BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Thursday, August 11, 2011

கொஞ்சம் மழை நேரம்..

                                இந்த மழைக்குத்தான் ஏன் இந்த அவசரமோ?! பொறுமையா பெய்யவேண்டியதுதானே.மொத்தமா கொட்டித்தீர்த்துட வேண்டியது.அப்புறம் மொத்தமா காணாம போயிடவேண்டியது.மாலினியின் புலம்பல் இது.வீட்டின் முற்றத்து கட்டையில் அமர்ந்தபடி.இடப்பக்கம் உள்ள அறையில் ரிக்கார்ட் பிளேட் பாடிக்கொண்டிருந்தது.அந்த பிளேட்டில் இருந்த கீறல்களுக்கு அது புலம்பிக்கொண்டிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.ஆனால் மழையின் சலசலப்புகளுக்கு இடையே அது பாடலாகவே கேட்டது.அதை இயக்கிக் கொண்டிருந்த ப்ளேயர் மாலினியின் மாமனார் நாக்பூர் சென்றபோது வாங்கியது.முப்பது வருடங்களுக்குப் பின் அவர் அடிக்கடி உபயோகித்தப் பொருள்களில் அவரது ஊன்றுகோலுடன் இதுவும் ஒன்று.அவரது இறுதிக்காலங்களில் அவரது தோழமை கூட.அவரது இறப்பில் சவஊர்தியுடன் ஊன்றுகோலைக் கட்டியவர்கள் விண்ணுலகில் டெக்னாலஜிக்கு மதிப்பில்லாததால் அப்பொட்டியை அவர் உபயோகித்த அறையிலேயே விட்டுவிட்டனர்.மாலினியின் கணவன் பத்ரி தன் அப்பாவின் நினைவு வரும்போதெல்லாம் அந்த ப்ளேயரைத் தடவிப் பார்த்துக் கொள்வான்.பத்ரியுடன் திருமணமாகி இருபது வருடங்கள் அவ்வீட்டில் இருந்திருப்பினும் மாலினிக்கு தன் மாமனாரிடம் அந்த தந்தைக்கு நிகர் என்ற உணர்வு ஏனோ தோன்றியது இல்லை.அதனால் மற்றவர்கள் போல் அவள் கொடுமைக்காரி என்றில்லை,பேசுவாள்,மரியாதை தருவாள் கேட்ட உதவிகளைப் புரிவாள் ஆனால் அவளைப் பொறுத்தவரை அவர் பத்ரியின் அப்பா,தன் மாமனார்...மாமனார் மட்டுமே.தந்தைக்கு நிகர் இல்லை.ஆனால் நீண்ட நாள் கண்முன்னே ஒருவர் இருந்து திடீரெனக் காணாமற் போனால் ஏற்படும் பதற்றம் கலந்த தவிப்பு அவளுள்ளும் இருந்தது.ஆனால் அதையும் சிறிது நாளைக்கு பிறகு வந்த ஒரிஸ்ஸா புயல் பலி எண்ணிக்கை,தன் பெண்ணை வெளியூர்க் கல்லூரியில் சேர்க்கும் பொறுப்பு,ஜப்பான் சுனாமியெல்லாம் மறக்கச் செய்துவிட்டது.
                           இன்று அந்த ப்ளேயரை ஓடவிட்டுக் கேட்டுக்கொண்டிருப்பது பத்ரிதான்,அவரது ஊன்றுகோல் நாட்களில் வாங்கிய ப்ளேட் அது.எம்.எஸ்.வி-யின் இசையில் பழைய பாடல் ஒன்று "வான் நிலா,நிலா அல்ல!".ப்ளேட்டை எடுக்கும்போது அதில் உள்ள பாடல் பற்றிய விவரங்களைப் பார்ப்பதோடு சரி,ஒவ்வொரு பாடலைக் கேட்கும் பொழுதெல்லாம் அவனுக்கு அவன் தந்தை நினைவே வந்துவிடும்.அந்த ஊன்றுகோல் வளைவின் மேல் அவர் பாடலுக்கு ஏற்றாற்ப்போல் தன் ஆள்காட்டி விரல் கொண்டு தட்டுவது.அவன் இப்போது அமர்ந்திருக்கும் அந்த சாய்வு நாற்காலியில் அவர் அமர்ந்தபடி தலையை மெதுவாகப் பாடலுக்கு ஏற்றவாறு அசைப்பது,அனைத்தும் அவன் கண்மூடி அமர்ந்திருக்கும் அந்த விழித்திரை நிழலில்.இந்த நினைவுகள்தான் எத்தனை வலியது,எத்தனை வேகமாகப் பயனிப்பது.அப்படியே அவனது நினைவுகள் தன் தந்தையிலிருந்து ,திருமணம் முடிந்து மாலினியுடன் தான் சென்ற முதல் பயனத்திற்குப் பறந்தது.இதே பாடலைத் தான் தனக்கு மிகவும் பிடிக்கும் என அதனை முனுமுனுத்துக்                 கொண்டிருந்தாள்.காலப்போக்கில் அவளது முனுமுனுப்புகள் குறைந்து புலம்பல்களே அதிகரித்ததாக அவனுக்குத் தோன்றியது.அவளுக்குத் தான் பாடியது நினைவில் உண்டா என்று தெரியவில்லை.ஆனால் இவனின் பசுமரத்தாணி நினைவுகளில் அதுவும் ஒன்று.எவ்வளவு அழகானது நினைவுகள்.இந்த நினைவுகள் என்பது எதற்காக?,தேவையா?தேவையற்றதா? எனத் தெரியாமல் நமக்குள் நாமே எழுப்பிக்கொள்ளும் நினைவுகள்.நாம் ஏன் கடந்த காலத்தை தன் சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் போல அவ்வப்பொழுது உயிர்க்கச் செய்து அதனுள் அதிலேயே அதனை கரையச் செய்துகொண்டிருக்கிறோம்.ஒருவகையில் இதுவும் இயற்கை மீதான மற்றொரு சுயநலம்தானோ?.சிரித்துக்கொண்டான் தன்னுள்.
                     இன்னும் மழை விட்டபாடில்லை.தன் வளர்ச்சிக்காக மழை நீரில் உழைத்துக்கொண்டிருக்கும் அந்த முற்றத்துக் கட்டையோரச் செடிகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மாலினி.திருமணத்திற்கு முன்பு அவளது அதன் மீதான பார்வையே வேறு.அதைப் போன்ற செடிகளின் மேல் மழைத்துளி இருப்பது வெறும் அழகு என்ற அளவில் மட்டுமே அவளுக்குத் தெரிந்தது.இப்போது அந்த பார்வை பரிணாம வளர்ச்சி அடைந்த ஒன்று.அழகு என்ற ஒரு அத்தியாயத்தை மறக்கத் தெரிந்த ஒரு பரிணாம வளர்ச்சி.அதை எண்ண,சிரிக்கத்தான் தோன்றியது அவளுக்கு.நினைவுகள் எந்தத் திரையிலும் எந்த நடிகனாலும் வெளிப்படுத்த இயலாத ஒரு வகை ஹாஸ்யம் மிக்கது.மணவாழ்வின் புதிதில்தான் பத்ரி எவ்வளவு நகைக்கும்படியாகப் பேசுவான்,சற்றே ஒரு ஏளனம் தோன்றும் அதில்.அந்த பத்ரி இப்போது இல்லை.இவன் வேறு.பலர் பயனித்த சாலையில் தன் பயனத்தையும் தொடங்கி அதிலிருந்து பிரிந்து வேறு வழியில் செல்லவும் முடியாமல்.அப்பாதையிலிருந்து திரும்பிவிடவும் முடியாமல் தத்தளிப்பவர்களில் இவனும் ஒருவனாகிவிட்டான்.சுவாரசியமற்றதாய் தோன்றிவிடும் பயனப்பாதையில் ஆங்காங்கே தோன்றும் மலர்களையும் இலைகளையும் கண்டு மகிழ்ச்சிப் பெருமூச்செறியும் ஒரு பயனி.அந்நிலையை உணர்ந்ததால்தான் அதற்குப் பிறகான அவனது அத்தகைய பேச்சுகளில் தன்னால் ஈடுபாடு காட்டமுடியாமல் போனதோ.உன்மையான அவன் இல்லையே!,என்று ஒருவகை ஏக்கம் கலந்த ஈடுபாடற்ற தன்மை.இப்போது அந்த அறையில் அமர்ந்தபடி எதனை எண்ணிக் கொண்டிருப்பான் என்று இவள் மனம் நன்கு உணரும்.அப்பாடல் வழியே அவன் மனதில் ஒடும் நினைவலைகளும்,அதை சார்ந்த அவனது எண்ணங்களும்.ஆனாலும் அவளால் இப்போது இவ்வாறுதான் தன்னை வெளிப்படுத்த இயலுகிறது.உள்ளிருக்கும் வேறோரு தன்னை பொய்ப்பித்துக் கொண்டு.இருளுக்குக் கரும்போர்வைப் போர்த்தும் தேவையற்ற வேடம்.மழை அடுத்து வரும் அந்த குளிர்ந்த காற்று இப்போது.அந்த இலைகளிலிருந்து நீர்த்துளிகள் சொட்டிக் கொண்டிருந்தன,பட்டும் படாமல் ஒட்டிக் கொண்டிருந்த நீர்த்துளிகள்.அந்த ஒசை மட்டும் இச்சமயம் காதுகளுக்கு.                 

0 comments: