BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Wednesday, May 25, 2011

மனம்-நிறம்-அழகு                                 அழகாய்த்தான் இருந்தது அந்த இரண்டு பிள்ளைகளும்.அழகு  என்பது குழந்தைகளை வர்ணிக்க ஒரு உசிதமான வார்த்தையா?!.பொதுவாகவே அழகு என்பது பெண் பொருள் இன்னபிறவற்றை வர்ணிக்க ஏதுவான வார்த்தையா?. எதற்க்காக அதன் பயன்பாடு,விளங்கவில்லை.ஒவ்வொரு செயலையும்,ஒவ்வொரு நிகழ்வையும் அதன் போக்கே வர்ணிக்க பலவை  உள்ளபொழுது எதற்கு இந்த வார்த்தை.சோம்பித்திரியும் மனித மூளையின் உச்சபட்ச வெளிப்பாடோ.யோசித்துப் பார்த்தால் அந்த வார்த்தை  எதற்குமே  பொருந்துவதில்லை.குழந்தை,பிள்ளைகள் என்பதே ஒரு  வகையில் வர்ணிப்பிற்க்காக பிறந்த பெயர்கள்தானே.
                  கோடைகாலத்தின் உக்கிரம் என்னவென்பதை உடல்  அளவில் உணர்ந்தாலும் அதனை தன் அன்னை போலோ தந்தை போலோ, கடுகடுத்தோ  சிடுசிடுத்தோ வெளிப்படுத்தத் தெரியாத வயதை ஒத்தது இரண்டும்.மூத்தவள் சௌம்யா,இருபது வருடத்திற்குப் பிறகு  தன்னை வந்து கண்டு கரம்  பிடித்துச் செல்லப் போபவனுக்காக இப்பொழுதிலிருந்தே தன்னை ஒரு முழு பெண்ணாகக் காண்பிக்க அன்னை செய்துவரும் செயல்களில் ஈடுபாடு  இல்லாவிடினும்  தானாகவே அவளினின்று சில நேரம் வெளிப்பட்டுவிடும்  பென்மைத்தனத்துடன் அவள்.தன் தம்பி அஜயின் கரம் பிடித்தபடி அன்னையுடன் ரேவதியின்  வீட்டிற்க்கு வந்தால்.ரேவதி என்றாலே சௌம்யாவிற்கு மிகப் பிடிக்கும்.ரேவதியிடமும் பிள்ளைகள் ஏனோ சட்டென்று  ஒட்டிக்கொண்டுவிடும்.ஒரு சில நேரம் பொறுமை இழந்தாலும் குழந்தைகளைப்  பார்த்துக் கொள்வது அவளுக்கு கை வந்த கலை போல்  ஆயிற்று.அதனாலேயே அக்கம்பக்கத்தினரும் உறவினர்களும் தன் வாழ்நாள்  பொறுப்புதனை ஒரு சில மணித்துளிகள் ரேவதியிடம் ஒப்படைக்கத் தயங்குவதில்லை.

  சௌம்யாவின் அன்னை ,“ரேவதி!சௌம்யாவையும் அஜயையும் இங்க விட்டுட்டு போறேன்,கொஞ்ச நேரம் பாத்துக்கோயேன் எனக்கு கடத்தெரு  வரைக்கும் போயிட்டு வர வேலை இருக்கு..!எங்க அம்மா?!, இல்லையா?!”.

ரேவதி,”ம்! பாத்துக்கறேன்!,அம்மா காய்கறி வாங்க மார்க்கெட் போயிருக்காங்க”.

ரேவதி ஐந்து நாட்களுக்குப்பின் வர இருக்கும் தனது பரீட்சைக்காகப் படித்துக்  கொண்டிருந்தாள்.

கடையிலிருந்து திரும்பிய அம்மாவின் கடிந்துகொள்ளல் வேறு,
"ஏன்டி!உனக்கே படிக்கறதுக்கு நேரம் கிடைக்க மாட்டேங்குது இதுல குழந்தைங்கள வேற கூட்டு வெச்சுக்கற?!"

“ஏம்மா நானா கூப்பிட்டு வெச்சுக்கறேன்?!அதுவும் இல்லாம ஒருத்தவங்க வந்து உதவின்னு கேட்கறப்போ மறுக்க முடியுமா?!”

அம்மாவின் "என்னமோ போ"- க்களைக் கேட்டுக் கொண்டு இரண்டையும் தன  அறைக்கு அழைத்துச்சென்றாள்.

அறையில் திறந்தபடி மேசை மீது வைக்கப் பட்டிருந்த மடி கணினியைப்  பார்த்ததும் இரு பொடிசுகளும் "அய்ய்ய்ய்...!!அக்கா கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர்!!"  என அருகில் சென்று அதை தடவிப் பார்க்க ஆரம்பித்தன.

டோய்!பசங்களா பொறுமை எதுவும் செய்யாதீங்க அப்புறம் அது வீணா  போயிடும்.இருங்க நானே வந்து உங்களுக்கு சொல்லித்தரேன் என்று தன் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டு மடிகணினியை  மடியில் வைத்துக்  கொண்டாள்.சிறுசுகள் இரண்டும் அவள் இருபக்கத்திலும் அமர்ந்துகொண்டன.

ரேவதி,”ஹ்ம்ம்..என்ன பண்ணலாம்?!!”

மடிகனினியுடனான தன் பரிச்சயத்தை வலுப்படுத்திக்கொள்ள ஏற்கனவே பல  திட்டங்களை மனதிற்குள் போட்டிருந்தாலும்,அந்தக் குழந்தைக்கே உண்டான தயக்கத்துடன் சௌம்யா,”நீங்களே சொல்லுங்க அக்கா!”

அஜய்,”அக்கா எதாவது பாட்டு போடுங்களேன்!”.

"ஹ்ம்ம்..செரி!என்ன பாட்டு போடலாம்?!!"

அதற்குள் தைரியம் பிறப்பெடுத்தவலாய் சௌம்யா.”அக்கா!எந்திரன் பாட்டு?!ப்ளீஸ்”

“செரி,தாராளமா போடலாமே..!”

பாடல் ஓடிக்கொண்டிருந்தது.பாட்டைக் கேட்டபடி இரண்டும் திரையை  நோக்கிக்கொண்டிருந்தன.
மடிகனினியின்  திரை ஓரத்தில் வந்து மறைந்துகொண்டிருந்த புகைப்படங்களைப்  பார்த்தபடி சௌம்யா
“அக்கா! இது யாரு?!”.

அஜய்,”அது அங்கிள் டி!”

சௌம்யா,”டேய் நான் ஓங்கிட்ட கேக்கல, அக்கா,அங்கிள்னா?உங்க அங்கிளா?”

அஜய்,”அங்கிள்னா நமக்கு அங்கிள் லூசு!அக்காக்கு இல்ல.அப்படித்தானே அக்கா?”.

இது போன்ற சமயங்களில்தான் வளர்ச்சி என்பது எந்நிலையிலிருந்து  தொடங்குகிறது என்றெண்ணி மனம் சற்று குழம்பிவிடுகிறது.வயது ஆகஆகத்தான்  வளர்ச்சி என்பது சுருங்கிவிடுமோ?!,மனதளவில்.  

.அதற்குள் பாடல் முடிந்துவிட,அடுத்தது வேறு என்ன பாடல் போடலாம் என்று  பேச்சு திசை மாறியது.

சௌம்யா,“அக்கா பாட்டு வேண்டாம் எனக்கு கம்ப்யுட்டர் பெயிண்ட் தாங்களேன் நானே வரையறேன்”.


ரேவதி, "சௌம்யாவுக்கு எப்படி வரையறது அப்படினு தெரியுமா?தெரியலனா அப்புறம் இது ரிப்பேர் ஆகிடுமே?!"

சௌம்யா,"நான் நல்லா வரைவேன்கா!அஜய் கிட்ட கேளுங்களேன்".
அஜய்,"இவ நல்ல வரையுவாக்கா..என்ன மாதிரியே".கூடவே அவனுக்கான சுய சிபாரிசுகள்.

இந்த வண்ணங்களைக் கண்டால் மட்டும் குழந்தைகளுல்லே ஒரு பிக்காசோ எங்கிருந்தோ குடிபுகுந்து விடுகிறான்.

சௌம்யாவிற்கு சாதாரண கணினியில் இயக்குவதுபோல் இதில் வரையமுடியவில்லை.ஆனாலும், முகத்திற்கு சிறியதாய் ஒரு வட்டம் உடலிற்கு பெரியதாய் ஒருவட்டம் என அனைத்தும் ஒரு கிறுக்கல் கவிதை போல் அழகாக முடித்துவிட்டிருந்தால் சௌம்யா நிறம் தேர்வுசெய்யத்தான் அவள் ரேவதின் உதவியை நாடினாள்.

இடையே அஜய்,"சௌம்யாக்கா நீ சீக்ரம் முடிச்சிட்டு எனக்குத்தாயேன்..!நானும் வரைறேன்."

ரேவதி,"இருடா அக்கா முடிக்கட்டும் அதுக்கப்றம் நீ வரையலாம் சரியா.."

அஜய்,"ஆமா!இவ எப்போ வரஞ்சு முடிக்கறது,,அதுக்குள்ள அம்மா வந்துடுவாங்க..னா வீட்டுக்கு போகணும்.."கண்கள் அடுத்த நொடியே நீர் பிறப்பெடுக்கப்போவதுவாய், சற்றே தழைதழைத்த குரலில்.
இதை சொன்ன குரலில்தான் ஏனோ வாழ்நாள் ஆசை ஒன்று நிவர்த்தி ஆகாததைப் போன்ற ஏமாற்றம்.பிறப்பிலயே அவன் வளர்ந்த பின் பேசும் வாழ்க்கைக்கான தத்துவங்களை அவனும் பின்பற்றும்படி படைத்தவன் மனிதனை ப்ரோக்ராம் செய்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.இதனை வெறும் புத்தனோடு மட்டும்  நிறுத்திக் கொண்டுவிட்டான் போலும்.

சௌம்யா அதற்குள் தான் வரைந்த உருவிற்கு வண்ணம் கொடுத்து முடித்திருந்தாள்.ரேவதி,"ஆமா!இது யாரு?"

சௌம்யா தயங்கித் தயங்கி தன் விரலை ரேவதியை நோக்கிக் காட்டினாள்.
ரேவதி ரெட்டை சிந்தும் குசிக்கைகளுமாக தான் சிறுவயதில் வரைந்த கிறுக்கல்களை மனதில் எண்ணியபடி  ஒரு புன்னகையுடன் அதை சேமித்துவைக்க,அஜய் அருகில் மெதுவாய் வந்தமர்ந்தான்.

அஜய்,"அக்கா நானு!" 

இதோ "கொஞ்சம் ஒரு நிமிஷம் இருமா!செல்லம்ல.."

அஜய் அழகாய் தலை ஆட்டியபடி தன் இரு கைகளை கட்டி திரையை மறுபடியும் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான்.
அதற்குள் அறைக்கு வெளியிலிருந்து குரல்,"அஜய்,சௌம்யா! அம்மா வந்துட்டேன்,வாங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு போகலாம்..அக்கா படிக்கட்டும்..!தொந்தரவு செய்யாதீங்க."

அஜய்,"அக்கா அம்மா வந்துட்டாங்க பாருங்க!அதான் அப்பவே சொன்னேனே நான்".

சௌம்யா,"அம்மா கொஞ்சம் வெயிட் பண்ணேன் அஜய் வரையறான்,அவன் வரஞ்சதும் வந்துடறோம்".ரேவதிக்கு அது  அழகாகத்தான் தோன்றியது.நெல்லில் அகரம் எழுதுவது போல் ரேவதி அச்சிறிதின் புறங்கை முழுதுமாய் தன் கரத்தால் அணைத்தபடி வரைய வைத்துக் கொண்டிருந்தாள்,அவன் கூறுவதற்கு ஏற்ப.வரைகயில்தான் அக்குழந்தையின் முகத்தில் எத்தனை வண்ணத்தில் ஆனந்தம்.

அன்னை அழைக்காமலேயே "இதோ முடிச்சிட்டேன்,வந்துட்டேன்மா .."என்று உற்சாகம் கலந்த குரலில் அஜய்.


ரேவதி அக்குழந்தைகளுடன் ஒன்றியவளாய்,"அய்ய்ய்ய்!அஜய் அழகா வரஞ்சு முடிசிட்டானே.." என்று கரம் தட்ட,தன்னுள் இருக்கும் சூப்பர்மேனை உலகிற்கு நிருபித்தது போன்ற சந்தோஷம் அந்த முகத்தில்.

ரேவதி,"ஆமா!செல்லகுட்டி யார வரஞ்சீங்க?"

அஜய்,"இதோ இந்த அங்கிள்தான்!",என்று திரையை காண்பித்துவிட்டு "நான் அம்மாகிட்ட போறேன் டாட்டா-க்கா",என்று அக்காவின் கரம் பிடித்தபடி அறையைவிட்டு ஓடினான்.

அந்த கிறுக்கலை ஒரு வெட்கப் புன்னகையுடன் நோக்கிவிட்டு,அரைகுறையாய் மூடப்பட்டிருந்த அறைக்கதவும் சுவற்றிற்கும் ஏற்ப்பட்ட இடைவெளியில் அவர்களது நீண்டு சென்ற நிழலை நோக்கியபடி இருந்தாள் ரேவதி.                


     

  
 

 
             

                   


Saturday, May 21, 2011


Wednesday, May 18, 2011

ஒரு காதல் என்பது...

                          “காதல் மிகக்  கண்மூடித்தனமானது”,இந்த  வரியை கூறியவரைத் தேடிக்கொண்டிருக்கிறேன்,கண்டுபிடித்தால் அவரிடம்  கேட்க  ஒரு  கேள்வி  கைவசம்  உள்ளது . “உங்களைப்  பொறுத்தவரை காதல் என்றால்  என்ன?”,எனக்கு ஏனோ அவரிடம் மட்டுமிருந்துதான் அதற்கு சரியான விடையைப்  பெறமுடியும் என்ற நம்பிக்கை.எனக்கு தெரிந்த பலரிடம் கேட்ட  போது அவர்கள் காதல் என்பதைத் தாண்டி சினிமாவால் எவ்வளவு பாதிக்கப்  பட்டுள்ளார்கள் என்பதே மிகவும் புலப்பட்டது.

                ஆக அவர்கள் பாணியிலேயே சென்றால்,எத்தனை சினிமாக்கள் காதல்  என்பதை வெவ்வேறு கோணத்தில் காட்டியுள்ளது?என்று பார்த்தால்.காதல்  என்றாலே அங்கு கண்டிப்பாக ஆண் பெண் இருந்தாகவேண்டும் என்று கை  எழுத்து இடப்பாடாத சட்டத்துடந்தான் படங்களே  இருக்கின்றன.ஒரு எழுத்தாளன் அவன் எழுத்துடன் ஒன்றி லயித்து உருகொடுத்து ,வெளிக்கொணர்வது. ஒரு திரைப்படம் எடுக்கும் ஒரு இயக்குனன் தான்,  அக்கதைக்குள் கலந்து தான் நிலை மறந்து,தன கீழ் பணி புரியும் அனைவரையும், மனம் ஒன்று படுவதுபோல், ஒருங்கிணைத்து ,அவர்களிடம்  காட்டும் அன்பு, பாசம், கோபம் ,கட்டளை மூலமாக அவர்களையே அடி  பணியவைத்து ,அத்தரஐனத்தில் அக்கருவை உருவாக்கி வெளியுலகிற்கு அளித்து அந்நிலையில் அவ்விடத்தில் அவனையே  ஒரு கடவுள் ஆக்கிவிடுவது.ஒரு  இசை வித்தகன்  தான்  நிலைமறந்து  கண்  மூடி  கண்ணீர்  சுரக்க  தாய்  மடி  அரவணைப்பு போல்,கலவின் கடைநிலை போல்,அவனையே அவ்விடத்து தாய் சேய் உற்றது ,விட்டது என அனைத்துமாக்கி கிடப்பது.ஒரு நாட்டியத்தில்  ஒருவரிடமிருந்து அதீதமாக அவரை வெளி உலகிற்குப்  புலப்படுத்தும் /உணர்விக்கும்  நயமும் பாவமும்.எத்தனைப் பேருக்கு இவையும் காதலாகப்  புலப் பட்டிருக்கும்.எத்தனை சினிமாக்கள் இதனையும் கருக்களமாக்கி காதல் படங்கள் என்ற வகைமையில் காண்பித்திருக்கும்.யோசியுங்களேன்!,விரல் விட்டு எண்ணிவிடலாம்.இதை எழுதுகையில் சட்டென எண்ணத்தில் தோன்றியது, உங்களுக்கு நேரமிருந்தால்,நீங்களும் ,என்னையும் சேர்த்து இங்கு உள்ள பலரைப் போல் மனோதத்துவம் உளவியல் என்று புலம்புபவராயின்.சிந்துபைரவி படத்தின் அம்மூன்று முக்கியக் கதாப்பாத்திரத்தை மட்டும் கொஞ்சம் ஆராய்ந்து பாருங்களேன்.அழகாய்ப்  பலது மனதிருக்குப் புலப்படும்.அது போல் பல உதாரணம் கூறுகிறது எண்ணம்.

          தாயே,நீ என்னதான் சொல்ல வர இப்போ? என்று கேட்பவர்களுக்கு,
முதல் சந்திப்பில் “ஒஹ்!அதுவா அது எனக்கு ரொம்ப பிடிக்குமே “ என்பது  பத்தாவது சந்திப்பிலும் “ஒஹ்!அதுவும் பிடிக்கும்”என்று பிடிப்பதோடு நின்றுவிடாமல் ,முப்பதாவது சந்திப்பில் அவன் செயலில்,அவள் உணர்ந்து ஒன்றி தானும் கலந்திருப்பது,அது கலை ஆயினும் காமம் ஆயினும் எதுவாயினும் அதுவே நான் இங்கு கூறுவது.அது எண்பது சந்திப்புகள் வரையும்  அதைத் தாண்டியும் அவ்வாறாயின் அதை விட அழகான காதல் இருக்க  முடியாது.ஆனால்,“அவளுக்காக அது என்னவென்று கூட தெரியாவிடினும் அது எனக்கு மிகப் பிடிக்கும்”, என்று யோசிக்கத் தொடங்கினால் அந்நொடியிலிருந்து நீ உன்  சுயத்தைத் தொலைக்கிறாய்.உன் சுயத்தை  உணர்வதற்க்காய் காத்திருக்கும் வேறு ஒரு ஆன்மாவுடனும் சேர்த்து அவளது  ஆன்மாவையும் பொய்க்க வைத்துவிடுகிறாய்.இது அவளுக்கு மட்டுமல்ல, அவனுக்கும் பொருந்தும்.

                             இது,இரு மனிதர்களுக்கு இடையே தோன்றுவதே காதல் என்று  வரையறுத்து வைத்துக்கொண்டவர்களுக்கும் சரி, என் காதலை நான் கலையில் மட்டுமே உணர்கிறேன்,கலையிலும் உணர்கிறேன் என்று  கூறுபவர்களுக்கும் சரி எவ்வாறாகிலும் வார்த்தையை மட்டும் வேறு எடுத்துப் பொருத்தினால் மேல் சொன்ன கூற்று பொருந்தும்.கலை உனக்குப்  பிடிக்குமாயின் பிடிப்பதோடு மட்டும் உறைந்துபோனால் அது காதல் அல்லவே. அனைவர் பாணியில் கூறினால்“ அது அப்படியே நம்மள கரைச்சு உருக்கி  காணாடிச்சுடனும்”.ஆன்மாவை உணர்வது எனலாம் இதனை, சுருக்கமாக.என்ன உணர்வதுதான் எளிதில் நிகழ்வதில்லை.                            
                                    நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெடப் புழுதியில்  எறிவது மட்டுமா தவறு,தவறான சுருதி சேர்த்தலும்தானே,சொல்லடி என் சிவசக்தி. J       

Saturday, May 7, 2011

நட்பு இரண்டும் பேசுகையில்,
உரு உனது இல்லாது போனாலும்..
உன் பெயரேனும் தோன்றிடுது,
அவர்களிடத்தே,
ஒருத்தியை மற்றொருத்திக்
கேலிகள் செய்வதுமாய்,    
மறைமுகமாய் நீ அவளதென்று,
அவள் கூறும் பொழுதிலும்..
அந்நட்புக்காய்  உடன் சேர்ந்து,
புன்னகை செய்தாலும்,
மௌனித்து இருந்தாலும்,
அவ்விடத்தின்று நகர்ந்தாலும்,
எவரும் அறியாது கண்ணீர்ப் பெருகிடுது..
குறுக்கிடும் தான்மையும்,
குருதியோடும் குறிக்கோளும்,
என்னில் உணர்ந்த,
வேறு பல காரணமுமாய்..
என ஏனோ மறைத்திடுது,
எவரிடமும் அதைக் கூறாது.
இயற்கையும்,
என் இசை மட்டும்,  
அறிந்த இக்கதையை..

Sunday, May 1, 2011

வளைந்து கிடந்து
வலக்கரம் நீட்டி
உந்தன் விரல் அதைத்
தீண்டத் தேடி..

கூந்தல் புரண்டபடி
அது தலையணையில் படர்ந்தபடி
முகம் புதைத்து
கரைந்திருக்க
உன் நெஞ்சத்தைத் தேடி..

சட்டெனச் சிணுங்கும் 
பாதத்துச்  சுட்டு விரல்
இதழோரம் மெலிதாய்  
புன்னகையும் மௌனமும் 
நாணமோ?
அதில் ஒளிந்திடும் மோகமோ?
நீதான் சொல்லவேண்டும்..