BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Thursday, February 3, 2011

ஆயா...(பாகம் -2)

         இப்பொழுதெல்லாம் அவளுடன் நெருக்கங்கள் அதிகரித்துவிட்டதாகவே தோன்றுகிறது.இன்று காலையும் அவ்வாறுதான்,காலை காபி பருகிவிட்டு வருகையில்,எதிரே அவள்,படியில் அமர்ந்தபடி "என்ன கண்ணு சாப்பிட்டயா!!?" என் கரம் பிடித்துக்கேட்டாள் .காலை உணவருந்துவதெல்லாம் என்றேனும் நடக்கும் அதிசய நிகழ்வு.அம்மா கூட கேட்பார்,"சீக்கரமே எழுந்துடறேனுதான் பேறு!அப்படி சாப்பிடாம என்னதான்டி பண்ணுவே?!".விடை இன்று வரை தெரிந்ததில்லை.காலை உணவருந்தவில்லை என்றாலும் அவளுக்காய்,அந்த ஆயாவின் உரிமை மிக்க அன்புக்காய்,ஆம்! என்று தலையசைத்தேன் புன்னகையுடன்.இல்லையென்றால் வைதிடுவாள் இல்லை கோபித்துக்கொள்ளுவாள் .ஆனால்,அவள் விட்டபாடில்லை. "என்ன சாப்பிட்டே?",அடுத்த கேள்வி. காபி வாங்குகையில் அருகில் ஹாஸ்டல் வார்டன் இட்லி சாப்பிட்டுக்கொண்டிருந்தது நினைவில் வர,"இட்லி!" என்று கூறினேன்,சொல்லி இருக்கக்கூடாதுதான் ஆனால் அவளின் அந்த உரிமை ஏனோ கூறவைத்து விட்டது.சட்டென்று எதிர்பாரா விதமாய் வயிற்றில் கை வைத்து "எங்க சாப்பிட்ட மாதிரியே தெரியல!என்ன இது ஒடுங்கிபோன மாதிரி வயிறு!எத்தன சாப்பிட்டே?".நான்,"ஹா ஹா!  நாலு ஆயா!அதெல்லாம் இல்ல நல்லாதான் இருக்கேன்,டிரஸ் தொள தொளனு இருக்கு!".அதற்குள்," டிரஸ் தொள தொளவா?-சும்மா சொல்லாத கண்ணு, நாலா?போதுமா?! வளர்ற பிள்ள சாப்பிட வேண்டாம்?போ!".தலை எது,கால் எது என புரியாமல் இடையில் குறுக்கிட்ட தோழி ஒருத்தி "இல்ல ஆயா,இவ போடற டிரஸ் எல்லாமே அப்படித்தான்,சர்க்கஸ் கூடாரம்,டென்ட் கொட்டா,எல்லாம் நல்லாதான் சாப்பிடுவா!உடம்புதான் பிடிக்காது இவளுக்கு".என்னமோ போ,என்று ஆயா கூறிக்கொண்டே ,அதுவரை பற்றிக்கொண்டு இருந்த என் கரத்திற்கு விடுதலை அளித்தாள். அந்த அன்பிற்காய்,எனை மேலும் பொய் கூறாது காப்பாற்றிய தோழிக்கு மனதிற்குள் நன்றி கூறியபடி அங்கிருந்து நகர்ந்தேன்.ஏனோ அன்பிற்கு முன்னால் தோற்றுவிடுகிறது அனைத்தும்.என்னை பொங்கல் திருநாளிற்கு கூட அவள் வீட்டிற்கு அழைத்தாள் "கண்ணு எங்க வீட்டுக்கு வரது,எங்க பொங்கல பாக்கறது!?",அதே அழகிய உரிமையோடு,போக மனதில் ஆசை இருந்தாலும்,  "ரொம்ப நாள் கழிச்சு ஆத்துக்கு வரஅஅஅ ..!"என்று அம்மா இழுத்து இசைத்தபடி மறுத்ததால் அந்த எண்ணம் கைவிடப்பட்டது."ஆயாவுக்கு பொங்க காசு?" என்பாள்,அவளது ஏழ்மை கருதி பணம் அளித்தாள் "பிரிச்சுட்ட பாத்தியா!" என்று மறுப்பாள்.மனதளவில் ரொம்ப அழகு சார் என் ஆயா.அன்று ஏதோ பழைய பீ.சுசீலா பாடலொன்றை முனுமுனுத்தபடி வந்துகொண்டிருக்க,"இந்த காலத்துல யார் கண்ணு இந்த பாட்டெல்லாம் பாடறாங்க வார்த்தயே புரியமாட்டேங்குது இப்போலாம்!" என்று வயோதிகத்துக்கே உரித்தான பழம்பெருமை பேசியும் புதுமைச்சாடல்களும் புரிந்துகொண்டிருந்தாள்,"சரி உனக்கு இந்த பாட்டு தெரியுமா,கொஞ்சம் ரெண்டு வரி பாடறது ஆயாவுக்காக!" என்று அவள் காலத்து அழகான காதல் பாடலொன்றைப் பற்றிக் கேட்டாள்,பல வருடங்களுக்கு முன்பே உயிர் நீத்த அவளுடயவனைப் பற்றி எண்ணி இருக்கலாம்,தெரியவில்லை.ஆனால் அதே உரிமையுடன் கேட்டதால் அவளுக்காய் முதல் இரு வரியை "நிலவும் மலரும்.." என பாடிவிட்டு வந்தேன்.
             நடந்துகொண்டிருக்கையில் திடீரென்று வந்து எனை நிறுத்தி தன் இருகரத்தால் சொடுக்கி திருஷ்டி சுற்றுவாள்,அதே உரிமையுடன்,ஏன் என்று இதுவரை நான் வினவியது இல்லை.இவளுடன் இன்னும் எத்தனை காலம்?, என் கல்லூரி நாட்கள் முடியும் வரை?,இன்னும் மூன்று மாதங்கள்! அவ்வளவே.அதற்குப் பிறகும் அவளை சந்திக்க இயலுமா ?,சாத்தியக்கூறுகள் பற்றி இவ்விடம் பேசுவது பொருத்தமன்று.இங்கு பலருக்கு விதியும் கடவுளும் ஒன்றே,பிரித்துப்  பார்க்கத்தெரிந்ததில்லை அவர்கட்கு   .என்னைப்பொறுத்தவரை விதியை நம்பினால் இறையை நம்புதல் தவறு அல்லது இறையை நம்புபவன் விதியை நம்பக்கூடாது.மற்றவர்களைப் பொறுத்தவரை  இரண்டுமே இல்லாமல் இருக்கும் ஒரு பொருள்,சக்தி அவ்வளவே.இது போன்ற உறவுகளை நம்மிடம் விதி சேர்க்கிறதா? இல்லை இறை சேர்க்கிறதா? சர்ச்சைகள் தேவையில்லை,"நிலைத்திடுமா நிலைக்காதா?!",அது நம் கரங்களில் மட்டுமே இல்லை.ஆனால் இவ்வாறு உருவாக்கப்பட்ட உறவுகளால் "நாள் ஒன்றிலும் ஆனந்தமே!" என்று ஏதோ ஒரு அழகிய பாடலின் இடையே தோன்றும் ஒரு சிறு வரி சட்டென்று மின்னல் போல் மனதில் பளிச்சென்றுவிட்டு மறைகிறது.       

1 comments:

Yaathoramani.blogspot.com said...

ஆயாவிடம் உள்ள தாய்மை உணர்வு
மிகச் சிறந்த பண்பு.அதை மிக இயல்பாகச்
சின்னச் சின்ன நிகழ்வுகள் மூலம்
சொல்லிப்போவது மிக அழகு.
உணர்துவதைப்போலவே எதையும்
உணர்வதும் மிகமுக்கியம் என எனக்குப்படுகிறது
கண்ணிலே அன்பிருந்தால்தால்தான்
கல்லிலே தெய்வம்வர இயலும்.நல்லபதிவு
வாழ்த்துக்களுடன்