BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Monday, August 1, 2011

எழுத எண்ணினேன்...

              

                     இதோ எழுத அமர்ந்துவிட்டேன்,பாடல்களை இந்நொடியில் கேட்கத் தோன்றவில்லை ஆனால் இதயத்தின் ஆழத்தில் ஏதோ ஒரு பாடலை நானே இனம் கண்டுகொள்ளாமல் முனுமுனுத்துக் கொண்டிருக்கிறேன்.பார்க்கும் வெளி உலகிற்கு இங்கு நான் எழுதுவது மட்டும்தான் தெரியும்.சுவரில் சாய்ந்தபடி எழுத்துப் பலகையின் மேல் இக்காகிதங்களை வைத்துக் கொண்டு கிறுக்குவது மட்டுமே தெரியும்.எழுத வேண்டும் என்ற மனதிற்கு நானே இட்டுக்கொண்ட கட்டாயத்தில் அமர்ந்து, என்ன எழுதுவது என எண்ணிக் கொண்டிருக்கிறேன்.இசை பற்றி?!சூழ்நிலை அதற்கேற்றவாறு இல்லை.நடனம் பற்றி எழுதலாமா?!வாழ்வின் ஒரு சில கசப்பான அனுபவங்களை அது நினைவு படுத்துவிடும்,ஆக இங்கு அது பற்றியும் மையிட எண்ணமில்லை.உச்சத்தில் தனியாய்ச் சுழலும் மின் விசிறி என்னை வெறுமை பற்றி எழுதச் சொல்கிறது.வெறுமைகளால் உந்தப்படும் நேரமில்லை இது.மணமான மறுநாள் அந்த மணமகளிடம் தோன்றும் ஒரு ஆனந்த அழகு போல்தான் இந்த அந்தி மாலை தென்றல் காற்று வேளை.இயற்கை அழகைப் பற்றி எழுதலாமா?!,வேண்டாம் என்கிறது நெஞ்சம்..ஒரு சில ரசனைகள் ரசனைகளாக மட்டுமே சிறந்தது,அதற்கு எழுத்துருவோ வேறு எந்த கலை உருவோ எடுபடாது.எடுபட்டாலும் வெளிப்படாது.இந்த எண்ணங்கள்,இதைப் பற்றி எழுதலாமா?! வேண்டாம்,எப்படியும் இறுதியில் அது சுய வர்ணனையாய் முடிந்துவிடும்,என்னவன் தானாய் உணர்ந்துகொள்ள வேண்டிய ஒன்றை முரசு அறைவித்தாற் போல் ஆகிவிடும்.என் சுயம்,என்னுடன்.பிறரது எண்ணங்களைப் பற்றி?,அது அனுமானங்களே தவிர அவர்களைப் பற்றிய முடிவுரை அல்ல.அன்மையில் பார்த்த ஒரு அழகுக் கதை பற்றி?,சிலாகிக்கலாம்,ஆனால் தற்பொழுது நான் தேடும் நிறைவினை அது தரப் போவதில்லை.இந்த எழுத்து பற்றியே எழுதினால் என்ன?!.வீட்டுச் சுவரில் வெறும் பல்பக் கோடுகளாக முதன் முதலில் அறிமுகமான இந்த எழுத்துக்கள் பற்றி,ம்ஹும்..புன்னகை பற்றி?!,"கே.பி சார் படம் ஜெமினியின் பாத்திரப் படைப்பிற்க்காகவே பார்க்கலாம்".. என்று நான் துவக்கினால்,நீங்கள் புன்னகைத்துவிட்டு நகர்ந்துவிடுவீர்கள்.என் குடும்பம் பற்றி?!அவர்களுக்கே அவர்களைப் பற்றி சரிவரப் புரிவதில்லை.ஆக,நான் புரிந்துகொண்டேன் என்று எழுதினாலும் மறுப்புகளே அதிகம் கிடைக்கும் எனக்கு.நான் செய்த தீயவைகள் பற்றி?!..பொறுமையுடன் படிக்க இங்கு எவரும் இயேசுபிரான் இல்லை.நன்மைகள் பற்றி?!..நானும் இயேசுபிரான் இல்லை.என்னவன் பற்றி?!,அது தேவை இல்லை படிப்பவர்கட்கு.கவிதை என்ற பெயரில் கிறுக்கினேன் என்றால் பலருக்குப் புரிந்திருக்காது எனும் அசட்டு தைரியத்தில்.ஏன்?!,அவருக்கே கூட புரிந்திருக்காது எனும் எண்ணத்தில்.வாழ்க்கை பற்றி?! பிறந்த தேதி மட்டும் அறிந்துகொண்டு பயனத்தைத் தொடங்கி,எப்போது முடியும் என்று தெரியாவிடினும்,என்றேனும் முடிந்துவிடும் என்று அறிந்துகொண்டு பிறருக்காய்,நமக்காய் என பலருக்காய் ஒரு பிறவி முழுதும் செலவிடும் வாழ்வு பற்றி?!.
                     தந்தையுடன் அடிக்கடி சதுரங்கம் விளையாடுவது உண்டு.அந்த 64 கட்டங்களைப் பார்க்கையில்,நாமே முடிவு செய்துகொண்ட வரையறையாகவும்,அந்த 64-கையும் அடக்கிய பெரிய கட்டம் நமக்காய் அளிக்கப்பட்ட வாழ்க்கையாகவும் தோன்றும்.இந்த சிறுகட்டத்தையும் பெருங்கட்டதையும் எங்கோ ஒரு கோட்டில் இனைப்பது "விதி".நமது வரையறைகளை தனக்கு சாதகமாக்கிக்கொள்ளும்,நம்மால் பெயரிடப்பட்ட விதி.மார்கழி முன்பனியை ரசித்தாயா?!,வசந்தத்தில் ஓர் நாள் என்று ஏதேனும் யோசித்தாயா?!,குழந்தைகள் சிரிப்பினில் நீயும் சிரித்தாயா,சமைப்பதிலும் கலை கண்டாயா?! என்று கேட்கப்போவதில்லை.அந்த கிறுக்குத்தனமெல்லாம் என் ஆழ்மனதோடு.நீ அன்றாடம் செய்யும் செயல் என்ன?,பல் துலக்குவது தொடங்கி,நாளிதழ்களைப் புரட்டுதல்(?),இடையே பேச்சுக்கள்,பரவசங்கள்(இரண்டுமே சிலநேரம் பெயரளவில்).அதற்குப் பின் பிறருக்காய் நாம் உழைக்க ஆரம்பிக்கும் வாழ்வின் துவக்கம்.அனுதினம் இது தொடர்வது.எத்தனை பேர் அதனை மனதாரச் செய்கின்றோம்.முரண் எதிலும்,பிறக்கையில் அது அழ ,பிறர் சிரிக்கும் இவ்வுலகைப் பார்த்துப் பழகி நாளடைவில் அதனோடு ஒத்து தானும் சிரிக்கப் பழகிவிடும் ஒரு சிசுவின் மனநிலை அதன் இறுதி வரைக்கும் அதனைத் தொடர்ந்துகொண்டே இருக்கும்.ஒருவேளை குழந்தை தானும் சிரித்துக் கொண்டே பிறந்திருந்தால் இந்த முரண் தோன்றி இருக்காதோ?.ஒரு செயல் ஒருவருக்கு ஆத்மார்த்தமாய்ப் படுவது மற்றவருக்கு கடமையாய் சில நேரங்களில்,வெறும் நேரச் செலவாய்ப் படுவது,முரண்.இந்த முரண்களுக்கு பயந்துதான் வாழ்வின் இந்த வரையறைகள் எவ்வாறு மாறுகின்றன?.உனக்கு முக்கியமான வேலை,இதை உனக்காகச் செய்யவேண்டும் அல்லது அதில் உனக்கு உதவ வேண்டும் காரணம் அது என் கடமை அல்லது அதைப் பொருத்துதான் நான் உன்னிடம் நற்பெயர் பெற முடியும் அல்லது உன் மனதில் எனக்கெனத் தனி இடம் போட்டு அமர்ந்துகொள்ளமுடியும் அல்லது அச்செயலைத் தவிர்ப்பதால் தோன்றும் பல பிரச்சனைகளில்/எதிர்ப்புகளில் இருந்து விடுபட முடியும்,ஆக இதோ செய்து முடித்துவிட்டேன்.இந்த நான்கு மதிப்பற்ற வரையறைகள்.வாழ்வில் அமைதி தேடுகிறேன் என்று அமைதி என்பதன் பொருள் மறந்து நாம் தற்காலிகமாய்த் தேடுவன.இதைப் பற்றி எழுதுகிறேன்,ஆனால் நான் கானும் பலர் (பலர் என்ன?!,என்னையும் சேர்த்து முக்கால்வாசி உலகம்) இப்படித்தான் இயங்குகிறது ,ஆக குறியற்று சுடப்பட்ட துப்பாக்கி குண்டு மண்ணில் புதைவதுபோல் புதையுண்டு விடுகின்றன வார்த்தைகள்.ஒவ்வொன்றுக்கும் நாம் அர்த்தம் தேடுவதுபோல் பலரும் தேடுவரோ?!.தேடினால் இந்த முரண் ஒழிந்துவிடுமா?!.சதுரங்கத்து பெரிய கட்டத்தினுள் 64-கின் பொருள் உணர்ந்து,தன்னை ஒரு கட்டத்தினுள் சுருக்கிக்கொள்ளாமல்,தனக்கு உகந்தது எது என்று உணர்ந்து அதனுள் பறப்பதுவும்,மலர்வதுவும்,போரிடுவதும்,சிரிப்பதுவும்,கதைப்பதுவும்,"வாழ்வதுமான" அந்த அமைதி.சதுரங்கம்தான்,வாழ்க்கை என்பது,சிக்கலானது அல்ல,பல நிறங்கள் கொண்ட சதுரங்கம்.ஒன்று நீ,மற்றொன்று நீயற்றது.எறியப்பட்டுவிட்டன குண்டுகள்,அதை உரியவர் கையால் எடுக்கும் வரை மண்ணில் புதையூண்டவையே.

0 comments: