BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Thursday, October 14, 2010

பக்கங்கள் படமாக...திரைப்படமாக

        ஒரு மதிய உணவு இடைவேளையின்போது  என் தோழி ஒருத்தியுடன் நடந்த சிறு விவாதம்.புத்தகங்களை அதாவது நாவல்களை திரைப்படமாக உருமாற்றம் செய்யும் ஒரு நாகரிகம் பற்றி,இந்த விவாதம் தொடங்கியதற்கான காரணத்தை முதலில் கூறிவிடுகிறேன், பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத்தின் மற்றொரு நாவலும் படமாக்கப்படப்போவதாக வந்த செய்தியே அதற்கு காரணம்.நான் சரி பாதி அதற்கு ஆதரவாக  பேசினாலும்,அந்த நடைமுறையை எதிர்க்கவும் தோன்றுகிறது. புத்தகங்களை படிக்க இயலா, எழுத்து ஞானம் இல்லா பாமர மக்களை சேறும் வகையிலேயே நாங்கள் அதனை  புத்தகங்களை படமாக்குகின்றோம் என்று கூறும் ஒரு சாரார் இருக்கின்றனர். அவர்களை தற்காலிகமாக "பணம் மறை(பறி)க்கும் சப்பைகட்டு" இயக்கத்தில் சேர்த்துவிடலாம்.ஏன் சார் 100/-  புத்தகத்தையே வாங்க வழி இல்லாதவன் நீங்க தர 200,300  ரூபாய்   டிக்கெட்டை எப்படி வாங்குவான்?.அதுவாவது இருக்கட்டும்,படம்  எடுக்கிறேன் பேர் வழி என்று புத்தகத்தின் முன் பத்து பக்கத்தையும் பின் பத்து பக்கத்தையும் சேர்த்துவிட்டு  நடுவில் இருப்பவற்றை கழுதைக்கு இறையாக்கிவிட்டு படம் எடுப்பவர்கள்தான் இன்றைய நிலையில் அதிகம் உள்ளனர்,அதுவும் ஆங்கில பட இயக்குனர்கள் பலர் இதில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் என்றுதான் கூறவேண்டும், அவர்களுக்கே புரியாது போயினும் அதை திரைப்படமாக்குகிறேன் என்று களமிறங்குபவர்கள் பட்டியல் பெரியது,  சாதாரண உதாரணம் ஹாரி பாட்டர் தொகுப்பினை திரைப்படமாக உருவாகிய விதம்.. முதல் பாகத்தில் புத்தகத்தின் பத்து பக்கம் மறைக்கப்பட்டு, ஐந்தாம் பாகத்தில் புத்தகத்தின் பாதி பக்கம் மறக்கப்பட்டு மொத்தத்தில் இறுதியில் ஹாரியே காணாமற்போய்விடுவாரோ  என்று என்னும் அளவிற்கு எடுக்கப்பட்ட திரைப்படம்.அது போல்தான் டேன் ப்ரௌனின் படைப்புகளும் வாழை இல்லை போட்டு விழுங்கப்பட்டன..மரியோ புசோவின் காட் பாதரும் அவ்வாறே ஆனால் மார்லன் பிராண்டோ என்ற ஒருவன் இருந்ததால் மறைக்கப்பட்ட/மறக்கப்பட பல பிழைகள் பொறுத்தருளப்பட்டன. எங்களுக்கு  "லார்ட் ஆப் தி ரிங்க்ஸ்" திரைப்படம் இருக்கிறது என்று கூறுபவர்களுக்கு "ஆம்! நீங்கள் கூறுவதை ஆமோதிக்கிறேன் புத்தகத்தை விட திரைப்படத்தில் எளிதாக காண்பித்திருந்தார்கள்". ஆனால் அதில் இயக்குனர் என்னும் ஒருவரின் பங்கு எங்கு இருந்தது?,இயக்குனர் என்பவரின் உழைப்பு இருந்தாலும் தனித்துவம் என்ற ஒன்று எங்கே சென்றது, அவருக்கு இயக்குனர் அன்றே பெயர் அல்லவே எங்கோ உள்ளிருக்கும் புதையலை தோண்டி எடுத்து வெளியுலகுக்கு காண்பிக்கும் மானிடனுக்கு நிகர்,அவ்வளவே.அதற்காக நம் தமிழ் திரையுலகில் (குறிப்பு : நான் கோலிவுட் என்று கூறவில்லை) எவரும் அவ்வாறு முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என்று சொல்லவரவில்லை பகவதிபுரம் ரெயில்வே கேட்(கரையெல்லாம் செண்பகப்பூ), மோகமுள்,சில நேரங்களில் சில மனிதர்கள் , என பல முயற்சிகள் படங்களாக வெளிவந்துள்ளன.ஆனால்,அவ்வளவாக எதையும் அவர்கள் விழுங்கவில்லை,ஆனால் எப்படி பார்த்தாலும் புத்தகங்களாக படித்து அதை ரசித்து அவற்றை தம்மனதில் ஒரு உருவிற்கு கொணர்ந்து கதாப்பாத்திரமாக நிறுத்தியவர்களுக்கு,திரையில் வேறு  ஒருவர் தோன்றி அந்த பாத்திரத்திற்கு நியாயம் தருவது பல நேரங்களில் உகந்ததாக இருந்ததில்லை நானும் அப்படிப்பட்டவர்கள் கூட்டத்தில் ஒருத்தி , அதற்காக அப்படங்களை ரசிக்கவில்லை என்று நான் கூறவில்லை, ஆனால் வேறு எவரோ ஒருவர் படைத்த பாத்திரங்களை திரைப்படமாக்கி ஆஸ்கார் ,தேசிய விருதுகள் என அடுக்குவது , ஒரு உண்மையான இயக்குனரின்/திரைப்பட கதாசிரியரின் தனித்துவம்,கற்பனைத்திறம் உழைப்பு ஆகியவற்றை அவமதிப்பது போல் ஆகாது?அதுவே எம் எண்ணம்,வாதம் அனைத்தும்.கற்பனை திறம் தனித்துவம் என்றதும் நினைவில் வருகிறது இயக்குனர் மணிரத்னம் அவர்களை எடுத்துக்கொள்ளுங்கள், அவர் எந்த புத்தகத்திற்கும் திரை வடிவம் கொடுத்ததில்லை ஆனால் அவரது தளபதி , நாயகன் ,இருவர் போல மனிதத்தின் பல பரிமாணங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த படம் வேறில்லை,  ஒரு அலைபாயுதேவை போல் அழகிய ஊடல் கலந்த காதலை,கணவன் மனைவி உறவை யாமரிந்தவரையில் எந்த புத்தகத்தை படமாக்கியவரும் அழகாக சொல்லியது இல்லை.அவரினும் பெரிய சகாப்தம் தமிழ் சினிமாவிற்கு வடிவம் கொடுத்த பழம் நம் கே.பாலச்சந்தர் அவர் எந்த புத்தகத்தை படித்தும் அதனால் ஈர்க்கப்பட்டு  ஒரு திரைப்படத்தை உருவாக்கியதில்லை ஆனால் அவரைப்போல், சாதாரண புத்தகம் எழுதுபவனும் தன் கதாப்பாத்திரத்தை செதுக்கியதில்லை ,அவரைபோல் யதார்த்தம்,மனித இயல்பு என்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் கொடுத்தவர்கள் வேறில்லை , 'அன்பே சிவம்' என்ற ஒரு படம் மட்டும் போதாது நம் மற்றொரு கலைஞனின் தனித்துவ திறம் பற்றி கூற,வசந்தபாலன் என்பவனை போல் சகோதரத்துவத்தை எந்த புத்தகமும் வர்ணித்ததில்லை,கேமரூன் போல் அழகிய காதலை எவரும் சொல்லியதில்லை.இவர்கள் நான் கூற விழைந்த அந்த தனித்துவம் மிக்க கற்பனையாளர்கள் பட்டியலில் ஒரு பாகம் அவ்வளவே இன்னும் பலர் இருக்கின்றனர் அப்பட்டியலில்  நாம் எப்பொழுதும் தோள் தட்டிக்கொண்டு கூறும்  "உலகத்தரம்" என்ற வார்த்தைக்கு இணையானவர்கள், ஆனால் பக்கங்களை படமாக்கும் இயக்குனர்கள் இருக்கையில் இவர்கள் அனைவருக்கும் அங்கீகாரம் என்பது சரிவரக்கிடைப்பதில்லை அல்லது அத்திரைகளுக்கு பின்னால் மறைக்கப்பட்டுவிடுகிறது .ஒரு பொருளை பற்றி அதன் தகுதிக்கு மீறி புகழ்வதும், விலையற்ற ஒன்றிற்கு தராசு இடுவதும்தான் நம்மிடையே பலரின் பிறப்பு இயல்பாயிற்றே.                     

0 comments: