BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Saturday, April 13, 2013

லாவண்டர் கனவுகள்

       அடர் பனிப்பாதையிலே  உதிர்ந்து  கிடக்கும் லாவண்டர் மலர்களை உற்று நோக்கியபடி நடந்துகொண்டிருக்கிறேன்.நடப்பது எனக்கு பிடிக்கும்.கால்கள் நடந்துகொண்டிருக்க இந்த மனது மட்டும்,கரைதொடும் புது அலைகள் போல் ஒவ்வொருமுறை எட்டித் தொடும்போதும் ஒரு புதிய உலகத்தை விட்டுச் செல்லும்.நான் என்னைத் தேடத்துவங்கி உன்னில் தொலையும் உலகம் அது.நடப்பது மிகப் பிடிக்கும்.ஒவ்வொரு லாவண்டர் மலர் உதிரும்போதும் உன்னை நோக்கி நான் எடுத்துவைக்கும் அடுத்த தடத்தை நிர்ணயித்துவிடுகின்றன.அந்த வெண்படர்தலின் வழியே  உன்னைத்  தேடியபடி என் விரல்கள் அலைந்துகொண்டிருக்கின்றன.மனதின் மெல்லிழை அது தொட்டுவிடும் தூரத்தில் எங்கோ நீ.
          என் தேடல்களிடையே அவ்வப்பொழுது நான் கடந்து வந்துவிட்ட பாதையையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.என் கடந்தகாலம் அது .உன்னுள் நான்..என்னுள் நீ... என்று கூறினாலும் நான் வேறு..நீ வேறு.. என்று நிமிடக்கணக்கில் நினைவுபடுத்தும் தருணங்கள் நிரம்பியது.நான் உன்னுள் கலந்துவிட எத்தனிக்கும் ஒவ்வொரு கணமும் அந்த கடந்தகாலம் என் நினைவுகளில் இருந்து எங்கோ கரைந்துகொண்டிருக்கிறது.இதோ நான் திரும்பிப் பார்க்கையில் இருள் படர்ந்த ஏதோ ஒரு சூன்யத்தில் அவை சுருங்கிக் கொண்டிருக்கின்றன.
                                  புல்லுக்கும் ஆங்கே புசியுமாம் இந்த மண்ணுக்கும் கொஞ்சம் புசியுமாம் என்று தோழியுடன்  பாடிக்கொண்டே கட்டிய மணல்வீடுகளுக்கு இன்று விலாசம் இல்லை.அவர்கள் கண்டதிலேயே  நான் சிறந்த பெண் என்று கூறி சிறிதாய் என்னை ஆணவம் கொள்ளச்செய்த அண்டைஅயல் வீட்டிலிருந்த நரைமுடிகளும்  தளர்தோள்களும், ஏனோ அந்த தாத்தாக்களும் பாட்டிகளும் இறந்து போனபோது நான் அழவில்லை.என் தாத்தாவும் அவரது ரேடியோப்போட்டியும் இருந்ததற்கான அடையாளமாய் அந்த ரேடியோவின் கொரகொரப்புகள் மட்டும் இன்னும் எங்கள் வீட்டுச்சுவர்களில் எதிரொலித்தபடி.தொலைந்த அவர்கள் இளமை நினைவுகளை என்னிடம் பகிரும் அப்பாவும் அவரது நண்பர்கள் வட்டமும்.ஒருநாள் அந்த வட்டத்தில் நானும் ஒருபுள்ளியாய்.அந்த நட்பு வட்டத்தின் மிகச்சிறிய உறுப்பினர்.நாளடைவில் எனக்கான நட்பு வட்டம்,எந்தன் நட்பு வட்டம் என் இருவேறு வட்டத்தின் இடைப்புள்ளியாய் நான் மாறியிருந்தேன்,அந்த வட்டம் உன்னையும் அணைத்துச்செல்லும் என்று நான் அன்று அறிந்ததில்லை.பாடப்புத்தகங்களின் பின்னட்டைகள் பாரதியை நான் வரைவதற்காகவும்,எதையேனும் கிறுக்குவதற்க்காகவும் எனக்காக காலியாய் விடப்பட்டிருந்தன.அப்போதெல்லாம் உன் பெயரை நான் அதில்  எழுதியதில்லை.எதிர்காலம்,லட்சியம் என்ற வார்த்தைகள் என்னுள் அடிக்கடி ஒலித்துக்கொண்டிருக்கும்.யாருமற்ற அந்த பூங்காவில் அந்த ஊஞ்சலில் அமர்ந்தபடி நிறைய யோசித்ததுண்டு,அப்போது  என் பின்புறம் நீ அங்கே நின்றிருந்ததில்லை.முதன்முதலில் தொலைபேசி என்ற ஒன்றைப் பார்த்து வியந்தது, உருவம் அறிந்துகொள்ளமுடியாத அதில், ஏதோ ஒரு உறவினரிடம்  ஹலோ என்றது,அப்போது எனக்குத் தெரிந்திருந்ததில்லை, அலைபேசியில்  உன் முகம் பார்த்துக் கொண்டு பேசாது இருக்கமுடியுமென.நான் முன்னோக்கி வந்ததில் ஆங்கங்கே சிதறுண்டு விட்ட கோர்வைகள்  பல,உதிர்ந்துகொண்டிருக்கும் இந்த மலர்கள் போல். இந்த மலர்களை மீண்டும் அந்த மரங்களிடம் சேர்க்கக் கையில் எடுத்தேன்,அங்கு வேறு ஒன்று பூத்துவிட்டிருந்தது.அவைகளை ஏந்தியபடி இதோ நான் உன்னை நோக்கி.உன்னிடம் நெருங்க நெருங்க அவைகள்  நிறம்மாறிக் கொண்டிருக்கின்றன.லாவண்டர் மெல்லிதழ்கள் கொஞ்சம் கடினம் மிக்க ஊதாவாக,எங்கிருந்தோ நீ அவைகளை ஸ்வாசித்துக்கொண்டிருப்பது போல.என் கடந்தகாலமும் நீயும் இரு துருவங்களைப் போல,நான் அந்த துருவங்களை இணைக்கும் கோட்டில் எங்கோ இப்போது பயணித்துக் கொண்டிருக்கிறேன் முற்றிலும் ஊதாவாகிவிட்டிருக்கும் அந்த லாவண்டர் மலர்களை பார்த்தபடி.அங்கே நீ!.மற்றுமொரு கடந்தகாலம் தான் பிறப்பதற்கு  காத்துக்கொண்டிருக்கிறது.


0 comments: