BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Tuesday, December 13, 2011

கற்றதனாலாய...

          சிறுபிள்ளைக் காலங்களில் நான் படித்த பள்ளியில் ஒரு செயல் நடைமுறையில் இருந்தது.தினமும் பள்ளியின் இறைவணக்கக் கூட்டத்தில்,இடையே ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் எவரேனும் ஒருவர் வந்து ஒரு திருக்குறளையும் அதற்கான பொருள் விளக்கத்தையும்,உடன் ஒரு பொது அறிவுத் துணுக்கையும் அங்கு கூடியிருக்கும் சக மாணவர்களிடையே பகிர்ந்துவிட்டுச் செல்லவேண்டும்.தன் முறை வரும்போது பலர் வேண்டுமென்றே நழுவி எங்கேனும் சென்றுவிடுவர்.அத்தகைய சமயங்களில் அன்று வானொலியில் கேட்ட செய்திகளை வைத்ததும் நினைவில் இருக்கும் ஏதேனும்  ஒரு குறளைக்  கூறியும் ஒப்பேற்றிவிடுவதுண்டு.அதனாலேயே வேறு பள்ளி மாறும் வரை G.Aishwarya என்ற பெயர் GK Aishwarya என்று  அழைக்கப்பட்டதுண்டு(இதில் கொடுமை இந்த கோவிந்தராஜனும் & குடும்பத்தாரும்,அவர்களுடன் சேர்ந்துகொண்டு அவ்வாறு விளித்ததுதான்).இவையெல்லாம் நிகழ்ந்து பலபல வருடங்கள் கடந்தாயிற்று.

              அப்போது என் செயல் எனக்கு நல்லதுதான் செய்தோம் என்ற எண்ணத்தை அளித்தாலும்.அதை இப்போது யோசித்தால் அது எனது சுயநலத்தை மட்டுமே வெளிப்படுத்தியதோ?,என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.  ஒருவேளை நான் முன்சென்றிராது,வேறு ஒருவருக்கு நான் அறிந்துகொண்டவற்றை கற்பித்துவிட்டு முன் அனுப்பியிருந்தால் இத்தகைய உணர்வு இப்போது எழும்பி இருக்காதோ?!.கற்க எவரேனும் முன்வந்திருபபரா?!.நான் எவ்வாறு அதைக் கற்றேன் எப்படி?எவ்வாறு? என்ற கேள்வி என்னுள் எழுந்ததாலா?.நம்மில் எத்தனை பேருக்கு அகரத்தின் ஆதி பற்றி தெரியும்?.எத்தனை பேரில் எப்படி? எவ்வாறு? ஏன் ? என்ற கேள்வி எழுந்திருக்கும்,அது இசையாயினும் சரி ,இலக்கியமாயினும் சரி.அண்மையில் நட்பு ஒன்றிடம் புத்தகங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது நட்பின் பதில்   இதுவாக இருந்தது,"புத்தகம் எல்லாம் நமக்குப் புரியற மாதிரி எழுதணும்,பலது நமக்குப் புரியறது இல்ல அதனால அவ்வளவா படிக்கறது இல்ல".ஆனால் புத்தகங்களைப் புரிந்துகொள்ள ஆர்வத்துடன் எத்தனை பேர் எத்தனித்து இருக்கிறோம் என்பது ஐயமே!.பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் தம்பி குனிந்தபடி ஒரு வரியை புத்தகத்தைப் பார்த்து படித்துவிட்டு,நிமிர்ந்து சுவற்றை நோக்கியபடி அதனை பத்து முறை மனனம் செய்கிறான் .அவனைப்  பொறுத்தவரை கற்றல் என்பது அவனோடு நின்றுவிட்ட ஒன்று,தான் மட்டும் புரிந்துகொண்டால் போதும் என.பாட்டி மார்கழி மாதமானால் தொலைக்காட்சி  முன் அமர்ந்து அதில் ஒளிபரப்பப்படும் "பிபரே ராமரஸங்களை" தலையை அசைத்தபடி கேட்டுக் கொண்டிருப்பார் ,பொருள் எதுவும் புரிந்திராது.பின்பு அந்த தலையாட்டல்கள் எதற்கு?, "ராமர்" என்ற பெயர் கொடுக்கும் ஒரு உருவற்ற பிடிப்பினாலா?,மெச்சிமைத்தனத்தாலா? அல்லது அச்சத்தாலா?.அதே பொருள் பற்றி தன்னிடம் வேறு எவரும் கேள்வி எழுப்பிவிடமாட்டார் என்ற அவநம்பிக்கை.
              தவறு எவரின்பால்? கற்பவர்,கற்றல் என்பதன் பொருள் சரியாக உணராததாலா?!, கற்பிப்பவர் கற்பித்தலின் பொருள் உணராததாலா?!..திருக்குறளை பிறமொழியாளர்கள் உணரவேண்டும் என  அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் சிலர்.பிறமொழிக் களஞ்சியங்களை நம் மக்கள் புரிந்துகொள்ள ஏன் வழிவகை செய்வதில்லை?!."ஸ்வாகதம் கிருஷ்ணா!",என்றதும் "அருமையாப் பாடியிருக்காங்கய்யா!" என்னும் சிலர் "அலைபாயுதே கண்ணா!" என்பதைத்தான் மனதாரத் தாமும்  பாடுகின்றனர்.
             மூன்றாம் வகுப்பில்தான் முதன்முதலில் ஹிந்தி கற்பதற்காக சிறப்பு வகுப்பு சென்றது.அப்போது தூர்தர்ஷனில் "மிளே சுர் மேரா துமாரா!" அடிக்கடி ஒளிப்பரப்பபடும் ஒன்று.ஹிந்தி கற்ற ஒரு ஆர்வக் கோளாறில் அப்பாடல் வரியை தமிழில் மொழிப்பெயர்க்க எத்தனித்ததுண்டு(ஒரே பொருள் கொண்ட வரியையே பல மொழியில் பாடி இருப்பர் என்று அப்போது எனக்குத் தெரியாது).இசைக்காதலை அழகாய்த் தாய் மொழியில் வெளிப்படுத்திய வரிகள் அவை.உணர்ச்சி மிக்க வரிகள் பொதிந்த ஒரு கதை,எங்கோ அப்பட்டமாய் ஒரு இடத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கும்.தன் உள்ளார்ந்த உணர்வுகளையே மிகையாய் வெளிப்படுத்தும் அவ்வரிகள் சுயநலங்கள் என்றே தோன்றும், அத்தகைய எழுத்துக்கள் படிப்பவரை ஈர்த்து அவர் மனம் சிந்திக்க வைத்து ,ரசிக்க வைத்தாலும். கற்பவர் கற்பிப்பவர் என்று இரு நிலையைப் பார்த்தால், "மகாகணபதிம்!" மேல்தட்டின் அடையாளம் போலவும் ,எட்டுக் கட்டையில் எங்கோ கேட்கும் "கணபதியே வருவாய்" மார்கழி மாதத்துப் பொங்கல் சேர்க்கை போலும் ஆகிவிட்டது.இத்தகைய நிலையில்  இவர்களுக்கு ஏன் "why this kolaveri"-யும் "evandi unna peththaan"-னும் பிடித்திருக்கிறது என்று கேட்பவர்களிடம், "நீ எத்தனை முறை உமது "வைஷ்ணவ ஜனதோ"-க்களை இவர்கள் புரிந்துகொள்ளுமாறு உரைத்திருக்கிறாய்?",என்று கேட்கத் தோன்றுவதை தடுக்க இயலவில்லை(இரண்டுமே இதை தட்டச்சிக்கொண்டிருப்பவர்க்கு   பிடிக்கவில்லை என்பது அவரது தனிப்பட்ட விருப்பெனினும்!).இந்த கற்றல் என்பது இயற்கை,இசை, இலக்கியம் எனத்தொடங்கி ஆழ்கடலின் அடிவாரம் போல் ,புதிரான  வாழ்க்கையில் பாய்ந்து நிற்கிறது.
கடல்!,கடலின் ஆழம்தான் எவ்வளவு அத்தனையிலும் இருப்பது உயிர்கள் மட்டுமா?!,எழுப்பப்படாது நம்மில் பொதிந்திருக்கும் கேள்விகள் பலவற்றிற்கான விடைகளும் கூட. கேட்டுவிடுவோமே கேள்விகளை கடற்பக்கம் திருப்பப்பட்ட சுனாமிகள் என.மனிதனோடு அவன் மனமும்  பிழைத்திருக்கும் இக்கரையில்..

3 comments:

கோபிநாத் said...

\\ இவர்களுக்கு ஏன் "why this kolaveri"-யும் "evandi unna peththaan"-னும் பிடித்திருக்கிறது என்று கேட்பவர்களிடம், "நீ எத்தனை முறை உமது "வைஷ்ணவ ஜனதோ"-க்களை இவர்கள் புரிந்துகொள்ளுமாறு உரைத்திருக்கிறாய்?",என்று கேட்கத் தோன்றுவதை தடுக்க இயலவில்லை(இரண்டுமே இதை தட்டச்சிக்கொண்டிருப்பவர்க்கு பிடிக்கவில்லை என்பது அவரது தனிப்பட்ட விருப்பெனினும்!).\

ம்ம்..ரைட்டு ;)

பதிவில் இன்னும் கொஞ்சம் enter keyஐ உபயோகித்தால் நல்லாயிருக்கும் ;-))

Aishwarya Govindarajan said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி
உண்மைதானே!
"கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக"
என்பது பிறருக்கு உரைவித்தலும் புரிவித்தலும் கலந்ததே,இந்த மேதமை என்று பறைசாற்றிக்கொள்வதேல்லாம் அதில்தானே அடங்கியுள்ளது?!..

அடுத்த முறை இந்த enterkey பிரச்சனைகள் வராது பார்த்துக்கொள்கிறேன். :)

Rajesh V said...

நல்ல பதிவு.. 'கேள்வி' கேட்பதும் அதன் மூலம் பெறப்படும் தெளிவும் நம்மிடத்தில் குறைத்து மதிப்பிடப்பட்டே வருகின்றன. தொடர்ந்து எழுதுங்கள்.

You may like this: http://vrajesh-ae.blogspot.com/2011/06/blog-post_01.html

அன்புடன்,
வெ. ராஜேஷ்.