BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Monday, February 14, 2011

மொழி புரிந்துவிடில்...

இரு நாட்களாக கிறுக்கிய சற்றே பெரிய பதிவு இறுதியாக இதோ முடிந்துவிட்டது :)
குறிப்பு:பொறுமை உள்ளவர்களுக்கு மட்டும்            
                
              சிறு வயதில் பள்ளியில் தோன்றிய எண்ணம்.இன்று வரை மாறவில்லை. இந்த "காதலர் தினம்" - "வேறு வேலையற்றவர்கள் தினம்" என்று. பதினோறாம் வகுப்பில் அருகில் அமர்ந்திருந்த பள்ளித்தொழியிடம் சொன்ன வசனம் இன்றும் நினைவில் உள்ளது "இந்த St.Valentine நிஜமா பாவம், அவர் பிறந்த நாள் எதிர்காலத்துல இப்படிலாம்  கொண்டாடுவாங்கன்னு தெரிஞ்சுருந்தா இன்னும் ஒரு பதினஞ்சு நாள் தள்ளியாவது பிறந்திருப்பாரு atleast கொண்டாடற frequency-யாவது குறைஞ்சிருக்கும்".ஏனெனில் அது காதல் என்பதன் மீது உள்ள வெறுப்பு  அல்ல மாறாய் பள்ளி காலத்திலேயே பல நண்பர்கள் காதல் என்ற பெயரில் செய்த அலம்பல்கள் அவ்வளவு,ஏதோ அவர்கள் செய்வதையெல்லாம் பார்த்தால் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் அந்த "லா லா லா" வுடன் , தற்போதைய டி.ஆர் ,வசனம் பேசி நடிக்கும் காதல் படத்தை யாரோ நம்மை பலவந்தமாகப் பார்க்கவைப்பது போல் இருக்கும்.கண்ணே,கனியே,முத்தே என்பதெல்லாம் சினிமாவோடு சரி, இயல்பு வாழ்க்கையில் எதிரில் அமர்ந்து யாராவது யாரிடமாவது அவ்வாறு வசனம் கூறினால்,எரிச்சலில் அவர்களை அறைந்திடமுடியாமல் எழுந்து சென்றுவிடுவேன் அல்லது தலையில் அடித்துக்கொண்டு நகர்ந்துவிடுவேன்.படங்களே பார்க்காமல் இருந்திருந்தால் இவர்கள் எவ்வாறு தன் காதலை வெளிப்படுத்தி இருப்பார்கள் என்று அவ்வப்பொழுது நினைத்துப்பார்ப்பது உண்டு.என் தோழி ஒருத்தியும் தோழனும் ஒருவரை ஒருவர் பார்த்ததும் பிடித்துவிட,செல்போன்,கேண்டீன் என்று அவர்கள் உறவு தொடர்ந்தது, திடீரென்று ஒருநாள் என்னிடம் "I think I like him,he is so fun"-என்றாள்,புன்னகைத்தேன்.ஒரு மாதம்  கழித்து விளையாட்டாய் நான் சற்று அவளை அவனுடன் இணைத்து பரிகசிக்க  "I don't know எனக்கு இப்போலாம் ஆரம்பத்துல இருந்த மாதிரி ஒரு எண்ணம் தோன்றது இல்ல" என்றாள்.ஒரே வரி-ஈர்ப்பு பலவீனம் அடைந்தது, இங்கு பலரது வாழ்க்கை இவ்வாறுதான், பார்த்தவுடன் பிடித்துவிட பழகுவர்,பழகியபின் தெரியும் எண்ணம் ஓத்ததில்லை என்று, பின்னர் அதனால் ஏற்படும் break up என்பதும்,"நாம் friends - ஆவே இருந்திடலாம்" என்ற வரிகளும்.சரி என்று இறுதி வரை விடமுடியாமல் சகித்துக்கொண்டு வாழும் ஒரு பிரிவும் உண்டு.  காதல் என்றால் என்னவென்றே புரியாமல்/தெரியாமல் ஆனால் அதன் பெயரால் சில நகைப்புகளையும் நடப்புகளையும் கண்டுகொண்டு அனைவரும் வாழ்கிறோமோ? என்ற எண்ணம் அவ்வப்பொழுது என்னுள் தோன்றுவது உண்டு. எது எதற்கோ அது உண்மையா? இல்லையா? என்று ஆராய்ச்சி செய்து  அனுதினம் நிரூபித்துக்கொண்டிருக்கும் நாம் ,ஏன் காதல் என்பதை மட்டும் எவ்வாறு இருக்கும் என்று பரிசோதிக்காமல்/ஆராயாமல் அதாம்-ஏவாள் காலத்து ஈர்ப்பாகவே உள்ளது உள்ளபடி  இன்றளவும் நம்புகிறோம்/ஏற்றுக்கொண்டுவிட்டோம்?.கவிதைகள் கிறுக்குபவளா இவ்வாறு பேசுகிறாள்? என்று குழம்பும் பலருக்கு,எழுதும் கவிதைகளும் வசனங்களும்  அவ்விடத்தோடு சரி இயல்பு வாழ்க்கைக்கு அவ்வரிகள் ஒத்துவராத ஒன்று என்பது என் அசைக்க இயலாத கருத்து.மேலும் அதனால் தானோ என்னவோ?என் வரிகளும் கண்ணே மணியே முத்தே என்று பெரும்பாலும் இல்லாமல் இயல்பு வாழ்க்கை நிகழ்வை சுற்றியே  இருக்கும்.அப்படியென்றால் "நீ காதல் உணர்வற்ற அனைத்தும் துறந்த துறவியா?" என்றால் .உங்கள் கணிப்பு மிகவே தவறு.  
                                                           
    
                    அது  Deep passion towards something என்று கூறுவார்களேயாயின்,என் முதல் காதல் இசைமீதுதான் என்று கூறவேண்டும்,புத்தகங்களும் எழுத்துக்களும் திரைப்படங்களும் சற்றே வளர்ந்தபின் தோன்றிய/அறிந்து உணர்ந்துகொண்ட காதல்கள் எனக்கூறலாம்.   உண்மையிலேயே,சிறுகுழந்தையாய்   இருக்கையில்  என் பாட்டி என்னை குளித்துவிடும்போழுது  கைவீசம்மா கைவீசு என்று ராகமாகப் பாடி என் இருகரங்களையும் குவித்து அதன் மேல் முத்தமிடுகையில் நான் "களுக்"கென்று சிரித்துவிடுவேனாம்,சொல்லுவார் என் முதல் சிரிப்பு பற்றி.என் முதல் சிரிப்பே அதற்குத்தான்.என்னைச் சிரிக்கவைத்தது இசை.
                    தேவர் மகன் படம் பார்த்தபின்பு முதல் முதலாய் நான் மழலையில் பாடியது.என் வீட்டில் ,அப்படத்தில் சிவாஜி படுத்திருக்கும் மரக்கட்டிலை போன்ற ஒன்று உள்ளது அதன் மீது ஏறி நின்றபடி "போற்றிப்பாடடி" என்று கால்களை உதைத்து நின்றபடி இடுப்பில் கைவைத்துக்கொண்டு பாடினேனாம். என்னை அதற்காய் முதலில் ஆட வைத்தது இசை.
                      "மாணிக்கம் கட்டி" என தந்தை பாடியும்,tape recorder -இல் பாடவிட்டுமென என என்னை உறங்கவைத்தது இசை.  
                      காலைவேளை வானொலியில் ஏதேனும் சுசீலா அல்லது டி.எம்.எஸ் அல்லது பி.பி.எஸ்  பாடல் ஓடிக்கொண்டிருக்க ,என் தாத்தா அவர்களை பற்றியும் இன்ன பிற இசைக்கலைஞர்கள் பற்றியும் விவரிப்பார்.தன்னைபற்றியும் தன்னை சுற்றியவர்கள் பற்றியும் தன் மூலமாகவே உணரவைத்தது இசை. 
                     சற்றுவளர்ந்தபின் மதியவேளையில் தந்தையுடன் சேர்ந்து அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கையில் ஏதேனும் ஒரு பழைய பாடல் வந்தால், "பாட்டி சேனலை மாத்தாதே இந்த பாட்டு இருக்கட்டும்" "அம்மா சேனலை மாத்தாதே மா இந்த பாட்டு இருக்கட்டும்" என்று நானும் தந்தையும் ஒரே குரலில் பாட்டியிடம் கூறுவோம் .அல்லது ஏதேனும் அழகிய பாடல் வந்தால் கால்களால் தரையில் தாளமிட்டபடியோ அல்லது ஆனந்தசயனப்பெருமாள் போல் படுத்தபடி ஒரு காலால் மற்றொரு காலில் தாளமிட்டபடி சிரித்துக்கொண்டு ரசித்து என, அது போன்ற அருமையான தருணங்களை தந்தது/தந்துகொண்டிருப்பது  இசை.
                    ஆறாவது படிக்கையில் என நினைக்கிறேன் முதன்முதலில் நான் அடுத்த தெருவில் நடந்த கர்நாடக இசை கச்சேரிக்கு சென்று புரியாத வரிகளுக்காய் ஏனோ பிடித்தும் பிடிக்காததுமாய் சம்பந்தமே இல்லாமல் தாளமிட்டபடி கேட்டுவிட்டு,வீட்டிற்கு வந்தபின் "அவா இப்படி புரியாதமாதிரி ததரினானா தயிர்நன்னானு பாடினா நமக்கு எப்படிபா பிடிக்கும்!" என்று சற்றே வெறுத்துக்கொண்டேன் அந்நிமிடம்.முதன்முதலில் அதனை வெறுத்தது.இரண்டு வருடங்களுக்குப்பின் அதே கர்நாடக சங்கீதம் என்றால் என்ன,என்று அறிந்துகொள்ளும் வரை.முதல் இசைக் கச்சேரி பாடிக்கேட்டது நித்ய ஸ்ரீ உடையது.        
                    துன்பங்களை புரிந்து, உணர்ந்து கொள்ள இயலாத வயதில் கூடப்படித்த தோழியின் மரணம்.நேரில் சென்று பார்க்க பெற்றோர் அனுமதிக்காத நிலையில்,எனை மீறி வெடித்து அழுதுபடி ஹாலில் அமர்ந்திருக்கையில்,எங்கிருந்தோ வந்த வயலின் இசை ஒன்று ஏனோ இனம் புரியாமல் மனதை வருடியது.பின்னாளில் அது இளையராஜா என அறிந்துகொண்டது வேறு விஷயம். துயரில் என்னுடன் கலந்து அருகில் இருந்து வருடியது அந்த இசை.
                           பள்ளிக்கும் தனிப்பாடவகுப்புக்குமென மிதிவண்டியில் செல்லுகையில் எனக்குத்துனை அங்கு நட்பு இருந்ததோ இல்லையோ.ஏதேனும் ஒரு பாடல்வரி கண்டிப்பாய் என் வாய் பிறந்தபடி இருக்கும்.
                                                 
                            இன்று வரையில்,பாடல்வரிகளில் சிலது  இசை தொடர்புடையதாகவோ அல்லது இசையையும் வாழ்வினையும் தொடர்புபடுத்துவதாகவோ இருப்பின் ஏனோ சட்டென்று என்னை ஈர்த்துவிடும்.
                          எனையும் மறந்து அதனிடம் சரண்புகுந்த நொடிகள் பல பல.
                          பாரதியாரின் வரிகளுக்கு ராகங்கள் பற்றி புரிந்திராத நாட்களில் நானாகவே ஏதோ ஒரு மெட்டமைத்த தருணங்களும் உண்டு.             
                        நட்பிடம் என் அவா ஒன்றைக் கூடக் கூறியுள்ளேன், "வயலின் கத்துண்டு நானே சொந்தமா ஒரு ட்யூன் கம்போஸ் பண்ணி,மழையோட மழையா கரைஞ்சுண்டே வாசிக்கணும்" என்று.      
                          
                          இசை அதனை உணர்ந்து ரசிப்பது வானொலி,டேப் ரிக்கார்டர், ஐ-பாட் என "காலங்கள் மாறினாலும் உன் மீது உள்ள அன்பு என்றும் மாறாது" என்று காதல் கவிதை வசனம் போல்,என்னால் அதுவன்றி இருக்க இயலாது.

                     தீபாவளிக்கு மறுநாள் காலை அனைவரும் பேசிக்கொண்டிருக்கையில்,"கண்ட நாள் முதலாய்...!!" என நான் பாடிக்கொண்டிருக்க,சித்தப்பா,மாமா,அம்மா,அப்பா என அனைவரும் என் பக்கம் நோக்கினர்.சட்டென்று தாத்தா,"உனக்கு ஏன் நாங்க ம்யூஸிக் கத்துக்கொடுக்க விட்டுட்டோம்?" என்றார்.அந்த குரலில் சற்று ஆதங்கம் தோன்றியது.அது ஏனோ எனக்குப்பிடிக்கவில்லை,சிறுவயதிலிருந்து இந்த cold n cough அடிக்கடி வருவதால் சட்டென்று குரல் கட்டிக்கொண்டுவிடும்(இன்று வரை அப்படித்தான் :D ),அதனால் அந்த எண்ணம் அப்பொழுது கைவிடப்பட்டது.நட்பு ஒன்றிடம் அவன் அறியாத பாடல் ஒன்று பற்றி விவரிக்க பாடல் வரியைப் பாட நேர்கையில் "நீ ஏன் கல்சுரல்ஸ்ல பாடல?" என்றான்.இவ்வாறு தருணங்கள் பல.சட்டென.அப்போது அத்தருணங்களில் அக்கேள்விகளுக்கு விளையாட்டுப்போக்காய் விடையளித்தாலும்  மனம் உடனே யோசிக்கத்தொடங்கிவிடும்.வெறும் அரைகுறை கேள்வி ஞானத்தோடு மட்டுமே உள்ள எனக்கும் இசைக்குமான புரிதல் பற்றி.
              பார்த்தவுடன் தோன்றிய காதல் வகையல்ல இது,மாறாய் கேட்டவுடன் தோன்றியது எனலாம்.உரு அறிந்ததில்லை,மொழி புரிந்ததில்லை.சர்வமாய் இருக்கும் இந்த இசையின் மொழி புரிந்தால்  தெரிந்திடுமோ,முதல் இருந்தும் முடிவற்ற அதற்கும் எனக்குமான பிணைப்பு.இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்...              
                          
                             
                              .
                          
                             
          
                                                   

 

0 comments: