ஆன்மீக உணர்வு..இதை பற்றி விவரிக்க எனக்கு வயதும் இல்லை, அனுபவமும் இல்லை.ஆனால் கூட்டத்தினூடே " கோவிந்தாக்களையும்,பரலோகத்தில் இருக்கும் பரமபிதா"வையும் கடமைக்கென்று அழைப்பவர்களை நினைக்கையில் என்னுள் தோன்றிய கேள்வி இது.சொந்த ஊர் சிதம்பரம் , சோழ மன்னர்கள் பலரால் கட்டப்பட்ட கோவில் எமது ஊரின் சிறப்பு ,இரு "ராசர்"களுக்கு பெயர் போன ஊர் ,நால்வர் பாடிய ஸ்தலம். இப்படிப்பட்ட இடத்தில் இருந்து கொண்டு ஏன் எனக்கு இந்த வேண்டாத கேள்விகள்?!,எனக்கும் அது தோன்றியது உண்டு .ஞாயிறுகளில் கோவில் சண்டி ஈஸ்வரரின் வருகை பதிவேட்டை நிரப்புபவர்கள் பட்டியலில் என் குடும்பமும் ஒன்று.எனக்கும் கோவிலுக்கு செல்ல பிடிக்கும்,காரணம் அதன் பிரம்மாண்டம்,கலையழகு,கோபுரவாசல் தென்றல் காற்று.அவ்வாறு கோபுரவாசலில் அமர்ந்திருக்கையில் தம் கரங்களை குவித்தபடி வாயில் ஏதோ ஒன்றை முனுமுனுத்தபடி செல்லும் பலரை நான் கண்டுள்ளேன்.பத்து நிமிடங்களில் சென்ற அதே வேகத்தில் அவர்கள் திரும்பிவிடுவர்.உண்மையில் ஆன்மீகம் என்பது இவர்களுக்கு ஒரு வாடிக்கை போலவே என்று நமக்கு தோன்றும்,அத்தகைய ஆன்மீகத்தில் உணர்தல் என்ற வார்த்தை கண்ணாம்பூச்சி ஆட்டத்தில் ஒளிவது போல் ஒளிந்துகொண்டுவிடுகிறது.கருவறையில் இருக்கும் சிலை முன் தோப்புகரனங்களும், கை மட்டும் இறையை நோக்கி,மனம் அன்றைய "சரவணா பவன் ஸ்பெஷல் மீல்ஸ்"-ல் நிலைத்திருக்க அவரையே ஒரு சில நிமிடங்கள் உற்றுநோக்குவது, "கடவுளே நான் இன்னிய பரீட்சையில எப்படியாவது பாசாகிட்டா உனக்கு தேங்கா உடைக்கறேன்" என்று கடவுளர்களையே நமது கம்பெனியில் சேர்ப்பது,"எனக்கு என் வீட்டு பக்கத்திலேயே மாற்றலாகி வந்துட்டா உனக்கு வெள்ளி காசு மாலை போடறேன்" என்று கலெக்டரிடம் முறையிடுவது போல விண்ணப்பம் வைப்பது.இவைதான் ஆன்மீகம் என்றால் "தம்பி நீங்க இன்னும் வளரனும்,காம்ப்ளான் குடிங்க!!" என்றுதான் சொல்லத்தோன்றும்.ஆனால் காம்ப்ளான் குடிக்கும் நானும் இதைத்தான் பின்பற்றுகிறேன்.
அவ்வாறெனில், "ஆன்மீக உணர்வு" என்பது என்ன?,எங்கோ படித்தது"ஆன்மீகம்-உன் ஆன்மாவை உணர்தல்" என்று அந்த புத்தகத்தில் இருந்தது.ஆனால் பிரம்மாண்டங்களையும், கலையழகையும் என்னால் ரசிக்க முடிந்ததே தவிர ஆன்மாவை என்னால் உணர முடிந்ததில்லை.அவையனைத்தும் என்னுள்ளே இருக்கும் வரலாற்றின் மீதான ஆர்வத்தைதான் தூண்டியதே தவிர வேறு எந்த உணர்வுமன்று.நாகூர் தர்காவும்,வேளாங்கண்ணி அன்னையும்,இஸ்கான் கிருஷ்ணரும் இதற்கு விதிவிலக்கன்று.அவ்விடங்களில் எமக்கு பக்தி என்ற ஒன்று தோன்றியதில்லை என்னை நான் உணர்ந்ததும் இல்லை.ஆனால் என்னை உணர்திருக்கிறேன்..எங்கு என்று கேட்கிறீர்களா?
