BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Tuesday, February 22, 2011

தேடற் பயணம்..

                         
                                    ஒரு வியாழன் மாலை தொடங்கியது பயணம்,வீட்டிற்க்குச் செல்லத்தான்;கல்லூரி,விடுதி என நாட்களை கடத்துபவர்களுக்கு வீடு என்பது வீடுபேறாக ஆகிவிட்டது.பேருந்துப் பயணங்களை நான் அவ்வளவாக விரும்பியதில்லை,நமக்கு ரயில் பயணங்களே மிகவும் பிடித்தமான ஒன்று,எனினும் இந்த நான்கு வருடங்களில் அந்த நான்கு மணி நேரப் பேருந்துப் பயணத்திற்கு எனை பழக்கப்படுத்திக் கொண்டுவிட்டேன் என்றுதான் கூறவேண்டும்,இசையும் புத்தகமும் இயற்கையும்  வழித்துணைக்கு இருக்க அது சாத்தியமாகியது.மேலும் அந்த நான்கு மணி நேரம் மட்டுமே நீடிக்கும் அறிமுகங்கள்.அவர்களுக்கான ரெடிமேட் புன்னகைகள் அதற்குள் அடங்கும் சற்றே பயந்தபடியான கேள்விகளும் விடைகளும்,அனைத்தும் பழகிப் பிடித்துவிட்டது எனலாம்.அப்படி நான் அன்றைய பயணத்தில் சந்தித்ததுதான் அந்த சுமார் முப்பது வயது மதிப்பிடத்தக்க பெண் ஒருத்தியும் அவளது குழந்தையும்,அதற்கு சுமார் மூன்று அல்லது நான்கு வயது இருக்கலாம்.அழகாய் வெளிர் ஊதா நிறத்தில்,இந்த தேவதைகள் உடை போன்ற ஒன்றை உடுத்தி இருந்தது,மூன்று வயதிற்கே உண்டான வளர்ந்தும் வளராததுமான முடியில் இரட்டை குதிரை வால், கண்களில் மை கீற்றால் குருவி வால் என அழகு,இந்த அன்னையர்கள்தான் எவ்வளவு ரசனை உடையவர்கள் பிள்ளை வளர்ப்பு விஷயங்களில்.என் அருகில் தன் குழந்தையுடன் வந்து அமர்ந்தாள் அத்தாய்.பேருந்தும் புறப்பட்டது. பயணசீட்டு எடுப்பதற்காக பணத்தை வெளியே எடுத்துக்கொண்டிருந்தேன்.செவிகளில் "இதோ இதோ என் பல்லவி..".இடையே அவளது குரல் "ஏங்க குடிக்க தண்ணி இருக்கா? பாப்பா தண்ணி கேக்குது..தாகமா இருக்கு போல!".நான்கு மணி நேரம்தானே என்று நானும் குடிநீர் எதுவும் கையில் எடுத்துக்கொள்ளவில்லை."இல்லங்க!"என்றேன்,அறியாத நபர்களுக்கான அதே ரெடிமேட் புன்னகையுடன். சிறுது நேரத்தில் அந்த குழந்தை அதன் மழலை மொழியில் "அம்மா!!தண்ணி வேணும்!!".அக்குழந்தையை சமாளிப்பதற்காக அவளது பொய்கள்,என செவி இசைக்கு இடையே அவற்றையும் கேட்டுக்கொண்டு இருந்தது.நான் சற்று பின் திரும்பி அங்கு அமர்ந்து இருந்த வேறு ஒரு குடும்பத்திடம் "ஏங்க!தண்ணி இருக்கா ? இவங்க கொழந்த வெச்சிருக்காங்க,அதுக்கு தண்ணி தாகம் எடுக்குதாம்!".அவர்கள் ,"இல்லமா!".உதடுகள் பிதுக்கி ஏமாற்றத்தை,அந்த அன்னையிடம் கூறிவிட்டு மீண்டும் என் இசையுடன் ஒன்றிக்கொண்டேன்.இப்போது "அய்யயோ நெஞ்சு அலையுதடி!" பாடல் அந்தக் குரலில் கிறங்கடித்துக் கொண்டிருந்தது. மிதமான குளிர் கலந்த மாலைத் தென்றல் முகம் வருட,சில கணங்களுக்கு முன் பிறந்த அன்றைய நிலவினை நோக்கிக் கொண்டிருந்தேன்.அத்தருணத்திற்கு ஏற்ற வரிகள் போல் "உன் வாசம் அடிக்கிற காத்து,ஏங்கூட நடக்கிறதே..!" என,எண்ணத்தை திசை திருப்ப,அச்சிறு குழந்தையின் பக்கம் திரும்பினேன்,அது என்னையேதான் நோக்கிக் கொண்டிருந்தது போல,நான் திரும்பியதும் சட்டென்று தன் அன்னையை நோக்கி தன் முகத்தை திருப்பிக்கொண்டது.சிரித்துவிட்டு,மீண்டும் பாடல்வரிகளுடன் "தன்னனனனானேனனனானா.."முணுமுணுத்தபடியே, இந்த வரிகளை மட்டும் ஷ்ரேயா "ஹம்!" செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ?,என மனது நினைத்துக்கொண்டது.அந்த வரிகளுக்கு ஏனோ இடக்கை விரல்கள்  தானாக நடனித்துக் கொண்டிருந்தன.திடீரென்று ஒரு சிறு விரல் அந்த விரல்களைத்தொட,திரும்பினேன்.அக்குழந்தைதான்,ஏனோ என் உள்ளங்கைகளுக்குள் தன் விரலை புகுத்திக்கொண்டு சிரித்தது,நானும் சிரித்துவிட்டு,அக்குழந்தையுடன் சிறிது விளையாடினேன்.ஆனால் இம்முறை புன்னகை இயல்பாகவே தோன்றியது.தன் அன்னையின் சேலைக்குள் மறைந்து ஒளிந்தபடி அச்சிறிய இடத்தில் என்னுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தது.நான்,"குட்டிப் பொண்ண காணோமே!!,பாப்பாவ காணோமே! எங்க? ?டோச்சி! என அதனுடன் விளையாடிக் கொண்டிருந்தேன் இடை இடையே அந்த அன்னையின் புன்னகைகளை கவனித்தபடி.சட்டென்று அவள் அன்னையின் மடியிலிருந்து தாவி என் மடியில் வந்து அமர்ந்துகொண்டது,எதிர்பாராவிதமாக.பேருந்து இருக்கைகளின் சாய்வுக்கம்பிகளின்மேல் தன் விரலால் ரயில் விட்டபடி மீண்டும் விளையாடத்துவங்கியது.சற்றே பெரிய ரயில் ஒன்று எதிர் திசையிலிருந்து அந்த ரயில் மீது மோத வர,தன் ரயில் பயணத்தை நிறுத்திக்கொண்டு என்னை நோக்கி புன்னகைத்தது அக்குழந்தை.நானும் பதிலுக்கு "முட்டு! முட்டு! முட்டு! முட்டு !முட்".எனவிளையாடியபடியே புன்னகைத்துவிட்டு.மீண்டும் பேருந்து ஜன்னல் நோக்கி பார்வைகளைப் படரவிட்டேன்.நிலவு அந்த அரை மணி நேரத்தில் சற்றே வளர்ந்து இன்னும் வெண்மையாக முழு வட்டமாக காட்சி அளித்துக்கொண்டிருந்தது.நினைவுகள் எங்கோ சென்று கொண்டிருக்க,அதே தென்றல் காற்று.சிறிது நேரத்தில் அக்குழந்தை என் மடியில் அமர்ந்தபடியே உறங்கிவிட்டதை உணர்ந்தேன்.இன்னும் இருபது நிமிடங்களில் தன் ஊர் வந்துவிடும் என அந்தத்   தாய்  கூறிக்கொண்டிருந்தாள்,தூங்கிக் கொண்டிருந்த தன் குழந்தையை எழுப்ப அவளுக்கு  மனம் வரவில்லை.மனதில் ஏனோ சட்டென்று ஒரு எண்ணம், அன்று ஒரு நாள் இதே போல் ஒரு பயணத்தில் என்னுடன் பயணம் செய்த தோழி கூறிய வரிகள் " Everything in the world finally ends up there only and everything is for that purpose only". என்று,பலர் கூற நான் முன்பே கேட்டிருந்த கருத்து.உளவியல் ஆராய்ச்சி அது இது என வேலையற்ற வேலை மேற்கொள்பவர்களுக்கு தீனி போடுவன இது போன்ற கருத்துக்கள்.அதனால் என்னாலும் பல நாட்கள் சிந்திக்கப்பட்டதே இக்கருத்து.முதன் முதலில் இதை ஒருவர் கூறக் கேட்டு "என்ன ஒரு கருத்து?!" என நான் ஆச்சரியப்பட்டாலும்.அடுத்த தவணைகளில் அதே வரியை வேறு ஒருவர் கூற,இதை சொல்லுகையில் கூறுபவர்களின் மன நிலை எவ்வாறு இருக்கும் என மனம் சிந்திக்கத் துவங்கிவிட்டது,பல நேரங்களில் அது கூறுபவர்களின் வெளிப்படைத்தன்மையை நிருபிக்கும் ஆயுதமாகவே பயன்பட்டு உள்ளது .இது போன்ற கருத்துக்கள் வெறும் மனதில் தோன்றும் பள்ளத்தை நிரப்பிடும் மணல் போன்றது.இது உளவியில் ரீதியாக நான் புரிந்து உணர்ந்தது,என்பார்களாயின்.அவர்களது உளவியல் புரிந்துனர்தலை சற்றே திருப்புதல் செய்வது நன்று.வாழ்வின் குறிக்கோளே காமம் என்பதில்தான் அடங்கியுள்ளது என்பதாயின்,இந்த உலகும் அதன் உயிரினங்களும்  ஏன் அதையும் தாண்டி தனது செயல்களை ஆற்றிக்கொண்டு இருக்கின்றன. தேடல் என்ற வார்த்தையின் புரிதலை பலர் காமத்தோடு நிறுத்திக்கொண்டுவிடுவது எவ்வளவு பெரிய பிழை?.என் மடி உறங்கிக் கொண்டிருந்தவளை நோக்கினேன்.ஒருவேளை தேடல் என்பது இதோடு நின்றுவிடுகிறதோ?.அதன் சிரிப்புகளில், மழலை மொழிகளில் என வாழ்க்கைப் பயணம் அவ்வளவு எளிதானதா?.பேருந்து நிறுத்தம் வந்தது, "பாப்பா! எழுன்ச்சிறு,தண்ணி குடிக்கணும் சொன்னியே?!",அந்த அன்னையின் குரல்.அது என்னை விட்டு நகரவில்லை,ஆகையால் அவள் அக்குழந்தையை இழுத்துக் கொண்டு செல்லும்படி ஆயிற்று.அரை தூக்கக்குரலில் "அக்க  வண்ணம்(வரணும்)!" என்று கூறியபடியே அதன் அம்மாவுடன் நகர்ந்தது.நான் "டாட்டா!" என்றேன்.அலைபேசி திடீரென்று  தன் குரலில் ஒலிக்கத்துவங்கியது.எதிர் முனையில் அப்பா, என் பதில்கள், "நைட் பத்தரைக்கு மேல ஆகும் நினைக்கறேன்,என்னது? நீ வரேயா?!,அதெல்லாம் வேண்டாம் பா.. நான் பாத்துக்கறேன், எப்பொழுதும் நானே வரதுதானே இன்னிக்கு என்ன புதுசா நீ வந்து ரிசீவ் பண்ணிக்கரேனு?! பயப்படாதே..ஹ்ம்ம் செரி..செரி" என்று கூறிவிட்டு புன்னகையுடன் அழைப்பை துண்டித்தேன்.மீண்டும் இசையுடன் ஐக்கியமானது மனது,"காற்றின் மொழி...!".                    
.                                                           

3 comments:

Santa said...

Nice incident... antha ammakku irundha adhe ennam unga appakkum... good one

Rachana Raghavan said...

Misinterpretation... :-|

Aishwarya Govindarajan said...

@santhu : :-)
@Rachana: expected this Word.. :-)