாடல் இது.அவ்வளவு சோகம் இங்கு தேவை இல்லை எனத் தோன்றியது அதனால்தான் ஏப்ரல் மாதத்தில் வரும் அப்பாடலையும்,உள்ளம் கேட்குமெயில் வரும் "ஓ! மனமே.." பாடலையும் வேண்டுமென்றே தவிர்த்தேன்.