சாலையில் சிறு குழந்தையை தூக்கிகொண்டு நடக்கும் சமயத்தில் எதிர்பாராவிதமாக அக்குழந்தை என் தோள் மீது சாய்ந்து உறங்க எத்தனிக்கும் தருணங்களில், சிறு புன்னகையுடன் அக்குழந்தை எனக்கு முத்தமிடுகையில்,எமக்குள் தாயன்பு என்ற ஒன்று இருந்தால் அது எவ்வாறானது என்பதை.
சாலையை கடக்கும்பொழுது ,அருகில் நிற்கும் முதியவரும் கடப்பதற்காக தானாகவே மெதுவாய் நடக்கும் கால்களில் ,எனக்குள் கருணை என்ற ஒன்று இருந்தால் அது எவ்வாறானது என்பதை.
நண்பர்களுடன் ஏற்படும் சண்டைகளையும் ,நிரந்தரப்பிரிவுகளையும் வெளியே காட்டிக்கொள்ளாமல் தலையணையை நனைத்த தருணங்களில் ,உணர்ச்சி மிக்க என்னை .
இசையை என் செவிக்குள் சிறைபிடித்து வைத்த நிமிடங்களில், என்னையும் அறியாது சில வரிகளை உச்சரிக்கும்பொழுது.
மழைச்சாரல்களினுடே நடந்து செல்லுகையில், என்னுள் காதல் என்ற ஒன்று இருந்தால் அது எவ்வாறானது என்பதை.
நான் நோயுற்றபொழுது எமைக்கண்டு கண்ணீர் சிந்திய தந்தைக்கு தைரியம் கூறுகையில் யதார்த்தங்களுக்கு முக்கியத்துவம் தரும் என்னை .
"மனப்பாடக்கல்வி ",விதியை நாம் ஏன் மாற்றக்கூடாது ?,என்று வினவியபொழுது,எம்முள் இருக்கும் "மாற்றம் விரும்பியை".
என் எண்ணங்களுக்கு எழுத்தாய் உயிர் கொடுக்கும்பொழுது தோன்றும் ஆக்கம் மிக்க என்னை.
இன்னும் உணர்தலின் தேடல்கள் ஏராளம்.
இவைகளினுடே என் மனம் ஒன்றி இருத்தலை என்னால் உணரமுடிகிறது .இவ்வாறே என்னால் அவ்வுணர்வை வர்ணிக்கவும் இயலுகிறது .என் ஆன்மாவும் ஏதோ ஒரு இனம் புரிய மாற்றத்தை அன்நோடிகளில்தான் உணருகிறது.
இது ஆன்மீகமா?.உணர்ந்தவர்கள் கூறுங்களேன்.
( பி.கு )நான் இரு "ராசர்"கள் என்று கூறினேன் ஒன்று நம் "நடராசர்",மற்றொன்று "கோவிந்தராசர்" .வரலாறு இதை படிக்கும் எவருக்கேனும் பிடிக்குமென்றால் நான் கேட்கப்போகும் கேள்விக்கு விடை எளிதில் அளிக்கலாம்.தற்போது அந்த கோவிந்தராசர் சன்னிதியில் கருவறையில் இருக்கும் சிலையை நீங்கள் கண்டோ,புகைப்படத்தில் பார்த்தோ இருப்பீர்கள்.ஆனால் அது உண்மையான சிலை அன்று.அப்படியாயின் உண்மைசிலை எங்குள்ளது?அது அவ்விடத்திலிருந்து அகற்றப்படக்காரணம் என்ன?
0 comments:
Post a Comment