BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Tuesday, October 19, 2010

ஆயா!!

       எனக்கு அவளை ஒரு நான்கு மாதங்களாகத்தான் சார் தெரியும்,கரிசல் நிலத்தின் கடினத்தை ஒத்த தோல்.அவள் கிழம் என்பதற்கு அடையாளமாய் அத்தோல் சுருங்கிவிட்ட நிலை.நெற்றியில் அக்கருப்பிற்கு எதிர்மறையாய் தனித்தொளிரும் திருநீறு.நடப்பதில் முதுமைக்கான சிறு தோய்வு தெரிந்தாலும் அந்த கண்கள் எப்பொழுதும் எதையோ சிந்தித்துகொண்டிருப்பது போல் தோன்றும்.இவள்தான் எங்கள் ஆயா சார்!!.ஆயா என்றால் என் தந்தைவழி, தாய்வழி உறவன்று.அவர்களெல்லாம் பாட்டி என்ற வரிகளுக்கு சொந்தக்காரர்கள்.ஆனால் இவள் எங்கள் கல்லூரி விடுதியில் வேளை செய்யும் பத்தோடு பதினொன்றுகளில் ஒருத்தி,எழுபது வயது சுமார் இருக்கலாம் சார்.கல்லூரியிலிருந்து விடுதிக்கு வருகையிலும் செல்கையிலும் என எப்பொழுதும் அவளை பார்க்கலாம் அந்த மாடிப்படிகளில் அமைதியாக அமர்ந்திருப்பாள்.எப்பொழுதும் என்னை பார்த்தால் அந்த புகையிலை பல் தெரிய  புன்னகைசெய்வாள்.சுற்றி இருப்பவர்கள் அங்கலாய்க்கையில்,"அட சும்மா கட!!மனுசனா பொறந்தா ஆயிரம் இருக்கும்!!" என்பாள். அவள் கூறுவது அவளுக்கு சாதாரண வரிகள்தான் ஆனால் அதில் பொதிந்துள்ள மாபெரும் அர்த்தம் பற்றி அவள் யோசித்திருப்பாளா என்பது சந்தேகமே.அதே ஆயா வீட்டில் தன் பிள்ளை தன்னை வெய்துவிட்டான் என்று அவர்களிடம் சொல்லி கண்ணீர் சிந்தியதையும் கண்டிருக்கிறேன்,அழுதுவிட்டு "சரி ஒலகம் அப்டி, எம்புள்ள பாவம் அதுக்கென்ன கவலையோ" என்று கூறிவிட்டு நகர்வாள்.    ."தன் கடன் பணி செய்து கிடப்பதுதான்" அவள் கொள்கை போலும். மற்றவர்கள் போல் வேளை நேரத்தில் அவள் சிடுசிடுத்து கண்டதில்லை. மேற்பார்வையாளர்  வயதில் சிறியவராக இருந்தாலும் அந்த பதவிக்கும் அவரின் பத்தாம் வகுப்பு படிப்புக்குமான மரியாதையை அவளிடமிருந்து எதிர்பார்க்கலாம் "வணக்கங்கமா!!" என்பாள்.வராந்தாவை நேர்த்தியாக கூட்டி பெருக்கி குப்பை அள்ளுவதுதான் அவள் அனுதின வேளை.அவளிடம் நான் முதலில் பேசியது ஒரு வாரநாளில் கல்லூரிக்கு கிளம்பிக்கொண்டிருந்த சமயம், அறைவாசலில் இருந்த குப்பைகளை பெருக்க வந்த அவள் என் அறை முன்னே தயங்கிதயங்கி நின்றிருந்தாள்.நானும் முதலில் அதை கவனிக்கவில்லை ஆனால்,சிறிது நேரம் கழித்து "யம்மா!! பள்ளிக்கூடம் போறிகளா!! என்றாள்.  ஆம்!! என்று நான் தலையாட்டினேன். மறுபடியும் "ஒன்னு கேட்டா தப்பா நெனச்சுக்க மாட்டீகள?" என்றாள் புதிராய். நான் "சொல்லுங்க!" என்றேன். அவள்,"ஒன்னுமில்லடா தல கொஞ்சம் வலிக்குது தைலம் இருந்த குடுடா!!"என்றாள். ஓ!தாராளமா ஆயா, என்று என்னிடம் இருந்த மென்தோ ப்ளஸ்- ஐ நீட்டினேன்.அதில் நகக்கண் சிறியளவிற்கு எடுத்துக்கொண்டு மீண்டும் என்னிடம் திருப்பிதந்தாள். "இன்னும் கொஞ்சம் வேணும்னா எடுத்துக்கோங்க ஆயா!" என்றேன். "போதும்டா!" என்று கூறிவிட்டாள் அதுதான் முதல்முறை அப்படி ஒரு ஆயா இருப்பது எனக்கு தெரிய வந்தது.அவளிடம் பெயர் கேட்டதில்லை என்னை பொறுத்தவரை அவள் "ஆயா!!", அன்று முதல் எப்போது பார்த்தாலும் "வாங்கடா!" என்று ஒரு புன்னகையுடன் கூறுவாள். பல "ஞாயிறு காலை ஆறு மணிகள்"  காப்பிக்குமுன்,படி இறங்குகையில் அவள் புன்னகையில் தொடங்கியதுண்டு.திடீரென்று ஒரு நாள் "நல்லா இருக்கியாடா!" என்பாள்.அந்த கேட்கும் தோணியில் உள்ள பரிவு "நல்லா இருக்கேன் ஆயா" என்பதோடு நிறுத்திக்கொள்ள தோன்றாமல் "நீங்க நல்லா இருக்கீங்களா?!" என்று கேட்க தோன்றிவிடும்.அந்த முதுமைக்கே உண்டான  பரிவு மிக்க அழகான மனம் அவளது.கல்லூரி வாரத்தில் ஆறு நாட்கள் அரைநாள்தான் அதிலும் பல வகுப்புகள் நடக்காது அதனால், பசி கண்களை மறைக்க உச்சி வெயிலில் சோர்வுடன் திரும்ப நேரிடும். அறைக்கு நுழைகையில் எதிரே தென்படுவாள், ஏதோ நாம் நிலை அறிந்த அன்னை போல் " சாப்டயாடா??"  என்பாள். "இல்ல ஆயா இனிமேதான்!"என்றாள், "அட புள்ள காலிலேயே சாப்டாமதானே என் கண் முன்னாடி ஓடின  காலைலேர்ந்து சாப்டாமையா இருக்க? என்று கூறிவிட்டு அருகில் இருப்பவர்களிடம் " தா! பாறேன் இந்த புள்ள காலைலேர்ந்து சாப்டலா,இப்டியே போனா படிக்கறதுக்கு அப்றம் நாளைக்கு கண்ணாலம் காட்சி நடந்து புருசன் வீட்டுக்கு போனா அவங்க வீட்ல உழைக்க உடம்புல தெம்பு வேணாம்?!உடம்பு என்ன ஆவறது போய் மொதல்ல சாப்டு"  என்பாள்,எப்படியிருந்தாலும் மணி மூன்றிற்கு குறைந்து அவளுக்கு இங்கு உணவு கிடைக்காது என்ற விஷயம் அவள் அறிந்தது ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் " நீ சாப்டயாடா!!" என்னும் அந்த மனம் .பெற்ற தாயும் அவளினும் முதிய ஒருத்தியும் கொள்ளும் அக்கறை,அப்படி சற்றே கடிந்துகொண்டு கூறுவதில் அவள் எடுத்துக்கொள்ளும் உரிமை அழகாக இருக்கும் சார். நான் சொல்லவில்லை?! முதுமைக்கே உண்டான சுயநலமற்ற அழகிய மனம் அது என்று .அன்றும் அப்படித்தான், பிறந்தநாள் அன்று, இரவு வேறொரு விடுதியில் தங்கி இருந்ததால் காலையில் அவளை காண இயலவில்லை, திங்கள் காலை எப்பொழுதும் போல் முதல் இரண்டு வகுப்புகள் மட்டுமே நடுவில் எப்பொழுதும் போல் ஒரு பெரிய இடைவேளை  என்பதால் அறைக்கு திரும்பிவிட்டேன் மீண்டும்  பரிசோதனைக்கூடத்திற்கு செல்வதற்காக கிளம்புகையில்       அதே படிக்கட்டுகளில் அமர்ந்திருந்தாள். நான் என் பிறந்த நாள் உடையின் மீது பரிசோதனைக்கூடத்திற்க்கான அந்த வெள்ளை கோட் சீருடையை அணிந்திருந்தேன். படியில் அவள் அமர்ந்தபடி தென்படவே.அவள் முன் சென்று மண்டியிட்டு அமர்ந்து "ஆயா!! இன்னைக்கு எனக்கு பொறந்தநாள் ஆயா!!"  என்றேன். அவள் உடனே என்ன செய்தால் தெரியுமா அழகாக தன் இருகைகளால் தன் நெற்றியில் சொடுக்கி திருஷ்டி இட்டுவிட்டு "மகராசியா நல்லா இருடா!" என்றுவிட்டு அந்த இருகைகளால் என் கன்னங்களை தொட்டுக்கொடுத்தாள், ஏதோ என்னிடம் உரிமை எடுத்துக்கொள்பவர்களின் அரவணைப்பு போல் இருந்தது அதில் இருந்த பரிவும் அன்பும். அது சரி பொறந்தநாள் அண்ணைக்கு எதுக்கு புது சொக்கா போடாம இந்த உடுப்ப மாட்டிருக்க? என்றாள் படிப்பறிவற்ற என் ஆயா. நானும் அப்பொழுது யுனிபார்ம் என்பதை நடைமுறை தமிழில் மொழி பெயர்க்க தெரியாததால் "இல்ல ஆயா இத காலேஜுக்கு  போடணும்!" என்று கூறினேன். "அப்படியாடா அது என்ன படிப்போ என்னமோ?நமக்கு தெரியாது, அது கெடக்குது பொறந்தநாள் அன்னிக்கு  ஆயாவுக்கு முட்டாய் எங்க என்றாள், நாம் முன்பின் பார்த்திறாத சிறு குழந்தை நம்மிடம் மிட்டாய் கேட்பது போல்.இதோ வாங்கி வருகிறேன் என்று அருகில் இருந்த கடை பக்கம் நகர்ந்தேன். உடனே அவள் "அட நான் சும்மா சொன்னேன்டா கண்ணு ஆயாவுக்கு பல்லு ஹீணம் முட்டாய் எல்லாம் கடிக்க முடியாது நீ நல்லா இருடா!அது போதும்" என்று கூறினாள். "சரிங்க ஆயா!நான் வரேன்" என்று வகுப்புக்கு நேரமானதால் அவசரமாக அங்கிருந்து நகர்ந்தேன்.ஏதோ இறந்த என் கொள்ளு பாட்டி, எனக்கு பிடித்தமானவள்,அழகாய்  எப்பொழுதும் என்னை உரிமையுடன் "ஜில்லுக்கண்ணு!" என்று கூறி நெற்றியில் முத்தமிடுவாள் அவளுடன் சற்று நேரம் அமர்ந்தது போல் இருந்தது.வகுப்புக்கு செல்லும்பொழுது சாலையில் நடக்கையில் தோன்றியது,வாழ்வில் பிறந்ததிலிருந்தே நம்முடன் இருக்கும் உறவுகளினும், திடீரென்று புதிதாய் தோன்றும் இத்தகைய உறவுகள், இந்த உறவுகள் நிரந்தரமா என்று எவருக்கும் தெரியாது, ஆனால் நாம் வாழ்வை சுவாரசியமாக்குவதில் அந்த நிரந்தரங்களை விட இவர்களின் பங்கு ஏராளாமாகிவிடுகிறது என்பது மறுக்க இயலா உண்மை.ஆயா!!இப்பொழுது அந்த மாடிப்படி அருகில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருப்பாள்.   
 

0 comments: